பிலிப்பியர் 3:17-21

பிலிப்பியர் 3:17-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பிரியமானவர்களே, என்னுடைய முன்மாதிரியைப் பின்பற்றுபவர்களோடு, நீங்களும் சேர்ந்துகொள்ளுங்கள். நாங்கள் உங்களுக்குக் காட்டிய எடுத்துக்காட்டின்படி வாழ்கிறவர்களையும் கவனித்துக் கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், அநேகர் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களாகவே வாழ்கிறார்கள். இதைப்பற்றி நான் உங்களுக்கு அடிக்கடி சொல்லியிருக்கிறேன். இப்பொழுது மீண்டும் அதைக் கண்ணீருடன் உங்களுக்குச் சொல்கிறேன். பேரழிவே அவர்களது முடிவு, அவர்களுடைய வயிறே அவர்களது தெய்வம், வெட்கக்கேடானது அவர்களது மேன்மை, பூமிக்குரியவைகளைப் பற்றியே அவர்களது சிந்தனை. ஆனால் நமது குடியுரிமை பரலோகத்திற்கே உரியது. அங்கிருந்தே கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வருவாரென எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறோம். அவர் எல்லாவற்றையும் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர தமது வல்லமையான ஆற்றலைக் கொடுக்கும்படியே நமது பலவீனமான அழிவுக்குரிய உடல்களை மகிமையுள்ள உடலைப்போல் மாற்றுவார்.

பிலிப்பியர் 3:17-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

சகோதரர்களே, நீங்கள் என்னோடு பின்பற்றுகிறவர்களாகி, நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறபடி நடக்கிறவர்களை மாதிரியாக நோக்கிப் பாருங்கள். ஏனென்றால், அநேகர் வேறுவிதமாக நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களென்று உங்களுக்கு அநேகமுறைச் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன். அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய வெட்கமே, அவர்கள் பூமிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள். நம்முடைய குடியிருப்போ பரலோகத்தில் இருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வருவதற்காக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்வதற்கு தம்முடைய வல்லமையான செயலின்படி, நம்முடைய அற்பமான சரீரத்தை அவருடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.

பிலிப்பியர் 3:17-21 பரிசுத்த பைபிள் (TAERV)

சகோதர சகோதரிகளே! நீங்கள் அனைவரும் என்னைப் போன்று வாழ முயல வேண்டும். நாங்கள் காட்டிய சட்டங்களை மேற்கொண்டு வாழ்பவர்களை அப்படியே பின்பற்ற முயலுங்கள். இயேசுவின் சிலுவைக்கு விரோதமாகப் பலர் வாழ்ந்து வருகின்றனர். இத்தகையவர்களைப் பற்றி நான் அடிக்கடி கூறி வருகிறேன். இப்பொழுதும் அவர்களைப் பற்றிக் கூறுவதை எண்ணும்போது எனக்கு அழுகையே வருகிறது. இத்தகையோரின் வாழ்க்கை முறை இவர்களை அழிவின் பாதைக்கே அழைத்துச் செல்லும். அவர்கள் தேவனுக்குச் சேவை செய்வதில்லை. அவர்கள் தம்மைத் திருப்திப்படுத்திக்கொள்வதற்காகவே வாழ்கிறார்கள். அவர்கள் வெட்கப்படத்தக்க செயல்களை செய்வதோடு அதைப் பற்றி பெருமைப்பட்டுக்கொள்ளவும் செய்கிறார்கள். அவர்கள் பூமியில் உள்ளவற்றைப் பற்றி மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், நம் குடியிருப்போ பரலோகத்தில் உள்ளது. நம்முடைய இரட்சகர் பரலோகத்தில் இருந்து வருவார். அவருக்காகவே நாம் காத்திருக்கிறோம். நமது இரட்சகர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே. அவர் இத்தகைய நமது அற்பமான சரீரங்களை மாற்றி தம்முடைய மகிமை மிக்க சரீரம்போல ஆக்கிவிடுவார். அவர் இதனைத் தம் வல்லமையால் செய்வார். அந்த வல்லமையால் அவர் எல்லாவற்றையும் ஆளத்தக்கவர்.

பிலிப்பியர் 3:17-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

சகோதரரே, நீங்கள் என்னோடேகூடப் பின்பற்றுகிறவர்களாகி, நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறபடி நடக்கிறவர்களை மாதிரியாக நோக்குங்கள். ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன். அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள். நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.