பிலிப்பியர் 2:14-18

பிலிப்பியர் 2:14-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

முறுமுறுப்பில்லாமலும், வாதாடாமலும் எல்லாவற்றையும் செய்யுங்கள். அப்பொழுதுதான் நீங்கள் குற்றமற்றவர்களும், தூய்மையானவர்களுமான “பிழையேதுமில்லாத இறைவனுடைய பிள்ளைகளாய், நெறிகெட்ட சீர்கேடான இந்தத் தலைமுறையினரிடையே இருப்பீர்கள்.” அவர்களிடையே, நீங்கள் வான மண்டலங்களிலுள்ள நட்சத்திரங்களைப்போல் பிரகாசிப்பீர்கள். நீங்கள் வாழ்வின் வார்த்தையைப் பற்றிப்பிடித்து கொண்டவர்களாயிருந்தால் நான் ஓடிய ஓட்டமும், எனது உழைப்பும் வீணாகவில்லை என்று நான் கிறிஸ்து திரும்பிவரும் நாளில் பெருமையடைவேன். ஆனால் உங்கள் விசுவாசத்தினால் வரும் பலியின்மேலும், ஊழியத்தின்மேலும் நான் பானபலியாக ஊற்றப்பட்டாலும், நான் உங்கள் எல்லோருடனும் சந்தோஷமும், மகிழ்ச்சியும் அடைகிறேன். எனவே நீங்களும்கூட என்னுடன் சந்தோஷமும் மகிழ்ச்சியுமாயிருக்க வேண்டும்.

பிலிப்பியர் 2:14-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நான் வீணாக ஓடினதும் வீணாகப் பிரயாசப்பட்டதும் இல்லை என்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு, ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள், கோணலும் மாறுபாடுமான வம்சத்தின் நடுவிலே குற்றம் இல்லாதவர்களும் கபடு இல்லாதவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளாக இருப்பதற்கு, எல்லாவற்றையும் முறுமுறுப்பு இல்லாமலும் வாக்குவாதம் இல்லாமலும் செய்யுங்கள். மேலும், உங்களுடைய விசுவாசமாகிய பலியின்மேலும் ஊழியத்தின்மேலும் நான் பானபலியாக வார்க்கப்பட்டுப் போனாலும், நான் மகிழ்ந்து, உங்கள் அனைவரோடும் சேர்ந்து சந்தோஷப்படுவேன். இதினால் நீங்களும் மகிழ்ந்து, என்னோடு சேர்ந்து சந்தோஷப்படுங்கள்.

பிலிப்பியர் 2:14-18 பரிசுத்த பைபிள் (TAERV)

முறுமுறுப்பு அல்லது வாக்குவாதம், இல்லாமல் எல்லாவற்றையும் செய்யுங்கள். அப்போதுதான் எதுவுமறியாதவர்களாகவும், எந்தத் தவறும் இல்லாதவர்களாகவும் இருப்பீர்கள். நீங்கள் தேவனுடைய குற்றமற்ற பிள்ளைகளாக இருப்பீர்கள். ஆனால் உங்களைச் சுற்றிலும் உள்ள பாவம் செய்கிற கெட்டவர்களோடு நீங்கள் வாழ்கிறீர்கள். அவர்களுக்கு மத்தியில் இருட்டின் நடுவில் விளக்குபோன்று பிரகாசிக்கிறீர்கள். வாழ்வைக் கொடுக்கும் போதனையை அந்த மக்களுக்கும் நீங்கள் வழங்குங்கள். கிறிஸ்து மீண்டும் வரும்போது இது பற்றி நான் மிகவும் பெருமை அடைவேன். எனது பணி வீணாகவில்லை என்றும் நான் பெருமைகொள்வேன். ஏனென்றால் பந்தயத்தில் ஓடி நான் வென்றவனாவேன். தேவனுக்கு ஊழியம் செய்து உங்கள் வாழ்வைத் தியாகம் செய்ய உங்கள் விசுவாசம் தூண்டும். உங்கள் தியாகத்தோடு என் இரத்தத்தையும் தரத் தயாராக உள்ளேன். ஆனால் அது நடந்தேறினால் நான் முழுமையாக மகிழ்வேன். நான் உங்களோடு பெரிதும் மகிழ்ச்சி அடைவேன். மகிழ்ச்சியாக இருங்கள். என்னோடு முழு மகிழ்ச்சி அடையுங்கள்.

பிலிப்பியர் 2:14-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நான் வீணாக ஓடினதும் வீணாகப் பிரயாசப்பட்டதுமில்லையென்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு, ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள், கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு, எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள். மேலும், உங்கள் விசுவாசமாகிய பலியின்மேலும் ஊழியத்தின்மேலும் நான் வார்க்கப்பட்டுப்போனாலும், நான் மகிழ்ந்து, உங்களனைவரோடுங்கூடச் சந்தோஷப்படுவேன். இதினிமித்தம் நீங்களும் மகிழ்ந்து, என்னோடேகூடச் சந்தோஷப்படுங்கள்.