சங்கீதம் 36:5-10

சங்கீதம் 36:5-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பு வானங்களையும் உமது உண்மை மேகங்களையும் எட்டுகிறது. உமது நீதி விசாலமான மலைகளைப் போன்றது, உமது நியாயம் மகா ஆழத்தைப் போன்றது. யெகோவாவே, நீரே மனிதனையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர். இறைவனே, உமது உடன்படிக்கையின் அன்பு எவ்வளவு அருமையானது! மனிதர்கள் உமது சிறகின் நிழலிலே தஞ்சம் அடைகிறார்கள். உமது வீட்டின் செழிப்பினால் அவர்கள் நிறைவு பெருகிறார்கள்; நீர் உமது மகிழ்ச்சியின் நதியிலிருந்து அவர்களுக்குக் குடிக்கக் கொடுக்கிறீர். ஏனெனில், வாழ்வின் ஊற்று உம்மிடத்திலேயே இருக்கிறது; உமது ஒளியில் நாங்கள் வெளிச்சம் காண்கிறோம். உம்மை அறிந்தவர்களுக்கு உமது உடன்படிக்கையின் அன்பையும் இருதயத்தில் நீதிமான்களுக்கு உமது நியாயத்தையும் வழங்கும்.

சங்கீதம் 36:5-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவாவே, உமது கிருபை வானங்களில் தெரிகிறது; உமது சத்தியம் மேகமண்டலங்கள்வரை எட்டுகிறது. உமது நீதி மகத்தான மலைகள் போலவும், உமது நியாயங்கள் மகா ஆழமாகவும் இருக்கிறது; யெகோவாவே, மனிதர்களையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர். தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனிதர்கள் உமது இறக்கைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள். உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்; உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர். வாழ்வின் ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது; உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம். உம்மை அறிந்தவர்கள்மேல் உமது கிருபையையும், செம்மையான இருதயமுள்ளவர்கள்மேல் உமது நீதியையும் பாராட்டியருளும்.

சங்கீதம் 36:5-10 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தாவே, உமது உண்மை அன்பு வானத்திலும் உயர்ந்தது. உம் நேர்மை மேகங்களிலும் உயர்ந்தது. கர்த்தாவே, உமது நன்மை உயரமான மலைகளைக் காட்டிலும் உயர்ந்தது. உமது நியாயம் ஆழமான சமுத்திரத்திலும் ஆழமானது. கர்த்தாவே, நீர் மனிதனையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர். உமது அன்பான இரக்கத்தைக் காட்டிலும் விலையுயர்ந்தது எதுவுமில்லை. ஜனங்கள் உம்மிடத்தில் அடைக்கலம் புகுகின்றனர். உமது கருணையான பாதுகாப்பில் மகிழ்கிறார்கள். கர்த்தாவே, உம் வீட்டின் நற்காரியங்களால் அவர்கள் புதுவலிமை பெறுகிறார்கள். அற்புதமான நதியிலிருந்து அவர்களைப் பருகப்பண்ணுவீர். கர்த்தாவே, ஜீவஊற்று உம்மிடமிருந்து புறப்படுகிறது. உமது வெளிச்சம் நாங்கள் ஒளியைக் காண உதவுகிறது. கர்த்தாவே, உம்மை உண்மையில் அறியும் ஜனங்களைத் தொடர்ந்து நேசியும். உமக்கு உண்மையாயிருக்கிற அந்த ஜனங்களுக்கு உமது நன்மை எப்போதும் இருக்கட்டும்.

சங்கீதம் 36:5-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தாவே, உமது கிருபை வானங்களில் விளங்குகிறது; உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தம் எட்டுகிறது. உமது நீதி மகத்தான பர்வதங்கள் போலவும், உமது நியாயங்கள் மகா ஆழமாகவும் இருக்கிறது; கர்த்தாவே, மனுஷரையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர். தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள். உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்; உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர். ஜீவஊற்று உம்மிடத்தில் இருக்கிறது; உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம். உம்மை அறிந்தவர்கள்மேல் உமது கிருபையையும், செம்மையான இருதயமுள்ளவர்கள்மேல் உமது நீதியையும் பாராட்டியருளும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்