நீதிமொழிகள் 1:15-33

நீதிமொழிகள் 1:15-33 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

என் மகனே, நீ அவர்களோடுகூடப் போகாதே; அவர்களுடைய வழிகளில் காலடி வைக்காதே. ஏனெனில் அவர்களுடைய கால்கள் தீமைசெய்ய விரைகின்றன, இரத்தஞ்சிந்த வேகமாய் செல்கின்றன. பறவைகள் பார்த்துக்கொண்டிருக்கையில், அவற்றைப் பிடிக்க வலை விரிப்பது பயனற்றதல்லவா. ஆனாலும் இந்த மனிதர்கள், தங்கள் சொந்த இரத்தத்தைச் சிந்துவதற்கே காத்திருக்கிறார்கள்; அவர்கள் தங்களுக்காகவே பதுங்கியிருக்கிறார்களே, தகாத முறையில் சம்பாதிக்கத் தேடுகிற அனைவரின் முடிவும் இதுவே; அதின் பலன் அதைப் பெறுகிறவர்களின் உயிரை எடுத்துவிடும். ஞானம் வீதியிலே சத்தமிட்டு அழைக்கிறது, பொது இடங்களில் தனது குரலை எழுப்புகிறது; அது இரைச்சலுள்ள வீதிகளின் சந்தியில் சத்தமிடுகிறது, பட்டணத்தின் நுழைவாசல்களில் நின்று உரையாற்றுகிறது. “அறிவற்றவர்களே, எவ்வளவு காலம் அறியாமையின் வழிகளை விரும்புவீர்கள்? ஏளனம் செய்பவர்களே, எவ்வளவு காலம் ஏளனத்தில் மகிழ்ந்திருப்பீர்கள்? மூடர்களே, எவ்வளவு காலத்திற்கு நீங்கள் அறிவை வெறுப்பீர்கள்? நீங்கள் எனது கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளுங்கள்! என் சிந்தனைகளை உங்களுக்குத் தெரியப்படுத்துவேன், என் வார்த்தைகளை உங்களுக்குத் தெரியப்படுத்துவேன். ஆனால், நான் கூப்பிட்டபோது நீங்கள் என்னைப் புறக்கணித்து, எனது கையை நீட்டியபோது ஒருவரும் அதைக் கவனிக்காதபடியினாலும், நீங்கள் என் புத்திமதிகளையெல்லாம் தள்ளிவிட்டு, எனது கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளாதபடியினாலும் உங்களுக்குப் பேராபத்து வரும்போது நான் சிரிப்பேன், பேரழிவு உங்களை மேற்கொள்கையில் ஏளனம் செய்வேன்; பேரழிவு உங்கள்மேல் புயலைப்போல் வரும்போதும், பேராபத்து சுழற்காற்றைப் போல் உங்களை அடித்துச் செல்லும்போதும், துன்பமும் தொல்லையும் உங்களைத் திணறடிக்கும்போதும் நான் உங்களை ஏளனம் செய்வேன். “அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள், நான் பதில் கொடுக்கமாட்டேன்; அவர்கள் என்னைத் தேடுவார்கள், ஆனால் என்னைக் கண்டடையமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் அறிவை வெறுத்து, யெகோவாவுக்குப் பயந்து நடப்பதைத் தெரிந்துகொள்ளாமல் போனார்கள். அவர்கள் என் புத்திமதிகளை ஏற்றுக்கொள்ளாமல், எனது கடிந்துகொள்ளுதலை புறக்கணித்தபடியால், அவர்கள் தங்கள் நடத்தையின் பலனை அனுபவிப்பார்கள், அவர்களுடைய சதித்திட்டங்களின் பலனால் நிரப்பப்படுவார்கள். அறிவீனர்களின் அசட்டுத்தனம் அவர்களைக் கொல்லும், மூடர்களின் மனநிறைவு அவர்களை அழிக்கும்; ஆனால் எனக்குச் செவிகொடுப்பவர் யாரும் பாதுகாப்பாக வாழ்வார்கள், அவர்கள் தீமைக்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பார்கள்.”

நீதிமொழிகள் 1:15-33 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

என் மகனே, நீ அவர்களோடு வழிநடவாமல், உன்னுடைய காலை அவர்களுடைய பாதைக்கு விலக்குவாயாக. அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி, இரத்தம் சிந்த விரைகிறது. எவ்வகையான பறவையானாலும் சரி, அதின் கண்களுக்கு முன்பாக வலையை விரிப்பது வீணானது. இவர்களோ தங்களுடைய இரத்தத்திற்கே மறைந்திருக்கிறார்கள், தங்களுடைய உயிருக்கே கண்ணிவைத்திருக்கிறார்கள். பொருளாசையுள்ள எல்லோருடைய வழியும் இதுவே; இது தன்னை உடையவர்களின் உயிரை வாங்கும். ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது, வீதிகளில் சத்தமிடுகிறது. அது ஆள் நடமாட்டமுள்ள தெருக்களின் சந்திப்பிலும், நகரத்தின் நுழைவு வாசலிலும் நின்று கூப்பிட்டு, பட்டணத்தில் தன்னுடைய வார்த்தைகளைச் சொல்லுகிறது: பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், ஏளனம் செய்பவர்களே, நீங்கள் ஏளனத்தில் பிரியப்படுவதும், அறிவில்லாதவர்களே, நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும். என்னுடைய கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்; இதோ, என்னுடைய ஆவியை உங்களுக்கு அருளுவேன், என்னுடைய வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன். நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள்; நான் என்னுடைய கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை. என்னுடைய ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி, என்னுடைய கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள். ஆகையால், நானும் உங்களுடைய ஆபத்துக்காலத்தில் சிரித்து, நீங்கள் பயப்படும் காரியம் வரும்போது ஏளனம்செய்வேன். நீங்கள் பயப்படும் காரியம் புயல்போல் வரும்போதும், ஆபத்து சூறாவளிபோல் உங்களுக்கு நேரிடும்போதும், நெருக்கமும் இடுக்கணும் உங்கள்மேல் வரும்போதும், ஏளனம்செய்வேன். அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் மறுஉத்திரவு கொடுக்கமாட்டேன்; அவர்கள் அதிகாலையிலே என்னைத் தேடுவார்கள், என்னைக் காணமாட்டார்கள். அவர்கள் அறிவை வெறுத்தார்கள், யெகோவாவுக்குப் பயப்படுதலைத் தெரிந்துகொள்ளாமற்போனார்கள். என்னுடைய ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை; என்னுடைய கடிந்துகொள்ளுதலையெல்லாம் அசட்டை செய்தார்கள். ஆகையால் அவர்கள் தங்களுடைய வழியின் பலனைச் சாப்பிடுவார்கள்; தங்களுடைய யோசனைகளினால் திருப்தியடைவார்கள். அறிவீனர்களின் மாறுபாடு அவர்களைக் கொல்லும், மூடரின் பொறுப்பின்மை அவர்களை அழிக்கும்; எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் பயமின்றி தங்கி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாக இருப்பான்.

நீதிமொழிகள் 1:15-33 பரிசுத்த பைபிள் (TAERV)

என் மகனே அவர்களைப் பின்பற்றிச் செல்லாதே. அவர்கள் வாழ்கிற வாழ்க்கை முறையில் ஒரு அடிகூட எடுத்து வைக்காதே. அந்தத் தீயவர்கள் எப்பொழுதும் தீமை செய்யவே தயாராக இருப்பார்கள். எப்பொழுதும் அவர்கள் ஜனங்களைக்கொல்வதையே விரும்புவார்கள். ஜனங்கள் வலையை விரித்துப் பறவைகளைப் பிடிக்கிறார்கள். ஆனால் பறவைகள் கவனித்துக்கொண்டிருக்கும்போது அதனைப் பிடிக்க வலையை விரிப்பது வீண். அந்தத் தீயவர்கள் மறைந்துகொண்டு மற்றவர்களைக்கொல்ல வலை விரிப்பார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் தங்களுக்காகவே வலையை விரிக்கிறார்கள். அவர்கள் தம் சொந்த வலையாலேயே அழிந்து போவார்கள். பேராசை உடையவர்கள் எப்பொழுதும் அதனாலேயே அழிந்துபோவார்கள். கவனியுங்கள்! ஞானம் ஜனங்களுக்குப் போதிக்க முயற்சி செய்கிறாள். வீதிகளிலும் சந்தையிலும் நின்று அவள் (ஞானம்) சத்தமிடுகிறாள். அவள் நெரிசலான தெருமுனைகளில் நின்று கூப்பிடுகிறாள். நகர வாசல் அருகில் நின்றுகொண்டு ஜனங்கள் தன்னைக் கவனிக்கும்படி முயற்சி செய்கிறாள். ஞானம் சொல்கிறதாவது, “நீங்கள் முட்டாள்கள், நீங்கள் தொடர்ந்து எவ்வளவுகாலம் முட்டாள்தனமாக செயல்படுவீர்கள்? நீங்கள் எவ்வளவு காலம் ஞானத்தைக் கேலிச் செய்வீர்கள்? நீங்கள் தொடர்ந்து எவ்வளவு காலத்துக்கு அறிவை வெறுப்பீர்கள்? நீங்கள் எனது ஆலோசனைகளையும், போதனைகளையும் கேட்டிருக்க வேண்டும். எனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் நான் உங்களுக்குச் சொல்லியிருந்திருப்பேன். என் அறிவையெல்லாம் உங்களுக்கு வழங்கியிருந்திருப்பேன். “நான் சொல்வதைக் கவனிக்க நீங்கள் மறுத்துவிட்டீர்கள். நான் உதவ முயன்றேன். நான் கைகொடுக்க வந்தேன். ஆனால் என் உதவியை ஏற்க மறுத்துவிட்டீர்கள். எனது அறிவுரைகளைக் கேட்காமல் நீங்கள் திரும்பிக்கொண்டீர்கள். என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள மறுத்தீர்கள். எனவே, உங்கள் துன்பத்தைக் கண்டு நான் சிரிப்பேன். உங்களுக்குத் துன்பம் வருவதைப் பார்த்து நான் மகிழ்ச்சி அடைவேன். ஒரு கொடிய புயலைப்போன்று பெருந்துன்பம் உங்களுக்கு வரும். பெருங்காற்றைப்போன்று அது உங்கள் மேல் மோதும். உங்கள் துன்பமும் கவலைகளும் உங்கள் மேல் சுமையாக அழுத்தும். “இவையெல்லாம் நடக்கும்போது நீங்கள் என்னை உதவிக்காக அழைப்பீர்கள். ஆனால் நான் உதவிசெய்யமாட்டேன். என்னை நீங்கள் தேடுவீர்கள், ஆனால் உங்களால் என்னைக் கண்டு பிடிக்க முடியாது. நீங்கள் என் அறிவை விரும்பாததால் நான் உதவி செய்யமாட்டேன். நீங்கள் கர்த்தருக்குப் பயப்படவும் அவரை மதிக்கவும், கனப்படுத்தவும் மறுத்தீர்கள். நீங்கள் என்னுடைய அறிவுரைகளைக் கேட்க மறுத்தீர்கள். நான் உங்களுக்குச் சரியான பாதையைக் காட்டியபோது நீங்கள் கேட்கவில்லை. நீங்கள் உங்கள் சொந்த வழியிலேயே செயல்களைச் செய்தீர்கள். நீங்கள் உங்கள் சொந்த ஆலோசனையைப் பின்பற்றினீர்கள். உங்கள் சொந்த செய்கைகளினால் வந்த விளைவுகளை நீங்கள் இப்பொழுது ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். “முட்டாள்கள் அறிவைப் பின்பற்ற மறுப்பதால் மரணமடைவார்கள். தங்கள் முட்டாள்தனமான பாதையில் தொடர்ந்து செல்வதில் அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். இது அவர்களை அழித்துவிடும். ஆனால் எனக்குக் கீழ்ப்படிகிறவன் பாதுகாப்பாக இருப்பான். அவன் வசதியாக இருப்பான். அவன் தீமைக்குப் பயப்படவேண்டியதில்லை.”

நீதிமொழிகள் 1:15-33 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

என் மகனே, நீ அவர்களோடே வழிநடவாமல், உன் காலை அவர்கள் பாதைக்கு விலக்குவாயாக. அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி, இரத்தஞ்சிந்தத் தீவிரிக்கிறது. எவ்வகையான பட்சியானாலும் சரி, அதின் கண்களுக்கு முன்பாக வலையை விரிப்பது விருதா. இவர்களோ தங்கள் இரத்தத்திற்கே பதிவிருக்கிறார்கள், தங்கள் பிராணனுக்கே ஒளிவைத்திருக்கிறார்கள். பொருளாசையுள்ள எல்லாருடைய வழியும் இதுவே; இது தன்னையுடையவர்களின் உயிரை வாங்கும். ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது, வீதிகளில் சத்தமிடுகிறது. அது சந்தடியுள்ள தெருக்களின் சந்திலும், ஒலிமுகவாசலிலும் நின்று கூப்பிட்டு, பட்டணத்தில் தன் வார்த்தைகளை வசனித்துச் சொல்லுகிறது: பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், நிந்தனைக்காரரே, நீங்கள் நிந்தனையில் பிரியப்படுவதும், மதியீனரே, நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும். என் கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்; இதோ, என் ஆவியை உங்களுக்கு அருளுவேன், என் வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன். நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள்; நான் என் கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை. என் ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி, என் கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள். ஆகையால், நானும் உங்கள் ஆபத்துக்காலத்தில் நகைத்து, நீங்கள் பயப்படுங்காரியம் வரும்போது ஆகடியம்பண்ணுவேன். நீங்கள் பயப்படுங்காரியம் புசல்போல் வரும்போதும், ஆபத்து சூறாவளிபோல் உங்களுக்கு நேரிடும்போதும், நெருக்கமும் இடுக்கணும் உங்கள்மேல் வரும்போதும், ஆகடியம்பண்ணுவேன். அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் மறுஉத்தரவு கொடுக்கமாட்டேன்; அவர்கள் அதிகாலையிலே என்னைத் தேடுவார்கள், என்னைக் காணமாட்டார்கள். அவர்கள் அறிவை வெறுத்தார்கள், கர்த்தருக்குப் பயப்படுதலைத் தெரிந்துகொள்ளாமற்போனார்கள். என் ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை; என் கடிந்துகொள்ளுதலையெல்லாம் அசட்டை பண்ணினார்கள். ஆகையால் அவர்கள் தங்கள் வழியின் பலனைப் புசிப்பார்கள்; தங்கள் யோசனைகளினால் திருப்தியடைவார்கள். பேதைகளின் மாறுபாடு அவர்களைக் கொல்லும், மூடரின் நிர்விசாரம் அவர்களை அழிக்கும். எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்.