சங்கீதம் 137:1-9
சங்கீதம் 137:1-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பாபிலோனின் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, சீயோனை நினைத்தபோது அழுதோம். அங்கே இருந்த ஆற்றலறிச் செடிகளின்மேல் எங்கள் கின்னரங்களைத் தொங்கவிட்டோம். ஏனெனில் எங்களைச் சிறைப்பிடித்தவர்கள், அங்கே எங்களைப் பாடும்படி கேட்டார்கள்; எங்களைச் சித்திரவதை செய்தவர்கள் மகிழ்ச்சிப் பாடல்களைப் பாடும்படி வற்புறுத்தி, “சீயோனின் பாடல்களுள் ஒன்றை எங்களுக்காகப் பாடுங்கள்” என்று சொன்னார்கள். வேறுநாட்டு மண்ணில் இருக்கையில் யெகோவாவின் பாடல்களை எங்களால் எப்படிப் பாடமுடியும்? எருசலேமே! நான் உன்னை மறந்தால், என் வலதுகை அதின் திறமையை மறப்பதாக. நான் உன்னை நினையாவிட்டால், எருசலேமை எனது மேலான மகிழ்ச்சியாகக் நான் கருதாவிட்டால், என் நாவு என் மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக. யெகோவாவே! எருசலேம் கைப்பற்றபட்ட நாளிலே ஏதோமியர் செய்தவற்றை நினைவுகூரும்; “அதை இடித்துப்போடுங்கள், அதின் அஸ்திபாரங்கள்வரை அதை இடித்துப்போடுங்கள்!” என்று சொன்னார்களே. பாபிலோன் மகளே, அழிவுக்கு ஒப்படைக்கப்பட்டவளே, நீ எங்களுக்குச் செய்தவற்றுக்காக உனக்குப் பதில் செய்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். உன் குழந்தைகளைப் பிடித்து, அவர்களைப் பாறைகளின்மேல் மோதியடிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
சங்கீதம் 137:1-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பாபிலோன் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, அங்கே சீயோனை நினைத்து அழுதோம். அதின் நடுவிலிருக்கும் அலரிச்செடிகளின்மேல் எங்களுடைய கின்னரங்களைத் தூக்கிவைத்தோம். எங்களைச் சிறைபிடித்தவர்கள் அங்கே எங்களுடைய பாடல்களையும், எங்களையும் பாழாக்கினவர்கள் மகிழ்ச்சி பாடல்களை விரும்பி: சீயோனின் பாட்டுகளில் சிலவற்றை எங்களுக்குப் பாடுங்கள் என்று சொன்னார்கள். யெகோவாவின் பாட்டை அந்நிய தேசத்தில் நாங்கள் பாடுவதெப்படி? எருசலேமே, நான் உன்னை மறந்தால் என்னுடைய வலதுகை தன்னுடைய தொழிலை மறப்பதாக. நான் உன்னை நினைக்காமலும், எருசலேமை என்னுடைய முக்கியமான மகிழ்ச்சியிலும் அதிகமாகக் கருதாமலும்போனால், என்னுடைய நாவு என் மேல் வாயோடு ஒட்டிக்கொள்வதாக. யெகோவாவே, எருசலேமின் நாளில் ஏதோமியர்களை நினையும்; அவர்கள்: அதை இடித்துப்போடுங்கள், அஸ்திபாரம்வரை இடித்துப்போடுங்கள் என்று சொன்னார்களே. பாபிலோன் மகளே, பாழாகப்போகிறவளே, நீ எங்களுக்குச் செய்தபடி உனக்குப் பதில் செய்கிறவன் பாக்கியவான். உன்னுடைய குழந்தைகளைப் பிடித்து, கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான்.
சங்கீதம் 137:1-9 பரிசுத்த பைபிள் (TAERV)
பாபிலோனின் நதிகளின் அருகே நாங்கள் அமர்ந்து சீயோனை நினைத்தவாறே அழுதோம். அருகேயிருந்த அலரிச்செடிகளில் எங்கள் கின்னரங்களைத் தொங்கவிட்டோம். பாபிலோனின் எங்களைப் பிடித்தவர்கள் எங்களைப் பாடச் சொன்னார்கள். அவர்கள் எங்களிடம் மகிழ்ச்சியான பாடல்களைப் பாடச் சொன்னார்கள். சீயோனைக் குறித்துப் பாடல்களைப் பாடச் சொன்னார்கள். ஆனால் வெளிநாட்டில் நாங்கள் கர்த்தருடைய பாடல்களைப் பாட முடியவில்லை! எருசலேமே, நான் உன்னை எப்போதேனும் மறந்தால், நான் என்றும் பாடலை பாடமாட்டேன் என்று நம்புகிறேன். எருசலேமே, நான் உன்னை எப்போதேனும் மறந்தால், நான் என்றும் பாடேன். நான் உன்னை ஒருபோதும் மறக்கமாட்டேனென வாக்களிக்கிறேன். ஆண்டவரே ஏதோமியர்களை நினையும். எருசலேம் வீழ்ந்த நாளில் அவர்கள், “அதைத் தரைமட்டமாக இடித்து அழித்துவிடுங்கள்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். பாபிலோனே நீ அழிக்கப்படுவாய்! நீ பெற வேண்டிய தண்டனையை அளிக்கும் மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன். எங்களை நீ துன்புறுத்தியதைப்போல் உன்னையும் துன்புறுத்துகிற மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன். உனது குழந்தைகளை இழுத்துச்சென்று, அவர்களைப் பாறையில் மோதி அழிக்கிற மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
சங்கீதம் 137:1-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பாபிலோன் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, அங்கே சீயோனை நினைத்து அழுதோம். அதின் நடுவிலிருக்கும் அலரிச்செடிகளின்மேல் எங்கள் கின்னரங்களைத் தூக்கிவைத்தோம். எங்களைச் சிறைபிடித்தவர்கள் அங்கே எங்கள் பாடல்களையும், எங்களைப் பாழாக்கினவர்கள் மங்கள கீதத்தையும் விரும்பி: சீயோனின் பாட்டுகளில் சிலதை எங்களுக்குப் பாடுங்கள் என்று சொன்னார்கள். கர்த்தரின் பாட்டை அந்நிய தேசத்தில் நாங்கள் பாடுவதெப்படி? எருசலேமே, நான் உன்னை மறந்தால் என் வலதுகை தன் தொழிலை மறப்பதாக. நான் உன்னை நினையாமலும், எருசலேமை என் முக்கியமான மகிழ்ச்சியிலும் அதிகமாக எண்ணாமலும்போனால், என் நாவு என் மேல் வாயோடு ஒட்டிக் கொள்வதாக. கர்த்தாவே, எருசலேமின் நாளில் ஏதோமின் புத்திரரை நினையும்; அவர்கள்: அதை இடித்துப்போடுங்கள், அஸ்திபாரமட்டும் இடித்துப்போடுங்கள் என்று சொன்னார்களே. பாபிலோன் குமாரத்தியே, பாழாய்ப்போகிறவளே, நீ எங்களுக்குச் செய்தபடி உனக்குப் பதில் செய்கிறவன் பாக்கியவான். உன் குழந்தைகளைப் பிடித்து, கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான்.