நீதிமொழிகள் 30:18-33

நீதிமொழிகள் 30:18-33 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“எனக்கு மிகவும் ஆச்சரியத்தைக் கொடுக்கும் மூன்று காரியங்கள் உண்டு, இல்லை, நான்காவதையும் என்னால் விளங்கிக்கொள்ள இயலவில்லை: ஆகாயத்திலே பறக்கும் கழுகின் வழியும், பாறையின்மேல் ஊரும் பாம்பின் வழியும், நடுக்கடலிலே கப்பலின் வழியும், இளம்பெண்ணின் அன்பை தேடிய ஒரு மனிதரின் வழியுமே அவை. “ஒரு விபசாரியின் வழியும் இவ்விதமானதே: அவள் சாப்பிட்டுவிட்டு தன் வாயைத் துடைத்துக்கொண்டு, ‘நான் பிழையேதும் செய்யவில்லை’ என்கிறாள். “மூன்று காரியங்களால் பூமி நிலைகுலைகிறது, இல்லை, நான்காவது காரியத்தையோ அதினால் தாங்க முடியவில்லை: அரசனாகிவிடும் வேலைக்காரன், மூடனுக்கு அளவுக்கதிகமாய் உணவு கிடைப்பதும், யாராலும் விரும்பப்படாதிருந்தும் கடைசியில் திருமணமாகும் பெண், தன் எஜமானியின் இடத்தை அபகரிக்கும் வேலைக்காரியுமே. “பூமியில் மிகச்சிறிய உயிரினங்கள் நான்கு உண்டு, ஆனாலும் அவை மிகவும் ஞானமுள்ளவை: எறும்புகள் மிக வலிமை குறைந்த உயிரினங்கள்; ஆனாலும், அவை கோடைகாலத்தில் தங்கள் உணவைச் சேமித்து வைக்கின்றன; குறுமுயல்களும் வலுக்குறைந்த பிராணிகளே; ஆனாலும், உயரமான கற்பாறைகளின் வெடிப்பில் தங்களுக்கு வீடுகளை அமைக்கின்றன. வெட்டுக்கிளிகளுக்கோ அரசன் இல்லை, ஆனாலும் அவை ஒன்றாய் அணிவகுத்துச் செல்கின்றன; பல்லியையோ கையால் பிடித்துக்கொள்ளலாம், ஆனாலும் அது அரச மாளிகைகளிலும் காணப்படுகிறது. “வீர நடையுடைய மூன்று உண்டு, இல்லை, கம்பீரத் தோற்றமுடைய நான்காவதும் உண்டு: மிருகங்களில் வலிமைமிக்கது சிங்கம், அது எதைக் கண்டும் பின்வாங்குவதில்லை; கர்வத்துடன் நடக்கும் சேவல், வெள்ளாட்டுக்கடா ஆகியவையும்; தன் இராணுப்படை சூழ நிற்கும் அரசனுமே. “நீ மூடத்தனமாய் நடந்து உன்னை நீயே மேன்மைப்படுத்தினால், அல்லது தீமைசெய்ய திட்டமிட்டிருந்தால், உன் கையினால் உன் வாயை மூடிக்கொள்! பாலைக் கடைந்தால் வெண்ணெய் வருவதுபோலவும், மூக்கைக் கசக்குவதினால் இரத்தம் வருவதுபோலவும், கோபத்தை மூட்டுவதும் சண்டையை ஏற்படுத்தும்.”

நீதிமொழிகள் 30:18-33 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எனக்கு மிகவும் ஆச்சரியமானவைகள் மூன்று உண்டு, என்னுடைய புத்திக்கு எட்டாதவைகள் நான்கும் உண்டு. அவையாவன: ஆகாயத்தில் கழுகினுடைய வழியும், கன்மலையின்மேல் பாம்பினுடைய வழியும், நடுக்கடலில் கப்பலினுடைய வழியும், ஒரு கன்னிகையை நாடிய மனிதனுடைய வழியுமே. அப்படியே விபசார பெண்ணுடைய வழியும் இருக்கிறது; அவள் சாப்பிட்டு, தன்னுடைய வாயைத் துடைத்து; நான் ஒரு பாவமும் செய்யவில்லை என்பாள். மூன்றினால் பூமி சஞ்சலப்படுகிறது, நான்கையும் அது தாங்கமுடியாது. அரசாளுகிற அடிமைக்காகவும், உணவால் திருப்தியான மூடனுக்காகவும், பகைக்கப்படக்கூடியவளாக இருந்தும், கணவனுக்கு வாழ்க்கைப்பட்ட பெண்ணுக்காகவும், தன்னுடைய எஜமானிக்குப் பதிலாக மனைவியாகும் அடிமைப் பெண்ணுக்காகவுமே. பூமியில் சிறியவைகளாக இருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்கு உண்டு. அவையாவன: சிறிய உயிரினமாக இருந்தும், கோடைக்காலத்திலே தங்களுடைய உணவைச் சம்பாதிக்கிற எறும்பும், பெலமில்லாத உயிரினமாக இருந்தும், தங்களுடைய வீட்டைக் கன்மலையிலே தோண்டிவைக்கும் குழிமுயல்களும், ராஜா இல்லாமல் இருந்தும், கூட்டம் கூட்டமாகப் புறப்படுகிற வெட்டுக்கிளிகளும், தன்னுடைய கைகளினால் வலையைப்பின்னி, அரசர்கள் அரண்மனைகளில் இருக்கிற சிலந்திப் பூச்சியுமே. விநோதமாக அடிவைத்து நடக்கிறவைகள் மூன்று உண்டு; விநோத நடையுள்ளவைகள் நான்கும் உண்டு. அவையாவன: மிருகங்களில் பெலமுள்ளதும் ஒன்றுக்கும் பின்வாங்காததுமாகிய சிங்கமும், பெருமையாய் நடக்கிற சேவலும், வெள்ளாட்டுக் கடாவும், ஒருவரும் எதிர்க்க முடியாத ராஜாவுமே. நீ மேட்டிமையானதினால் பைத்திமாக நடந்து, துர்ச்சிந்தனையுள்ளவனாக இருந்தால், கையினால் வாயை மூடு. பாலைக் கடைதல் வெண்ணையைப் பிறப்பிக்கும்; மூக்கைப் பிசைதல் இரத்தத்தைப் பிறப்பிக்கும்; அப்படியே கோபத்தைக் கிண்டிவிடுதல் சண்டையைப் பிறப்பிக்கும்.

நீதிமொழிகள் 30:18-33 பரிசுத்த பைபிள் (TAERV)

என்னால் புரிந்துகொள்ளமுடியாத காரியங்கள் மூன்று உண்டு. உண்மையில் புரிந்துகொள்ளக் கடினமான விஷயங்கள் நான்கு உண்டு. வானத்தில் பறக்கும் கழுகு, பாறைமேல் ஊர்ந்து செல்லும் பாம்பு, கடலில் அசையும் கப்பல், ஒரு பெண்ணின் மேல் அன்புகொண்டிருக்கும் ஆண் ஆகிய நான்கையும் என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை. தன் கணவனுக்கு உண்மையில்லாத பெண், தான் எதுவும் தவறு செய்யாதவளைப்போன்று நடிக்கிறாள். அவள் சாப்பிடுகிறாள், குளிக்கிறாள், தான் எவ்விதத் தவறும் செய்யவில்லை என்று கூறுகிறாள். பூமியில் தொல்லை விளைவிக்கக் கூடியவை மூன்று உண்டு. உண்மையில் பூமியால் தாங்க முடியாதவை நான்கு. ராஜாவாகிவிட்ட அடிமை, தனக்குத் தேவைப்படுகிற அனைத்துமுடைய முட்டாள், மனதில் முழுமை வெறுப்புடையவளாயிருந்தும் ஒரு கணவனுக்கு வாழ்க்கைப்படும் பெண், தான் வேலை செய்த எஜமானிக்கே எஜமானியாகிற வேலைக்காரப் பெண் ஆகிய நால்வரையும் பூமி தாங்காது. உலகில் உள்ள மிகச் சிறியவை நான்கு, ஆனால் இவை மிகவும் ஞானமுடையவை. எறும்புகள் மிகச் சிறியவை, பலவீனமானவை. எனினும் அவை தங்களுக்குத் தேவையான உணவைக் கோடைக்காலம் முழுவதும் சேகரித்துக்கொள்ளும். குழி முயல்கள் மிகச்சிறிய மிருகம், ஆனாலும் இதுதன் வீட்டைப் பாறைகளுக்கு இடையில் கட்டிக்கொள்ளும். வெட்டுக்கிளிகளுக்கு ராஜா இல்லை. எனினும் அவை சேர்ந்து வேலைச்செய்கின்றன. பல்லி மிகச் சிறிது. அவற்றை நம் கையால் பிடித்துக்கொள்ளலாம். எனினும் அவை அரண்மனையிலும் வசிக்கின்றன. நடக்கும்போது முக்கியமானவைகளாகத் தோன்றுபவை மூன்று. உண்மையில் அவைகள் நான்காகும். சிங்கம் எல்லா மிருகங்களைவிடவும் மிகவும் பலம் பொருந்தியது. அது எதைக் கண்டும் ஓடுவதில்லை. பெருமையோடு நடக்கும் சேவல், வெள்ளாடு, தம் ஜனங்களிடையே இருக்கும் ஒரு ராஜா. உன்னைப்பற்றி நீயே பெருமையாக நினைத்துக்கொண்டு தீங்கு செய்யத் திட்டமிடும் முட்டாளாக இருந்தால், அவற்றை நிறுத்திவிட்டு உன் செயல்களைப்பற்றி சிந்திக்கவேண்டும். பாலைக் கடைந்தால் வெண்ணெய் கிடைக்கும். ஒருவன் இன்னொருவனின் மூக்கில் அடித்தால் இரத்தம் வரும். இது போலவே, நீ ஜனங்களைக் கோபங்கொள்ள வைத்தால், நீ தான் துன்பத்துக்கு காரணமாயிருப்பாய்.

நீதிமொழிகள் 30:18-33 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

எனக்கு மிகவும் ஆச்சரியமானவைகள் மூன்றுண்டு, என் புத்திக்கெட்டாதவைகள் நான்குமுண்டு. அவையாவன: ஆகாயத்தில் கழுகினுடைய வழியும், கன்மலையின்மேல் பாம்பினுடைய வழியும், நடுக்கடலில் கப்பலினுடைய வழியும், ஒரு கன்னிகையை நாடிய மனுஷனுடைய வழியுமே. அப்படியே விபசாரஸ்திரீயினுடைய வழியும் இருக்கிறது; அவள் தின்று, தன் வாயைத் துடைத்து; நான் ஒரு பாவமும் செய்யவில்லை என்பாள். மூன்றினிமித்தம் பூமி சஞ்சலப்படுகிறது, நான்கையும் அது தாங்கமாட்டாது. அரசாளுகிற அடிமையினிமித்தமும், போஜனத்தால் திருப்தியான மூடனினிமித்தமும், பகைக்கப்படத்தக்கவளாயிருந்தும், புருஷனுக்கு வாழ்க்கைப்பட்ட ஸ்திரீயினிமித்தமும், தன் நாச்சியாருக்குப் பதிலாக இல்லாளாகும் அடிமைப் பெண்ணினிமித்தமுமே. பூமியில் சிறியவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு. அவையாவன: அற்பமான ஜெந்துவாயிருந்தும், கோடைகாலத்திலே தங்கள் ஆகாரத்தைச் சம்பாதிக்கிற எறும்பும், சத்துவமற்ற ஜெந்துவாயிருந்தும், தங்கள் வீட்டைக் கன்மலையிலே தோண்டிவைக்கும் குழிமுசல்களும், ராஜா இல்லாதிருந்தும், பவுஞ்சு பவுஞ்சாய்ப் புறப்படுகிற வெட்டுக்கிளிகளும், தன் கைகளினால் வலையைப் பின்னி, அரசர் அரமனைகளிலிருக்கிற சிலந்திப் பூச்சியுமே. விநோதமாய் அடிவைத்து நடக்கிறவைகள் மூன்றுண்டு; விநோத நடையுள்ளவைகள் நாலுமுண்டு. அவையாவன: மிருகங்களில் சவுரியமானதும் ஒன்றுக்கும் பின்னிடையாததுமாகிய சிங்கமும். போர்க்குதிரையும், வெள்ளாட்டுக் கடாவும், ஒருவரும் எதிர்க்கக்கூடாத ராஜாவுமே. நீ மேட்டிமையானதினால் பைத்திமாய் நடந்து, துர்ச்சிந்தனையுள்ளவனாயிருந்தாயானால், கையினால் வாயை மூடு. பாலைக் கடைதல் வெண்ணையைப் பிறப்பிக்கும்; மூக்கைப் பிசைதல் இரத்தத்தைப் பிறப்பிக்கும்; அப்படியே கோபத்தைக் கிண்டிவிடுதல் சண்டையைப் பிறப்பிக்கும்.