சங்கீதம் 42:1-11

சங்கீதம் 42:1-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மான் நீரோடைகளைத் தேடி ஏங்குவது போல், இறைவனே என் ஆத்துமா உம்மைத் தேடி ஏங்குகிறது. என் ஆத்துமா இறைவனுக்காக, உயிருள்ள இறைவனுக்காக தாகம் கொள்கிறது; நான் எப்பொழுது இறைவனுடைய சமுகத்தில் வந்து நிற்பேன்? மனிதர்களோ நாள்முழுதும் என்னைப் பார்த்து, “உன் இறைவன் எங்கே?” என்று கேட்பதால், இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று. என் ஆத்துமா எனக்குள் உருகுகையில் இவைகள் என் நினைவுக்கு வருகின்றன: முந்திய நாட்களில் நான் மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து, இறைவனின் வீட்டிற்கு அவர்களோடு ஊர்வலமாய் நடந்து சென்றேன்; பண்டிகை கொண்டாடும் மக்கள் கூட்டத்தின் நடுவே, மகிழ்ச்சியின் சத்தத்தோடும் துதியின் சத்தத்தோடும் நடந்து சென்றேன். என் ஆத்துமாவே, நீ ஏன் சோர்ந்து போகிறாய்? ஏன் இவ்விதமாய் எனக்குள் கலங்கியிருக்கிறாய்? இறைவனில் உன் எதிர்பார்ப்பை வைத்திரு; நான் என் இறைவனின் இரட்சிப்பிற்காக இன்னும் அவரைத் துதிப்பேன். என் இறைவனே, என் ஆத்துமா எனக்குள் சோர்ந்துபோகிறது; அதினால் நான் எர்மோன் மலைகள் இருக்கும் யோர்தான் நதி தொடங்கும் நாட்டிலிருந்தும், மீசார் மலையிலிருந்தும் உம்மை நினைவுகூருவேன். உமது அருவிகளின் இரைச்சலினால் ஆழம் ஆழத்தைக் கூப்பிடுகிறது; உம்முடைய எல்லா அலைகளும், பேரலைகளும் எனக்கு மேலாக மோதிச் செல்கின்றன. பகலில் யெகோவா தமது உடன்படிக்கையின் அன்பை எனக்குக் கொடுக்கிறார்; இரவிலோ, அவருடைய பாடல் என்னோடு இருக்கிறது; என் வாழ்வின் இறைவனை நோக்கிய மன்றாட்டாகவே அது இருக்கிறது. நான் என் கன்மலையாகிய இறைவனிடம், “நீர் ஏன் என்னை மறந்து விட்டீர்? பகைவனால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துக்கத்துடன் திரியவேண்டும்?” என்கிறேன். நாளெல்லாம் என் பகைவர்கள் என்னைப் பார்த்து, “உன் இறைவன் எங்கே?” என்று என்னைப் நிந்திப்பதால், என் எலும்புகள் சாவுக்கேதுவான வேதனையை அடைகின்றன. என் ஆத்துமாவே, நீ ஏன் சோர்ந்து போகிறாய்? நீ ஏன் இவ்விதமாய் எனக்குள் கலங்கியிருக்கிறாய்? இறைவனில் உன் எதிர்பார்ப்பை வைத்திரு; நான் என் இறைவனின் இரட்சிப்பிற்காக இன்னும் அவரைத் துதிப்பேன்.

சங்கீதம் 42:1-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என்னுடைய ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. என்னுடைய ஆத்துமா தேவன்மேல், உயிருள்ள தேவன்மேலேயே தாகமாக இருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்? உன்னுடைய தேவன் எங்கே என்று அவர்கள் நாள்தோறும் என்னிடத்தில் சொல்லுகிறபடியால், இரவும் பகலும் என்னுடைய கண்ணீரே எனக்கு உணவானது. முன்னே நான் பண்டிகையை அனுசரிக்கிற மக்களோடு கூட நடந்து, கூட்டத்தின் சந்தோஷமும் துதியுமான சத்தத்தோடு தேவாலயத்திற்குப் போய்வருவேனே; இவைகளை நான் நினைக்கும்போது என்னுடைய உள்ளம் எனக்குள்ளே உருகுகிறது. என்னுடைய ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் கவலைப்படுகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பிற்காக நான் இன்னும் அவரைத் துதிப்பேன். என் தேவனே, என்னுடைய ஆத்துமா எனக்குள் கலங்குகிறது; ஆகையால் யோர்தான் தேசத்திலும் எர்மோன் மலைகளிலும் சிறுமலையிலுமிருந்து உம்மை நினைக்கிறேன். உமது மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது; உமது அலைகளும் பேரலைகளும் எல்லாம் என்மேல் புரண்டுபோகிறது. ஆகிலும் யெகோவா பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார்; இரவுநேரத்திலே அவரைப் பாடும் பாட்டு என்னுடைய வாயிலிருக்கிறது; என் உயிருள்ள தேவனை நோக்கி விண்ணப்பம்செய்கிறேன். நான் என்னுடைய கன்மலையாகிய தேவனை நோக்கி: ஏன் என்னை மறந்தீர்? எதிரியால் ஒடுக்கப்பட்டு, நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும் என்று சொல்லுகிறேன். உன் தேவன் எங்கே என்று என் எதிரிகள் நாள்தோறும் என்னோடு சொல்லி, என்னை நிந்திப்பது என்னுடைய எலும்புகளை உருவக்குத்துகிறதுபோல் இருக்கிறது. என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் கவலைப்படுகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாக இருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.

சங்கீதம் 42:1-11 பரிசுத்த பைபிள் (TAERV)

நீரூற்றின் தண்ணீருக்காக மானானது தாகங்கொள்ளுகிறது. அவ்வாறே என் ஆத்துமா தேவனே உமக்காகத் தாகமடைகிறது. என் ஆத்துமா ஜீவனுள்ள தேவனுக்காகத் தாகமடைகிறது. அவரைச் சந்திக்க நான் எப்போது போவேன்? என் பகைவன் எப்போதும் என்னைக் கேலி செய்து, “உன் தேவன் எங்கே? உன்னைக் காப்பாற்றுவதற்காக அவர் இன்னமும் வரவில்லையா?” என்று கேட்கிறபடியால் இரவும் பகலும் என் கண்ணீரே என் உணவாயிற்று. தேவனுடைய ஆலயத்திற்குக் கூட்டத்தினரை வழிநடத்தி நடந்ததையும், பலரோடு ஓய்வு நாளைக் கொண்டாடியதையும், துதித்துப் பாடல்களைப் பாடி மகிழ்ந்ததையும், நான் நினைவு கூரும்போது என் உள்ளம் உடைந்து போகிறது. ஏன் நான் மிகவும் துக்கமாயிருக்க வேண்டும்? ஏன் நான் மிகவும் கலங்கிப்போக வேண்டும்? நான் தேவனுடைய உதவிக்காகக் காத்திருப்பேன். அவரைத் துதிக்கும் வாய்ப்பு இன்னும் எனக்குக் கிடைக்கும். அவர் என்னை மீட்பார். என் தேவனே, நான் மிகவும் துக்கமாயிருக்கிறேன். எனவே நான் உம்மைக் கூப்பிட்டேன். யோர்தான் பள்ளத்தாக்கிலிருந்து எர்மோன் மலைவரைக்கும் பின் மிசார் மலை (சிறுமலை) வரைக்கும் போனேன். பூமியின் ஆழங்களிலிருந்து பொங்கியெழும் தண்ணீரைப் போன்றும், கடலிலிருந்து அலைகள் தொடர்ந்து எழும்புவதைப் போன்றும், மீண்டும், மீண்டும் தொல்லைகள் என்னைச் சூழ்ந்தன. கர்த்தாவே, உமது அலைகள் என்னைச் சூழ்ந்து தாக்குகின்றன. ஒவ்வொரு நாளும் கர்த்தர் தமது உண்மை அன்பை வெளிப்படுத்துகிறதினால் ஒவ்வொரு இரவும் அவரது பாடல்களை நான் பாடுகிறேன். ஜீவனுள்ள தேவனிடம் நான் ஜெபிக்கிறேன். என் பாறையான தேவனிடம் நான் பேசுவேன். நான், “கர்த்தாவே, ஏன் என்னை மறந்தீர்? என் பகைவரிடமிருந்து தப்பும் வழியை எனக்கு நீர் ஏன் காட்டவில்லை” என்பேன். என் பகைவர்கள் என்னை இடைவிடாது கேலி செய்து, “உன் தேவன் எங்கே? உன்னைக் காப்பாற்ற இன்னமும் அவர் வரவில்லையா?” என்று என்னைக் கேட்டு அவர்களின் வெறுப்பைக் காட்டுகிறார்கள். ஏன் நான் துக்கமாயிருக்க வேண்டும்? ஏன் நான் கலக்கம் கொள்ளவேண்டும்? நான் தேவனுடைய உதவிக்காகக் காத்திருப்பேன். அவரைத் துதிக்கும் வாய்ப்பு இன்னும் எனக்குக் கிடைக்கும். அவர் என்னை மீட்பார்!

சங்கீதம் 42:1-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்? உன் தேவன் எங்கே என்று அவர்கள் நாள்தோறும் என்னிடத்தில் சொல்லுகிறபடியால், இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று. முன்னே நான் பண்டிகையை ஆசரிக்கிற ஜனங்களோடே கூட நடந்து, கூட்டத்தின் களிப்பும் துதியுமான சத்தத்தோடே தேவாலயத்திற்குப் போய்வருவேனே; இவைகளை நான் நினைக்கும்போது என் உள்ளம் எனக்குள்ளே உருகுகிறது. என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன். என் தேவனே, என் ஆத்துமா எனக்குள் கலங்குகிறது; ஆகையால் யோர்தான் தேசத்திலும் எர்மோன் மலைகளிலும் சிறுமலையிலுமிருந்து உம்மை நினைக்கிறேன். உமது மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது; உமது அலைகளும் திரைகளும் எல்லாம் என்மேல் புரண்டுபோகிறது. ஆகிலும் கர்த்தர் பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார்; இராக்காலத்திலே அவரைப் பாடும் பாட்டு என் வாயிலிருக்கிறது; என் ஜீவனுடைய தேவனை நோக்கி விண்ணப்பஞ்செய்கிறேன். நான் என் கன்மலையாகிய தேவனை நோக்கி: ஏன் என்னை மறந்தீர்? சத்துருவினால் ஒடுக்கப்பட்டு, நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும் என்று சொல்லுகிறேன். உன் தேவன் எங்கே என்று என் சத்துருக்கள் நாள்தோறும் என்னோடே சொல்லி, என்னை நிந்திப்பது என் எலும்புகளை உருவக்குத்துகிறதுபோல் இருக்கிறது. என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.

சங்கீதம் 42:1-11

சங்கீதம் 42:1-11 TAOVBSIசங்கீதம் 42:1-11 TAOVBSIசங்கீதம் 42:1-11 TAOVBSI

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்