சங்கீதம் 33:1-11

சங்கீதம் 33:1-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நீதிமான்களே, நீங்கள் மகிழ்ச்சியுடன் யெகோவாவுக்குத் துதி பாடுங்கள்; அவரைத் துதிப்பது நேர்மையுள்ளவர்களுக்குத் தகுதியானது. யாழ் இசைத்து யெகோவாவைத் துதியுங்கள்; பத்து நரம்பு வீணையினால் அவருக்கு இசை பாடுங்கள். அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; திறமையாக இசைத்து மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரியுங்கள். யெகோவாவினுடைய வார்த்தை சத்தியமும், அவருடைய செயல்களெல்லாம் உண்மையானதுமாய் இருக்கிறது. யெகோவா நீதியையும் நியாயத்தையும் விரும்புகிறார்; பூமி முழுவதுமே அவருடைய உடன்படிக்கையின் அன்பினால் நிறைந்திருக்கிறது. யெகோவாவினுடைய வார்த்தையினாலே வானங்கள் படைக்கப்பட்டன, அவருடைய வாயின் சுவாசத்தினால் வான்கோள்கள் யாவும் படைக்கப்பட்டன. அவர் கடல்நீரைச் ஜாடிகளில் சேர்த்துவைக்கிறார்; ஆழத்தை களஞ்சியங்களில் வைக்கிறார். பூமி அனைத்தும் யெகோவாவுக்குப் பயப்படுவதாக; உலகின் மக்கள் அனைவரும் அவரிடம் பயபக்தியாய் இருப்பார்களாக. ஏனெனில் அவர் சொல்ல, உலகம் உண்டாயிற்று; அவர் கட்டளையிட்டார், அது உறுதியாய் நின்றது. யெகோவா நாடுகளின் திட்டங்களை முறியடிக்கிறார்; அவர் மக்களின் நோக்கங்களைத் தடுக்கிறார். ஆனால் யெகோவாவின் ஆலோசனை என்றென்றும் உறுதியாகவும், அவருடைய இருதயத்தின் நோக்கங்கள் தலைமுறை தலைமுறையாகவும் நிலைநிற்கும்.

சங்கீதம் 33:1-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நீதிமான்களே, யெகோவாவுக்குள் சந்தோஷமாக இருங்கள்; துதிசெய்வது நேர்மையானவர்களுக்குத் தகும். சுரமண்டலத்தினால் யெகோவாவை துதித்து, பத்து நரம்பு வீணையினாலும் அவரை புகழ்ந்து பாடுங்கள். அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; ஆனந்த சத்தத்தோடு வாத்தியங்களை நேர்த்தியாக வாசியுங்கள். யெகோவாவுடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது. அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்; பூமி யெகோவாவுடைய கருணையினால் நிறைந்திருக்கிறது. யெகோவாவுடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் அனைத்தும் உண்டாக்கப்பட்டது. அவர் கடலின் தண்ணீர்களைக் குவியலாகச் சேர்த்து, ஆழமான தண்ணீர்களைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார். பூமியெல்லாம் யெகோவாவுக்குப் பயப்படுவதாக; உலகத்திலுள்ள குடிமக்களெல்லாம் அவருக்கு பயந்திருப்பதாக. அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும். யெகோவா தேசங்களின் ஆலோசனையை வீணடித்து, மக்களுடைய நினைவுகளை பயனற்றதாக ஆக்குகிறார். யெகோவாவுடைய ஆலோசனை நிரந்தரகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்.

சங்கீதம் 33:1-11 பரிசுத்த பைபிள் (TAERV)

நல்லோரே, கர்த்தருக்குள் களிப்படையுங்கள்! நல்ல நேர்மையான ஜனங்களே, அவரைத் துதியுங்கள்! சுரமண்டலத்தை இசைத்து கர்த்தரைத் துதியுங்கள்! பத்து நரம்பு வீணையை இசைத்து கர்த்தரைப் பாடுங்கள். புதுப்பாட்டை அவருக்குப் பாடுங்கள்! மகிழ்ச்சியான இராகத்தை இனிமையாய் மீட்டுங்கள். தேவனுடைய வாக்கு உண்மையானது! அவர் செய்பவற்றை உறுதியாக நம்புங்கள்! நன்மையையும் நேர்மையையும் தேவன் நேசிக்கிறார். கர்த்தர் பூமியை அவரது அன்பினால் நிரப்பியுள்ளார். கர்த்தர் கட்டளையிட, உலகம் உருவாயிற்று. தேவனுடைய வாயின் மூச்சு பூமியிலுள்ள அனைத்தையும் உருவாக்கிற்று. கடலின் தண்ணீரை ஒரே இடத்தில் தேவன் ஒன்று திரட்டினார். அவர் சமுத்திரத்தை அதற்குரிய இடத்தில் வைக்கிறார். பூமியிலுள்ளோர் யாவரும் கர்த்தருக்குப் பயந்து அவரை மதிக்கவேண்டும். உலகில் வாழும் ஜனங்கள் எல்லோரும் அவருக்கு அஞ்ச வேண்டும். ஏனெனில் தேவன் கட்டளையிட, அக்காரியம் நிறைவேறுகிறது. அவர் “நில்!” எனக்கூற அக்காரியம் நின்றுவிடும். எல்லோருடைய அறிவுரையையும் பயனற்றுப்போகச் செய்ய கர்த்தராலாகும். அவர்கள் திட்டங்களை கர்த்தர் அழிக்கக் கூடும். கர்த்தருடைய அறிவுரை என்றென்றும் நல்லது. தலைமுறை தலைமுறைக்கும் அவர் திட்டங்கள் நன்மை தரும்.

சங்கீதம் 33:1-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நீதிமான்களே, கர்த்தருக்குள் களிகூருங்கள்; துதிசெய்வது செம்மையானவர்களுக்குத் தகும். சுரமண்டலத்தினால் கர்த்தரைத் துதித்து, பத்து நரம்பு வீணையினாலும் அவரைக் கீர்த்தனம் பண்ணுங்கள். அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; ஆனந்தசத்தத்தோடே வாத்தியங்களை நேர்த்தியாய் வாசியுங்கள். கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது. அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்; பூமி கர்த்தருடைய காருணியத்தினால் நிறைந்திருக்கிறது. கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது. அவர் சமுத்திர ஜலங்களைக் குவியலாகச் சேர்த்து, ஆழமான ஜலங்களைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார். பூமியெல்லாம் கர்த்தருக்குப் பயப்படுவதாக; உலகத்திலுள்ள குடிகளெல்லாம் அவருக்கு அஞ்சியிருப்பதாக. அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும். கர்த்தர் ஜாதிகளின் ஆலோசனையை விருதாவாக்கி, ஜனங்களுடைய நினைவுகளை அவமாக்குகிறார். கர்த்தருடைய ஆலோசனை நித்தியகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலை முறையாகவும் நிற்கும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்