பிலிப்பியர் 1:1-11
பிலிப்பியர் 1:1-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
கிறிஸ்து இயேசுவின் ஊழியர்களான பவுலும், தீமோத்தேயுவும், பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவில் இருக்கும் எல்லாப் பரிசுத்தவான்களுக்கும், அவர்களோடுகூட திருச்சபைத் தலைவர்களுக்கும், உதவி ஊழியர்களுக்கும் எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய இறைவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. நான் உங்களை நினைக்கும் போதெல்லாம், என் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். உங்கள் எல்லோருக்காகவும் நான் மன்றாடும் பொழுதெல்லாம், எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் மன்றாடுகிறேன். ஏனெனில் நான் அங்கே வந்த முதல் நாளிலிருந்து இன்றுவரை, நற்செய்திப் பணியில் நீங்கள் என்னோடு பங்காளர்களாய் இருக்கிறீர்கள். இப்படிப்பட்ட நல்ல செயலை உங்களில் தொடங்கிய இறைவன், அதைக் கிறிஸ்து இயேசுவின் நாள்வரை நடத்தி முடிப்பார் என்று நான் நிச்சயமுடையவனாய் இருக்கிறேன். உங்கள் எல்லோரையும்பற்றி, இவ்வாறு நான் நினைப்பது சரியானதே. ஏனெனில் எப்பொழுதும் என் இருதயத்தில் நீங்கள் இடங்கொண்டிருக்கிறீர்கள்; நான் சிறையில் இருக்கிறபோதும், நற்செய்தியின் சார்பாகப் பேசி, அதை உறுதிசெய்கிற போதும், நீங்களும் எல்லோரும் இறைவன் எனக்குக் கொடுத்திருக்கிற கிருபையில், என்னுடன் பங்குடையவர்களாய் இருக்கிறீர்கள். கிறிஸ்து இயேசு கொண்டிருந்த உருக்கமான அன்போடு, உங்களெல்லோரையும் நான் காண விரும்புகிறேன் என்பதற்கு, இறைவனே சாட்சியாயிருக்கிறார். என் மன்றாடல் இதுவே: உங்கள் அன்பு மென்மேலும் அறிவாற்றலிலும், ஆழமான நுண்ணறிவிலும் பெருகி வளரவேண்டும். அப்பொழுது மிகச் சிறந்தது எது என்று நிதானித்தறிய உங்களால் முடியும். கிறிஸ்து மீண்டும் வரும் நாள்வரைக்கும் தூய்மையுள்ளவர்களாகவும், குற்றம் காணப்படாதவர்களாகவும், இயேசுகிறிஸ்துவின் மூலமாக வரும் நீதியின் கனிகளில், நிறைவுள்ளவர்களாகவும் நீங்கள் இருப்பீர்கள். அது இறைவனுக்கு மகிமையையும், துதியையும் ஏற்படுத்தும்.
பிலிப்பியர் 1:1-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரர்களாகிய பவுலும், தீமோத்தேயும், பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவிற்குள்ளான பரிசுத்தவான்கள் அனைவருக்கும், கண்காணிகளுக்கும், உதவிக்காரர்களுக்கும் எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. நற்செய்தி உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நாள்முதல் இதுவரைக்கும் நீங்கள் எங்களோடு ஊழியத்தில் ஐக்கியப்பட்டிருப்பதால், நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்பொழுதும் சந்தோஷத்தோடு ஜெபம்பண்ணி, உங்களில் நல்லசெயல்களைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்வரை நடத்திவருவார் என்று நம்பி, நான் உங்களை நினைக்கும்போதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். என் சிறைச்சாலையின் கட்டுகளிலும், நான் நற்செய்தியைப் போதித்து அதைத் உறுதிப்படுத்திவருகிறதிலும், நீங்கள் அனைவரும் எனக்கு அளிக்கப்பட்ட கிருபையில் பங்குள்ளவர்களானதால், உங்களை என் இருதயத்தில் வைத்துக்கொண்டிருக்கிறபடியினாலே, உங்கள் எல்லோரையும்குறித்து நான் இப்படி நினைக்கிறது எனக்குத் தகுதியாக இருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் உருக்கமான அன்பினாலே உங்களெல்லோரையும் காண எவ்வளவோ ஆவலாக இருக்கிறேன் என்பதற்கு தேவனே எனக்குச் சாட்சி. மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்களுடைய அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாகப் பெருகவும், தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி, நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று நேர்மையானவர்களும், குற்றம் இல்லாதவர்களுமாக இருக்கவும் வேண்டுதல் செய்கிறேன்.
பிலிப்பியர் 1:1-11 பரிசுத்த பைபிள் (TAERV)
இயேசு கிறிஸ்துவின் ஊழியர்களாகிய பவுலும் தீமோத்தேயுவும் பிலிப்பி நகரத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள் வாழ்கிற தேவனுடைய பரிசுத்த மக்களுக்கும் உங்கள் கண்காணிப்பாளர்களுக்கும், விசேஷ உதவியாளர்களுக்கும், உங்கள் மூப்பர்களுக்கும் சிறப்பு உதவியாளர்களுக்கும் எழுதுவது. நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் கிருபையும், சமாதானமும் உங்களுக்கு உண்டாவதாக. எப்போதும் உங்களை நினைத்துக்கொண்டு நான் தேவனுக்கு நன்றி சொல்கிறேன். உங்கள் அனைவருக்காக எப்போதும் மகிழ்ச்சியோடு நான் பிரார்த்தனை செய்கிறேன். மக்களிடம் நான் நற்செய்தியைக் கூறும்போது அதற்கு உதவி செய்த உங்கள் அனைவருக்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். நீங்கள் சுவிசேஷத்தை நம்பிய நாள் முதல் நீங்கள் நற்கிரியைகளில் பங்கேற்று எனக்கு உதவியுள்ளீர்கள். உங்களில் தேவன் நற்செயல்களைச் செய்யத் தொடங்கினார். அவர் இதை உங்களில் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார். இயேசு கிறிஸ்து மீண்டும் வரும்போது தேவன் தன் வேலையை உங்கள் மூலம் செய்து முடிப்பார். அதைப் பற்றி நான் உறுதியாய் இருக்கிறேன். உங்கள் அனைவரையும் குறித்து இவ்வாறு நான் நினைப்பது சரியென்று எண்ணுகிறேன். இதில் நான் உறுதியாகவும் உள்ளேன். ஏனென்றால் உங்களை என் இதயத்தில் வைத்திருக்கிறேன். நான் உங்களை மிக நெருக்கமாக உணர்கிறேன். எனெனில் நீங்கள் அனைவரும் என்னோடு தேவனுடைய கிருபையைப் பகிர்ந்துகொள்கிறீர்கள். நான் சிறையில் இருக்கிறபோதும், நற்செய்திக்காக உத்தரவு சொல்லி அதைத் திடப்படுத்தி வருகிறதிலும், நீங்கள் தேவனுடைய கிருபையை என்னோடு பங்கிட்டுக்கொள்கிறீர்கள். உங்களைப் பார்க்க நான் மிகவும் விரும்புகிறேன் என்று தேவனுக்குத் தெரியும். கிறிஸ்து இயேசுவின் அன்புடன் உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன். உங்களுக்காக என்னுடைய பிரார்த்தனை இதுவே: உங்கள் அன்பு மேலும், மேலும் வளர்வதாக. உங்களுக்கு அறிவும், அன்போடு கூட புரிந்துகொள்ளுதலும் உண்டாவதாக. பிறகு நன்மைக்கும் தீமைக்கும் உள்ள வேறுபாட்டை உங்களால் கண்டுகொண்டு, நன்மையை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொள்ளவும் கிறிஸ்து வரும்போது நீங்கள் தூய்மையடையவும், தவறு இல்லாதவர்களாக இருக்கவும், இயேசு கிறிஸ்துவின் உதவியுடன், அவர் மூலம் நீங்கள் பல நற்செயல்களைச் செய்து தேவனுக்கு மகிமையையும் பாராட்டுகளையும் சேர்க்க வேண்டும்.
பிலிப்பியர் 1:1-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரராகிய பவுலும் தீமோத்தேயும், பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவான்கள் அனைவருக்கும், கண்காணிகளுக்கும், உதவிக்காரருக்கும் எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. சுவிசேஷம் உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நாள்முதல் இதுவரைக்கும் நீங்கள் அதற்கு உடன்பட்டவர்களானபடியால், நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்போதும் சந்தோஷத்தோடே விண்ணப்பம்பண்ணி, உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி, நான் உங்களை நினைக்கிறபொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். என் கட்டுகளிலும், நான் சுவிசேஷத்திற்காக உத்தரவுசொல்லி அதைத் திடப்படுத்திவருகிறதிலும், நீங்கள் அனைவரும் எனக்கு அளிக்கப்பட்ட கிருபையில் பங்குள்ளவர்களானதால், உங்களை என் இருதயத்தில் தரித்துக்கொண்டிருக்கிறபடியினாலே, உங்களெல்லாரையுங்குறித்து நான் இப்படி நினைக்கிறது எனக்குத் தகுதியாயிருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் உருக்கமான அன்பிலே உங்களெல்லார்மேலும் எவ்வளவோ வாஞ்சையாயிருக்கிறேன் என்பதற்கு தேவனே எனக்குச் சாட்சி. மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்கள் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகவும், தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி, நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்கவும் வேண்டுதல் செய்கிறேன்.