பிலிப்பியர் 1:9-14
பிலிப்பியர் 1:9-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
என் மன்றாடல் இதுவே: உங்கள் அன்பு மென்மேலும் அறிவாற்றலிலும், ஆழமான நுண்ணறிவிலும் பெருகி வளரவேண்டும். அப்பொழுது மிகச் சிறந்தது எது என்று நிதானித்தறிய உங்களால் முடியும். கிறிஸ்து மீண்டும் வரும் நாள்வரைக்கும் தூய்மையுள்ளவர்களாகவும், குற்றம் காணப்படாதவர்களாகவும், இயேசுகிறிஸ்துவின் மூலமாக வரும் நீதியின் கனிகளில், நிறைவுள்ளவர்களாகவும் நீங்கள் இருப்பீர்கள். அது இறைவனுக்கு மகிமையையும், துதியையும் ஏற்படுத்தும். பிரியமானவர்களே, எனக்கு நடந்தவைகள் உண்மையிலே நற்செய்தியைப் பரப்புவதற்கு உதவியாக இருந்தது என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனெனில் நான் கிறிஸ்துவுக்காகவே சிறையில் விலங்கிடப்பட்டிருக்கிறேன் என்பது அரண்மனைக் காவலர்கள் எல்லோருக்கும், மற்றவர்களுக்கும்கூட நன்கு தெளிவாகியிருக்கிறது. நான் விலங்கிடப்பட்டிருப்பதால், கர்த்தரில் இருக்கிற சகோதரர்களில் அநேகர், பயமின்றியும் தைரியத்துடனும் நற்செய்தியைப் பேசுவதற்கு உற்சாகம் கொண்டிருக்கிறார்கள்.
பிலிப்பியர் 1:9-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்களுடைய அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாகப் பெருகவும், தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி, நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று நேர்மையானவர்களும், குற்றம் இல்லாதவர்களுமாக இருக்கவும் வேண்டுதல் செய்கிறேன். சகோதரர்களே, எனக்கு சம்பவித்தவைகள் நற்செய்தி பரவுவதற்கு ஏதுவானது என்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன். அரண்மனையில் உள்ளவர்களுக்கும் மற்ற எல்லோருக்கும் என் கட்டுகள் கிறிஸ்துவிற்குள்ளான கட்டுகள் என்று தெரிந்து, சகோதரர்களில் அநேகர் என் கட்டுகளாலே கர்த்தருக்குள் தைரியம்கொண்டு பயம் இல்லாமல் திருவசனத்தைச் சொல்லும்படி அதிகமாகத் துணிந்திருக்கிறார்கள்.
பிலிப்பியர் 1:9-14 பரிசுத்த பைபிள் (TAERV)
உங்களுக்காக என்னுடைய பிரார்த்தனை இதுவே: உங்கள் அன்பு மேலும், மேலும் வளர்வதாக. உங்களுக்கு அறிவும், அன்போடு கூட புரிந்துகொள்ளுதலும் உண்டாவதாக. பிறகு நன்மைக்கும் தீமைக்கும் உள்ள வேறுபாட்டை உங்களால் கண்டுகொண்டு, நன்மையை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொள்ளவும் கிறிஸ்து வரும்போது நீங்கள் தூய்மையடையவும், தவறு இல்லாதவர்களாக இருக்கவும், இயேசு கிறிஸ்துவின் உதவியுடன், அவர் மூலம் நீங்கள் பல நற்செயல்களைச் செய்து தேவனுக்கு மகிமையையும் பாராட்டுகளையும் சேர்க்க வேண்டும். சகோதர சகோதரிகளே! எனக்கு ஏற்பட்ட அந்தத் துன்பங்கள் எல்லாம் நற்செய்தியைப் பரப்புகிற பணிக்கே உதவியது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன். சிறைக்குள் நான் ஏன் இருக்கிறேன் என்பது தெளிவாகிறது. ஏனென்றால் நான் கிறிஸ்துவின் நம்பிக்கையாளன். காவலர்களுக்கும் மற்ற மக்களுக்கும் இது தெரியும். இன்னும் நான் சிறைப்பட்டிருக்கிறேன். அது நன்மைக்குத்தான் என்று பல விசுவாசிகள் இப்போது எண்ணுகின்றனர். எனவே கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அச்சமில்லாமல் பரப்புவதில் மேலும் தைரியம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
பிலிப்பியர் 1:9-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்கள் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகவும், தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி, நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்கவும் வேண்டுதல் செய்கிறேன். சகோதரரே, எனக்குச் சம்பவித்தவைகள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்றென்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன். அரமனையெங்குமுள்ளவர்களுக்கும் மற்ற யாவருக்கும் என் கட்டுகள் கிறிஸ்துவுக்குள்ளான கட்டுகளென்று வெளியரங்கமாகி, சகோதரரில் அநேகர் என் கட்டுகளாலே கர்த்தருக்குள் திடன்கொண்டு பயமில்லாமல் திருவசனத்தைச் சொல்லும்படி அதிகமாய்த் துணிந்திருக்கிறார்கள்.