சங்கீதம் 71:15-18

சங்கீதம் 71:15-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

எப்பொழுதும் என் வாய் உமது நீதியைப்பற்றிச் சொல்லும்; உமது இரட்சிப்பின் செயல்களை நான் அறியாதிருந்த போதிலும், அதைப்பற்றி நாள்தோறும் என் வாய் சொல்லும். ஆண்டவராகிய யெகோவாவே, நான் உமது வல்லமையான செயல்களை எடுத்துச்சொல்வேன்; நான் உம்முடைய நீதியை மட்டுமே பிரசித்தம் பண்ணுவேன். இறைவனே, என் இளமையிலிருந்தே நீர் எனக்குப் போதித்திருக்கிறீர்; நான் உமது அற்புதமான செயல்களை இன்றுவரை அறிவித்து வருகிறேன். இறைவனே, வரப்போகும் எல்லோருக்கும் அடுத்த தலைமுறைக்கும் உமது ஆற்றலையும் உம்முடைய வல்லமையையும் அறிவிக்குமளவும் நான் முதிர்வயதாகும்போதும் என் தலைமுடி நரைக்கும்போதும், என்னைக் கைவிடாதேயும்.

சங்கீதம் 71:15-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

என்னுடைய வாய் நாள்தோறும் உமது நீதியையும் உமது இரட்சிப்பையும் சொல்லும்; அவைகளின் தொகையை நான் அறியவில்லை. யெகோவா ஆண்டவருடைய வல்லமையை முன்னிட்டு நடப்பேன்; உம்முடைய நீதியைப்பற்றியே மேன்மைபாராட்டுவேன். தேவனே, என்னுடைய சிறுவயதுமுதல் எனக்குப் போதித்து வந்தீர்; இதுவரைக்கும் உம்முடைய அதிசயங்களை அறிவித்துவந்தேன். இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது பெலனையும், வரப்போகிற எல்லோருக்கும் உமது வல்லமையையும் நான் அறிவிக்கும்வரை, முதிர்வயதும் நரைமுடியும் உள்ளவனாகும்வரை என்னைக் கைவிடாமல் இருப்பீராக.

சங்கீதம் 71:15-18 பரிசுத்த பைபிள் (TAERV)

நீர் எவ்வளவு நல்லவர் என்பதை நான் ஜனங்களுக்குக் கூறுவேன். நீர் என்னை மீட்ட காலங்களைக் குறித்து நான் ஜனங்களுக்குக் கூறுவேன். எண்ண முடியாத பல காலங்கள் உள்ளன. என் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது பெருமையைப்பற்றி நான் கூறுவேன். உம்மையும் உமது நற்குணங்களையும் நான் பேசுவேன். தேவனே, நான் சிறுவனாக இருக்கையிலேயே நீர் எனக்குப் போதித்துள்ளீர். இன்றுவரை நீர் செய்துள்ள அற்புதமான காரியங்களைக் குறித்து நான் ஜனங்களுக்குக் கூறியுள்ளேன். இப்போது நான் வயது முதிர்ந்தவன், என் தலைமுடி நரைத்துவிட்டது. ஆனாலும் தேவனே, நீர் என்னை விட்டுவிடமாட்டீர் என்பதை நான் அறிவேன். உமது வல்லமையையும், பெருமையையும் ஒவ்வொரு புதிய தலைமுறையினருக்கும் நான் சொல்லுவேன்.

சங்கீதம் 71:15-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் உமது இரட்சிப்பையும் சொல்லும்; அவைகளின் தொகையை நான் அறியேன். கர்த்தராகிய ஆண்டவருடைய வல்லமையை முன்னிட்டு நடப்பேன்; உம்முடைய நீதியைப்பற்றியே மேன்மை பாராட்டுவேன். தேவனே, என் சிறுவயதுமுதல் எனக்குப் போதித்து வந்தீர்; இதுவரைக்கும் உம்முடைய அதிசயங்களை அறிவித்து வந்தேன். இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது வல்லமையையும், வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் அறிவிக்குமளவும், முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக.