எண்ணாகமம் 9:1-14
எண்ணாகமம் 9:1-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இஸ்ரயேலர் எகிப்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருடம் முதலாம் மாதத்தில், யெகோவா சீனாய் பாலைவனத்தில் மோசேயுடன் பேசினார். அவர் அவனிடம், “இஸ்ரயேலர் நியமிக்கப்பட்ட காலத்தில் பஸ்கா பண்டிகையைக் கொண்டாடும்படி செய்யவேண்டும். நியமிக்கப்பட்ட காலமான இம்மாதம் பதினாலாம்தேதி பொழுதுபடும் நேரத்தில், அப்பண்டிகைக்குரிய எல்லா சட்டங்களின்படியும், ஒழுங்கு முறைப்படியும் அதைக் கொண்டாடுங்கள் என்று சொல்” என்றார். அப்படியே மோசே, பஸ்கா பண்டிகையைக் கொண்டாடும்படி இஸ்ரயேலரிடம் சொன்னான். அவ்வாறே அவர்கள், முதலாம் மாதம் பதினாலாம்தேதி பொழுதுபடும் நேரத்தில், சீனாய் பாலைவனத்தில் பஸ்காவைக் கொண்டாடினார்கள். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் இஸ்ரயேலர் செய்தார்கள். ஆனால் அந்த நாளில் சிலர் பிரேதத்தைத் தொட்டதினால், சம்பிரதாய முறைப்படி அசுத்தமாக இருந்தார்கள். எனவே அவர்களால் அந்த நாளில் பஸ்காவைக் கொண்டாட முடியவில்லை. அவர்கள் அன்றைய தினமே மோசேயிடமும், ஆரோனிடமும் வந்தார்கள். அவர்கள் மோசேயிடம், “ஒரு பிரேதத்தைத் தொட்டதினால் நாங்கள் அசுத்தமாகிவிட்டோம். மற்ற இஸ்ரயேலரோடு குறிப்பிட்ட காலத்தில் யெகோவாவுக்குக் காணிக்கையைக் கொடுப்பதிலிருந்து நாங்கள் விலக்கி வைக்கப்பட்டிருப்பதால் என்ன செய்யவேண்டும்?” எனக் கேட்டார்கள். அதற்கு மோசே, “உங்களைப்பற்றி யெகோவா என்ன கட்டளை கொடுக்கிறார் என நான் அவரிடமிருந்து அறிந்து வரும்வரை பொறுத்திருங்கள்” என்றான். அப்பொழுது யெகோவா மோசேயிடம், “நீ இஸ்ரயேலரிடம் சொல்லவேண்டியதாவது: ‘உங்களிலோ அல்லது உங்கள் சந்ததியிலோ, யாராவது பிரேதத்தைத் தொட்டு அசுத்தமாயிருந்தாலும் அல்லது பயணம் போயிருந்தாலும், அவர்கள் யெகோவாவின் பஸ்காவைக் கொண்டாடலாம். அவர்கள் இரண்டாம் மாதம் பதினாலாம்தேதி பொழுதுபடும் வேளையிலேயே, பஸ்காவைக் கொண்டாடவேண்டும். அவர்கள் புளிப்பில்லாத அப்பத்துடனும், கசப்புள்ள கீரையுடனும் பஸ்கா செம்மறியாட்டுக் குட்டியைச் சாப்பிடவேண்டும். காலைவரை அதில் எதையும் மீதியாக வைக்கக்கூடாது; அதன் எலும்புகளை முறிக்கவும் கூடாது. அவர்களும் பஸ்காவைக் கொண்டாடும்போது, இந்த எல்லா விதிமுறைகளையும் கைக்கொள்ளவேண்டும். ஆனால் ஒரு மனிதன் சம்பிரதாய முறைப்படி சுத்தமாகவும், பயணம் போகாமலும் இருந்து, பஸ்காவைக் கொண்டாடத் தவறினால், அம்மனிதன் தன் மக்கள் மத்தியில் இருந்து அகற்றப்படவேண்டும். ஏனெனில், அவன் நியமிக்கப்பட்ட காலத்தில் யெகோவாவுக்குக் காணிக்கையைக் கொண்டுவரவில்லை. எனவே அவன் தன் பாவத்தினால் வந்த விளைவைத் தானே சுமக்கவேண்டும். “ ‘அத்துடன் உங்கள் மத்தியில் வாழும் அந்நியன் ஒருவன், யெகோவாவின் பஸ்காவைக் கொண்டாட விரும்பினால், அவன் சட்டங்களின்படியும், விதிமுறைகளின்படியும் அதைக் கொண்டாடவேண்டும். தன் நாட்டினனுக்கும், பிறநாட்டினனுக்கும் ஒரேவிதமான விதிமுறைகளையே நீங்கள் வைத்திருக்கவேண்டும்’ ” என்றார்.
எண்ணாகமம் 9:1-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அவர்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருடம் முதலாம் மாதத்தில் யெகோவா சீனாய் வனாந்திரத்தில் மோசேயை நோக்கி: “குறித்த காலத்தில் இஸ்ரவேல் மக்கள் பஸ்காவை அனுசரிக்கவேண்டும். இந்த மாதம் பதினான்காம்தேதி மாலை வேளையாகிய குறித்த காலத்தில் அதை அனுசரிக்கவேண்டும்; அதற்குரிய எல்லாக் கட்டளையின்படியேயும் முறைகளின்படியேயும் அதை அனுசரிக்கவேண்டும் என்றார். அப்படியே பஸ்காவை அனுசரிக்கும்படி மோசே இஸ்ரவேல் மக்களுக்குக் கட்டளையிட்டான். அதினால் முதலாம் மாதம் பதினான்காம் தேதி மாலைநேரமான வேளையில், சீனாய் வனாந்திரத்தில் பஸ்காவை ஆசரித்தார்கள்; யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் இஸ்ரவேல் மக்கள் செய்தார்கள். அந்நாளில் சிலர் மனித பிரேதத்தினால் தீட்டுப்பட்டபடியினால் பஸ்காவை அனுசரிக்கத்தகாதவர்களாக இருந்தார்கள்; அவர்கள் அந்நாளிலே மோசேக்கும் ஆரோனுக்கும் முன்பாக வந்து: “நாங்கள் மனித பிரேதத்தினால் தீட்டுப்பட்டவர்கள்; குறித்த காலத்தில் இஸ்ரவேல் மக்களோடு யெகோவாவுக்குக் காணிக்கையைச் செலுத்தாதபடி, நாங்கள் விலக்கப்பட்டிருக்கவேண்டியது என்ன என்றார்கள். மோசே அவர்களை நோக்கி: “பொறுங்கள்; யெகோவா உங்களைக்குறித்துக் கட்டளையிடுவது என்ன என்று கேட்பேன் என்றான். யெகோவா மோசேயை நோக்கி: “நீ இஸ்ரவேல் மக்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்களிலோ உங்கள் சந்ததியாரிலோ ஒருவன் பிரேதத்தினால் தீட்டுப்பட்டாலும், பயணமாகத் தூரமாக போயிருந்தாலும், யெகோவாவுக்குப் பஸ்காவை அனுசரிக்கவேண்டும். அவர்கள் அதை இரண்டாம் மாதம் பதினான்காம்தேதி மாலைநேரமான வேளையில் ஆசரித்து, அதைப் புளிப்பில்லாத அப்பங்களோடும் கசப்பான கீரைகளோடும் சாப்பிட்டு அதிகாலைவரை அதில் ஒன்றும் மீதியாக வைக்காமலும், அதில் ஒரு எலும்பையும் முறிக்காமலும், பஸ்காவினுடைய எல்லா முறைகளின்படியும் அதை அனுசரிக்கவேண்டும். ஒருவன் சுத்தமுள்ளவனுமாகப் பயணம் போகாதவனுமாக இருந்தும், பஸ்காவை அனுசரிக்காமல் போனால், அந்த ஆத்துமா குறித்த காலத்தில் யெகோவாவின் பலியைச் செலுத்தாதபடியால் தன்னுடைய மக்களில் இல்லாமல் அறுப்புண்டுபோவான்; அந்த மனிதன் தன்னுடைய பாவத்தைச் சுமப்பான். ஒரு பரதேசி உங்களிடத்திலே தங்கி, யெகோவாவுக்குப் பஸ்காவை அனுசரிக்கவேண்டுமானால், அவன் அதைப் பஸ்காவின் கட்டளைப்படியும் அதின் முறையின்படியும் அனுசரிக்கவேண்டும்; பரதேசிக்கும் சுதேசிக்கும் ஒரே கட்டளை இருக்கவேண்டும் என்று சொல்” என்றார்.
எண்ணாகமம் 9:1-14 பரிசுத்த பைபிள் (TAERV)
சீனாய் பாலைவனத்தில் மோசேயிடம் கர்த்தர் பேசினார். இது இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தை விட்டு வந்த இரண்டாவது ஆண்டின் முதல் மாதமாகும். கர்த்தர் மோசேயிடம்: “தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்தில், பஸ்கா பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்று இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு. அவர்கள் பஸ்கா விருந்தை இம்மாதத்தின் 14ஆம் நாளன்று சூரியன் மறைகிற அந்தி வேளையில் உண்ண வேண்டும். அவர்கள் அந்தத் தேர்ந்தெடுத்த நேரத்தில் இதனைச் செய்ய வேண்டும். பஸ்கா பண்டிகையின் விதிகளை அவர்கள் பின்பற்ற வேண்டும்” என்று கூறினார். எனவே, பஸ்காவைக் கொண்டாடும்படி இஸ்ரவேல் ஜனங்களிடம் மோசே கூறினான். அவர்கள் சீனாய் பாலைவனத்தில், முதல் மாதத்தின் 14ஆம் நாளன்று, சூரியன் மறைகின்ற சாயங்கால வேளையில் பஸ்காவைக் கொண்டாடினர். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாவற்றையும் செய்து முடித்தனர். ஆனால் அந்நாளில் சில ஜனங்கள் பஸ்காவைக் கொண்டாட முடியவில்லை. காரணம், அவர்கள் பிணத்தைத் தொட்டதால் தீட்டாகி இருந்தனர். எனவே, அன்று அவர்கள் மோசேயிடமும், ஆரோனிடமும் சென்றனர். அவர்கள் மோசேயிடம், “நாங்கள் பிணத்தைத் தொட்டதால் தீட்டாகிவிட்டோம். எனவே தேர்ந்தெடுக்கப்பட்ட நேரத்தில் நாங்கள் கர்த்தருக்கு அன்பளிப்பைச் செலுத்த முடியாமல் ஆசாரியர்களால் தடுக்கப்பட்டோம். எனவே, எங்களால் மற்ற இஸ்ரவேலர்களோடு பஸ்காவைக் கொண்டாட முடியவில்லை. நாங்கள் என்ன செய்யலாம்?” என்று கேட்டனர். மோசே அவர்களிடம், “கர்த்தர் இதனைப் பற்றி என்ன சொல்கிறார் என்று கேட்கிறேன்” என்றான். பிறகு கர்த்தர் மோசேயிடம், “எல்லா இஸ்ரவேல் ஜனங்களிடமும் இவற்றைக் கூறு. இந்த விதியானது உனக்கும் உனது எல்லாச் சந்ததிக்கும் உரியதாகும். சரியான நேரத்தில் ஒருவனால் பஸ்காவைக் கொண்டாட முடியாமல் போகலாம். அவன் பிணத்தைத் தொட்டதால் தீட்டுள்ளவனாக இருக்கலாம், அல்லது அவன் பயணத்தின் பொருட்டு வெளியே போயிருக்கலாம். ஆனாலும் அவன் இரண்டாவது மாதத்தில் 14ஆம் தேதி மாலை வேளையில் பஸ்காவைக் கொண்டாடலாம். அப்போது அவன் ஆட்டுக்குட்டியின் இறைச்சியையும், புளிப்பில்லாத அப்பத்தையும், கசப்பான கீரையையும் உண்ண வேண்டும். அவன் மறுநாள் விடியும்வரை அதில் எதையும் மீதி வைக்காமல் உண்ண வேண்டும். அவன் ஆட்டுக்குட்டியின் எலும்புகள் எதையும் உடைக்கக் கூடாது. அவன் பஸ்காவின் அனைத்து விதிகளையும் பின்பற்ற வேண்டும். ஆனால் இயன்றவர்கள் குறிப்பிட்ட காலத்திலேயே பஸ்காவைக் கொண்டாட வேண்டும். ஆனால் அவன் தீட்டில்லாமல் இருந்து, பயணம் போகாமல் இருந்தால் அவனுக்கு மன்னிப்பு இல்லை. அவன் சரியான காலத்தில் பஸ்காவைக் கொண்டாடாவிட்டால், அவன் மற்ற ஜனங்களிடமிருந்து பிரிக்கப்படவேண்டும். அவன் குற்றவாளியாகி அதனால் தண்டிக்கப்படுவான். ஏனென்றால் அவன் சரியான நேரத்தில் தன் அன்பளிப்பை கர்த்தருக்குச் செலுத்தவில்லை. “உங்களோடு வாழ்கின்ற அயல் நாட்டுக்காரன், கர்த்தரின் பஸ்காப் பண்டிகையை பகிர்ந்துகொள்ள விரும்பலாம், இதனை அனுமதிக்கலாம். ஆனால், அவன் பஸ்காவின் விதிகளைப் பின்பற்ற வேண்டும். அவ்விதிகள் அனைவருக்கும் ஒரே மாதிரிதான்” என்றார்.
எண்ணாகமம் 9:1-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அவர்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருஷம் முதலாம் மாதத்தில் கர்த்தர் சீனாய் வனாந்தரத்தில் மோசேயை நோக்கி: குறித்த காலத்தில் இஸ்ரவேல் புத்திரர் பஸ்காவை ஆசரிக்கக்கடவர்கள். இந்த மாதம் பதினாலாந்தேதி அந்திநேரமான வேளையாகிய குறித்த காலத்தில் அதை ஆசரிக்கக்கடவீர்கள்; அதற்குரிய எல்லாக் கட்டளையின்படியேயும் முறைமைகளின்படியேயும் அதை ஆசரிக்கக்கடவீர்கள் என்றார். அப்படியே பஸ்காவை ஆசரிக்கும்படி மோசே இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிட்டான். அதினால் முதலாம் மாதம் பதினான்காம் தேதி அந்திநேரமான வேளையில், சீனாய் வனாந்தரத்தில் பஸ்காவை ஆசரித்தார்கள்; கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் செய்தார்கள். அந்நாளில் சிலர் மனித பிரேதத்தினால் தீட்டுப்பட்டபடியினால் பஸ்காவை ஆசரிக்கத்தகாதவர்களாயிருந்தார்கள்; அவர்கள் அந்நாளிலே மோசேக்கும் ஆரோனுக்கும் முன்பாக வந்து: நாங்கள் மனித பிரேதத்தினால் தீட்டுப்பட்டவர்கள்; குறித்த காலத்தில் இஸ்ரவேல் புத்திரரோடேகூடக் கர்த்தருக்குக் காணிக்கையைச் செலுத்தாதபடிக்கு, நாங்கள் விலக்கப்பட்டிருக்கவேண்டியது என்ன என்றார்கள். மோசே அவர்களை நோக்கி: பொறுங்கள்; கர்த்தர் உங்களைக்குறித்துக் கட்டளையிடுவது என்ன என்று கேட்பேன் என்றான். கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்களிலாகிலும் உங்கள் சந்ததியாரிலாகிலும் ஒருவன் பிரேதத்தினால் தீட்டுப்பட்டாலும், பிரயாணமாய்த் தூரம்போயிருந்தாலும், கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கவேண்டும். அவர்கள் அதை இரண்டாம் மாதம் பதினாலாந்தேதி அந்திநேரமான வேளையில் ஆசரித்து, அதைப் புளிப்பில்லாத அப்பங்களோடும் கசப்பான கீரைகளோடும் புசித்து, விடியற்காலம்மட்டும் அதில் ஒன்றும் மீதியாக வைக்காமலும், அதில் ஒரு எலும்பையும் முறிக்காமலும், பஸ்காவினுடைய சகல முறைமைகளின்படியும் அதை ஆசரிக்கக்கடவர்கள். ஒருவன் சுத்தமுள்ளவனுமாய்ப் பிரயாணம் போகாதவனுமாயிருந்தும், பஸ்காவை ஆசரிக்காதேபோனால், அந்த ஆத்துமா குறித்த காலத்தில் கர்த்தரின் பலியைச் செலுத்தாதபடியினால் தன் ஜனத்தாரில் இராமல் அறுப்புண்டுபோவான்; அந்த மனிதன் தன் பாவத்தைச் சுமப்பான். ஒரு பரதேசி உங்களிடத்திலே தங்கி, கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கவேண்டுமானால், அவன் அதைப் பஸ்காவின் கட்டளைப்படியும் அதின் முறைமையின்படியும் ஆசரிக்கக்கடவன்; பரதேசிக்கும் சுதேசிக்கும் ஒரே கட்டளை இருக்கவேண்டும் என்று சொல் என்றார்.