சங்கீதம் 147:8-17

சங்கீதம் 147:8-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவர் ஆகாயத்தை மேகங்களினால் மூடுகிறார்; பூமிக்கு மழையைக் கொடுத்து, மலைகளில் புல்லை வளரப்பண்ணுகிறார். மிருகங்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் அவர் உணவு கொடுக்கிறார். குதிரையின் பலத்தில் அவர் பிரியம் கொள்வதில்லை, படைவீரனின் கால் வலிமையில் அவர் மகிழ்ச்சி அடைவதுமில்லை; யெகோவா தமக்குப் பயந்து, தங்கள் நம்பிக்கையை அவருடைய உடன்படிக்கையின் அன்பில் வைத்திருக்கிறவர்களில் மகிழ்ச்சியாயிருக்கிறார். எருசலேமே யெகோவாவைப் பாராட்டு; சீயோனே உன் இறைவனைத் துதி. ஏனெனில் அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன் மக்களை ஆசீர்வதிக்கிறார். அவர் உன் எல்லைகளுக்குச் சமாதானத்தைக் கொடுத்து, சிறந்த கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார். அவர் பூமிக்குத் தமது கட்டளையை அனுப்புகிறார்; அவருடைய வார்த்தை விரைந்து செல்கிறது. அவர் மூடுபனியை கம்பளியைப்போல் பரப்புகிறார்; உறைபனித் துகள்களை சாம்பலைப்போல் தூவுகிறார். அவர் தமது பனிக்கட்டி மழையை சிறு கற்களைப்போல் வீசியெறிகிறார்; அவருடைய பனியின் குளிர்காற்றை யாரால் தாங்கமுடியும்?

சங்கீதம் 147:8-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவர் வானத்தை மேகங்களால் மூடி, பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி, மலைகளில் புல்லை முளைக்கச்செய்கிறார். அவர் மிருகங்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார். அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாக இருக்கமாட்டார்; வீரனுடைய கால்களில் பிரியப்படமாட்டார். தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் யெகோவா பிரியமாக இருக்கிறார். எருசலேமே, யெகோவாவுக்கு நன்றி சொல்; சீயோனே, உன்னுடைய தேவனைத் துதி. அவர் உன்னுடைய வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன்னுடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார். அவர் உன்னுடைய எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக மாற்றி, செழிப்பான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார். அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார்; அவருடைய சொல் மகா விரைவாக செல்லுகிறது. பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; சாம்பலைப்போல உறைந்த பனியைத் தூவுகிறார். அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார்; அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்?

சங்கீதம் 147:8-17 பரிசுத்த பைபிள் (TAERV)

தேவன் வானத்தை மேகங்களால் நிரப்புகிறார். தேவன் பூமிக்காக மழையைப் பெய்யப்பண்ணுகிறார். தேவன் மலைகளின் மேல் புல் வளரும்படி செய்கிறார். தேவன் மிருகங்களுக்கு உணவளிக்கிறார். தேவன் பறவைக் குஞ்சுகளுக்கு உணவூட்டுகிறார். போர்க் குதிரைகளும் வல்லமையுள்ள வீரர்களும் அவரை மகிழ்ச்சிப்படுத்தமாட்டார்கள். கர்த்தரைத் தொழுதுகொள்கிற ஜனங்கள் அவரை மகிழ்ச்சியாக்குகிறார்கள். அவரது உண்மை அன்பை நம்புகிற ஜனங்களைக் கண்டு அவர் சந்தோஷமடைகிறார். எருசலேமே, கர்த்தரைத் துதி! சீயோனே, உன் தேவனைத் துதி! எருசலேமே, தேவன் உன் கதவுகளை உறுதியாக்குகிறார். தேவன் உன் நகரத்தின் ஜனங்களை ஆசீர்வதிக்கிறார். உன் நாட்டிற்கு தேவன் சமாதானத்தைக் கொண்டுவந்தார். எனவே பகைவர்கள் போரில் உன் நாட்டுத் தானியத்தைக் கவர்ந்து செல்லவில்லை. உனக்கு உணவிற்குத் தேவையான தானியம் மிகுதியாக இருக்கிறது. பூமிக்கு தேவன் கட்டளையிடுகிறார். அது உடனே கீழ்ப்படிகிறது. நிலம் கம்பளியைப்போன்று வெண்மையாகும்வரை தேவன் பனியை விழப்பண்ணுகிறார். உறைந்த பனி காற்றினூடே தூசியைப்போல வீசும்படி தேவன் செய்கிறார். தேவன் வானத்திலிருந்து கற்களைப்போல கல்மழையை பெய்யப் பண்ணுகிறார். அவர் அனுப்பும் குளிரைத் தாங்கிக்கொள்ள ஒருவனாலும் ஆகாது.

சங்கீதம் 147:8-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர் வானத்தை மேகங்களால் மூடி, பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி, மலைகளில் புல்லை முளைப்பிக்கிறார். அவர் மிருகஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார். அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாயிரார்; வீரனுடைய கால்களில் பிரியப்படார். தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார். எருசலேமே, கர்த்தரை ஸ்தோத்திரி; சீயோனே, உன் தேவனைத் துதி. அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார். அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உச்சிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார். அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார்; அவருடைய சொல் மகா தீவிரமாய்ச் சொல்லுகிறது. பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; சாம்பலைப்போல உறைந்த பனியைத் தூவுகிறார். அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார்; அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்?

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்