சங்கீதம் 38:11-22

சங்கீதம் 38:11-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

எனது கூட்டாளிகளும் நண்பர்களும் என் புண்களின் நிமித்தம், என்னைச் சந்திப்பதைத் தவிர்க்கிறார்கள். என்னுடைய உறவினர்களும் என்னைவிட்டுத் தூரமாய் நிற்கிறார்கள். என்னைக் கொல்லத் தேடுபவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்; எனக்குத் தீமைசெய்யத் தேடுகிறவர்கள் என் அழிவைக் குறித்துப் பேசுகிறார்கள்; நாளெல்லாம் வஞ்சனையாய் சூழ்ச்சி செய்கிறார்கள். நானோ செவிடனைப்போலக் கேட்காதவனாகவும், ஊமையனைப்போல வாய் திறக்காதவனாகவும் இருக்கிறேன். காது காதுகேட்காதவனும், தன்னுடைய வாயினால் பதிலளிக்க முடியாதிருக்கிற மனிதனைப் போலானேன். யெகோவாவே, நான் உமக்குக் காத்திருக்கிறேன்; என் இறைவனாகிய ஆண்டவரே, நீர் எனக்கு பதில் கொடும். “என் கால் சறுக்கும்போது, அவர்கள் என்னைப் பழித்து மகிழவிடாதேயும்; அவர்கள் என்னிமித்தம் ஏளனமாக பெருமைபாராட்ட விடாதேயும்” என்று நான் சொன்னேன். நான் தடுமாறிவிழும் தருவாயில் இருக்கிறேன்; என் வேதனை எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது. என் அநியாயத்தை அறிக்கையிடுகிறேன்; என் பாவத்தினால் நான் கலங்கியிருக்கிறேன். காரணமின்றி பலர் எனக்கு பகைவரானார்கள்; எதுவுமின்றி என்னை வெறுக்கிறவர்கள் ஏராளமாயிருக்கிறார்கள். நான் நன்மையானதைச் செய்தபோதும், நான் செய்த நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமை செய்பவர்கள் என்னைக் குற்றப்படுத்துகிறார்கள். யெகோவாவே, என்னைக் கைவிடாதேயும்; என் இறைவனே, என்னைவிட்டுத் தூரமாய் இருக்கவேண்டாம். என் இரட்சகராகிய யெகோவாவே, எனக்கு உதவிசெய்ய விரைவாய் வாரும்.

சங்கீதம் 38:11-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

என் நண்பர்களும் என் தோழர்களும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்; என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள். என் உயிரை வாங்கத்தேடுகிறவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்; எனக்குத் தீங்கை தேடுகிறவர்கள் கேடானவைகளைப் பேசி, நாள்முழுவதும் வஞ்சனைகளை யோசிக்கிறார்கள். நானோ செவிடனைப்போலக் கேட்காதவனாகவும், ஊமையனைப்போல வாய் திறக்காதவனாகவும் இருக்கிறேன். காதுகேட்காதவனும், தன்னுடைய வாயில் பதில் இல்லாதவனுமாக இருக்கிற மனிதனைப் போலானேன். யெகோவாவே, உமக்குக் காத்திருக்கிறேன்; என் தேவனாகிய ஆண்டவரே, நீர் பதில் கொடுப்பீர். அவர்கள் எனக்காக சந்தோஷப்படாதபடிக்கு இப்படிச் சொன்னேன்; என்னுடைய கால் தவறும்போது என்மேல் பெருமை பாராட்டுவார்களே. நான் தடுமாறி விழ ஏதுவாக இருக்கிறேன்; என்னுடைய துக்கம் எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது. என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு, என் பாவத்திற்காக கவலைப்படுகிறேன். என் எதிரிகள் வாழ்ந்து பலத்திருக்கிறார்கள்; காரணமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் பெருகியிருக்கிறார்கள். நான் நன்மையைப் பின்பற்றுகிறபடியால், நன்மைக்குத் தீமை செய்கிறவர்கள் என்னை விரோதிக்கிறார்கள். யெகோவாவே, என்னைக் கைவிடாமலிரும்; என் தேவனே, எனக்குத் தூரமாக இருக்கவேண்டாம். என்னுடைய இரட்சிப்பாகிய ஆண்டவரே, எனக்குச் உதவிசெய்ய விரைவாகவாரும்.

சங்கீதம் 38:11-22 பரிசுத்த பைபிள் (TAERV)

என் நோயினிமித்தம் என் நண்பர்களும், அயலகத்தாரும் என்னைச் சந்திப்பதில்லை. என் குடும்பத்தாரும் என்னை நெருங்குவதில்லை. என் பகைவர்கள் என்னைக் குறித்துத் தீய காரியங்களைச் சொல்கிறார்கள். பொய்யையும், வதந்திகளையும் அவர்கள் பரப்புகிறார்கள். என்னைக் குறித்து எப்போதும் பேசுகிறார்கள். நான் கேட்கமுடியாத செவிடனைப் போலானேன். நான் பேசமுடியாத ஊமையைப் போலானேன். நான், ஒருவனைக் குறித்தும் பிறர் கூறுபவற்றைக் கேட்க முடியாத மனிதனைப் போலானேன். என் பகைவர்கள் தவறு செய்கிறார்கள் என்பதை நிரூபிக்க என்னால் இயலவில்லை. கர்த்தாவே எனக்கு ஆதரவளியும். எனது தேவனாகிய ஆண்டவரே, நீர் எனக்காகப் பேச வேண்டும். நான் ஏதேனும் பேசினால், என் பகைவர்கள் என்னைப் பார்த்து நகைப்பார்கள். நான் நோயுற்றிருப்பதை அவர்கள் காண்பார்கள். செய்த தவற்றிற்கு நான் தண்டனை அனுபவிப்பதாக அவர்கள் கூறுவார்கள். தீயக் காரியங்களைச் செய்த குற்றவாளி நான் என்பதை அறிவேன். என் நோவை என்னால் மறக்க இயலாது. கர்த்தாவே, நான் செய்த தீயக் காரியங்களைக் குறித்து உம்மிடம் பேசினேன். என் பாவங்களுக்காகக் கவலையடைகிறேன். என் பகைவர்கள் உயிரோடும் ஆரோக்கியத்தோடும் இருக்கிறார்கள். அவர்கள் பல, பல பொய்களைக் கூறியுள்ளார்கள். என் பகைவர்கள் எனக்குத் தீயக் காரியங்களைச் செய்தனர். ஆனால் நான் அவர்களுக்கு நல்லவற்றையே செய்தேன். நான் நல்லவற்றை மட்டுமே செய்ய முயன்றேன், ஆனால் அந்த ஜனங்கள் எனக்கெதிராகத் திரும்பினார்கள். கர்த்தாவே, என்னை விட்டு விலகாதேயும். என் தேவனே, என் அருகே தங்கியிரும். விரைந்து வந்து எனக்கு உதவும்! என் தேவனே, என்னை மீட்டருளும்.

சங்கீதம் 38:11-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

என் சிநேகிதரும் என் தோழரும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்; என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள். என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்; எனக்குப் பொல்லாங்கு தேடுகிறவர்கள் கேடானவைகளைப் பேசி, நாள்முழுதும் வஞ்சனைகளை யோசிக்கிறார்கள். நானோ செவிடனைப்போலக் கேளாதவனாகவும், ஊமையனைப்போல வாய் திறவாதவனாகவும் இருக்கிறேன். காதுகேளாதவனும், தன் வாயில் மறுஉத்தரவுகள் இல்லாதவனுமாயிருக்கிற மனுஷனைப் போலானேன். கர்த்தாவே, உமக்குக் காத்திருக்கிறேன்; என் தேவனாகிய ஆண்டவரே, நீர் மறுஉத்தரவு கொடுப்பீர். அவர்கள் என்னிமித்தம் சந்தோஷப்படாதபடிக்கு இப்படிச் சொன்னேன்; என் கால் தவறும்போது என்மேல் பெருமை பாராட்டுவார்களே. நான் தடுமாறி விழ ஏதுவாயிருக்கிறேன்; என் துக்கம் எப்பொழுதும் என் முன்பாக இருக்கிறது. என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு, என் பாவத்தினிமித்தம் விசாரப்படுகிறேன். என் சத்துருக்கள் வாழ்ந்து பலத்திருக்கிறார்கள்; முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் பெருகியிருக்கிறார்கள். நான் நன்மையைப் பின்பற்றுகிறபடியால், நன்மைக்குத் தீமை செய்கிறவர்கள் என்னை விரோதிக்கிறார்கள். கர்த்தாவே, என்னைக் கைவிடாதேயும்; என் தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும். என் இரட்சிப்பாகிய ஆண்டவரே, எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்