ரோமர் 13:11-14

ரோமர் 13:11-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

தற்போதைய காலத்தை விளங்கிக்கொண்டவர்களாய் இவைகளைச் செய்யுங்கள். உங்கள் தூக்கத்தைவிட்டு நீங்கள் எழுந்திருக்கவேண்டிய வேளை வந்துவிட்டது. நாம் முதலில் விசுவாசிக்கத் தொடங்கிய காலத்தைவிட, நமது இரட்சிப்பு இப்பொழுது இன்னும் அருகே வந்துவிட்டது. இரவு முடியப்போகிறது; பகல் வந்துவிட்டது. எனவே இருளின் செயல்களை நம்மைவிட்டு அகற்றி, ஒளியின் ஆயுதத்தை அணிந்துகொள்வோம். பகலில் நடப்பவர்களைப்போல் நாம் ஒழுக்கமாய் நடப்போம். களியாட்டங்களையும், வெறியாட்டங்களையும், பாலிய முறைகேடுகளையும், ஒழுக்கக்கேடான செயல்களையும், பிரிவினைகளையும், பொறாமைகளையும் நம்மைவிட்டு அகற்றுவோம். மாறாக கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையே அணிந்துகொண்டு, உங்கள் மாம்ச இயல்பிலிருந்து வரும் ஆசைகளை திருப்திப்படுத்துவதெப்படி என்ற சிந்தனையை விட்டுவிடுங்கள்.

ரோமர் 13:11-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

தூக்கத்தைவிட்டு எழுந்திருக்க வேண்டிய நேரமானது என்று, நாம் நேரத்தை அறிந்தவர்களாக, இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு அருகில் இருந்ததைவிட இப்பொழுது அது நமக்கு மிக அருகில் இருக்கிறது. இரவு கடந்துபோனது, பகல் அருகில் வந்துவிட்டது; எனவே, இருளின் செயல்களை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களை அணிந்துகொள்வோம். களியாட்டும், வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும், பொறாமையும் உள்ளவர்களாக நடக்காமல், பகலிலே நடக்கிறவர்கள்போல ஒழுங்காக நடப்போம். தீய இச்சைகளுக்கு இடமாக சரீரத்தைக் கொடுக்காமல், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அணிந்துகொள்ளுங்கள்.

ரோமர் 13:11-14 பரிசுத்த பைபிள் (TAERV)

நாம் மிக முக்கியமான காலத்தில் வாழ்ந்துகொண்டிருப்பதால் இவற்றைக் கூறுகிறேன். நீங்கள் தூக்கத்திலிருந்து எழ வேண்டிய நேரம் இதுதான். நாம் முதலில் நம்பியதைக் காட்டிலும் இரட்சிப்பின் காலம் நெருங்கிவிட்டது. “இரவு” ஏறக்குறைய முடிந்து போனது. “பகல்” அநேகமாக முளைக்கத் தொடங்கி விட்டது. எனவே இருட்டுக்குச் சொந்தமான செயல்களை விட்டுவிடுவோம். வெளிச்சத்தின் ஆயுதங்களை அணிந்துகொள்வோம். பகலுக்குரியவர்கள் செய்யத்தக்க செயல்களைச் சீராய் நாம் செய்வோம். களியாட்டமும், குடிவெறியும், வேசித்தனமும், காமவிகாரமும், வாக்குவாதமும், பொறாமையும் உள்ளவர்களாக நாம் இருக்கக் கூடாது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே ஆடையாக அணிந்துகொள்ளுங்கள். உங்கள் பாவ ஆசைகளைப் பூர்த்தி செய்துகொள்வது பற்றியும் தீய காரியங்களை செய்வது பற்றியும் யோசிக்காதீர்கள்.

ரோமர் 13:11-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப்பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது. இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று; ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம். களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும், பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம். துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்