சங்கீதம் 50:7-15

சங்கீதம் 50:7-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“என் மக்களே, கேளுங்கள், நான் பேசுவேன்; இஸ்ரயேலே, நான் உனக்கு விரோதமாகச் சாட்சி கூறுவேன்: நான் இறைவன், நானே உங்கள் இறைவன். எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கும் உங்கள் பலிகளுக்காகவோ, அல்லது உங்கள் தகன காணிக்கைகளுக்காகவோ நான் உங்களைக் கண்டிக்கவில்லை. உங்கள் வீட்டிலிலுள்ள காளைகளோ, உங்கள் தொழுவத்திலுள்ள வெள்ளாடுகளோ எனக்கு வேண்டியதில்லை. ஏனெனில் காட்டிலுள்ள எல்லா மிருகங்களும் ஆயிரக்கணக்கான குன்றுகளிலுள்ள ஆடுமாடுகளும் என்னுடையவைகள். மலைகளிலுள்ள ஒவ்வொரு பறவையையும் நான் அறிவேன்; வயல்வெளிகளிலுள்ள உயிரினங்களும் என்னுடையவைகள். நான் பசியாயிருந்தால் உங்களிடம் சொல்லமாட்டேன்; ஏனெனில் உலகமும் அதிலுள்ள யாவும் என்னுடையவைகள். நான் காளைகளின் இறைச்சியை உண்டு, ஆட்டுக்கடாக்களின் இரத்தத்தைக் குடிப்பேனோ? “நீங்கள் இறைவனாகிய எனக்கு உங்கள் நன்றிக் காணிக்கைகளைப் பலியிடுங்கள்; மகா உன்னதமான இறைவனாகிய எனக்கு உங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுங்கள். துன்ப நாளில் என்னை நோக்கி மன்றாடிக் கூப்பிடுங்கள், நான் உங்களை விடுவிப்பேன்; நீங்கள் என்னை மகிமைப்படுத்துவீர்கள்.”

சங்கீதம் 50:7-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

என்னுடைய மக்களே, கேள், நான் பேசுவேன்; இஸ்ரவேலே, உனக்கு விரோதமாகச் சாட்சி சொல்லுவேன்; நானே தேவன், உன்னுடைய தேவனாக இருக்கிறேன். உன்னுடைய பலிகளுக்காக உன்னைக் கடிந்துக்கொள்ளமாட்டேன்; உன்னுடைய தகனபலிகள் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது. உன்னுடைய வீட்டிலிருந்து காளைகளையும், உன்னுடைய தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும் நான் வாங்கிக்கொள்வதில்லை. எல்லா காட்டு உயிரினங்களும், மலைகளில் ஆயிரமாயிரமாகத் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள். மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன்; வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள். நான் பசியாக இருந்தால் உனக்குச் சொல்லமாட்டேன்; பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே. நான் எருதுகளின் இறைச்சியை சாப்பிட்டு, ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ? நீ தேவனுக்கு நன்றிபலியிட்டு, உன்னதமான தேவனுக்கு உன்னுடைய பொருத்தனைகளைச் செலுத்தி; ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.

சங்கீதம் 50:7-15 பரிசுத்த பைபிள் (TAERV)

“எனது ஜனங்களே, நான் கூறுவதைக் கேளுங்கள்! இஸ்ரவேலின் ஜனங்களே, உங்களுக்கு எதிரான எனது சாட்சியைக் காட்டுவேன். நானே உங்கள் தேவன். உங்கள் பலிகளைக் குறித்து நான் குறை கூறமாட்டேன். எப்போதும் இஸ்ரவேலராகிய நீங்கள் உங்கள் தகனபலிகளை என்னிடம் கொண்டுவந்தீர்கள். ஒவ்வொரு நாளும் அவற்றை எனக்கு கொடுக்கிறீர்கள். உங்கள் வீட்டின் எருதுகளையோ உங்கள் மந்தையின் ஆடுகளையோ நான் எடுத்துக்கொள்வதில்லை. எனக்கு அம்மிருகங்கள் தேவையில்லை. காட்டின் மிருகங்கள் எனக்குச் சொந்தமானவை. மலைகளிலுள்ள பல்லாயிரம் மிருகங்கள் எல்லாம் எனக்குச் சொந்தமானவை. உயர்ந்த மலையின் ஒவ்வொரு பறவையையும் நான் அறிவேன். மலையின்மேல் அசையும் பொருட்களெல்லாம் என்னுடையவை. எனக்குப் பசியில்லை! எனக்குப் பசித்தாலும் உணவுக்காக உன்னைக் கேட்கமாட்டேன். உலகமும் அதன் அனைத்துப் பொருள்களும் எனக்குச் சொந்தமானவை. எருதுகளின் மாமிசத்தை நான் புசிப்பதில்லை. ஆடுகளின் இரத்தத்தை நான் குடிக்கமாட்டேன்” என்று தேவன் கூறுகிறார். எனவே ஸ்தோத்திர பலிகளை தேவனுக்குக் கொண்டுவந்து அவரோடு இருக்கும்படி வாருங்கள். நீங்கள் மிக உன்னதமான தேவனுக்கு வாக்குறுதி பண்ணினீர்கள். எனவே வாக்களித்த பொருள்களை அவருக்குக் கொடுங்கள். தேவன், “இஸ்ரவேலரே, துன்பம் நேர்கையில் என்னிடம் விண்ணப்பம் செய்யுங்கள்! நான் உங்களுக்கு உதவுவேன். நீங்கள் அப்போது என்னை மகிமைப்படுத்த முடியும்” என்று கூறுகிறார்.

சங்கீதம் 50:7-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

என் ஜனமே, கேள், நான் பேசுவேன்; இஸ்ரவேலே, உனக்கு விரோதமாய்ச் சாட்சியிடுவேன்; நானே தேவன், உன் தேவனாயிருக்கிறேன். உன் பலிகளினிமித்தம் உன்னைக் கடிந்துகொள்ளேன்; உன் தகனபலிகள் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது. உன் வீட்டிலிருந்து காளைகளையும், உன் தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும் நான் வாங்கிக் கொள்வதில்லை. சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள். மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன்; வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள். நான் பசியாயிருந்தால் உனக்குச் சொல்லேன்; பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே. நான் எருதுகளின் மாம்சம் புசித்து, ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ? நீ தேவனுக்கு ஸ்தோத்திரபலியிட்டு, உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி; ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.