ரோமர் 13:1-4

ரோமர் 13:1-4 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு ஒவ்வொருவரும் அடங்கி நடவுங்கள். ஏனெனில் இறைவன் அனுமதிக்காமல் எந்த அதிகாரமும் இல்லை. இப்பொழுது ஏற்படுத்தப்பட்டிருக்கிற அதிகாரங்கள் இறைவனாலேயே நிலைநிறுத்தப்பட்டு இருக்கின்றன. ஆகையால் அதிகாரத்தை எதிர்த்துக் கலகம் விளைவிக்கிறவன், இறைவன் நியமித்ததையே எதிர்த்துக் கலகம் விளைவிக்கிறான். அவ்விதம் எதிர்த்து நிற்கிறவர்கள் தங்கள் மேலேயே தண்டனையை விளைவித்துக்கொள்கிறார்கள். ஏனெனில், சரியானதைச் செய்கிறவர்கள் ஆளுகை செய்கிறவர்களைப் பார்த்து பயப்பட வேண்டியதில்லை. தீமை செய்கிறவர்களே பயப்படவேண்டும். அதிகாரத்தில் இருக்கிறவர்களுக்கு நீங்கள் பயப்படாமல் இருக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் சரியானதைச் செய்யுங்கள். அப்பொழுது அவர்கள் உங்களைப் பாராட்டுவார்கள். ஏனெனில் அவர்கள் உங்களுக்கு நன்மைச் செய்யும்படி இறைவனுடைய வேலைக்காரர்களாக இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் தவறு செய்தால், அவர்களுக்குப் பயப்படவேண்டும். அவர்கள் அதிகாரத்தை வீணாகப் பிடித்துக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் இறைவனுடைய வேலைக்காரர்கள், தீமை செய்கிறவர்களுக்குத் தண்டனை கொடுத்து, இறைவனுடைய கடுங்கோபத்தைக் காண்பிக்கும் பிரதிநிதிகள்.

ரோமர் 13:1-4 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எந்த மனிதனும் உயர் அதிகாரம் உள்ளவர்களுக்குக் கீழ்ப்படியவேண்டும்; ஏனென்றால், தேவனாலேயல்லாமல் ஒரு அதிகாரமும் இல்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது. எனவே, அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்; அப்படி எதிர்த்து நிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே தண்டனையை வரவழைத்துக்கொள்கிறார்கள். மேலும் அதிகாரிகள் நல்ல செயல்களுக்கு அல்ல, தீய செயல்களுக்கே பயங்கரமாக இருக்கிறார்கள்; எனவே, நீ அதிகாரத்திற்குப் பயப்படாமல் இருக்கவேண்டுமானால், நன்மைசெய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும். உனக்கு நன்மை உண்டாவதற்காக, அவன் தேவனுடைய ஊழியக்காரனாக இருக்கிறான். நீ தீமைசெய்தால் பயந்திரு; பட்டயத்தை அவன் வீணாகப் பிடித்திருக்கவில்லை; தீமைசெய்கிறவன்மேல் கோபத்தின் தண்டனையை வரப்பண்ணுவதற்காக, அவன் நீதியைச் செலுத்துகிற தேவனுடைய ஊழியக்காரனாக இருக்கிறானே.

ரோமர் 13:1-4 பரிசுத்த பைபிள் (TAERV)

நீங்கள் அனைவரும் ஆட்சியாளர்களுக்கு அடிபணிய வேண்டும். ஆட்சி செய்யும் ஒவ்வொருவருக்கும் ஆட்சி புரியும் அதிகாரத்தை தேவன் கொடுத்திருக்கிறார். இப்பொழுது அதிகாரம் செய்கின்றவர்களுக்கு தேவனாலேயே அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே அரசு அதிகாரத்திற்கு எதிராக இருப்பவன் உண்மையில் தேவனுடைய கட்டளைக்கு எதிராக இருக்கிறான் என்றே பொருளாகும். அரசுக்கு எதிராகச் செயல்படுபவன் உண்மையில் தண்டிக்கப்படத்தக்கவன். நன்மை செய்கிறவர்கள் ஆள்வோர்களிடம் அச்சப்படவேண்டிய தேவையில்லை. ஆனால் தீமை செய்கிறவர்கள் ஆள்வோர்களிடம் அச்சப்படவேண்டும். நீங்கள் ஆள்வோர்களைக் கண்டு அச்சம்கொள்வதில் இருந்து விடுதலை பெறவேண்டுமா? அப்படியானால் நன்மையை மட்டும் செய்யுங்கள். நீங்கள் நன்மையைச் செய்தால் அவர்கள் உங்களைப் பாராட்டுவார்கள். ஒரு ஆள்வோன் என்பவன் உங்களுக்கு உதவி செய்வதற்காக தேவனால் நியமிக்கப்பட்டவன். ஆனால் நீங்கள் தப்பு செய்தால் அஞ்சவேண்டும். உங்களைத் தண்டிக்கிற அதிகாரம் அவர்களுக்குண்டு. அதை அவர்கள் பயன்படுத்துவார்கள். தேவனுடைய பணியாளாகவே அவர்கள் தண்டனை வழங்குவார்கள்.

ரோமர் 13:1-4 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது. ஆதலால் அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்; அப்படி எதிர்த்து நிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே ஆக்கினையை வருவித்துக்கொள்ளுகிறார்கள். மேலும் அதிகாரிகள் நற்கிரியைகளுக்கல்ல, துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறார்கள்; ஆகையால் நீ அதிகாரத்திற்குப் பயப்படாதிருக்கவேண்டுமானால், நன்மைசெய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும். உனக்கு நன்மை உண்டாகும்பொருட்டு, அவன் தேவ ஊழியக்காரனாயிருக்கிறான். நீ தீமைசெய்தால் பயந்திரு; பட்டயத்தை அவன் விருதாவாய்ப் பிடித்திருக்கவில்லை; தீமைசெய்கிறவன்மேல் கோபாக்கினை வரப்பண்ணும்படி, அவன் நீதியைச் செலுத்துகிற தேவ ஊழியக்காரனாயிருக்கிறானே.