நீதிமொழிகள் 26:13-22

நீதிமொழிகள் 26:13-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“வீதியிலே சிங்கம் நிற்கிறது, ஒரு பயங்கர சிங்கம் வீதிகளில் நடமாடித் திரிகிறது!” என்று சோம்பேறி சொல்லுகிறான். ஒரு கதவு அதின் கீழ்ப்பட்டையில் முன்னும் பின்னும் திரும்புகிறது போல, சோம்பேறியும் தனது படுக்கையில் திரும்பத்திரும்ப புரளுகிறான். சோம்பேறிகள் தங்கள் கையில் உணவை எடுத்துக்கொள்வார்கள்; அதைத் தங்கள் வாய்க்கு கொண்டுவர முடியாத அளவுக்கு அவர்கள் சோம்பேறியாய் இருக்கிறார்கள். விவேகமாய் பதில்சொல்கிற ஏழு மனிதரைவிட, சோம்பேறி தன் பார்வையில் தன்னை ஞானமுள்ளவன் என எண்ணுகிறான். வேறு ஒருவரின் வாக்குவாதத்தில் தலையிடுகிறவன், தெருநாயின் காதைப்பிடித்து இழுக்கிறவனைப் போலிருக்கிறான். தீப்பந்தங்களையும் கொல்லும் அம்புகளையும் எய்கிற பைத்தியக்காரனைப் போலவே, தன் அயலானை ஏமாற்றிவிட்டு, “நான் விளையாட்டாகத்தான் செய்தேன்!” எனச் சொல்கிறவன் இருக்கிறான். விறகில்லாமல் நெருப்பு அணைந்து போவதுபோல, புறங்கூறுகிறவன் இல்லாவிட்டால் வாக்குவாதங்கள் அடங்கும். தணலுக்குக் கரியும், நெருப்புக்கு விறகும் தேவைப்படுவதுபோலவே, சச்சரவை மூட்டி விடுவதற்குச் சண்டைக்காரன் தேவை. புறங்கூறுகிறவர்களின் வார்த்தைகள் சுவையான உணவைப் போன்றவை; அவை மனிதருடைய உள்ளத்தின் ஆழத்தில் பதிந்துவிடும்.

நீதிமொழிகள் 26:13-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

வழியிலே சிங்கம் இருக்கும், நடுவீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான். கதவு கீல்முளையில் ஆடுகிறதுபோல, சோம்பேறியும் படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான். சோம்பேறி தன்னுடைய கையைக் கலத்திலே வைத்து அதைத் தன்னுடைய வாய்க்குத் திரும்ப எடுக்க வருத்தப்படுகிறான். புத்தியுள்ள மறுஉத்திரவு சொல்லத்தகும் ஏழுபேரைவிட சோம்பேறி தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன். வழியிலே போகும்போது தனக்கு சம்மந்தமில்லாத வழக்கில் தலையிடுகிறவன் நாயைக் காதைப் பிடித்து இழுக்கிறவனைப்போல இருக்கிறான். கொள்ளிகளையும் அம்புகளையும் சாவுக்கேதுவானவைகளையும் எறிகிற பைத்தியக்காரன் எப்படியிருக்கிறானோ, அப்படியே, தன்னோடு இருந்தவனை வஞ்சித்து: நான் விளையாட்டுக்கல்லவோ செய்தேன் என்று சொல்லுகிற மனிதனும் இருக்கிறான். விறகில்லாமல் நெருப்பு அணையும்; கோள்சொல்லுகிறவன் இல்லாமல் சண்டை அடங்கும். கரிகள் தழலுக்கும், விறகு நெருப்புக்கும் ஏதுவானதுபோல, கோபக்காரன் சண்டைகளை மூட்டுகிறதற்கு ஏதுவானவன். கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போல இருக்கும்; ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் குத்தும்.

நீதிமொழிகள் 26:13-22 பரிசுத்த பைபிள் (TAERV)

“என்னால் வீட்டைவிட்டுச் செல்ல முடியாது, தெருவில் சிங்கம் உள்ளது” என்று ஒரு சோம்பேறி கூறுகிறான். ஒரு சோம்பேறி கதவைப் போன்றவன். கதவு கீல் முனையில் அசைவதுபோன்று சோம்பேறியும் படுக்கையில் அசைந்துக்கொண்டு இருக்கிறான். சோம்பேறி தனது தட்டில் உள்ள உணவை வாயில் வைக்க முயலாமல் சோம்பேறித்தனமாக நடந்துக்கொள்கிறான். சோம்பேறி மிகுந்த புத்தியுள்ளவனாகத் தன்னை நினைத்துக்கொள்கிறான். தன் கருத்துக்களுக்கு சரியான காரணம் சொல்லும் ஏழுபேரைக் காட்டிலும் ஞானவானாகத் தன்னை நினைத்துக்கொள்கிறான். இரண்டுபேர் செய்யும் விவாதத்திற்கிடையில் சிக்கிக்கொள்வது மிகவும் ஆபத்தானது. இது தெருவில் போகும் நாயின் காதைப் பிடித்து இழுப்பது போன்றதாகும். ஒருவன் தந்திரமாக இன்னொருவனை வஞ்சித்துவிட்டு பிறகு வேடிக்கைக்காகச் செய்தேன் என்று கூறுவது தவறு. இது ஒரு பைத்தியகாரன் காற்றில் அம்பை எய்து யாரையாவது எதிர்பாராதவிதமாகக்கொன்று போடும் விபத்தைப் போன்றது. நெருப்புக்கு விறகு இல்லாவிட்டால் அது அணைந்துப்போகும். இதுபோலவே வம்பு இல்லாவிட்டால் வாதங்களும் முடிந்துப்போகும். கரி நெருப்பை எரிய வைக்கிறது. விறகும் நெருப்பை எரிய வைக்கிறது. இது போலவே துன்பம் செய்கிறவர்கள் வாதங்களை விடாமல் வைத்துள்ளனர். ஜனங்கள் வம்புப்பேச்சை விரும்புவார்கள். அது அவர்களுக்கு நல்ல உணவு உண்பதைப்போல் இருக்கும்.

நீதிமொழிகள் 26:13-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

வழியிலே சிங்கம் இருக்கும், நடுவீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான். கதவு கீல்முளையில் ஆடுகிறதுபோல, சோம்பேறியும் படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான். சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து அதைத் தன் வாய்க்குத் திரும்ப எடுக்க வருத்தப்படுகிறான். புத்தியுள்ள மறுஉத்தரவு சொல்லத்தகும் ஏழுபேரைப்பார்க்கிலும் சோம்பேறி தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன். வழியே போகையில் தனக்கடாத வழக்கில் தலையிடுகிறவன் நாயைக் காதைப் பிடித்திழுக்கிறவனைப் போலிருக்கிறான். கொள்ளிகளையும் அம்புகளையும் சாவுக்கேதுவானவைகளையும் எறிகிற பைத்தியக்காரன் எப்படியிருக்கிறானோ, அப்படியே, தனக்கடுத்தவனை வஞ்சித்து: நான் விளையாட்டுக்கல்லவோ செய்தேன் என்று சொல்லுகிற மனுஷனும் இருக்கிறான். விறகில்லாமல் நெருப்பு அவியும்; கோள்சொல்லுகிறவனில்லாமல் சண்டை அடங்கும். கரிகள் தழலுக்கும், விறகு நெருப்புக்கும் ஏதுவானதுபோல, வாதுப்பிரியன் சண்டைகளை மூட்டுகிறதற்கு ஏதுவானவன். கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப் போலிருக்கும்; ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும்.