பிலிப்பியர் 1:21-30

பிலிப்பியர் 1:21-30 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம். ஆகிலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் கிரியைக்குப் பலனுண்டாயிருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது இன்னதென்று அறியேன். ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன்; தேகத்தைவிட்டுப்பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்; அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம். இந்த நிச்சயத்தைக்கொண்டிருந்து, நான் மறுபடியும் உங்களிடத்தில் வருகிறதினால் என்னைக்குறித்து உங்களுடைய மகிழ்ச்சி கிறிஸ்து இயேசுவுக்குள் பெருகும்படிக்கு, உங்கள் விசுவாசத்தின் வர்த்தனைக்காகவும் சந்தோஷத்துக்காகவும் நான் பிழைத்து, உங்கள் அனைவரோடுங்கூட இருப்பேனென்று அறிந்திருக்கிறேன். நான் வந்து உங்களைக் கண்டாலும், நான் வராமலிருந்தாலும், நீங்கள் ஒரே ஆவியிலே உறுதியாய் நின்று, ஒரே ஆத்துமாவினாலே சுவிசேஷத்தின் விசுவாசத்திற்காகக் கூடப்போராடி, எதிர்க்கிறவர்களால் ஒன்றிலும் மருளாதிருக்கிறீர்களென்று உங்களைக்குறித்து நான் கேள்விப்படும்படி, எவ்விதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குப் பாத்திரராகமாத்திரம் நடந்துகொள்ளுங்கள். நீங்கள் மருளாதிருக்கிறது அவர்கள் கெட்டுப்போகிறதற்கும், நீங்கள் இரட்சிக்கப்படுகிறதற்கும் அத்தாட்சியாயிருக்கிறது; இதுவும் தேவனுடைய செயலே. ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர்நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. நீங்கள் என்னிடத்திலே கண்டதும் எனக்கு உண்டென்று இப்பொழுது கேள்விப்படுகிறதுமான போராட்டமே உங்களுக்கும் உண்டு.

பிலிப்பியர் 1:21-30 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஏனெனில், நான் வாழ்வேன் என்றால் அது கிறிஸ்துவுக்காகவேயாகும். சாவது என்றால் அதுவும் எனக்கு இலாபமே. இந்த உடலில் நான் இன்னும் உயிர் வாழ்ந்துகொண்டிருந்தால், அது கிறிஸ்துவுக்குள் பலனுள்ள வேலையாகும். இப்படியிருந்தும் நான் எதைத் தெரிந்துகொள்வேன்? அது எனக்குத் தெரியாது. இந்த இரண்டுக்குமிடையே நான் சிக்குண்டிருக்கிறேன்: நான் இந்த உடலை விட்டுப்பிரிந்து கிறிஸ்துவுடன் இருக்கவே விரும்புகிறேன். இதுவே மிகச் சிறந்தது; ஆனால் நான் இந்த உடலில் இருப்பது, அதையும்விட உங்களுக்கு மிகவும் அவசியமாயிருக்கிறது. இதை நான் நம்புகிறபடியால், உங்களுடன் நான் இருப்பேன் என்றும், நீங்கள் உங்கள் விசுவாசத்தின் வளர்ச்சிக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் தொடர்ந்து உழைப்பேன் என்றும் நான் அறிவேன். எனவே நான் மீண்டும் உங்களிடம் வருவதானால், என் நிமித்தம் கிறிஸ்து இயேசுவில் உங்களுக்கு இருக்கும் மகிழ்ச்சி உங்களில் நிரம்பிவழியும். என்னதான் நடந்தாலும், கிறிஸ்துவின் நற்செய்திக்கு ஏற்றவிதத்தில் நீங்கள் நடந்துகொள்ளுங்கள். அப்பொழுது நான் வந்து உங்களைப் பார்க்கக்கூடியதாய் இருந்தாலும், வரமுடியாதிருந்து உங்களைப்பற்றிக் கேள்விப்பட்டாலும், நீங்கள் நற்செய்தியின் விசுவாசத்திற்காகக் கூடப்போராடி ஒரே மனதுடன் ஒன்றாக நிலைத்து நிற்கிறீர்கள் என்றும், உங்களை எதிர்க்கிறவர்களுக்கு எவ்வழியிலும் பயப்படாமல் இருக்கிறீர்கள் என்றும் நான் அறியவேண்டும். நீங்கள் பயப்படாமல் இருக்கிறது அவர்கள் அழிந்துபோவதற்கும் நீங்கள் இரட்சிக்கப்படுவதற்கும் ஒரு அடையாளமாக இருக்கும். இது இறைவனின் செயலாகும். ஏனெனில் கிறிஸ்துவுக்காக அவரில் விசுவாசமாய் இருப்பதற்காக மட்டுமல்ல, அவருக்காகத் துன்பப்படுவதற்காகவும் உங்களுக்கு ஒரு நன்கொடையாக கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் எனக்கு ஏற்பட்ட, போராட்டத்தைக் கண்டீர்கள். அதே போராட்டம் உங்களுக்கும் ஏற்படுகிறது. அது எனக்கு இன்னும் உண்டு என்பதையும் இப்பொழுது கேள்விப்படுகிறீர்கள்.

பிலிப்பியர் 1:21-30 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

கிறிஸ்து எனக்கு ஜீவன், மரணம் எனக்கு ஆதாயம். ஆனாலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் செய்கைக்குப் பலன் கிடைத்திருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்று தெரியாது. ஏனென்றால், இந்த இரண்டிற்கும் இடையே நான் நெருக்கப்படுகிறேன்; சரீரத்தைவிட்டுப் பிரிந்து, கிறிஸ்துவோடு இருக்க எனக்கு ஆசை உண்டு, அது அதிக நன்மையாக இருக்கும்; அப்படியிருந்தும், நான் சரீரத்தில் வாழ்ந்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம். இந்த நிச்சயத்தைக்கொண்டிருந்து, நான் மீண்டும் உங்களிடம் வருகிறதினால் என்னைக்குறித்து உங்களுடைய மகிழ்ச்சி கிறிஸ்து இயேசுவிற்குள் பெருகுவதற்காக, உங்களுடைய விசுவாசத்தின் வளர்ச்சிக்காகவும் சந்தோஷத்திற்காகவும் நான் பிழைத்து, உங்கள் அனைவரோடும் இருப்பேன் என்று அறிந்திருக்கிறேன். நான் வந்து உங்களைப் பார்த்தாலும், நான் வராமலிருந்தாலும், நீங்கள் ஒரே ஆவியிலே உறுதியாக நின்று, ஒரே ஆத்துமாவினாலே நற்செய்தியின் விசுவாசத்திற்காகப் போராடி, எதிர்க்கிறவர்களால் ஒன்றுக்கும் பயப்படாமல் இருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நான் கேள்விப்படும்படி, எந்தவிதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் நற்செய்திற்குத் தகுதியானவர்களாக நடந்துகொள்ளுங்கள். நீங்கள் பயப்படாமலிருக்கிறது அவர்கள் கெட்டுப்போகிறதற்கும், நீங்கள் இரட்சிக்கப்படுகிறதற்கும் அடையாளமாக இருக்கிறது; இதுவும் தேவனுடைய செயலே. ஏனென்றால், கிறிஸ்துவை விசுவாசிக்கிறதற்குமட்டும் இல்லை, அவருக்காகப் பாடுகள்படுகிறதற்கும் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் என்னிடம் பார்த்ததும் எனக்கு உண்டென்று இப்பொழுது கேள்விப்படுகிறதுமான போராட்டமே உங்களுக்கும் உண்டு.

பிலிப்பியர் 1:21-30 பரிசுத்த பைபிள் (TAERV)

கிறிஸ்துவை என் வாழ்வின் ஜீவனாக நம்புகிறேன். இதனால் நான் இறந்து போனாலும் எனக்கு லாபம்தான். இந்த சரீரத்தில் நான் தொடர்ந்து வாழ்ந்தால் கர்த்தருக்குத் தொண்டு செய்ய என்னால் முடியும். ஆனால் வாழ்வு, சாவு என்பவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பது? எனக்குத் தெரியவில்லை. வாழ்வு, சாவு இரண்டிலொன்றைத் தேர்ந்தெடுப்பது கடினமானது. இந்த வாழ்க்கையை விட்டுவிட்டு நான் கிறிஸ்துவோடு வாழ விரும்புகிறேன். அது சிறந்தது. ஆனால் நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு மிக அவசியம். உங்களுக்கு நான் தேவையானவன் என்பதை அறிவேன். அதனால் உங்களோடு இருக்க நான் விரும்புகிறேன். உங்கள் நம்பிக்கையில் நீங்கள் மகிழ்ச்சியுடன் வளரவும் நான் உதவுவேன். மீண்டும் உங்களோடு நான் இருக்கும்போது நீங்கள் கிறிஸ்துவாகிய இயேசுவுக்குள் மிகவும் மகிழ்ச்சியாய் இருப்பீர்கள். நற்செய்திக்குப் பொருந்துகிற வாழ்வை வாழ்வது பற்றி உறுதி செய்துகொள்ளுங்கள். பிறகு உங்களைப் பார்வையிட நான் வந்தாலோஅல்லது உங்களை விட்டு நான் தூரம் போனாலோ உங்களைப் பற்றி நான் நல்ல செய்திகளையே கேள்விப்படுவேன். நற்செய்தியிலிருந்து வரும் நம்பிக்கைக்காக நீங்கள் தொடர்ந்து பலத்தோடு பொது நோக்கத்துக்காக ஒன்று சேர்ந்து குழுவாகப் பணியாற்றுகிறீர்கள் என்று நான் கேள்விப்படுவேன். உங்களுக்கு எதிரான மக்களைப் பற்றி நீங்கள் அச்சப்பட வேண்டாம். உங்கள் பகைவர்கள் இழப்புக்குள்ளாவர். நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள். இச்சான்றுகள் தேவனிடமிருந்து வந்தன. ஏனென்றால் கிறிஸ்துவினிடத்தில் நம்பிக்கை செலுத்துவதற்கு மாத்திரமல்ல, அவர் நிமித்தமாகப் பாடுபடுவதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. நான் உங்களோடு இருந்தபோது நற்செய்திக்கு எதிராக இருந்த மக்களுடன் நான் எதிர்கொள்ள நேர்ந்த போராட்டங்களை நீங்கள் பார்த்தீர்கள். இப்போது நான் எதிர்கொண்டுவரும் போராட்டங்களைப் பற்றியும் நீங்கள் கேள்விப்படுகிறீர்கள். நீங்களும் இது போன்ற போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்