பிலிப்பியர் 2:17-23
பிலிப்பியர் 2:17-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஆனால் உங்கள் விசுவாசத்தினால் வரும் பலியின்மேலும், ஊழியத்தின்மேலும் நான் பானபலியாக ஊற்றப்பட்டாலும், நான் உங்கள் எல்லோருடனும் சந்தோஷமும், மகிழ்ச்சியும் அடைகிறேன். எனவே நீங்களும்கூட என்னுடன் சந்தோஷமும் மகிழ்ச்சியுமாயிருக்க வேண்டும். அன்றியும் தீமோத்தேயுவை உங்களிடம் விரைவில் அனுப்பலாம் என்று கர்த்தராகிய இயேசுவில் நான் எதிர்பார்க்கிறேன். அப்பொழுது அவன்மூலம் உங்களைப்பற்றிய செய்திகளை அறிந்து நானும் உற்சாகமடைவேன். அவனைப்போல் உங்கள் சுகநலன்களில் உண்மையான கரிசனைக் கொள்வதற்கு அவனைத்தவிர வேறொருவனும் என்னிடம் இல்லை. ஏனெனில் ஒவ்வொருவனும், தன் சொந்த நலன்களில் கரிசனை கொள்கிறானேதவிர, இயேசுகிறிஸ்துவுக்கு உரியவைகளில் கரிசனைகொள்வதில்லை. ஆனால் தீமோத்தேயுவோ, ஒரு மகன் தன் தந்தையுடன் வேலையில் இருப்பதுபோல், என்னுடன் சேர்ந்து நற்செய்திப் பணியில் ஊழியம் செய்திருக்கிறான். இதன்மூலம், அவன் தன்னை நிரூபித்திருக்கிறான் என்பது உங்களுக்குத் தெரியும். எனக்கு இங்கே என்ன நடக்கும் என்று நான் அறிந்தவுடனே, அவனை உங்களிடம் அனுப்பலாம் என எதிர்பார்க்கிறேன்.
பிலிப்பியர் 2:17-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மேலும், உங்களுடைய விசுவாசமாகிய பலியின்மேலும் ஊழியத்தின்மேலும் நான் பானபலியாக வார்க்கப்பட்டுப் போனாலும், நான் மகிழ்ந்து, உங்கள் அனைவரோடும் சேர்ந்து சந்தோஷப்படுவேன். இதினால் நீங்களும் மகிழ்ந்து, என்னோடு சேர்ந்து சந்தோஷப்படுங்கள். அன்றியும், நானும் உங்களுடைய செய்திகளைத் தெரிந்து மன ஆறுதல் அடைவதற்குச் சீக்கிரமாகத் தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்பலாம் என்று கர்த்தராகிய இயேசுவிற்குள் நம்பியிருக்கிறேன். ஆகவே, உங்களுடைய காரியங்களை உண்மையாகக் கவனிப்பதற்கு என்னைப்போல மனதுள்ளவன் அவனைத்தவிர வேறுயாரும் என்னிடம் இல்லை. மற்ற எல்லோரும் கிறிஸ்து இயேசுவிற்குரியவைகளைத் தேடாமல், தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள். தகப்பனுக்குப் பிள்ளை ஊழியம் செய்வதுபோல, அவன் என்னோடு சேர்ந்து நற்செய்திக்காக ஊழியம் செய்தான் என்று அவனுடைய உத்தமகுணத்தை அறிந்திருக்கிறீர்கள். ஆகவே, என் காரியங்கள் எப்படி நடக்கும் என்று நான் அறிந்தவுடனே அவனை அனுப்பலாம் என்று நினைத்திருக்கிறேன்.
பிலிப்பியர் 2:17-23 பரிசுத்த பைபிள் (TAERV)
தேவனுக்கு ஊழியம் செய்து உங்கள் வாழ்வைத் தியாகம் செய்ய உங்கள் விசுவாசம் தூண்டும். உங்கள் தியாகத்தோடு என் இரத்தத்தையும் தரத் தயாராக உள்ளேன். ஆனால் அது நடந்தேறினால் நான் முழுமையாக மகிழ்வேன். நான் உங்களோடு பெரிதும் மகிழ்ச்சி அடைவேன். மகிழ்ச்சியாக இருங்கள். என்னோடு முழு மகிழ்ச்சி அடையுங்கள். தீமோத்தேயுவை உங்களிடம் விரைவில் அனுப்ப நான் கர்த்தராகிய இயேசுவுக்குள் நம்புகிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்வதில் நான் மகிழ்ச்சி அடைவேன். தீமோத்தேயுவைப் போன்று வேறு ஒருவரும் என்னிடம் இல்லை. உண்மையிலேயே அவன் உங்கள் மேல் அதிகக் கரிசனையுள்ளவன். மற்ற அனைவரும் தங்கள் சொந்த வாழ்க்கையில் மட்டும் ஆர்வமாக உள்ளனர். அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்வதில் விருப்பம் இல்லை. தீமோத்தேயு எப்படிப்பட்டவன் என்பது உங்களுக்குத் தெரியும். நற்செய்தியைப் பரப்புவதில் அவன் என்னோடு பணி செய்திருக்கிறான் என்பது உங்களுக்குத் தெரியும். அவன் ஒரு குமாரன் தந்தைக்குத் தொண்டு செய்வது போன்று செய்தான். விரைவில் அவனை உங்களிடம் அனுப்பத் திட்டமிட்டுள்ளேன். எனக்கு என்ன நேரும் என்பதை அறிந்துகொள்ளும்போது நான் அவனை உங்களிடம் அனுப்பிவைப்பேன்.
பிலிப்பியர் 2:17-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
மேலும், உங்கள் விசுவாசமாகிய பலியின்மேலும் ஊழியத்தின்மேலும் நான் வார்க்கப்பட்டுப்போனாலும், நான் மகிழ்ந்து, உங்களனைவரோடுங்கூடச் சந்தோஷப்படுவேன். இதினிமித்தம் நீங்களும் மகிழ்ந்து, என்னோடேகூடச் சந்தோஷப்படுங்கள். அன்றியும், நானும் உங்கள் செய்திகளை அறிந்து மனத்தேறுதல் அடையும்படிக்குச் சீக்கிரமாய்த் தீமோத்தேயுவை உங்களிடத்தில் அனுப்பலாமென்று கர்த்தராகிய இயேசுவுக்குள் நம்பியிருக்கிறேன். அதேனென்றால், உங்கள் காரியங்களை உண்மையாய் விசாரிக்கிறதற்கு என்னைப்போல மனதுள்ளவன் அவனையன்றி வேறொருவனும் என்னிடத்திலில்லை. மற்றவர்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குரியவைகளைத் தேடாமல், தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள். தகப்பனுக்குப் பிள்ளை ஊழியஞ்செய்வதுபோல, அவன் என்னுடனேகூட சுவிசேஷத்தினிமித்தம் ஊழியஞ்செய்தானென்று அவனுடைய உத்தமகுணத்தை அறிந்திருக்கிறீர்கள். ஆகையால் என் காரியங்கள் இன்னபடி நடக்கும் என்று நான் அறிந்தவுடனே அவனை அனுப்பலாமென்று நினைத்திருக்கிறேன்.