பிலிப்பியர் 1:1-30

பிலிப்பியர் 1:1-30 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

கிறிஸ்து இயேசுவின் ஊழியர்களான பவுலும், தீமோத்தேயுவும், பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவில் இருக்கும் எல்லாப் பரிசுத்தவான்களுக்கும், அவர்களோடுகூட திருச்சபைத் தலைவர்களுக்கும், உதவி ஊழியர்களுக்கும் எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய இறைவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. நான் உங்களை நினைக்கும் போதெல்லாம், என் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். உங்கள் எல்லோருக்காகவும் நான் மன்றாடும் பொழுதெல்லாம், எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் மன்றாடுகிறேன். ஏனெனில் நான் அங்கே வந்த முதல் நாளிலிருந்து இன்றுவரை, நற்செய்திப் பணியில் நீங்கள் என்னோடு பங்காளர்களாய் இருக்கிறீர்கள். இப்படிப்பட்ட நல்ல செயலை உங்களில் தொடங்கிய இறைவன், அதைக் கிறிஸ்து இயேசுவின் நாள்வரை நடத்தி முடிப்பார் என்று நான் நிச்சயமுடையவனாய் இருக்கிறேன். உங்கள் எல்லோரையும்பற்றி, இவ்வாறு நான் நினைப்பது சரியானதே. ஏனெனில் எப்பொழுதும் என் இருதயத்தில் நீங்கள் இடங்கொண்டிருக்கிறீர்கள்; நான் சிறையில் இருக்கிறபோதும், நற்செய்தியின் சார்பாகப் பேசி, அதை உறுதிசெய்கிற போதும், நீங்களும் எல்லோரும் இறைவன் எனக்குக் கொடுத்திருக்கிற கிருபையில், என்னுடன் பங்குடையவர்களாய் இருக்கிறீர்கள். கிறிஸ்து இயேசு கொண்டிருந்த உருக்கமான அன்போடு, உங்களெல்லோரையும் நான் காண விரும்புகிறேன் என்பதற்கு, இறைவனே சாட்சியாயிருக்கிறார். என் மன்றாடல் இதுவே: உங்கள் அன்பு மென்மேலும் அறிவாற்றலிலும், ஆழமான நுண்ணறிவிலும் பெருகி வளரவேண்டும். அப்பொழுது மிகச் சிறந்தது எது என்று நிதானித்தறிய உங்களால் முடியும். கிறிஸ்து மீண்டும் வரும் நாள்வரைக்கும் தூய்மையுள்ளவர்களாகவும், குற்றம் காணப்படாதவர்களாகவும், இயேசுகிறிஸ்துவின் மூலமாக வரும் நீதியின் கனிகளில், நிறைவுள்ளவர்களாகவும் நீங்கள் இருப்பீர்கள். அது இறைவனுக்கு மகிமையையும், துதியையும் ஏற்படுத்தும். பிரியமானவர்களே, எனக்கு நடந்தவைகள் உண்மையிலே நற்செய்தியைப் பரப்புவதற்கு உதவியாக இருந்தது என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனெனில் நான் கிறிஸ்துவுக்காகவே சிறையில் விலங்கிடப்பட்டிருக்கிறேன் என்பது அரண்மனைக் காவலர்கள் எல்லோருக்கும், மற்றவர்களுக்கும்கூட நன்கு தெளிவாகியிருக்கிறது. நான் விலங்கிடப்பட்டிருப்பதால், கர்த்தரில் இருக்கிற சகோதரர்களில் அநேகர், பயமின்றியும் தைரியத்துடனும் நற்செய்தியைப் பேசுவதற்கு உற்சாகம் கொண்டிருக்கிறார்கள். சிலர் பொறாமையினாலும், போட்டி மனப்பான்மையினாலும், கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள் என்பது உண்மையே. ஆனால் மற்றவர்களோ நல்ல எண்ணத்துடனேயே அதைச் செய்கிறார்கள். இவர்கள் அன்புடனே இதைச் செய்கிறார்கள். நான் இங்கே சிறையில் போடப்பட்டிருப்பது, நற்செய்தியின் சார்பாகப் பேசியதற்காகவே என்பதை இவர்கள் அறிந்திருக்கிறார்கள். மற்றவர்களோ உண்மை மனதுடன் அல்லாமல், தன்னல நோக்கத்துடனேயே கிறிஸ்துவை பிரசங்கிக்கிறார்கள். நான் விலங்கிடப்பட்டிருக்கையில், எனக்கு இன்னும் கஷ்டத்தை உண்டாக்கலாம் என்ற எண்ணத்துடனே அவர்கள் இப்படிச் செய்கிறார்கள். ஆனால் நோக்கம் எதுவாயிருந்தால் என்ன? தவறான நோக்கத்துடனோ, உண்மையான நோக்கத்துடனோ, எல்லா வழிகளிலும் கிறிஸ்து பிரசங்கிக்கப்படுகிறார் என்பதே முக்கியம். இதனால் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஆம், நான் இனிமேலும் மகிழ்ச்சியடைவேன். ஏனெனில் உங்கள் மன்றாட்டினாலும், இயேசுகிறிஸ்துவின் ஆவியானவர் கொடுக்கும் உதவியினாலும், எனக்கு நடந்தவைகள் என் விடுதலைக்கே ஏதுவாகும் என்று அறிவேன். நான் எவ்வகையிலும் வெட்கப்படக்கூடாது என்பதும், வாழ்வதாலோ இறப்பதாலோ, இப்பொழுதுபோலவே எப்பொழுதும் கிறிஸ்து என் உடலில் மேன்மைப்படுவதற்கு போதிய அளவு தைரியம் இருக்கவேண்டும் என்பதும், எனது ஆவலும் எதிர்பார்ப்புமாகும். ஏனெனில், நான் வாழ்வேன் என்றால் அது கிறிஸ்துவுக்காகவேயாகும். சாவது என்றால் அதுவும் எனக்கு இலாபமே. இந்த உடலில் நான் இன்னும் உயிர் வாழ்ந்துகொண்டிருந்தால், அது கிறிஸ்துவுக்குள் பலனுள்ள வேலையாகும். இப்படியிருந்தும் நான் எதைத் தெரிந்துகொள்வேன்? அது எனக்குத் தெரியாது. இந்த இரண்டுக்குமிடையே நான் சிக்குண்டிருக்கிறேன்: நான் இந்த உடலை விட்டுப்பிரிந்து கிறிஸ்துவுடன் இருக்கவே விரும்புகிறேன். இதுவே மிகச் சிறந்தது; ஆனால் நான் இந்த உடலில் இருப்பது, அதையும்விட உங்களுக்கு மிகவும் அவசியமாயிருக்கிறது. இதை நான் நம்புகிறபடியால், உங்களுடன் நான் இருப்பேன் என்றும், நீங்கள் உங்கள் விசுவாசத்தின் வளர்ச்சிக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் தொடர்ந்து உழைப்பேன் என்றும் நான் அறிவேன். எனவே நான் மீண்டும் உங்களிடம் வருவதானால், என் நிமித்தம் கிறிஸ்து இயேசுவில் உங்களுக்கு இருக்கும் மகிழ்ச்சி உங்களில் நிரம்பிவழியும். என்னதான் நடந்தாலும், கிறிஸ்துவின் நற்செய்திக்கு ஏற்றவிதத்தில் நீங்கள் நடந்துகொள்ளுங்கள். அப்பொழுது நான் வந்து உங்களைப் பார்க்கக்கூடியதாய் இருந்தாலும், வரமுடியாதிருந்து உங்களைப்பற்றிக் கேள்விப்பட்டாலும், நீங்கள் நற்செய்தியின் விசுவாசத்திற்காகக் கூடப்போராடி ஒரே மனதுடன் ஒன்றாக நிலைத்து நிற்கிறீர்கள் என்றும், உங்களை எதிர்க்கிறவர்களுக்கு எவ்வழியிலும் பயப்படாமல் இருக்கிறீர்கள் என்றும் நான் அறியவேண்டும். நீங்கள் பயப்படாமல் இருக்கிறது அவர்கள் அழிந்துபோவதற்கும் நீங்கள் இரட்சிக்கப்படுவதற்கும் ஒரு அடையாளமாக இருக்கும். இது இறைவனின் செயலாகும். ஏனெனில் கிறிஸ்துவுக்காக அவரில் விசுவாசமாய் இருப்பதற்காக மட்டுமல்ல, அவருக்காகத் துன்பப்படுவதற்காகவும் உங்களுக்கு ஒரு நன்கொடையாக கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் எனக்கு ஏற்பட்ட, போராட்டத்தைக் கண்டீர்கள். அதே போராட்டம் உங்களுக்கும் ஏற்படுகிறது. அது எனக்கு இன்னும் உண்டு என்பதையும் இப்பொழுது கேள்விப்படுகிறீர்கள்.

பிலிப்பியர் 1:1-30 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரர்களாகிய பவுலும், தீமோத்தேயும், பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவிற்குள்ளான பரிசுத்தவான்கள் அனைவருக்கும், கண்காணிகளுக்கும், உதவிக்காரர்களுக்கும் எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. நற்செய்தி உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நாள்முதல் இதுவரைக்கும் நீங்கள் எங்களோடு ஊழியத்தில் ஐக்கியப்பட்டிருப்பதால், நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்பொழுதும் சந்தோஷத்தோடு ஜெபம்பண்ணி, உங்களில் நல்லசெயல்களைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்வரை நடத்திவருவார் என்று நம்பி, நான் உங்களை நினைக்கும்போதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். என் சிறைச்சாலையின் கட்டுகளிலும், நான் நற்செய்தியைப் போதித்து அதைத் உறுதிப்படுத்திவருகிறதிலும், நீங்கள் அனைவரும் எனக்கு அளிக்கப்பட்ட கிருபையில் பங்குள்ளவர்களானதால், உங்களை என் இருதயத்தில் வைத்துக்கொண்டிருக்கிறபடியினாலே, உங்கள் எல்லோரையும்குறித்து நான் இப்படி நினைக்கிறது எனக்குத் தகுதியாக இருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் உருக்கமான அன்பினாலே உங்களெல்லோரையும் காண எவ்வளவோ ஆவலாக இருக்கிறேன் என்பதற்கு தேவனே எனக்குச் சாட்சி. மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்களுடைய அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாகப் பெருகவும், தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி, நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று நேர்மையானவர்களும், குற்றம் இல்லாதவர்களுமாக இருக்கவும் வேண்டுதல் செய்கிறேன். சகோதரர்களே, எனக்கு சம்பவித்தவைகள் நற்செய்தி பரவுவதற்கு ஏதுவானது என்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன். அரண்மனையில் உள்ளவர்களுக்கும் மற்ற எல்லோருக்கும் என் கட்டுகள் கிறிஸ்துவிற்குள்ளான கட்டுகள் என்று தெரிந்து, சகோதரர்களில் அநேகர் என் கட்டுகளாலே கர்த்தருக்குள் தைரியம்கொண்டு பயம் இல்லாமல் திருவசனத்தைச் சொல்லும்படி அதிகமாகத் துணிந்திருக்கிறார்கள். சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும், சிலர் நல்ல மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள். சிலர் என் கட்டுகளோடு உபத்திரவத்தையும் சேர்க்க நினைத்து, சுத்த மனதோடு கிறிஸ்துவை அறிவிக்காமல், விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள். நற்செய்திக்காக நான் உத்தரவுசொல்ல நியமிக்கப்பட்டவன் என்று அறிந்து, சிலர் அன்பினாலே அறிவிக்கிறார்கள். இதனால் என்ன? ஏமாற்றுவதினாலோ, உண்மையினாலோ, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்; அதனால் சந்தோஷப்படுகிறேன், இனிமேலும் சந்தோஷப்படுவேன். அது உங்களுடைய வேண்டுதலினாலும் இயேசுகிறிஸ்துவினுடைய ஆவியின் உதவியினாலும் எனக்கு இரட்சிப்பாக முடியும் என்று அறிவேன். நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடு ஜீவனாலாவது, மரணத்தினாலாவது, கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவார் என்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தகுந்ததாக அப்படி முடியும். கிறிஸ்து எனக்கு ஜீவன், மரணம் எனக்கு ஆதாயம். ஆனாலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் செய்கைக்குப் பலன் கிடைத்திருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்று தெரியாது. ஏனென்றால், இந்த இரண்டிற்கும் இடையே நான் நெருக்கப்படுகிறேன்; சரீரத்தைவிட்டுப் பிரிந்து, கிறிஸ்துவோடு இருக்க எனக்கு ஆசை உண்டு, அது அதிக நன்மையாக இருக்கும்; அப்படியிருந்தும், நான் சரீரத்தில் வாழ்ந்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம். இந்த நிச்சயத்தைக்கொண்டிருந்து, நான் மீண்டும் உங்களிடம் வருகிறதினால் என்னைக்குறித்து உங்களுடைய மகிழ்ச்சி கிறிஸ்து இயேசுவிற்குள் பெருகுவதற்காக, உங்களுடைய விசுவாசத்தின் வளர்ச்சிக்காகவும் சந்தோஷத்திற்காகவும் நான் பிழைத்து, உங்கள் அனைவரோடும் இருப்பேன் என்று அறிந்திருக்கிறேன். நான் வந்து உங்களைப் பார்த்தாலும், நான் வராமலிருந்தாலும், நீங்கள் ஒரே ஆவியிலே உறுதியாக நின்று, ஒரே ஆத்துமாவினாலே நற்செய்தியின் விசுவாசத்திற்காகப் போராடி, எதிர்க்கிறவர்களால் ஒன்றுக்கும் பயப்படாமல் இருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நான் கேள்விப்படும்படி, எந்தவிதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் நற்செய்திற்குத் தகுதியானவர்களாக நடந்துகொள்ளுங்கள். நீங்கள் பயப்படாமலிருக்கிறது அவர்கள் கெட்டுப்போகிறதற்கும், நீங்கள் இரட்சிக்கப்படுகிறதற்கும் அடையாளமாக இருக்கிறது; இதுவும் தேவனுடைய செயலே. ஏனென்றால், கிறிஸ்துவை விசுவாசிக்கிறதற்குமட்டும் இல்லை, அவருக்காகப் பாடுகள்படுகிறதற்கும் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் என்னிடம் பார்த்ததும் எனக்கு உண்டென்று இப்பொழுது கேள்விப்படுகிறதுமான போராட்டமே உங்களுக்கும் உண்டு.

பிலிப்பியர் 1:1-30 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசு கிறிஸ்துவின் ஊழியர்களாகிய பவுலும் தீமோத்தேயுவும் பிலிப்பி நகரத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள் வாழ்கிற தேவனுடைய பரிசுத்த மக்களுக்கும் உங்கள் கண்காணிப்பாளர்களுக்கும், விசேஷ உதவியாளர்களுக்கும், உங்கள் மூப்பர்களுக்கும் சிறப்பு உதவியாளர்களுக்கும் எழுதுவது. நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் கிருபையும், சமாதானமும் உங்களுக்கு உண்டாவதாக. எப்போதும் உங்களை நினைத்துக்கொண்டு நான் தேவனுக்கு நன்றி சொல்கிறேன். உங்கள் அனைவருக்காக எப்போதும் மகிழ்ச்சியோடு நான் பிரார்த்தனை செய்கிறேன். மக்களிடம் நான் நற்செய்தியைக் கூறும்போது அதற்கு உதவி செய்த உங்கள் அனைவருக்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். நீங்கள் சுவிசேஷத்தை நம்பிய நாள் முதல் நீங்கள் நற்கிரியைகளில் பங்கேற்று எனக்கு உதவியுள்ளீர்கள். உங்களில் தேவன் நற்செயல்களைச் செய்யத் தொடங்கினார். அவர் இதை உங்களில் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார். இயேசு கிறிஸ்து மீண்டும் வரும்போது தேவன் தன் வேலையை உங்கள் மூலம் செய்து முடிப்பார். அதைப் பற்றி நான் உறுதியாய் இருக்கிறேன். உங்கள் அனைவரையும் குறித்து இவ்வாறு நான் நினைப்பது சரியென்று எண்ணுகிறேன். இதில் நான் உறுதியாகவும் உள்ளேன். ஏனென்றால் உங்களை என் இதயத்தில் வைத்திருக்கிறேன். நான் உங்களை மிக நெருக்கமாக உணர்கிறேன். எனெனில் நீங்கள் அனைவரும் என்னோடு தேவனுடைய கிருபையைப் பகிர்ந்துகொள்கிறீர்கள். நான் சிறையில் இருக்கிறபோதும், நற்செய்திக்காக உத்தரவு சொல்லி அதைத் திடப்படுத்தி வருகிறதிலும், நீங்கள் தேவனுடைய கிருபையை என்னோடு பங்கிட்டுக்கொள்கிறீர்கள். உங்களைப் பார்க்க நான் மிகவும் விரும்புகிறேன் என்று தேவனுக்குத் தெரியும். கிறிஸ்து இயேசுவின் அன்புடன் உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன். உங்களுக்காக என்னுடைய பிரார்த்தனை இதுவே: உங்கள் அன்பு மேலும், மேலும் வளர்வதாக. உங்களுக்கு அறிவும், அன்போடு கூட புரிந்துகொள்ளுதலும் உண்டாவதாக. பிறகு நன்மைக்கும் தீமைக்கும் உள்ள வேறுபாட்டை உங்களால் கண்டுகொண்டு, நன்மையை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொள்ளவும் கிறிஸ்து வரும்போது நீங்கள் தூய்மையடையவும், தவறு இல்லாதவர்களாக இருக்கவும், இயேசு கிறிஸ்துவின் உதவியுடன், அவர் மூலம் நீங்கள் பல நற்செயல்களைச் செய்து தேவனுக்கு மகிமையையும் பாராட்டுகளையும் சேர்க்க வேண்டும். சகோதர சகோதரிகளே! எனக்கு ஏற்பட்ட அந்தத் துன்பங்கள் எல்லாம் நற்செய்தியைப் பரப்புகிற பணிக்கே உதவியது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன். சிறைக்குள் நான் ஏன் இருக்கிறேன் என்பது தெளிவாகிறது. ஏனென்றால் நான் கிறிஸ்துவின் நம்பிக்கையாளன். காவலர்களுக்கும் மற்ற மக்களுக்கும் இது தெரியும். இன்னும் நான் சிறைப்பட்டிருக்கிறேன். அது நன்மைக்குத்தான் என்று பல விசுவாசிகள் இப்போது எண்ணுகின்றனர். எனவே கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அச்சமில்லாமல் பரப்புவதில் மேலும் தைரியம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். கிறிஸ்துவைப் பற்றிச் சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள், என்றாலும் அவர்கள் பொறாமையும், கசப்புணர்வும் கொண்டவர்களாக உள்ளார்கள். இன்னும் சிலர் உதவி செய்யும் விருப்பத்தோடு கிறிஸ்துவைப் பற்றி பிரச்சாரம் செய்கிறார்கள். இவர்கள், அன்பினால் கிறிஸ்துவைப்பற்றி பிரச்சாரம் செய்கின்றனர். தேவன் எனக்கு இந்தப் பணியை நற்செய்தியைப் பாதுகாப்பதற்காகத் தந்துள்ளார் என்பதை இவர்கள் அறிவர். மற்றவர்களோ தன்னலம் காரணமாக கிறிஸ்துவைப் பற்றி பிரச்சாரம் செய்கின்றனர். அவர்களின் பிரச்சார நோக்கம் தவறானது. சிறைக்குள் எனக்குத் தொல்லைகளை உருவாக்க அவர்கள் விரும்புகின்றனர். அவர்கள் எனக்குத் தொல்லை கொடுத்தால் அதைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. மக்களிடம் அவர்கள் இயேசுவைப் பற்றிக் கூறுகிறார்கள் என்பதுதான் முக்கியமான விஷயம். நானும் இயேசுவைப் பற்றி அவர்கள் மக்களிடம் சொல்ல வேண்டும் என்றே விரும்புகிறேன். அவர்கள் அதைச் சரியான நோக்கத்தோடு செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் தவறான நோக்கத்தோடு போலியாகப் பிரச்சாரம் செய்தாலும் கூட நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால் அவர்கள் கிறிஸ்துவைப் பற்றிப் பேசுகிறார்கள். இதனால் தொடர்ந்து நான் மகிழ்ச்சியடைவேன். எனக்காக நீங்கள் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறீர்கள். இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த ஆவியானவர் எனக்கு உதவுகிறார். ஆகையால் இந்தத் துன்பங்கள் எனக்கு விடுதலையைத் தரும் என்று எனக்குத் தெரியும். எதிலும் நான் கிறிஸ்துவிடம் தவறமாட்டேன். இதுவே நான் விரும்புவதும், நம்புவதும் கூட. இந்த உலகத்தில் என் வாழ்வில் நான் இயேசுவின் உயர்வைக் காட்ட வேண்டும். அதனை வெளிப்படுத்தும் தைரியத்தை எப்போதும் போல இப்போதும் பெறுவேன் என்று நான் நம்புகிறேன். நான் வாழ்ந்தாலும் சரி, மரித்தாலும் சரி, இதைச் செய்ய விரும்புகிறேன். கிறிஸ்துவை என் வாழ்வின் ஜீவனாக நம்புகிறேன். இதனால் நான் இறந்து போனாலும் எனக்கு லாபம்தான். இந்த சரீரத்தில் நான் தொடர்ந்து வாழ்ந்தால் கர்த்தருக்குத் தொண்டு செய்ய என்னால் முடியும். ஆனால் வாழ்வு, சாவு என்பவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பது? எனக்குத் தெரியவில்லை. வாழ்வு, சாவு இரண்டிலொன்றைத் தேர்ந்தெடுப்பது கடினமானது. இந்த வாழ்க்கையை விட்டுவிட்டு நான் கிறிஸ்துவோடு வாழ விரும்புகிறேன். அது சிறந்தது. ஆனால் நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு மிக அவசியம். உங்களுக்கு நான் தேவையானவன் என்பதை அறிவேன். அதனால் உங்களோடு இருக்க நான் விரும்புகிறேன். உங்கள் நம்பிக்கையில் நீங்கள் மகிழ்ச்சியுடன் வளரவும் நான் உதவுவேன். மீண்டும் உங்களோடு நான் இருக்கும்போது நீங்கள் கிறிஸ்துவாகிய இயேசுவுக்குள் மிகவும் மகிழ்ச்சியாய் இருப்பீர்கள். நற்செய்திக்குப் பொருந்துகிற வாழ்வை வாழ்வது பற்றி உறுதி செய்துகொள்ளுங்கள். பிறகு உங்களைப் பார்வையிட நான் வந்தாலோஅல்லது உங்களை விட்டு நான் தூரம் போனாலோ உங்களைப் பற்றி நான் நல்ல செய்திகளையே கேள்விப்படுவேன். நற்செய்தியிலிருந்து வரும் நம்பிக்கைக்காக நீங்கள் தொடர்ந்து பலத்தோடு பொது நோக்கத்துக்காக ஒன்று சேர்ந்து குழுவாகப் பணியாற்றுகிறீர்கள் என்று நான் கேள்விப்படுவேன். உங்களுக்கு எதிரான மக்களைப் பற்றி நீங்கள் அச்சப்பட வேண்டாம். உங்கள் பகைவர்கள் இழப்புக்குள்ளாவர். நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள். இச்சான்றுகள் தேவனிடமிருந்து வந்தன. ஏனென்றால் கிறிஸ்துவினிடத்தில் நம்பிக்கை செலுத்துவதற்கு மாத்திரமல்ல, அவர் நிமித்தமாகப் பாடுபடுவதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. நான் உங்களோடு இருந்தபோது நற்செய்திக்கு எதிராக இருந்த மக்களுடன் நான் எதிர்கொள்ள நேர்ந்த போராட்டங்களை நீங்கள் பார்த்தீர்கள். இப்போது நான் எதிர்கொண்டுவரும் போராட்டங்களைப் பற்றியும் நீங்கள் கேள்விப்படுகிறீர்கள். நீங்களும் இது போன்ற போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டும்.

பிலிப்பியர் 1:1-30 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரராகிய பவுலும் தீமோத்தேயும், பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவான்கள் அனைவருக்கும், கண்காணிகளுக்கும், உதவிக்காரருக்கும் எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. சுவிசேஷம் உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நாள்முதல் இதுவரைக்கும் நீங்கள் அதற்கு உடன்பட்டவர்களானபடியால், நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்போதும் சந்தோஷத்தோடே விண்ணப்பம்பண்ணி, உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி, நான் உங்களை நினைக்கிறபொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். என் கட்டுகளிலும், நான் சுவிசேஷத்திற்காக உத்தரவுசொல்லி அதைத் திடப்படுத்திவருகிறதிலும், நீங்கள் அனைவரும் எனக்கு அளிக்கப்பட்ட கிருபையில் பங்குள்ளவர்களானதால், உங்களை என் இருதயத்தில் தரித்துக்கொண்டிருக்கிறபடியினாலே, உங்களெல்லாரையுங்குறித்து நான் இப்படி நினைக்கிறது எனக்குத் தகுதியாயிருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் உருக்கமான அன்பிலே உங்களெல்லார்மேலும் எவ்வளவோ வாஞ்சையாயிருக்கிறேன் என்பதற்கு தேவனே எனக்குச் சாட்சி. மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்கள் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகவும், தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி, நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்கவும் வேண்டுதல் செய்கிறேன். சகோதரரே, எனக்குச் சம்பவித்தவைகள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்றென்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன். அரமனையெங்குமுள்ளவர்களுக்கும் மற்ற யாவருக்கும் என் கட்டுகள் கிறிஸ்துவுக்குள்ளான கட்டுகளென்று வெளியரங்கமாகி, சகோதரரில் அநேகர் என் கட்டுகளாலே கர்த்தருக்குள் திடன்கொண்டு பயமில்லாமல் திருவசனத்தைச் சொல்லும்படி அதிகமாய்த் துணிந்திருக்கிறார்கள். சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும், சிலர் நல்மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள். சிலர் என் கட்டுகளோடே உபத்திரவத்தையுங்கூட்ட நினைத்து, சுத்தமனதோடே கிறிஸ்துவை அறிவியாமல், விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள். சுவிசேஷத்திற்காக நான் உத்தரவு சொல்ல ஏற்படுத்தப்பட்டவனென்று அறிந்து, சிலர் அன்பினாலே அறிவிக்கிறார்கள். இதனாலென்ன? வஞ்சகத்தினாலாவது, உண்மையினாலாவது, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்; அதனால் சந்தோஷப்படுகிறேன், இன்னமும் சந்தோஷப்படுவேன். அது உங்கள் வேண்டுதலினாலும் இயேசுகிறிஸ்துவினுடைய ஆவியின் உதவியினாலும் எனக்கு இரட்சிப்பாக முடியுமென்று அறிவேன். நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும். கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம். ஆகிலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் கிரியைக்குப் பலனுண்டாயிருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது இன்னதென்று அறியேன். ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன்; தேகத்தைவிட்டுப்பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்; அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம். இந்த நிச்சயத்தைக்கொண்டிருந்து, நான் மறுபடியும் உங்களிடத்தில் வருகிறதினால் என்னைக்குறித்து உங்களுடைய மகிழ்ச்சி கிறிஸ்து இயேசுவுக்குள் பெருகும்படிக்கு, உங்கள் விசுவாசத்தின் வர்த்தனைக்காகவும் சந்தோஷத்துக்காகவும் நான் பிழைத்து, உங்கள் அனைவரோடுங்கூட இருப்பேனென்று அறிந்திருக்கிறேன். நான் வந்து உங்களைக் கண்டாலும், நான் வராமலிருந்தாலும், நீங்கள் ஒரே ஆவியிலே உறுதியாய் நின்று, ஒரே ஆத்துமாவினாலே சுவிசேஷத்தின் விசுவாசத்திற்காகக் கூடப்போராடி, எதிர்க்கிறவர்களால் ஒன்றிலும் மருளாதிருக்கிறீர்களென்று உங்களைக்குறித்து நான் கேள்விப்படும்படி, எவ்விதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குப் பாத்திரராகமாத்திரம் நடந்துகொள்ளுங்கள். நீங்கள் மருளாதிருக்கிறது அவர்கள் கெட்டுப்போகிறதற்கும், நீங்கள் இரட்சிக்கப்படுகிறதற்கும் அத்தாட்சியாயிருக்கிறது; இதுவும் தேவனுடைய செயலே. ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர்நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. நீங்கள் என்னிடத்திலே கண்டதும் எனக்கு உண்டென்று இப்பொழுது கேள்விப்படுகிறதுமான போராட்டமே உங்களுக்கும் உண்டு.