சங்கீதம் 116:12-19

சங்கீதம் 116:12-19 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவா எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்கும் பதிலாக, நான் அவருக்கு எதைத்தான் கொடுப்பேன்? நான் இரட்சிப்பின் பாத்திரத்தை உயர்த்திக்கொண்டு யெகோவாவினுடைய பெயரைச் சொல்லி வழிபடுவேன். நான் யெகோவாவுக்குச் செய்த நேர்த்திக் கடன்களை அவருடைய மக்கள் எல்லாருக்கும் முன்பாக நிறைவேற்றுவேன். யெகோவாவினுடைய பரிசுத்தவான்களின் மரணம் அவருடைய பார்வையில் விலையேறப்பெற்றது. யெகோவாவே, உண்மையாகவே நான் உமது பணியாளனாய் இருக்கிறேன்; நான் உமது அடியாளின் மகனும், உமது ஊழியக்காரனுமாய் இருக்கிறேன்; என்னைக் கட்டியிருந்த சங்கிலியிலிருந்து நீர் என்னை விடுதலையாக்கினீர். நான் உமக்கு ஒரு நன்றிக் காணிக்கையைப் பலியிட்டு, யெகோவாவினுடைய பெயரைச் சொல்லி வழிபடுவேன். நான் யெகோவாவுக்குச் செய்த நேர்த்திக்கடனை, அவருடைய மக்கள் எல்லோருக்கும் சமுகத்தில் நிறைவேற்றுவேன். எருசலேமே உன் நடுவில் யெகோவாவினுடைய ஆலய முற்றங்களில், நான் எனது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவேன்.

சங்கீதம் 116:12-19 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவா எனக்குச் செய்த எல்லா உதவிகளுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன். இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, யெகோவாவுடைய பெயரைத் தொழுதுகொள்ளுவேன். நான் யெகோவாவுக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய மக்களெல்லோருக்கும் முன்பாகவும் செலுத்துவேன். யெகோவாவுடைய பரிசுத்தவான்களின் மரணம் அவருடைய பார்வைக்கு அருமையானது. யெகோவாவே, நான் உமது அடியேன்; நான் உமது அடியாளின் மகனும், உமது ஊழியக்காரனுமாக இருக்கிறேன்; என்னுடைய கட்டுகளை அவிழ்த்துவிட்டீர். நான் உமக்கு நன்றிபலியைச் செலுத்தி, யெகோவாவுடைய பெயரைத் தொழுதுகொள்ளுவேன். நான் யெகோவாவுக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய மக்களெல்லோருக்கும் முன்பாகவும், யெகோவாவுடைய ஆலயத்தின் முற்றங்களிலும், எருசலேமே உன்னுடைய நடுவிலும் நிறைவேற்றுவேன். அல்லேலூயா.

சங்கீதம் 116:12-19 பரிசுத்த பைபிள் (TAERV)

நான் கர்த்தருக்கு எதைக் கொடுக்க முடியும்? என்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் கர்த்தரே கொடுத்தார். அவர் என்னைக் காப்பாற்றினார். எனவே நான் அவருக்கு ஒரு பானங்களின் காணிக்கையை அளிப்பேன். நான் கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிடுவேன். நான் வாக்குறுதி அளித்தவற்றை கர்த்தருக்குக் கொடுப்பேன். இப்போது அவரது ஜனங்கள் எல்லோருக்கும் முன்பாக நான் போவேன். கர்த்தரைப் பின்பற்றுபவர்களில் ஒருவனின் மரணம் கர்த்தருக்கு மிக முக்கியமானது! கர்த்தாவே, நான் உமது ஊழியர்களில் ஒருவன்! நான் உமது பணியாள். உமது பணிப் பெண் ஒருத்தியின் பிள்ளைகளுள் ஒருவன் நான். கர்த்தாவே, நீரே என்னுடைய முதல் போதகர். நான் உமக்கு ஒரு நன்றியறிதலின் காணிக்கையைக் கொடுப்பேன். நான் கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிடுவேன். நான் வாக்குறுதி அளித்தவற்றை கர்த்தருக்குக் கொடுப்பேன். நான் இப்போது அவரது எல்லா ஜனங்களுக்கும் முன்பாகப் போவேன். நான் எருசலேமின் ஆலயத்திற்குப் போவேன்.

சங்கீதம் 116:12-19 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன். இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுவேன். நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செலுத்துவேன். கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது. கர்த்தாவே, நான் உமது அடியேன்; நான் உமது அடியாளின் புத்திரனும், உமது ஊழியக்காரனுமாயிருக்கிறேன்; என் கட்டுகளை அவிழ்த்து விட்டீர். நான் உமக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்தி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுவேன். நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும், கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரங்களிலும், எருசலேமே உன் நடுவிலும் நிறைவேற்றுவேன். அல்லேலூயா.