சங்கீதம் 139:7-16

சங்கீதம் 139:7-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

உமது ஆவியானவரைவிட்டு என்னால் எங்கே போகமுடியும்? உமது சந்நிதியைவிட்டு என்னால் எங்கு ஓடமுடியும்? நான் வானங்கள்வரை மேலே போனாலும், நீர் அங்கே இருக்கிறீர்; என் படுக்கையை பாதாளத்தில் போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். அதிகாலையின் சிறகுகளை எடுத்து நான் பறந்து சென்றாலும், கடல்களின் எல்லைகளுக்கப்பால் போய்த் தங்கினாலும், அங்கேயும் உமது கரம் எனக்கு வழிகாட்டும்; உமது வலதுகரம் என்னை இறுக்கிப் பிடித்துக்கொள்ளும். “நிச்சயமாகவே இருள் என்னை மறைத்துக்கொள்ளும், ஒளி என்னைச் சுற்றிலும் இரவாகும்” என்று நான் சொன்னாலும், இருளும் உமக்கு இருட்டாய் இருக்காது; இரவும் பகலைப்போல் பிரகாசிக்கும்; ஏனெனில் இருள் உமக்கு ஒளியைப் போலவே இருக்கிறது. என் உள்ளுறுப்புகளை நீரே உருவாக்கினீர்; என் தாயின் கருப்பையில் என்னை நீரே ஒன்றாய் இணைத்தீர். நான் மிக ஆச்சரியமாகவும் அதிசயிக்கத்தக்க வகையிலும் படைக்கப்பட்டிருக்கிறபடியால், நான் உம்மைத் துதிக்கிறேன்; உமது செயல்கள் ஆச்சரியமானவை, நான் அதை நன்றாய் அறிந்திருக்கிறேன். நான் இரகசியமான இடத்தில் படைக்கப்பட்டபொழுது, நான் பூமியின் ஆழங்களில் ஒன்றாய் இணைக்கப்பட்ட போது, என் எலும்புகள் உமக்கு மறைவாய் இருக்கவில்லை. உருவம் பெற்றிராத என் உடலை உம்முடைய கண்கள் கண்டன; எனக்கு நியமிக்கப்பட்ட எல்லா நாட்களும், அவை ஒன்றாகிலும் வருமுன்பே உம்முடைய புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தன.

சங்கீதம் 139:7-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்? நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். நான் விடியற்காலத்துச் இறக்கைகளை எடுத்து, கடலின் கடைசி எல்லைகளிலே போய்த் தங்கினாலும், அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும். இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னைச் சுற்றி வெளிச்சமாக இருக்கும். உமக்கு மறைவாக இருளும் இருளாக இருக்காது; இரவும் பகலைப்போல வெளிச்சமாக இருக்கும்; உமக்கு இருளும் வெளிச்சமும் ஒன்றானது. நீர் என்னுடைய சிந்தையைக் கைக்கொண்டிருக்கிறீர்; என்னுடைய தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர். நான் பிரமிக்கத்தக்க அதிசயமாக உண்டாக்கப்பட்டதால், உம்மைத் துதிப்பேன்; உமது செயல்கள் அதிசயமானவைகள்; அது என்னுடைய ஆத்துமாவுக்கு நன்றாகத் தெரியும். நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாக உருவாக்கப்பட்டபோது, என்னுடைய எலும்புகள் உமக்கு மறைவாக இருக்கவில்லை. என்னுடைய கருவை உம்முடைய கண்கள் கண்டது; என்னுடைய உறுப்புகளில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புத்தகத்தில் எழுதியிருந்தது.

சங்கீதம் 139:7-16 பரிசுத்த பைபிள் (TAERV)

நான் போகுமிடமெல்லாம் உமது ஆவி உள்ளது. கர்த்தாவே, நான் உம்மிடமிருந்து தப்பிச் செல்ல முடியாது. கர்த்தாவே, நான் பரலோகத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்கு இருக்கிறீர். மரணத்தின் இடத்திற்கு நான் கீழிறங்கிச் சென்றாலும் நீர் அங்கும் இருக்கிறீர். கர்த்தாவே, சூரியன் உதிக்கும் கிழக்கிற்கு நான் சென்றாலும் நீர் அங்கே இருக்கிறீர். நான் மேற்கே கடலுக்குச் சென்றாலும் நீர் அங்கேயும் இருக்கிறீர். அங்கும் உமது வலது கை என்னைத் தாங்கும், என் கைகளைப் பிடித்து நீர் வழிநடத்துகிறீர். கர்த்தாவே, நான் உம்மிடமிருந்து ஒளிந்துக்கொள்ள முயன்றாலும், பகல் இரவாக மாறிப்போயிற்று. “இருள் கண்டிப்பாக என்னை மறைத்துக்கொள்ளும்” என்பேன். ஆனால் கர்த்தாவே, இருளும் கூட உமக்கு இருளாக இருப்பதில்லை. இரவும் பகலைப்போல உமக்கு வெளிச்சமாயிருக்கும். கர்த்தாவே, நீரே என் முழு சரீரத்தையும் உண்டாக்கினீர். என் தாயின் கருவில் நான் இருக்கும்போதே நீர் என்னைப் பற்றிய எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர். கர்த்தாவே, நான் உம்மைத் துதிக்கிறேன்! நீர் என்னை வியக்கத்தக்க, அற்புதமான வகையில் உண்டாக்கியிருக்கிறீர். நீர் செய்தவை அற்புதமானவை என்பதை நான் நன்கு அறிவேன்! நீர் என்னைப்பற்றிய எல்லாவற்றையும் அறிகிறீர். என் தாயின் கருவில் மறைந்திருந்து என் சரீரம் உருவெடுக்கும்போது என் எலும்புகள் வளர்வதை நீர் கவனித்திருக்கிறீர். என் சரீரத்தின் அங்கங்கள் வளர்வதை நீர் கவனித்தீர். உமது புத்தகத்தில் நீர் அவைகள் எல்லாவற்றையும் பட்டியல் இட்டீர். நீர் என்னை ஒவ்வொரு நாளும் கவனித்தீர். அவற்றில் ஒன்றும் காணாமற்போகவில்லை.

சங்கீதம் 139:7-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தை விட்டு எங்கே ஓடுவேன்? நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும், அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும். இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னைச் சுற்றி வெளிச்சமாயிருக்கும். உமக்கு மறைவாக இருளும் அந்தகாரப்படுத்தாது; இரவும் பகலைப் போல வெளிச்சமாயிருக்கும்; உமக்கு இருளும் வெளிச்சமும் சரி. நீர் என் உள்ளிந்திரியங்களைக் கைக்கொண்டிருக்கிறீர்; என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர். நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும். நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்டபோது, என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை. என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்