நீதிமொழிகள் 24:1-16
நீதிமொழிகள் 24:1-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
கொடியவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே; அவர்களுடன் கூட்டுச்சேர விரும்பாதே. ஏனெனில் அவர்கள் இருதயம் மற்றவர்களைக் காயப்படுத்தத் திட்டமிடுகின்றன, அவர்களுடைய உதடுகள் கலகம் விளைவிப்பதையே பேசும். ஞானத்தால் வீடு கட்டப்பட்டு புரிந்துகொள்ளுதலினால் அது நிலைநாட்டப்படுகிறது; அறிவினால் அதின் அறைகள், அபூர்வமான அழகிய பொருட்களால் நிரப்பப்படுகின்றன. ஞானமுள்ளவன் மிகுந்த வல்லமையுடையவன், அறிவுள்ளவன் தன் பெலத்தை பெருக்குகிறான். போர் செய்ய வழிநடத்துதல் தேவை, வெற்றிபெற அநேக ஆலோசகர்கள் தேவை. ஞானம் மூடனுக்கு எட்டாத உயரத்திலுள்ளது; பட்டண வாசலில் கூடும் சபையில் சொல்வதற்கு அவனுக்கு ஒன்றும் இல்லை. தீமையான சூழ்ச்சி செய்பவன் சதிகாரன் என அழைக்கப்படுவான். மூடரின் திட்டங்கள் பாவமாகும், ஏளனம் செய்பவர்களை மனிதர் வெறுக்கிறார்கள். துன்ப காலத்தில் நீ மனம் சோர்ந்துபோனால், உன் பெலன் எவ்வளவு குறைவானது. மரணத்திற்கு வழிநடத்தப்படுகிறவர்களைத் தப்புவி; கொல்லப்பட களத்துக்குக் கொண்டுசெல்லப்படுகிறவர்களைக் காப்பாற்று. “எங்களுக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியாது” என்று நீங்கள் சொல்வீர்களானால், இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிற இறைவன் அதைக் காணமாட்டாரோ? உங்கள் வாழ்வைக் காக்கிறவர் அதை அறியாமலிருப்பாரோ? ஒவ்வொருவருக்கும் அவர்கள் செய்வதற்குத் தக்கதாய் அவர் பதில்செய்யாமல் விடுவாரோ? என் மகனே, நீ தேனைச் சாப்பிடு; அது நல்லது; கூட்டிலிருந்து ஒழுகும் தேன் நீ சுவைப்பதற்கு இனிமையாயிருக்கும். அதேபோல் ஞானமும் உன் ஆத்துமாவிற்கு இனிமையானது என்று அறிந்துகொள்: அதை நீ தெரிந்துகொண்டால் உனக்கு எதிர்கால நம்பிக்கை உண்டு, உன் எதிர்பார்ப்பு வீண்போகாது. நீ ஒரு திருடனைப்போல் நீதிமானின் வீட்டிற்கு எதிராகப் பதுங்கிக் காத்திருக்காதே; அவனுடைய வீட்டைக் கொள்ளையடிக்காதே. ஏனெனில் நீதிமான் ஏழுமுறை விழுந்தாலும், அவன் எழுந்திருப்பான்; ஆனால் கொடியவர்களோ பேராபத்தினால் வீழ்த்தப்படுவார்கள்.
நீதிமொழிகள் 24:1-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பொல்லாத மனிதர்கள்மேல் பொறாமைகொள்ளாதே; அவர்களோடு இருக்கவும் விரும்பாதே. அவர்களுடைய இருதயம் கொடுமையை யோசிக்கும், அவர்களுடைய உதடுகள் தீவினையைப் பேசும். வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும். அறிவினாலே அறைகளில் அருமையும் இனிமையுமான எல்லாவிதப் பொருள்களும் நிறைந்திருக்கும். ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்; அறிவுள்ளவன் தன்னுடைய வல்லமையை அதிகரிக்கச்செய்கிறான். நல்யோசனைசெய்து யுத்தம்செய்; ஆலோசனைக்காரர்கள் அநேகரால் வெற்றி கிடைக்கும். மூடனுக்கு ஞானம் எட்டாத உயரமாக இருக்கும்; அவன் நீதிமன்றத்தில் தன்னுடைய வாயைத் திறக்கமாட்டான். தீவினைசெய்ய நினைக்கிறவன் மதிகெட்டவன் என்னப்படுவான். தீயநோக்கம் பாவமாகும்; பரியாசக்காரன் மனிதர்களுக்கு அருவருப்பானவன். ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோனால், உன்னுடைய பெலன் குறுகினது. மரணத்திற்கு ஒப்புவிக்கப்பட்டவர்களையும், கொலைசெய்வதற்கு கொண்டுபோகிறவர்களையும் விடுவிக்க முடிந்தால் விடுவி. அதை நாங்கள் அறியோம் என்று சொன்னால், இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியமாட்டாரோ? உன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறவர் கவனிக்கமாட்டாரோ? அவர் மனிதர்களுக்கு அவனவன் செயல்களுக்கு தக்கதாகப் பலனளிக்கமாட்டாரோ? என் மகனே, தேனைச் சாப்பிடு, அது நல்லது; கூட்டிலிருந்து ஒழுகும் தேன் உன் வாய்க்கு இன்பமாக இருக்கும். அப்படியே ஞானத்தை அறிந்துகொள்வது உன்னுடைய ஆத்துமாவுக்கு இன்பமாக இருக்கும்; அதைப் பெற்றுக்கொண்டால், அது முடிவில் உதவும், உன்னுடைய நம்பிக்கை வீண்போகாது. துன்மார்க்கனே, நீ நீதிமானுடைய வீட்டிற்கு விரோதமாக மறைந்திருக்காதே; அவன் தங்கும் இடத்தைப் பாழாக்கிப்போடாதே. நீதிமான் ஏழுமுறை விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கர்களோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்.
நீதிமொழிகள் 24:1-16 பரிசுத்த பைபிள் (TAERV)
தீயவர்களைப் பார்த்து நீ பொறாமைப்படாதே. உனது காலத்தை அவர்களோடு வீணாக்காதே. அவர்கள் தங்கள் மனதில் தீமை செய்ய நினைத்திருக்கிறார்கள். துன்பம் செய்வதைப்பற்றியே பேசுகிறார்கள். ஞானத்தினாலும் புரிந்துகொள்தலினாலும் நல்ல வீடு கட்டப்படுகிறது. அறிவு அறைகளை அரிய அழகுள்ள திரவியங்களால் நிரப்புகிறது. ஞானம் ஒருவனை மிகவும் வலிமையுள்ளவனாக்கும். அறிவு ஆற்றலைத் தருகிறது. நீ ஒரு போரைத் துவங்குமுன் கவனமாகத் திட்டமிட வேண்டும். நீ வெற்றியை விரும்பினால் அநேக நல்ல ஆலோசகர்களை வைத்திருக்கவேண்டும். முட்டாள்களால் ஞானத்தை உணர்ந்து கொள்ளமுடியாது. முக்கியமானவற்றைப்பற்றி ஜனங்கள் கலந்தாலோசிக்கும்போது முட்டாள்களால் எதுவும் சொல்ல முடியாது. நீ எப்பொழுதும் மற்றவர்களுக்குத் தீமை செய்வதைப்பற்றியே திட்டமிட்டுக்கொண்டிருந்தால், தொந்தரவுகளை உருவாக்குபவன் என்று ஜனங்கள் உன்னை நினைத்துக்கொள்வார்கள். நீ சொல்வதை அவர்கள் கேட்கமாட்டார்கள். அறிவற்றவன் செய்யத் திட்டமிடுபவை அனைத்தும் பாவத்திலேயே முடிகின்றன. மற்றவர்களைவிடத் தன்னைப் பெரிதாக நினைப்பவனை ஜனங்கள் வெறுப்பார்கள். துன்பக்காலத்தில் நீ தைரியமிழந்து போவாயானால், உண்மையிலேயே நீ பலவீனன் ஆவாய். ஜனங்கள் ஒருவனைக்கொலைசெய்யத் திட்டமிடுகையில், உன்னால் முடிந்தால் அவனைக் காப்பாற்றவேண்டும். “இது எனது வேலை இல்லை” என்று கூறாதே. அனைத்தையும் கர்த்தர் அறிவார். நீ எதற்காக அவற்றைச் செய்கிறாய் என்பதையும் அவர் அறிவார். கர்த்தர் உன்னைக் கவனித்து அறிகிறார். உனக்கு தகுந்த வெகுமதிகளை கர்த்தர் தருவார். என் மகனே, தேனைப் பருகு. அது நல்லது. தேனடையிலுள்ள தேன் மிகவும் சுவையானது. இதுபோலவே ஞானமானது உன் ஆத்துமாவுக்கு நல்லது. உன்னிடம் ஞானம் இருக்குமானால் உன்னிடம் நம்பிக்கையும் இருக்கும். உன் நம்பிக்கைக்கு முடிவிருக்காது. நல்லவனிடமிருந்து பொருளைத் திருடும் அல்லது அவன் வீட்டையே அபகரிக்கும் திருடனைப்போல நீ இருக்காதே. நல்லவன் ஏழுமுறை விழுந்தாலும் மீண்டும் எழுந்துவிடுவான். ஆனால் தீயவர்களோ எப்பொழுதும் துன்பங்களால் தோற்கடிக்கப்படுவார்கள்.
நீதிமொழிகள் 24:1-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பொல்லாத மனுஷர்மேல் பொறாமை கொள்ளாதே; அவர்களோடே இருக்கவும் விரும்பாதே. அவர்கள் இருதயம் கொடுமையை யோசிக்கும், அவர்கள் உதடுகள் தீவினையைப் பேசும். வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும். அறிவினாலே அறைகளில் அருமையும் இனிமையுமான சகலவிதப் பொருள்களும் நிறைந்திருக்கும். ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்; அறிவுள்ளவன் தன் வல்லமையை அதிகரிக்கப்பண்ணுகிறான். நல்யோசனைசெய்து யுத்தம்பண்ணு; ஆலோசனைக்காரர் அநேகரால் ஜெயங்கிடைக்கும். மூடனுக்கு ஞானம் எட்டாத உயரமாயிருக்கும்; அவன் நியாயஸ்தலத்தில் தன் வாயைத் திறவான். தீவினைசெய்ய உபாயஞ்செய்கிறவன் துஷ்டன் என்னப்படுவான். தீயநோக்கம் பாவமாம்; பரியாசக்காரன் மனுஷருக்கு அருவருப்பானவன். ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோவாயானால், உன் பெலன் குறுகினது. மரணத்துக்கு ஒப்பிக்கப்பட்டவர்களையும், கொலையுண்ணப்போகிறவர்களையும் விடுவிக்கக்கூடுமானால் விடுவி. அதை அறியோம் என்பாயாகில், இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியாரோ? உன் ஆத்துமாவைக் காக்கிறவர் கவனியாரோ? அவர் மனுஷருக்கு அவனவன் கிரியைக்குத்தக்கதாகப் பலனளியாரோ? என் மகனே, தேனைச் சாப்பிடு, அது நல்லது; கூட்டிலிருந்து ஒழுகும் தேன் உன் வாய்க்கு இன்பமாயிருக்கும். அப்படியே ஞானத்தை அறிந்துகொள்வது உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்; அதைப் பெற்றுக்கொண்டால், அது முடிவில் உதவும், உன் நம்பிக்கை வீண்போகாது. துஷ்டனே, நீ நீதிமானுடைய வாசஸ்தலத்துக்கு விரோதமாய்ப் பதிவிராதே; அவன் தங்கும் இடத்தைப் பாழாக்கிப்போடாதே. நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்.