பிலிப்பியர் 1:15-23
பிலிப்பியர் 1:15-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
சிலர் பொறாமையினாலும், போட்டி மனப்பான்மையினாலும், கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள் என்பது உண்மையே. ஆனால் மற்றவர்களோ நல்ல எண்ணத்துடனேயே அதைச் செய்கிறார்கள். இவர்கள் அன்புடனே இதைச் செய்கிறார்கள். நான் இங்கே சிறையில் போடப்பட்டிருப்பது, நற்செய்தியின் சார்பாகப் பேசியதற்காகவே என்பதை இவர்கள் அறிந்திருக்கிறார்கள். மற்றவர்களோ உண்மை மனதுடன் அல்லாமல், தன்னல நோக்கத்துடனேயே கிறிஸ்துவை பிரசங்கிக்கிறார்கள். நான் விலங்கிடப்பட்டிருக்கையில், எனக்கு இன்னும் கஷ்டத்தை உண்டாக்கலாம் என்ற எண்ணத்துடனே அவர்கள் இப்படிச் செய்கிறார்கள். ஆனால் நோக்கம் எதுவாயிருந்தால் என்ன? தவறான நோக்கத்துடனோ, உண்மையான நோக்கத்துடனோ, எல்லா வழிகளிலும் கிறிஸ்து பிரசங்கிக்கப்படுகிறார் என்பதே முக்கியம். இதனால் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஆம், நான் இனிமேலும் மகிழ்ச்சியடைவேன். ஏனெனில் உங்கள் மன்றாட்டினாலும், இயேசுகிறிஸ்துவின் ஆவியானவர் கொடுக்கும் உதவியினாலும், எனக்கு நடந்தவைகள் என் விடுதலைக்கே ஏதுவாகும் என்று அறிவேன். நான் எவ்வகையிலும் வெட்கப்படக்கூடாது என்பதும், வாழ்வதாலோ இறப்பதாலோ, இப்பொழுதுபோலவே எப்பொழுதும் கிறிஸ்து என் உடலில் மேன்மைப்படுவதற்கு போதிய அளவு தைரியம் இருக்கவேண்டும் என்பதும், எனது ஆவலும் எதிர்பார்ப்புமாகும். ஏனெனில், நான் வாழ்வேன் என்றால் அது கிறிஸ்துவுக்காகவேயாகும். சாவது என்றால் அதுவும் எனக்கு இலாபமே. இந்த உடலில் நான் இன்னும் உயிர் வாழ்ந்துகொண்டிருந்தால், அது கிறிஸ்துவுக்குள் பலனுள்ள வேலையாகும். இப்படியிருந்தும் நான் எதைத் தெரிந்துகொள்வேன்? அது எனக்குத் தெரியாது. இந்த இரண்டுக்குமிடையே நான் சிக்குண்டிருக்கிறேன்: நான் இந்த உடலை விட்டுப்பிரிந்து கிறிஸ்துவுடன் இருக்கவே விரும்புகிறேன். இதுவே மிகச் சிறந்தது
பிலிப்பியர் 1:15-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும், சிலர் நல்ல மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள். சிலர் என் கட்டுகளோடு உபத்திரவத்தையும் சேர்க்க நினைத்து, சுத்த மனதோடு கிறிஸ்துவை அறிவிக்காமல், விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள். நற்செய்திக்காக நான் உத்தரவுசொல்ல நியமிக்கப்பட்டவன் என்று அறிந்து, சிலர் அன்பினாலே அறிவிக்கிறார்கள். இதனால் என்ன? ஏமாற்றுவதினாலோ, உண்மையினாலோ, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்; அதனால் சந்தோஷப்படுகிறேன், இனிமேலும் சந்தோஷப்படுவேன். அது உங்களுடைய வேண்டுதலினாலும் இயேசுகிறிஸ்துவினுடைய ஆவியின் உதவியினாலும் எனக்கு இரட்சிப்பாக முடியும் என்று அறிவேன். நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடு ஜீவனாலாவது, மரணத்தினாலாவது, கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவார் என்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தகுந்ததாக அப்படி முடியும். கிறிஸ்து எனக்கு ஜீவன், மரணம் எனக்கு ஆதாயம். ஆனாலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் செய்கைக்குப் பலன் கிடைத்திருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்று தெரியாது. ஏனென்றால், இந்த இரண்டிற்கும் இடையே நான் நெருக்கப்படுகிறேன்; சரீரத்தைவிட்டுப் பிரிந்து, கிறிஸ்துவோடு இருக்க எனக்கு ஆசை உண்டு, அது அதிக நன்மையாக இருக்கும்
பிலிப்பியர் 1:15-23 பரிசுத்த பைபிள் (TAERV)
கிறிஸ்துவைப் பற்றிச் சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள், என்றாலும் அவர்கள் பொறாமையும், கசப்புணர்வும் கொண்டவர்களாக உள்ளார்கள். இன்னும் சிலர் உதவி செய்யும் விருப்பத்தோடு கிறிஸ்துவைப் பற்றி பிரச்சாரம் செய்கிறார்கள். இவர்கள், அன்பினால் கிறிஸ்துவைப்பற்றி பிரச்சாரம் செய்கின்றனர். தேவன் எனக்கு இந்தப் பணியை நற்செய்தியைப் பாதுகாப்பதற்காகத் தந்துள்ளார் என்பதை இவர்கள் அறிவர். மற்றவர்களோ தன்னலம் காரணமாக கிறிஸ்துவைப் பற்றி பிரச்சாரம் செய்கின்றனர். அவர்களின் பிரச்சார நோக்கம் தவறானது. சிறைக்குள் எனக்குத் தொல்லைகளை உருவாக்க அவர்கள் விரும்புகின்றனர். அவர்கள் எனக்குத் தொல்லை கொடுத்தால் அதைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. மக்களிடம் அவர்கள் இயேசுவைப் பற்றிக் கூறுகிறார்கள் என்பதுதான் முக்கியமான விஷயம். நானும் இயேசுவைப் பற்றி அவர்கள் மக்களிடம் சொல்ல வேண்டும் என்றே விரும்புகிறேன். அவர்கள் அதைச் சரியான நோக்கத்தோடு செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் தவறான நோக்கத்தோடு போலியாகப் பிரச்சாரம் செய்தாலும் கூட நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால் அவர்கள் கிறிஸ்துவைப் பற்றிப் பேசுகிறார்கள். இதனால் தொடர்ந்து நான் மகிழ்ச்சியடைவேன். எனக்காக நீங்கள் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறீர்கள். இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த ஆவியானவர் எனக்கு உதவுகிறார். ஆகையால் இந்தத் துன்பங்கள் எனக்கு விடுதலையைத் தரும் என்று எனக்குத் தெரியும். எதிலும் நான் கிறிஸ்துவிடம் தவறமாட்டேன். இதுவே நான் விரும்புவதும், நம்புவதும் கூட. இந்த உலகத்தில் என் வாழ்வில் நான் இயேசுவின் உயர்வைக் காட்ட வேண்டும். அதனை வெளிப்படுத்தும் தைரியத்தை எப்போதும் போல இப்போதும் பெறுவேன் என்று நான் நம்புகிறேன். நான் வாழ்ந்தாலும் சரி, மரித்தாலும் சரி, இதைச் செய்ய விரும்புகிறேன். கிறிஸ்துவை என் வாழ்வின் ஜீவனாக நம்புகிறேன். இதனால் நான் இறந்து போனாலும் எனக்கு லாபம்தான். இந்த சரீரத்தில் நான் தொடர்ந்து வாழ்ந்தால் கர்த்தருக்குத் தொண்டு செய்ய என்னால் முடியும். ஆனால் வாழ்வு, சாவு என்பவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பது? எனக்குத் தெரியவில்லை. வாழ்வு, சாவு இரண்டிலொன்றைத் தேர்ந்தெடுப்பது கடினமானது. இந்த வாழ்க்கையை விட்டுவிட்டு நான் கிறிஸ்துவோடு வாழ விரும்புகிறேன். அது சிறந்தது.
பிலிப்பியர் 1:15-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும், சிலர் நல்மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள். சிலர் என் கட்டுகளோடே உபத்திரவத்தையுங்கூட்ட நினைத்து, சுத்தமனதோடே கிறிஸ்துவை அறிவியாமல், விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள். சுவிசேஷத்திற்காக நான் உத்தரவு சொல்ல ஏற்படுத்தப்பட்டவனென்று அறிந்து, சிலர் அன்பினாலே அறிவிக்கிறார்கள். இதனாலென்ன? வஞ்சகத்தினாலாவது, உண்மையினாலாவது, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்; அதனால் சந்தோஷப்படுகிறேன், இன்னமும் சந்தோஷப்படுவேன். அது உங்கள் வேண்டுதலினாலும் இயேசுகிறிஸ்துவினுடைய ஆவியின் உதவியினாலும் எனக்கு இரட்சிப்பாக முடியுமென்று அறிவேன். நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும். கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம். ஆகிலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் கிரியைக்குப் பலனுண்டாயிருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது இன்னதென்று அறியேன். ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன்; தேகத்தைவிட்டுப்பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்