நீதிமொழிகள் 22:1-6

நீதிமொழிகள் 22:1-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அதிக செல்வத்தைவிட நற்பெயரே விரும்பத்தக்கது; வெள்ளியையும் தங்கத்தையும்விட நன்மதிப்பைப் பெறுவதே சிறந்தது. பணக்காரனையும் ஏழையையும் யெகோவாவே படைத்தார்; இதுவே அவர்களுக்கிடையில் உள்ள பொதுத்தன்மை. விவேகிகள் ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்கிறார்கள்; ஆனால் அறிவற்றவர்களோ பார்க்காமல் நேராகப்போய் துன்பத்தை அனுபவிக்கிறார்கள். யெகோவாவுக்குப் பயந்து நடப்பதே தாழ்மை, செல்வத்துக்கும் கனத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் தாழ்மை வழிநடத்துகிறது. கொடியவர்களின் பாதைகளில் முட்களும் கண்ணிகளும் இருக்கும்; ஆனால் தன் ஆத்துமாவைக் காத்துக்கொள்கிறவர்கள் அவற்றிலிருந்து தூரமாய் விலகுகிறார்கள். பிள்ளைகளை அவர்கள் நடக்கவேண்டிய சரியான வழியில் பயிற்றுவி; அவர்கள் பெரியவர்களாகும்போது, அதைவிட்டு விலகமாட்டார்கள்.

நீதிமொழிகள் 22:1-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

திரளான செல்வத்தைவிட நற்புகழே தெரிந்துகொள்ளப்படக்கூடியது; பொன் வெள்ளியைவிட தயையே நலம். செல்வந்தனும், தரித்திரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; அவர்கள் அனைவரையும் உண்டாக்கினவர் யெகோவா. விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகள் நேராகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள். தாழ்மைக்கும் யெகோவாவுக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் செல்வமும், மகிமையும் ஜீவனும் ஆகும். மாறுபாடுள்ளவனுடைய வழியிலே முட்களும் கண்ணிகளும் உண்டு; தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறவன் அவைகளைவிட்டுத் தூரமாக விலகிப்போவான். பிள்ளையை நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவனுடைய முதிர்வயதிலும் அதை விடாமல் இருப்பான்.

நீதிமொழிகள் 22:1-6 பரிசுத்த பைபிள் (TAERV)

ஒருவன் செல்வந்தனாக இருப்பதைவிட மரியாதைக்குரியவனாக வாழ்வது நல்லது. பொன் மற்றும் வெள்ளியைவிட நல்ல பெயர் முக்கியமானது. செல்வந்தராக இருப்பினும் ஏழைகளாக இருப்பினும் எல்லாரும் சமமே. அனைவரையும் கர்த்தரே படைத்துள்ளார். அறிவுள்ளவர்கள் துன்பம் வருவதைப் பார்த்து அதிலிருந்து விலகிக்கொள்வார்கள். ஆனால் அறிவற்றவர்களோ நேராகத் துன்பத்தை நோக்கிப் போய் அதில் சிக்கிக்கொள்வார்கள். கர்த்தரை மதித்துப் பணிவுள்ளவர்களாக இருங்கள். அப்போது உங்களுக்குச் செல்வமும் மதிப்பும் உண்மையான வாழ்வும் கிடைக்கும். தீயவர்கள் பல துன்பங்களில் அகப்பட்டுக்கொள்கிறார்கள். ஆனால் தங்கள் ஆத்துமாவைப்பற்றி எச்சரிக்கையாக இருப்பவர்கள் துன்பங்களிலிருந்து விலகி வாழ்கின்றனர். ஒரு பிள்ளை இளமையாக இருக்கும்போதே வாழ்வதற்கான நல்ல வழிகளை அவனுக்குப் போதியுங்கள். அப்போது அவன் வளர்ந்தபிறகும் தொடர்ந்து நல்ல வழியிலேயே நடப்பான்.

நீதிமொழிகள் 22:1-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

திரளான ஐசுவரியத்தைப்பார்க்கிலும் நற்கீர்த்தியே தெரிந்து கொள்ளப்படத்தக்கது; பொன் வெள்ளியைப் பார்க்கிலும் தயையே நலம். ஐசுவரியவானும் தரித்திரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; அவர்கள் அனைவரையும் உண்டாக்கினவர் கர்த்தர். விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள். தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம். மாறுபாடுள்ளவனுடைய வழியிலே முள்ளுகளும் கண்ணிகளுமுண்டு; தன் ஆத்துமாவைக் காக்கிறவன் அவைகளுக்குத் தூரமாய் விலகிப்போவான். பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்