பிலிப்பியர் 4:8-13

பிலிப்பியர் 4:8-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இறுதியாக பிரியமானவர்களே, உண்மையானது எவையோ, மதிப்பானது எவையோ, சரியானது எவையோ, தூய்மையானது எவையோ, அன்பானது எவையோ, அத்துடன் பாராட்டுதலுக்குத் தகுந்தது எவையோ, மேன்மையும் புகழ்ச்சியுமானது எவைகளோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள். நீங்கள் என்னிடமிருந்து எவைகளை எல்லாம் கற்றுக்கொண்டீர்களோ, பெற்றுக்கொண்டீர்களோ, கேட்டீர்களோ, அல்லது என் நடத்தையில் கண்டீர்களோ, அவைகளையே கைக்கொள்ளுங்கள். அப்பொழுது சமாதானத்தின் இறைவன் உங்களோடு இருப்பார். இப்பொழுதாவது எனக்கு மீண்டும் உதவிசெய்ய உங்களுக்கு முடியுமாயிருப்பதைக்குறித்து கர்த்தரில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் என்னில் அக்கறை கொண்டிருந்தீர்கள் என்பது உண்மை. ஆனால் அதைக் காண்பிப்பதற்கு உங்களுக்குத் தருணம் கிடைக்கவில்லை என்பதும் எனக்குத் தெரியும். நான் தேவையுள்ளவனாக இருப்பதனால் இதைக் கூறவில்லை. ஏனெனில், நான் எந்தச் சூழ்நிலையிலும் மனநிறைவுடன் இருக்கக் கற்றுக்கொண்டேன். ஏழ்மையுடன் வாழவும், நிறைவுடன் வாழவும் எனக்குத் தெரியும். வயிறார சாப்பிட்டிருக்கவும், பசியாக இருக்கவும், நிறைவுடனும் தேவையுடனும் வாழவும், எப்பொழுதும் எல்லாச் சூழ்நிலைகளிலும், எப்படி மனநிறைவுடன் வாழ்வது என்பதன் இரகசியத்தையும் நான் கற்றுக்கொண்டுள்ளேன். எனக்குப் பெலன் கொடுக்கிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு.

பிலிப்பியர் 4:8-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

கடைசியாக, சகோதரர்களே, உண்மையுள்ளவைகள் எவைகளோ, ஒழுக்கமுள்ளவைகள் எவைகளோ, நீதியுள்ளவைகள் எவைகளோ, கற்புள்ளவைகள் எவைகளோ, அன்புள்ளவைகள் எவைகளோ, நற்பெயர் உள்ளவைகள் எவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள். நீங்கள் என்னிடம் கற்றுக்கொண்டவைகளும், பெற்றுக்கொண்டவைகளும், கேட்டவைகளும், பார்த்தவைகளும் எவைகளோ, அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடு இருப்பார். என்னை விசாரிப்பதற்கு நீங்கள் இப்பொழுது மீண்டும் அக்கறை கொண்டதினாலே கர்த்தருக்குள் மிகவும் சந்தோஷப்பட்டேன்; முன்னமே இப்படிச் செய்ய நினைத்தீர்கள், ஆனால் உதவிசெய்ய உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. என் குறைகளினால் நான் இப்படிச் சொல்லவில்லை; ஏனென்றால், நான் எந்த நிலைமையில் இருந்தாலும் மனதிருப்தியாக இருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எந்த இடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாக இருக்கவும், பட்டினியாக இருக்கவும், பரிபூரணமடையவும், குறைவுபடவும் கற்றுக்கொண்டேன். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலன் உண்டு.

பிலிப்பியர் 4:8-13 பரிசுத்த பைபிள் (TAERV)

இப்போது சகோதர சகோதரிகளே! தொடர்ந்து உங்கள் மனதில் உண்மையும், பெருமையும், நீதியும், தூய்மையும், அன்பும், அழகும், மரியாதையும், உயர்வும் கொண்ட எல்லாவற்றையும் சிந்தித்துக்கொள்ளுங்கள். என்னிடமிருந்து நீங்கள் கற்றவற்றையும், பெற்றவற்றையும், கண்டவற்றையும், கேட்டவற்றையும் மட்டும் நீங்கள் செய்யுங்கள். சமாதானம் கொடுக்கிற தேவன் உங்களோடிருப்பார். மீண்டும் என்னிடம் நீங்கள் அக்கறை காட்டுவதற்காக எனக்கு கர்த்தருக்குள் மிகவும் மகிழ்ச்சி. நீங்கள் எப்பொழுதும் அக்கறை கொண்டவர்கள். ஆனால் அதை வெளிப்படுத்த உங்களுக்கு வேறு வழி இருக்கவில்லை. எனக்குத் தேவைகள் உள்ளன என்பதற்காக இவற்றையெல்லாம் நான் உங்களுக்குக் கூறவில்லை. எனக்கு இருக்கிற சூழ்நிலையில் நான் திருப்தி அடைந்த உணர்வில் இருக்கிறேன். ஏழ்மையில் இருக்கும்போது எப்படி வாழ்வது என்று நான் அறிந்திருக்கிறேன். செல்வம் இருக்கும்போதும் எப்படி வாழ்வது என்று நான் அறிந்திருக்கிறேன். எல்லாவற்றிலும் எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி என்று எனக்குத் தெரியும். அந்த இரகசியத்தை நான் கற்றிருக்கிறேன். எனக்கு உண்ணுவதற்கு இருந்தபோதும் சரி, இல்லாதபோதும் சரி. நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். எனக்கு தேவையானவை அனைத்தும் இருந்தபோதும் சரி, இல்லாதபோதும் சரி, மகிழ்ச்சியுடன் நான் இருக்கக் கற்றிருக்கிறேன். கிறிஸ்துவின் மூலம் எனக்கு எல்லாவற்றையும் செய்ய வலிமை இருக்கிறது. ஏனென்றால் அவர் எனக்குப் பலத்தைக் கொடுக்கிறார்.

பிலிப்பியர் 4:8-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள். நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகளெவைகளோ, அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார். என்னை விசாரிப்பதற்கு நீங்கள் இப்பொழுது மறுபடியும் மனமலர்ந்தபடியினாலே கர்த்தருக்குள் மிகவும் சந்தோஷப்பட்டேன்; இப்படிச் செய்ய எண்ணங்கொண்டிருந்தீர்கள், சமயம்மாத்திரம் உங்களுக்கு நேரிடவில்லை. என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.

பிலிப்பியர் 4:8-13

பிலிப்பியர் 4:8-13 TAOVBSIபிலிப்பியர் 4:8-13 TAOVBSIபிலிப்பியர் 4:8-13 TAOVBSIபிலிப்பியர் 4:8-13 TAOVBSIபிலிப்பியர் 4:8-13 TAOVBSIபிலிப்பியர் 4:8-13 TAOVBSI