எண்ணாகமம் 25:1-18

எண்ணாகமம் 25:1-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இஸ்ரயேலர் சித்தீமில் தங்கியிருக்கையில், இஸ்ரயேல் மனிதர் மோவாபிய பெண்களுடன் பாலியல் முறைகேட்டில் ஈடுபடத் தொடங்கினார்கள். அப்பெண்கள் தங்கள் தெய்வங்களுக்குச் செலுத்திய பலிகளில் பங்குபெற்ற அவர்களை அழைத்தார்கள். எனவே அம்மனிதர், பலியிட்டதையும் சாப்பிட்டு, மோவாபிய தெய்வங்களை விழுந்து வணங்கினார்கள். இவ்வாறு இஸ்ரயேலர் பாகால்பேயோர் தெய்வத்தை வணங்குவதற்கு இணைந்துகொண்டனர். அப்பொழுது யெகோவாவின் கோபம் இஸ்ரயேலருக்கு எதிராக மூண்டது. யெகோவா மோசேயிடம், “நீ இந்த மக்களில் முறைகேட்டில் ஈடுபட்ட தலைவர்கள் எல்லோரையும் கூட்டிக்கொண்டுபோய் அவர்களைக் கொன்றுவிடு. யெகோவாவின் முன்பாக பகல் வெளிச்சத்தில் அவர்களின் உடல்களைப்போடு. அப்பொழுது யெகோவாவின் கோபம் இஸ்ரயேலைவிட்டு நீங்கும்” என்றார். எனவே மோசே இஸ்ரயேலின் நீதிபதிகளிடம், “நீங்கள் ஒவ்வொருவரும் பாகால்பேயோரின் வழிபாட்டில் ஈடுபட்ட உங்கள் மனிதர்களைக் கொன்றுபோடுங்கள்” என்று சொன்னான். மோசேயும், இஸ்ரயேல் மக்களனைவரும் சபைக்கூடார வாசலில் அழுதுகொண்டு நிற்கும்போது, அவர்களுடைய கண்களுக்கு முன்பாகவே இஸ்ரயேல் மனிதன் ஒருவன், ஒரு மீதியானிய பெண்ணை அழைத்துக்கொண்டு தன் கூடாரத்திற்கு வந்தான். ஆசாரியன் ஆரோனின் மகனான எலெயாசாரின் மகன் பினெகாஸ் அதைக் கண்டபோது, மக்கள் கூட்டத்திலிருந்து எழுந்து தன் கையில் ஒரு ஈட்டியை எடுத்துக்கொண்டு, அந்த இஸ்ரயேல் மனிதனின் பின்னால் கூடாரத்திற்குள் போனான். அங்கே அந்த இஸ்ரயேலனையும், அப்பெண்ணையும் ஊடுருவக் குத்தினான். அப்பொழுது இஸ்ரயேலர் மத்தியில் பரவியிருந்த கொள்ளைநோய் அவர்களைவிட்டு நீங்கியது. ஆனாலும் 24,000 பேர் கொள்ளைநோயினால் இறந்தார்கள். அப்பொழுது யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, “ஆசாரியன் ஆரோனின் மகனான எலெயாசாரின் மகன் பினெகாஸ் என் கோபத்தை இஸ்ரயேலரை விட்டுத் திருப்பிவிட்டான். ஏனெனில், அவர்கள் மத்தியில் எனக்குரிய கனத்தைக்குறித்து அவனும் என்னைப்போலவே வைராக்கியமாய் இருந்தான். அதனால் நான் என் வைராக்கியத்தில் அவர்களை முற்றிலும் அழிக்கவில்லை. ஆகையால் நான் என் சமாதானத்தின் உடன்படிக்கையை அவனுடன் ஏற்படுத்துகிறேன் என்று அவனுக்குச் சொல். ஏனெனில், அவன் தன் இறைவனின் கனத்தைக்குறித்து, பக்திவைராக்கியமாய் இருந்து இஸ்ரயேலருக்காகப் பாவநிவிர்த்தி செய்தான். அதனால் அவனுக்கும், அவன் சந்ததியினருக்கும் ஒரு நிரந்தரமான ஆசாரிய பட்டத்திற்குரிய உடன்படிக்கை இருக்கும்” என்றார். அந்த மீதியானிய பெண்ணுடன் குத்தப்பட்டு இறந்த இஸ்ரயேலனின் பெயர் சிம்ரி. அவன் சல்லூவின் மகனும், சிமியோன் குடும்பங்களில் ஒன்றுக்குத் தலைவனுமாயிருந்தான். குத்தப்பட்டு இறந்த மீதியானிய பெண்ணின் பெயர் கஸ்பி. மீதியானிய குடும்பம் ஒன்றுக்குத் தலைவனான சூர் என்பவனின் மகள். யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, “மீதியானியரைப் பகைவர்களாய் நடத்தி, அவர்களைக் கொன்றுபோடுங்கள். ஏனெனில் அவர்கள் பேயோரை வழிபடச்செய்ததிலும், மீதியானியத் தலைவனுடைய மகளும், தங்கள் சகோதரியுமான கஸ்பியின் மூலமாகவும் உங்களை வஞ்சித்தார்கள். பேயோர் வழிபாட்டில் நீங்கள் இணைந்ததினால் கொள்ளைநோய் வந்தபோது, கொல்லப்பட்ட பெண்ணும் இவளே. இவற்றிலெல்லாம் அவர்கள் உங்களைப் பகைவர்களாகவே நடத்தினார்கள்” என்றார்.

எண்ணாகமம் 25:1-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கும்போது, மக்கள் மோவாபின் மகள்களோடு விபசாரம் செய்யத் தொடங்கினார்கள். அவர்கள் தங்களுடைய தெய்வங்களுக்கு செலுத்திய பலிகளை விருந்துண்ணும்படி மக்களை அழைத்தார்கள்; மக்கள் போய் சாப்பிட்டு, அவர்கள் தெய்வங்களைப் பணிந்துகொண்டார்கள். இப்படி இஸ்ரவேலர்கள் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டார்கள்; அதனால் இஸ்ரவேலர்கள்மேல் யெகோவாவுடைய கோபம் வந்தது. யெகோவா மோசேயை நோக்கி: “யெகோவாவுடைய கடுமையான கோபம் இஸ்ரவேலை விட்டு நீங்கும்படி நீ மக்களின் தலைவர் எல்லோரையும் கூட்டிக்கொண்டு, அப்படிச் செய்தவர்களைச் சூரிய வெளிச்சத்திலே யெகோவாவுடைய சந்நிதானத்தில் தூக்கில்போடும்படி செய் என்றார். அப்படியே மோசே இஸ்ரவேலின் நியாயாதிபதிகளை நோக்கி: “நீங்கள் அவரவர் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்ட உங்களுடைய மனிதர்களைக் கொன்றுபோடுங்கள்” என்றான். அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் மக்களாகிய சபையார் அனைவரும் ஆசரிப்புக் கூடாரத்தின்வாசலுக்கு முன்பாக அழுதுகொண்டு நிற்கும்போது, அவர்கள் கண்களுக்கு முன்பாக இஸ்ரவேல் மக்களில் ஒருவன் ஒரு மீதியானிய பெண்ணைத் தன்னுடைய சகோதரர்களிடம் அழைத்துக்கொண்டுவந்தான். அதை ஆசாரியனாகிய ஆரோனின் மகனான எலெயாசாரின் மகன் பினெகாஸ் பார்த்தபோது, அவன் நடுச்சபையிலிருந்து எழுந்து, ஒரு ஈட்டியைத் தன்னுடைய கையிலே பிடித்து, இஸ்ரவேலனாகிய அந்த மனிதன் விபசாரம்செய்யும் அறையிலே அவன் பின்னாலே போய், இஸ்ரவேல் மனிதனும் அந்த பெண்ணுமாகிய இருவருடைய வயிற்றிலும் ஈட்டி வெளியே போகுமளவுக்கு அவர்களைக் குத்திப்போட்டான்; அப்பொழுது இஸ்ரவேல் மக்களில் உண்டான வாதை நின்றுபோயிற்று. அந்த வாதையால் இறந்தவர்கள் 24,000 பேர். யெகோவா மோசேயை நோக்கி: “நான் என்னுடைய எரிச்சலில் இஸ்ரவேல் மக்களை அழிக்காதபடி, ஆசாரியனாகிய ஆரோனின் மகனான எலெயாசாரின் மகன் பினெகாஸ், எனக்காக அவர்கள் நடுவில் பக்திவைராக்கியம் காண்பித்ததினால், இஸ்ரவேல் மக்கள்மேல் உண்டான என்னுடைய கடுங்கோபத்தை திருப்பினான். ஆகையால், “இதோ, அவனுக்கு என்னுடைய சமாதானத்தின் உடன்படிக்கையைக் கட்டளையிடுகிறேன். அவன் தன்னுடைய தேவனுக்காக பக்திவைராக்கியம் காண்பித்து, இஸ்ரவேல் மக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்தபடியினால், அவனுக்கும் அவனுக்குப் பின்பு அவன் சந்ததிக்கும் நிரந்தர ஆசாரிய பட்டத்திற்குரிய உடன்படிக்கை உண்டாயிருக்கும் என்று சொல்” என்றார். மீதியானிய பெண்ணோடு குத்தப்பட்டு இறந்த இஸ்ரவேல் மனிதனுடைய பெயர் சிம்ரி; அவன் சல்லூவின் மகனும், சிமியோனியர்களின் தகப்பன் வம்சத்தில் ஒரு பிரபுவாகவும் இருந்தான். குத்தப்பட்ட மீதியானிய பெண்ணின் பெயர் கஸ்பி, அவள் சூரின் மகள், அவன் மீதியானியர்களுடைய தகப்பன் வம்சத்தாரான மக்களுக்குத் தலைவனாக இருந்தான். யெகோவா மோசேயை நோக்கி: “மீதியானியர்களை வீழ்த்தி அவர்களை வெட்டிப்போடுங்கள். பேயோரின் காரியத்திலும் பேயோரினால் வாதை உண்டான நாளிலே குத்தப்பட்ட அவர்களுடைய சகோதரியாகிய கஸ்பி என்னும் மீதியான் பிரபுவினுடைய மகளின் காரியத்திலும், அவர்கள் உங்களுக்குச் செய்த துரோகங்களினால் உங்களை மோசம்போக்கி நெருக்கினார்களே” என்றார்.

எண்ணாகமம் 25:1-18 பரிசுத்த பைபிள் (TAERV)

இஸ்ரவேல் ஜனங்கள் அகாசியாவின் அருகில் முகாமிட்டிருந்தார்கள். அப்போது அவர்கள் மோவாப் பெண்களோடு பாலுறவுப் பாவத்தில் ஈடுபட்டார்கள். மோவாப் பெண்கள் இஸ்ரவேல் ஜனங்களை அழைத்துப் போய் தங்கள் போலியான தேவர்களுக்குப் பலி கொடுக்கச் செய்தனர். இஸ்ரவேல் ஜனங்கள் அப்போலியான தெய்வங்களை வணங்கவும் அவர்களிட்ட பலிகளை உண்ணவும் ஆரம்பித்தனர். அந்த இடத்தில், இஸ்ரவேல் ஜனங்கள் பாகால் பேயோர் போன்ற போலியான தேவர்களை வணங்கத் துவங்கினார்கள். இதனால் அவர்கள் மீது கர்த்தர் பெருங்கோபம் கொண்டார். கர்த்தர் மோசேயிடம், “இந்த ஜனங்களின் தலைவர்களையெல்லாம் ஒன்று சேர். பிறகு மற்றவர்கள் பார்க்கும்படி அவர்களைக் கொன்றுவிடு. அவர்களின் பிணங்களை என் பார்வையில் தூக்கில் போடு. பிறகு மற்ற இஸ்ரவேல் ஜனங்கள் மீது நான் கோபம் கொள்ளாமல் இருப்பேன்” என்றார். எனவே மோசே இஸ்ரவேலின் நீதிபதிகளிடம், “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் கோத்திரங்களில், பாகால் பேயோர் போன்ற போலியான தெய்வங்களை வணங்க அழைத்துப் போனவர்களை கண்டு பிடித்து, அவர்களைக் கொல்லவேண்டும்” என்றார். அதே நேரத்தில் மோசேயும் இஸ்ரவேலரின் மூப்பர்களும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூடினார்கள். இஸ்ரவேலன் ஒருவன் மீதியானிய பெண் ஒருத்தியைத் தன் சகோதரனின் குடியிருப்பிற்கு அழைத்துப் போனதை மோசேயும் மற்ற தலைவர்களும் பார்த்து மிகவும் வருத்தப்பட்டனர். இதை ஆரோனின் பேரனும், எலெயாசாரின் மகனுமான பினெகாசும் பார்த்தான். ஒரு பெண்ணைக் கூடாரத்திற்கு இஸ்ரவேலன் அழைத்துச் செல்வதை அந்த ஆசாரியன் பார்த்ததும் தன் ஈட்டியை எடுத்துக்கொண்டான். அவனும் அக்கூடாரத்திற்குள் பின் தொடர்ந்து சென்றான். அந்த ஈட்டியால் இஸ்ரவேலனையும் மீதியானியப் பெண்ணையும் கூடாரத்திலேயே கொன்றான். இருவரையும் ஒருசேர ஈட்டியால் குத்திக் கொன்றுவிட்டான். அதே நேரத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் நோய் பரவிவிட்டது. பினெகாஸ் அவர்களைக் கொன்றதும் நோய் நிறுத்தப்பட்டது. அந்நோயால் 24,000 ஜனங்கள் மரித்துப் போனார்கள். கர்த்தர் மோசேயை நோக்கி, “நான் ஜனங்கள் மீது மிகுந்த கோபம் கொண்டிருந்தேன். அவர்கள் எனக்கு மட்டுமே சொந்தமானவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆரோனின் குமாரனான எலெயாசாரின் குமாரன் பினெகாஸ் இஸ்ரவேல் ஜனங்களை என் கோபத்திலிருந்து காப்பாற்றினான். எனவே, நான் அவர்களைக் கொல்லவில்லை. நான் அவனோடு சமாதான உடன்படிக்கைச் செய்துகொள்வேன் என்று பினெகாசிடம் கூறுங்கள். அவனும் அவனது குடும்பத்திலுள்ளவர்களும், அவனுக்குப் பின் வாழும் சந்ததியினரும் எப்போதும் ஆசாரியர்களாக இருப்பார்கள். ஏனென்றால் அவனுக்கு தேவன் மீது பலமான பக்தியுள்ளது. இஸ்ரவேல் ஜனங்களை சுத்தப்படுத்தும் செயல்களை அவன் செய்துவிட்டான்” என்றார். மீதியானியப் பெண்ணோடு கொல்லப்பட்ட இஸ்ரவேலனின் பெயர் சிம்ரி. இவன் சாலூவின் குமாரன். இவன் சிமியோன் கோத்திரத்திலுள்ள தலைவன். கொல்லப்பட்ட மீதியானிய பெண்ணின் பெயர் கஸ்பி. அவள் சூரின் குமாரத்தி. சூர் மீதியானியக் கோத்திரத்தின் தலைவனாகவும். குடும்பத் தலைவனாகவும் விளங்கினான். கர்த்தர் மோசேயிடம் “மீதியானிய ஜனங்கள் உங்கள் பகைவர்கள். நீ அவர்களை கொல்ல வேண்டும். அவர்கள் ஏற்கெனவே உங்கள் அனைவரையும் பகைக்கின்றனர். பேயோரில் அவர்கள் தந்திரம் செய்தனர். அவர்கள் கஸ்பி என்ற பெண் மூலம் உங்களிடம் தந்திரம் செய்தனர். அவள் மீதியானிய தலைவரின் குமாரத்தி. ஆனால் இஸ்ரவேல் ஜனங்களை அழிக்கும் நோய் வந்தபோது அவள் கொல்லப்பட்டாள். ஜனங்கள் தந்திரத்திற்குட்பட்டு பாகால்பேயார் போன்ற பொய்யான தேவர்களை வணங்கியதால் இந்நோய் ஏற்பட்டது” என்றார்.

எண்ணாகமம் 25:1-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கையில், ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே வேசித்தனம் பண்ணத்தொடங்கினார்கள். அவர்கள் தங்கள் தேவர்களுக்கு இட்ட பலிகளை விருந்துண்ணும்படி ஜனங்களை அழைத்தார்கள்; ஜனங்கள் போய்ப் புசித்து, அவர்கள் தேவர்களைப் பணிந்துகொண்டார்கள். இப்படி இஸ்ரவேலர் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டார்கள்; அதனால் இஸ்ரவேலர்மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது. கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடைய உக்கிரமான கோபம் இஸ்ரவேலை விட்டு நீங்கும்படி நீ ஜனங்களின் தலைவர் எல்லாரையும் கூட்டிக்கொண்டு, அப்படிச் செய்தவர்களைச் சூரியனுக்கு எதிரே கர்த்தருடைய சந்நிதானத்தில் தூக்கிப்போடும்படி செய் என்றார். அப்படியே மோசே இஸ்ரவேலின் நியாயாதிபதிகளை நோக்கி: நீங்கள் அவரவர் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்ட உங்கள் மனிதரைக் கொன்றுபோடுங்கள் என்றான். அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் அனைவரும் ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக அழுதுகொண்டு நிற்கையில், அவர்கள் கண்களுக்கு முன்பாக இஸ்ரவேல் புத்திரரில் ஒருவன் ஒரு மீதியானிய ஸ்திரீயைத் தன் சகோதரரிடத்தில் அழைத்துக்கொண்டுவந்தான். அதை ஆசாரியனாகிய ஆரோனின் குமாரனான எலெயாசாரின் மகன் பினெகாஸ் கண்டபோது, அவன் நடுச்சபையிலிருந்து எழுந்து, ஒரு ஈட்டியைத் தன்கையிலே பிடித்து, இஸ்ரவேலனாகிய அந்த மனிதன் வேசித்தனம்பண்ணும் அறையிலே அவன் பின்னாலே போய், இஸ்ரவேல் மனிதனும் அந்த ஸ்திரீயுமாகிய இருவருடைய வயிற்றிலும் ஈட்டி உருவிப்போக அவர்களைக் குத்திப்போட்டான்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரில் உண்டான வாதை நின்றுபோயிற்று. அந்த வாதையால் செத்தவர்கள் இருபத்துநாலாயிரம்பேர். கர்த்தர் மோசேயை நோக்கி: நான் என் எரிச்சலில் இஸ்ரவேல் புத்திரரை நிர்மூலமாக்காதபடிக்கு, ஆசாரியனாகிய ஆரோனின் குமாரனான எலெயாசாரின் மகன் பினெகாஸ், என் நிமித்தம் அவர்கள் நடுவில் பக்திவைராக்கியம் காண்பித்ததினால், இஸ்ரவேல் புத்திரர்மேல் உண்டான என் உக்கிரத்தைத் திருப்பினான். ஆகையால், இதோ, அவனுக்கு என் சமாதானத்தின் உடன்படிக்கையைக் கட்டளையிடுகிறேன். அவன் தன் தேவனுக்காக பக்திவைராக்கியம் காண்பித்து, இஸ்ரவேல் புத்திரருக்காகப் பாவநிவிர்த்தி செய்தபடியினால், அவனுக்கும் அவனுக்குப் பின்பு அவன் சந்ததிக்கும் நித்திய ஆசாரிய பட்டத்திற்குரிய உடன்படிக்கை உண்டாயிருக்கும் என்று சொல் என்றார். மீதியானிய ஸ்திரீயோடே குத்துண்டு செத்த இஸ்ரவேல் மனிதருடைய பேர் சிம்ரி; அவன் சல்லூவின் குமாரனும், சிமியோனியரின் தகப்பன் வம்சத்தில் ஒரு பிரபுவுமாயிருந்தான். குத்துண்ட மீதியானிய ஸ்திரீயின் பேர் கஸ்பி, அவள் சூரின் குமாரத்தி, அவன் மீதியானியருடைய தகப்பன் வம்சத்தாரான ஜனங்களுக்குத் தலைவனாயிருந்தான். கர்த்தர் மோசேயை நோக்கி: மீதியானியரை நெருக்கி அவர்களை வெட்டிப்போடுங்கள். பேயோரின் சங்கதியிலும் பேயோரின் நிமித்தம் வாதையுண்டான நாளிலே குத்துண்ட அவர்கள் சகோதரியாகிய கஸ்பி என்னும் மீதியான் பிரபுவினுடைய குமாரத்தியின் சங்கதியிலும், அவர்கள் உங்களுக்குச் செய்த சர்ப்பனைகளினால் உங்களை மோசம்போக்கி நெருக்கினார்களே என்றார்.