நீதிமொழிகள் 1:10-16
நீதிமொழிகள் 1:10-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
என் மகனே, பாவிகள் உன்னைக் கவர்ச்சியூட்டி இழுக்க முயன்றால், அவர்களுடன் இழுப்புண்டு போகாதே. அவர்கள் உன்னிடம், “நீ எங்களோடுகூட வா; குற்றமற்ற இரத்தத்தைச் சிந்தும்படி பதுங்கிக் காத்திருப்போம், அப்பாவியான மனிதரை வழிமறித்துப் பறிப்போம்; பாதாளம் விழுங்குவதுபோல் அவர்களை உயிருடன் விழுங்குவோம், மரணக் குழிக்குள் போகிறவர்களைப்போல் முழுமையாய் விழுங்குவோம்; பலவித விலைமதிப்புள்ள பொருட்களையும் எடுத்து, நமது வீடுகளைக் கொள்ளைப் பொருட்களால் நிரப்புவோம்; எங்களுடன் பங்காளியாயிரு; நாம் கொள்ளையிட்டதைப் பகிர்ந்துகொள்வோம்” என்று சொல்லுவார்களானால், என் மகனே, நீ அவர்களோடுகூடப் போகாதே; அவர்களுடைய வழிகளில் காலடி வைக்காதே. ஏனெனில் அவர்களுடைய கால்கள் தீமைசெய்ய விரைகின்றன, இரத்தஞ்சிந்த வேகமாய் செல்கின்றன.
நீதிமொழிகள் 1:10-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
என் மகனே, பாவிகள் உனக்கு ஆசைகாட்டினாலும் நீ சம்மதிக்காதே. எங்களோடு வா, இரத்தம்சிந்தும்படி நாம் மறைந்திருந்து, குற்றமில்லாமல் இருக்கிறவர்களை காரணமில்லாமல் பிடிக்கும்படி ஒளிந்திருப்போம்; பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடு விழுங்குவோம்; குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல் அவர்களை முழுமையாக விழுங்குவோம்; விலையுயர்ந்த எல்லாவிதப் பொருள்களையும் கண்டடைவோம்; கொள்ளைப்பொருளினால் நம்முடைய வீடுகளை நிரப்புவோம். எங்களோடு பங்காளியாக இரு; நம்மெல்லோருக்கும் ஒரே பை இருக்கும் என்று அவர்கள் சொன்னால்; என் மகனே, நீ அவர்களோடு வழிநடவாமல், உன்னுடைய காலை அவர்களுடைய பாதைக்கு விலக்குவாயாக. அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி, இரத்தம் சிந்த விரைகிறது.
நீதிமொழிகள் 1:10-16 பரிசுத்த பைபிள் (TAERV)
என் மகனே! பாவத்தை விரும்புகிறவர்கள், அவர்கள் உன்னையும் தீயசெயல்களை செய்யும்படி தூண்டுவார்கள். நீ அவர்களைப் பின்பற்றக் கூடாது. அந்தப் பாவிகள் உன்னிடம், “எங்களோடு வா, நாம் ஒளித்திருப்போம். ஒன்றும் அறியாதவர்களைக்கொல்லும்படிக் காத்திருப்போம். நாம் அவர்களை மரண இடத்திற்கு அனுப்புவோம். நாம் அவர்களை அழித்து கல்லறைக்கு அனுப்புவோம். நாம் விலைமதிப்புள்ள உயர்ந்த பொருட்களையெல்லாம் திருடுவோம். நாம் இவற்றால் நம் வீடுகளை நிரப்புவோம். எனவே எங்களோடு வா. இவற்றைச் செய்ய உதவு. இதில் கிடைப்பதை நாம் பங்கிட்டுக்கொள்வோம்” என்பார்கள். என் மகனே அவர்களைப் பின்பற்றிச் செல்லாதே. அவர்கள் வாழ்கிற வாழ்க்கை முறையில் ஒரு அடிகூட எடுத்து வைக்காதே. அந்தத் தீயவர்கள் எப்பொழுதும் தீமை செய்யவே தயாராக இருப்பார்கள். எப்பொழுதும் அவர்கள் ஜனங்களைக்கொல்வதையே விரும்புவார்கள்.
நீதிமொழிகள் 1:10-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
என் மகனே, பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும் நீ சம்மதியாதே. எங்களோடே வா, இரத்தஞ்சிந்தும்படி நாம் பதிவிருந்து, குற்றமற்றிருக்கிறவர்களை முகாந்தரமின்றிப் பிடிக்கும்படி ஒளித்திருப்போம்; பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடே விழுங்குவோம்; குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல் அவர்களை முழுமையும் விழுங்குவோம்; விலையுயர்ந்த சகலவிதப் பொருள்களையும் கண்டடைவோம்; கொள்ளைப்பொருளினால் நம்முடைய வீடுகளை நிரப்புவோம். எங்களோடே பங்காளியாயிரு; நம்மெல்லாருக்கும் ஒரே பை இருக்கும் என்று அவர்கள் சொல்வார்களாகில்; என் மகனே, நீ அவர்களோடே வழிநடவாமல், உன் காலை அவர்கள் பாதைக்கு விலக்குவாயாக. அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி, இரத்தஞ்சிந்தத் தீவிரிக்கிறது.