வெளிப்படுத்தின விசேஷம் 6:1-17

வெளிப்படுத்தின விசேஷம் 6:1-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நான் பார்த்துக்கொண்டிருக்கையில் ஆட்டுக்குட்டியானவர், அந்த ஏழு முத்திரைகளில் முதலாவது முத்திரையைத் திறந்தார். அப்பொழுது அந்த நான்கு உயிர்களில் ஒன்று, “வா!” என்று சொல்வதை நான் கேட்டேன். அதன் குரலோ இடி முழக்கத்தைப்போல் இருந்தது. அப்பொழுது அங்கே எனக்கு முன்பாக ஒரு வெள்ளைக்குதிரை நின்றதை நான் பார்த்தேன்! அதில் ஏறி இருந்தவன் ஒரு வில்லைப் பிடித்திருந்தான், அவனுக்கு ஒரு கிரீடம் கொடுக்கப்பட்டது; அவன் வெற்றி வீரனாக வெற்றி பெறுகிறதற்காகவே புறப்பட்டுச் சென்றான். ஆட்டுக்குட்டியானவர், இரண்டாவது முத்திரையைத் திறந்தபோது, இரண்டாவதாய் இருந்த உயிரினம், “வா!” என்று சொல்வதை நான் கேட்டேன். அப்பொழுது இன்னொரு குதிரை வெளியே வந்தது, அது கருஞ்சிவப்பு நிறம் உடையதாயிருந்தது. அதில் ஏறியிருந்தவனுக்கு, பூமியிலிருந்து சமாதானத்தை நீக்கிவிடவும், மனிதர்கள் தங்களில் ஒருவரையொருவர் கொன்றுபோடும்படி செய்யவும், வல்லமை கொடுக்கப்பட்டது. அவனுக்கு ஒரு பெரிய வாள் கொடுக்கப்பட்டது. ஆட்டுக்குட்டியானவர், மூன்றாவது முத்திரையைத் திறந்தபோது, மூன்றாவதாய் இருந்த உயிரினம், “வா!” என்று சொல்வதை நான் கேட்டேன். நான் பார்த்தபோது, அங்கே எனக்கு முன்பாக, ஒரு கருப்புக்குதிரை நின்றது. அதில் ஏறியிருந்தவன் தன் கையிலே, தராசு ஒன்றைப் பிடித்துக்கொண்டிருந்தான். அப்பொழுது ஒரு குரல் போன்ற சத்தம், “ஒரு நாள் கூலிக்கு கோதுமை ஒரு கிலோகிராம்; வாற்கோதுமை மூன்று கிலோகிராம்; எண்ணெயையும், திராட்சைரசத்தையும் சேதப்படுத்தாதே!” என்று சொல்லும் சத்தத்தைக் கேட்டேன். அந்தக் குரல் அந்த நான்கு உயிரினங்களின் நடுவிலிருந்தே வந்ததுபோல் எனக்குக் காணப்பட்டது. ஆட்டுக்குட்டியானவர், நான்காவது முத்திரையைத் திறந்தபோது, நான்காவதாய் இருந்த உயிரினத்தின் குரலை நான் கேட்டேன். அது, “வா” என்று சொன்னது. அப்பொழுது எனக்கு முன்பாக மங்கிய பச்சை நிறமுடைய ஒரு குதிரை நின்றதை நான் பார்த்தேன். அதில் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர் கொடுக்கப்பட்டது. பாதாளம் அவனுக்குப் பின்னாலேயே நெருக்கமாய் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தது. பூமியிலுள்ள நான்கில் ஒரு பங்கு மக்களை வாளினாலும், பஞ்சத்தினாலும், கொள்ளைநோயினாலும், பூமியிலுள்ள கொடிய விலங்குகளினாலும் கொல்வதற்கு அவற்றிற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. ஆட்டுக்குட்டியானவர் ஐந்தாவது முத்திரையைத் திறந்தபோது, பலிபீடத்தின் கீழே இறைவனுடைய வார்த்தைக்காகவும், சாட்சிகளாய் வாழ்ந்ததற்காகவும், கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைக் கண்டேன். அவர்கள் உரத்த குரலில், “ஆண்டவராகிய கர்த்தாவே, பரிசுத்தமும் சத்தியமும் உள்ளவரே, நீர் பூமியில் குடியிருக்கிறவர்களை நியாயந்தீர்ப்பது எப்போது? எங்களுடைய இரத்தப்பழிக்கான தண்டனையை அவர்களுக்குக் கொடுப்பதற்கு எவ்வளவு காலம் செல்லும்?” என்று கூக்குரலிட்டார்கள். அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும், ஒரு வெள்ளை உடை கொடுக்கப்பட்டது. அத்துடன், அவர்கள் இன்னும் சிறிதுகாலம் பொறுத்திருக்க வேண்டும் என்றும் அவர்களுக்குச் சொல்லப்பட்டது. ஏனெனில், அவர்களைப்போல் கொல்லப்பட இருக்கும், அவர்களுடைய எல்லா உடன் ஊழியர்களும், சகோதரர்களும் கொல்லப்படும் வரைக்கும், அவர்கள் பொறுத்திருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. ஆட்டுக்குட்டியானவர் ஆறாவது முத்திரையைத் திறப்பதை நான் பார்த்தேன். அப்பொழுது பெரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டது. அவ்வேளையில், சூரியன் கருப்புக் கம்பளியைப்போல் கருத்துப்போனது. சந்திரன் முழுவதும் இரத்த சிவப்பு நிறமாய் மாறியது. வானத்திலிருந்து நட்சத்திரங்கள் பூமியில் விழுந்தன. பலத்த காற்றினால் அத்திமரம் அசைக்கப்படும்போது, பருவம் பிந்திக்காய்த்த அத்திக்காய்கள் விழுவதுபோல், அவை விழுந்தன. ஒரு புத்தக சுருள் சுருட்டப்படுவது போல வானம் சுருட்டப்பட்டு மறைந்து போனது. ஒவ்வொரு மலையும், தீவும், அவைகளுக்குரிய இடங்களிலிருந்து அகற்றப்பட்டன. அப்பொழுது பூமியில் உள்ள அரசர்களும், இளவரசர்களும், சேனாதிபதிகளும், செல்வந்தர்களும், வலிமையுள்ளவர்களும், ஒவ்வொரு அடிமையும், ஒவ்வொரு சுதந்திரக் குடிமகனும், குகைகளிலும், மலைகளிலுள்ள கற்பாறைகளிலும் ஒளிந்துகொண்டார்கள். அவர்கள் அந்த மலைகளையும், கற்பாறைகளையும் பார்த்து, “நீங்கள் எங்கள்மேல் விழுங்கள். அரியணையில் அமர்ந்திருக்கிறவருடைய பார்வையிலிருந்தும், ஆட்டுக்குட்டியானவரின் கோபத்திலிருந்தும், எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்! அவருடைய கோபத்தின் பெரிதான நாள் வந்துவிட்டது; யாரால் தாங்கமுடியும்?” என்று சொன்னார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 6:1-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக் கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னைப் பார்த்து: நீ வந்து பார் என்று இடிமுழக்கம்போல சத்தமாகச் சொல்வதைக்கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடம் கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான். அவர் இரண்டாம் முத்திரையை உடைத்தபோது, இரண்டாம் ஜீவனானது: நீ வந்து பார் என்று சொல்லக்கேட்டேன். அப்பொழுது சிவப்பான வேறொரு குதிரை புறப்பட்டது; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு, பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலை செய்வதற்காகச் சமாதானத்தை பூமியிலிருந்து எடுத்துப்போடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது; ஒரு பெரிய வாளும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. அவர் மூன்றாம் முத்திரையை உடைத்தபோது, மூன்றாம் ஜீவனானது: நீ வந்து பார் என்று சொல்வதைக்கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு கறுப்புக்குதிரையைப் பார்த்தேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான். அப்பொழுது, ஒரு வெள்ளிக்காசுக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு வெள்ளிக்காசுக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சைரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் நடுவிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன். அவர் நான்காம் முத்திரையை உடைத்தபோது, நான்காம் ஜீவனானது: நீ வந்து பார் என்று சொல்லும் சத்தத்தைக் கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைப் பார்த்தேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவனுக்குப் பின்னே சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், மரணத்தினாலும், பூமியின் கொடிய மிருகங்களினாலும், பூமியில் உள்ள நான்கில் ஒரு பங்கு மக்களைக் கொலைசெய்ய அவைகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினாலும் தாங்கள் கொடுத்த சாட்சியினாலும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின் கீழேப் பார்த்தேன். அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமும் உள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடம் எங்களுடைய இரத்தத்தைக்குறித்து எவ்வளவு காலங்கள் நியாயத்தீர்ப்புச் செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று அதிக சத்தமாகக் கேட்டார்கள். அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அவர்கள் தங்களைப்போலக் கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்களுடைய உடன்பணியாளர்களும் தங்களுடைய சகோதரர்களுமானவர்களின் எண்ணிக்கை நிறைவாகும்வரை இன்னும் கொஞ்சக்காலம் காத்திருக்கவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. அவர் ஆறாம் முத்திரையை உடைப்பதைப் பார்த்தேன்; இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கருப்புக் கம்பளியைப்போலக் கருத்துப்போனது; சந்திரன் இரத்தம்போல ஆனது. அத்திமரம் பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது. வானமும் சுருட்டப்பட்ட புத்தகம்போல விலகிப்போனது; மலைகள் தீவுகள் எல்லாம் தங்களுடைய இடங்களைவிட்டு விலகிச்சென்றன. பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், படைத்தளபதிகளும், பலவான்களும், அடிமைகள், சுதந்திரமானவர்கள் எல்லோரும், குகைகளிலும் மலைகளின் பாறைகளிலும் ஒளிந்துகொண்டு, மலைகளையும் பாறைகளையும் பார்த்து: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்; அவருடைய கோபத்தின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைத்து நிற்கமுடியும் என்றார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 6:1-17 பரிசுத்த பைபிள் (TAERV)

பின்பு ஏழு முத்திரைகளுள் முதல் முத்திரையை ஆட்டுக்குட்டியானவர் உடைப்பதைக் கண்டேன். அப்போது நான்கு உயிருள்ள ஜீவன்களுள் ஒன்று இடிபோன்ற குரலில் பேசத்தொடங்குவதைக் கண்டேன். “வா!” என்று சொன்னது அக்குரல். நான் பார்த்தபோது எனக்கு முன்பாக ஒரு வெள்ளைக் குதிரை இருப்பதைப் பார்த்தேன். அக்குதிரையில் சவாரி செய்தவன் ஒரு வில்லைப் பிடித்திருந்தான். அவனுக்கு ஒரு கிரீடம் கொடுக்கப்பட்டது. அவன் பகைவர்களை வீழ்த்துவதற்காகச் சென்றான். வெல்வதற்காகவே புறப்பட்டுப் போனான். ஆட்டுக்குட்டியானவர் இரண்டாம் முத்திரையை உடைத்தார். அப்போது இரண்டாவது உயிருள்ள ஜீவன் “வா!” என்று சொல்வதைக் கேட்டேன். பிறகு இன்னொரு குதிரை வெளியே வந்தது. அது தீ போன்ற சிவப்பு வண்ணம் கொண்டது. அதன்மேல் இருந்தவனுக்கு உலகத்தில் உள்ள சமாதானத்தை எடுத்துவிடவும், பூமியில் உள்ள மக்கள் ஒருவரை ஒருவர் கொல்வதற்குமான அதிகாரமும் கொடுக்கப்பட்டது. அத்துடன் அவனுக்கு ஒரு பெரிய வாளும் தரப்பட்டது. ஆட்டுக்குட்டியானவர் மூன்றாவது முத்திரையை உடைத்தார். அப்போது மூன்றாவது உயிருள்ள ஜீவன், “வா!” என்று என்னிடம் கூறியதைக் கேட்டேன். நான் பார்த்தபோது ஒரு கறுப்புக் குதிரை வெளியே வந்தது. அதன்மேல் இருந்தவன் தராசு ஒன்றைக் கையில் வைத்திருந்தான். அப்பொழுது ஒருவகை சப்தத்தைக் கேட்டேன். அச்சப்தம் நான்கு உயிருள்ள ஜீவன்களின் மத்தியிலிருந்தே வந்தது. “ஒரு நாள் கூலியாக ஒரு படி கோதுமை. ஒரு நாள் கூலியாக மூன்று படி வாற்கோதுமை, எண்ணெயையும், திராட்சை இரசத்தையும் வீணாக்காதே” என்று கூறிற்று. ஆட்டுக்குட்டியானவர் நான்காம் முத்திரையை உடைத்தார். அப்போது நான்காம் உயிருள்ள ஜீவன் “வா!” என்று அழைத்தது. நான் பார்த்தபோது மங்கிய நிறமுள்ள ஒரு குதிரை வந்தது. இக்குதிரையை ஓட்டி வந்தவனுக்கு “மரணம்” என்று பெயர். மேலும் அவனுக்குப் பின்னால் “பாதாளம்” நெருக்கமாய் வந்துகொண்டிருந்தது. உலகில் உள்ள கால் பங்கு மக்களின்மேல் அவனுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. வாளாலும், பஞ்சத்தாலும் நோயாலும் காட்டு மிருகங்களாலும் மக்களைக் கொல்லும் அதிகாரத்தை அவன் பெற்றான். ஆட்டுக்குட்டியானவர் ஐந்தாவது முத்திரையையும் உடைத்தார். அப்பொழுது பலிபீடத்தின் கீழே தம் விசுவாசத்திற்காகவும், சாட்சி சொன்னதற்காகவும் கொல்லப்பட்டவர்களின் ஆன்மாக்களை நான் பார்த்தேன். அந்த ஆன்மாக்கள் உரத்த குரலில் சத்தமிட்டன. “பரிசுத்தமும் உண்மையும் உள்ள தேவனே! எங்களைக் கொன்றதற்காக உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிற மக்களை நியாயம் தீர்த்துத் தண்டிக்க எவ்வளவு காலம் ஆகும்?” என்றன. பிறகு ஒவ்வொரு ஆன்மாவுக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டன. பிறகு சிறிது நேரத்திற்குக் காத்திருக்கும்படி அவற்றிற்குச் சொல்லப்பட்டது. கொல்லப்படப்போகிற அவர்களைப்போன்ற கிறிஸ்துவின் சேவையிலுள்ள எல்லா சக ஊழியர்களும் உண்மையில் கொல்லப்படுவதுவரை அவை காத்திருக்க வேண்டும். ஆட்டுக்குட்டியானவர் ஆறாவது முத்திரையை உடைப்பதைக் கவனித்தேன். அப்போது பெரிய நில நடுக்கம் ஏற்பட்டது. சூரியன் இருண்டது. துக்கம் கொண்டாடுகிறவன் அணிகிற ஆடைகள்போல அது கறுத்தது. நிலவு இரத்தம்போல சிவப்பானது. வானத்து நட்சத்திரங்கள், புயல் காலத்தில் அத்திமரத்திலிருந்து அத்திப் பழங்கள் உதிருவது போன்று பூமியில் உதிர்ந்தன. வானம் இரண்டாகப் பிளந்தது. அது தோல் சுருளைப்போல சுருண்டுகொண்டது! மலைகளும், தீவுகளும் தங்களது இடத்தை விட்டு நகர்ந்தன. மக்கள் குகைகளிலும், மலைப்புறங்களிலும் ஒளிந்துகொண்டனர். அவர்களுடன் ராஜாக்களும், ஆள்வோர்களும், அதிகாரிகளும், செல்வந்தர்களும் இருந்தனர். அடிமைகளும் சுதந்தரமானவர்களும் அவர்களோடு ஒளிந்துகொண்டனர். மக்கள் மலைகளையும் பாறைகளையும் பார்த்து “எங்கள் மேல் விழுங்கள். சிம்மாசனத்தில் இருப்பவரின் பார்வையில் இருந்தும் ஆட்டுக்குட்டியானவரின் கோபத்திலிருந்தும் எங்களை மறைத்துவிடுங்கள். அவர்கள் தம் கோபத்தைக் காட்டுகிற தருணமாகிய மாபெரும் நாள் வந்துவிட்டது. அதனை எதிர்த்து ஒருவராலும் நிற்கமுடியாது.” என்று கூறினார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 6:1-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக்கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி: நீ வந்து பார் என்று இடிமுழக்கம்போன்ற சத்தமாய்ச் சொல்லக்கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடங்கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான். அவர் இரண்டாம் முத்திரையை உடைத்தபோது, இரண்டாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன். அப்பொழுது சிவப்பான வேறொரு குதிரை புறப்பட்டது; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு, பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலைசெய்யத்தக்கதாகச் சமாதானத்தைப் பூமியிலிருந்தெடுத்துப் போடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது; ஒரு பெரிய பட்டயமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. அவர் மூன்றாம் முத்திரையை உடைத்தபோது, மூன்றாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு கறுப்புக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான். அப்பொழுது, ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன். அவர் நாலாம் முத்திரையை உடைத்தபோது, நாலாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லுஞ் சத்தத்தைக் கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவன்பின் சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்டமிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலைசெய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது. அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின் கீழே கண்டேன். அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள். அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. அவர் ஆறாம் முத்திரையை உடைக்கக்கண்டேன்; இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கறுப்புக் கம்பளியைப்போலக் கறுத்தது; சந்திரன் இரத்தம் போலாயிற்று. அத்திமரமானது பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது. வானமும் சுருட்டப்பட்ட புஸ்தகம் போலாகி விலகிப்போயிற்று; மலைகள் தீவுகள் யாவும் தங்கள் இடங்களைவிட்டு அகன்றுபோயின. பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத்தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும், பர்வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக்கொண்டு, பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்; அவருடைய கோபாக்கினையின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும் என்றார்கள்.