சங்கீதம் 8:1-9
சங்கீதம் 8:1-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே, பூமியெங்கும் உமது பெயர் எவ்வளவு புகழ் உடையதாய் இருக்கிறது! நீர் வானங்களுக்கு மேலாக உமது மகிமையை வைத்திருக்கிறீர். உமது எதிரிகளையும் பழிவாங்குபவர்களையும் ஒடுக்க, உமது பகைவர்களின் நிமித்தம் பிள்ளைகள் மற்றும் குழந்தைகளின் உதடுகளிலிருந்து வரும் துதியின் மூலமாக வல்லமையை உறுதிப்படுத்தினீர். உமது விரல்களின் வேலைப்பாடான வானங்களையும் அவற்றில் நீர் பதித்து வைத்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் பற்றி நான் சிந்திக்கும்போது, மனுக்குலத்தில் நீர் கரிசனை கொள்வதற்கும், மனிதரில் நீர் அக்கறை கொள்வதற்கும் அவர்கள் எம்மாத்திரம்? நீர் அவர்களை இறைத்தூதர்களைப் பார்க்கிலும் சற்று சிறியவர்களாகப் படைத்து, அவர்களை மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டினீர். உமது கைகளின் வேலைப்பாடுகளின்மேல் அவர்களை ஆளுநர்களாக்கினீர்; அனைத்தையும்: எல்லா ஆட்டு மந்தைகளையும் மாட்டு மந்தைகளையும் காட்டு மிருகங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும் கடல் மீன்களையும் கடற்பரப்பில் நீந்தும் அனைத்தையும் அவர்களுடைய பாதங்களுக்குக்கீழ் வைத்தீர். எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே, பூமியெங்கும் உமது பெயர் எவ்வளவு மாட்சிமை உடையதாய் இருக்கிறது!
சங்கீதம் 8:1-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே, உம்முடைய பெயர் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாக இருக்கிறது! உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர். விரோதியையும், பழிகாரனையும் அடக்கிப்போட, தேவனே நீர் உம்முடைய எதிரிகளுக்காக குழந்தைகள் பாலகர்கள் வாயினால் பெலன் உண்டாக்கினீர். உமது விரல்களின் செயல்களாகிய உம்முடைய வானங்களையும், நீர் அமைத்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, மனிதனை நீர் நினைக்கிறதற்கும், மனுக்குலத்தை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன். நீர் அவனைத் தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்; மகிமையினாலும், மரியாதையினாலும் அவனை முடிசூட்டினீர். உம்முடைய கைகளின் செயல்களின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து. ஆடுமாடுகள் எல்லாவற்றையும், காட்டுமிருகங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், கடலின் மீன்களையும், கடல்களில் வாழ்கிறவைகளையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர். எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே, உம்முடைய பெயர் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாக இருக்கிறது!
சங்கீதம் 8:1-9 பரிசுத்த பைபிள் (TAERV)
எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது நாமம் பூமியின் எல்லா இடத்திலும் மிகுந்த அற்புதமானது! விண்ணுலகிலும் உமது நாமம் உமக்குத் துதிகளைக் கொண்டு வருகிறது. பிள்ளைகள், குழந்தைகள் வாயிலுமிருந்து உம்மைத் துதிக்கும் பாடல்கள் வெளிப்படும். உம் பகைவரை அமைதிப்படுத்த இவ்வல்லமையான பாடல்களைக் கொடுத்தீர். கர்த்தாவே, உமது கைகளால் நீர் செய்த வானங்களை நான் கண்டேன். நீர் படைத்த நிலாவையும், நட்சத்திரங்களையும் நான் கண்டு ஆச்சரியமடைந்தேன். ஏன் மனிதர்கள் உமக்கு முக்கியமாயினர்? ஏன் அவர்களை நீர் நினைவுகூருகிறீர்? ஏன் அவர்களைக் கவனிக்கிறீர்? ஆனால் மனிதர்கள் உமக்கு முக்கியமாயினர்! அவர்களை ஏறக்குறைய தேவர்களைப் போலவே உண்டாக்கினீர். மனிதரை மகிமையாலும், மேன்மையாலும் முடிசூட்டினீர். நீர் உண்டாக்கின எல்லாவற்றிற்கும் அவர்களை அதிகாரிகளாக வைத்தீர். ஆடுகள், பசுக்கள், காட்டு மிருகங்கள் அனைத்தையும் மனிதர்கள் ஆண்டனர். வானத்துப் பறவைகளையும் சமுத்திரத்தில் நீந்தும் மீன்களையும் அவர்கள் ஆண்டனர். எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது நாமம் உலகத்தில் எங்கும் மிகவும், மிகவும் அற்புதமானது!
சங்கீதம் 8:1-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது! உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர். பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர். உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன். நீர் அவனைத் தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர். உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர். ஆடுமாடுகளெல்லாவற்றையும், காட்டுமிருகங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மச்சங்களையும், கடல்களில் சஞ்சரிக்கிறவைகளையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர். எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது.