எண்ணாகமம் 21:1-9

எண்ணாகமம் 21:1-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

தெற்கு பகுதியில் வாழ்ந்த கானானியனான ஆராத் பட்டணத்து அரசன், இஸ்ரயேலர் அத்தரீமுக்குப் போகிறவழியாய் வருகிறதைக் கேள்விப்பட்டான். உடனே அவன் இஸ்ரயேலரைத் தாக்கி சிலரைச் சிறைப்பிடித்தான். அப்பொழுது இஸ்ரயேலர் யெகோவாவிடம்: “நீர் இந்த மக்களை விடுவித்து எங்கள் கையில் கொடுத்தால், நாங்கள் அவர்கள் பட்டணத்தை முழுவதும் அழித்துப்போடுவோம்” என்று நேர்த்திக்கடன் செய்தார்கள். யெகோவா இஸ்ரயேலரின் வேண்டுதலுக்குச் செவிகொடுத்து, கானானியரை அவர்களிடம் ஒப்படைத்தார். அப்பொழுது இஸ்ரயேலர் அவர்களையும், அவர்கள் பட்டணங்களையும் முழுவதும் அழித்தார்கள். அதனால் அவ்விடம், ஓர்மா என்று அழைக்கப்பட்டது. அவர்கள் ஓர் என்னும் மலையிலிருந்து செங்கடலுக்குப் போகும் வழியாக ஏதோமைச் சுற்றிப்போகும்படி பயணம் செய்தார்கள். ஆனால் மக்களோ வழியில் பொறுமையை இழந்தார்கள். அவர்கள் இறைவனுக்கும், மோசேக்கும் விரோதமாகப் பேசி, “பாலைவனத்தில் செத்துப்போகும்படி எங்களை எகிப்திலிருந்து வெளியே ஏன் கொண்டுவந்தீர்கள்? இங்கே அப்பமும் இல்லை, தண்ணீரும் இல்லை. இந்த கேவலமான உணவை நாங்கள் அருவருக்கிறோம்” என்றார்கள். அப்பொழுது யெகோவா அவர்களுக்குள்ளே விஷப்பாம்புகளை அனுப்பினார். அவை மக்களைக் கடித்ததினால் இஸ்ரயேலரில் பலர் இறந்தார்கள். எனவே மக்கள் மோசேயிடம் வந்து, “நாங்கள் யெகோவாவுக்கும், உமக்கும் விரோதமாய்ப் பேசியதனால் பாவம்செய்தோம். இந்தப் பாம்புகளை எங்களைவிட்டு அகற்றும்படி யெகோவாவிடம் மன்றாடும்” என்றார்கள். அப்பொழுது மோசே மக்களுக்காக மன்றாடினான். யெகோவா மோசேயிடம், “நீ ஒரு பாம்பைச் செய்து, ஒரு கம்பத்தின்மேல் வைத்து உயர்த்திவை. கடிக்கப்பட்டவன் எவனும் அதைப்பார்த்தால் பிழைப்பான்” என்றார். அவ்வாறே மோசே வெண்கலத்தினால் ஒரு பாம்பைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் உயர்த்திவைத்தான். பாம்பினால் கடிக்கப்பட்ட எவனும் வெண்கலப்பாம்பை நோக்கிப் பார்த்தபோது பிழைத்தான்.

எண்ணாகமம் 21:1-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

வேவுகாரர்கள் காண்பித்த வழியாக இஸ்ரவேலர்கள் வருகிறார்கள் என்று தெற்கே வாழ்கிற கானானியனாகிய ஆராத் ராஜா கேள்விப்பட்டபோது, அவன் இஸ்ரவேலர்களுக்கு எதிராக யுத்தம் செய்து, அவர்களில் சிலரைச் சிறைபிடித்துக்கொண்டுபோனான். அப்பொழுது இஸ்ரவேலர்கள் யெகோவாவை நோக்கி: “தேவரீர் இந்த மக்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுத்தால், அவர்களுடைய பட்டணங்களைச் அழிப்போம்” என்று சபதம் செய்தார்கள். யெகோவா இஸ்ரவேலின் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவர்களுக்குக் கானானியர்களை ஒப்புக்கொடுத்தார்; அப்பொழுது அவர்களையும் அவர்களுடைய பட்டணங்களையும் அழித்து, அந்த இடத்திற்கு ஓர்மா என்று பெயரிட்டார்கள். அவர்கள் ஏதோம் தேசத்தைச் சுற்றிப்போகும்படி, ஓர் என்னும் மலையைவிட்டு, சிவந்த சமுத்திரத்தின் வழியாகப் பயணம்செய்தார்கள்; வழிப்பயணத்தின் காரணமாக மக்கள் மனவேதனையடைந்தார்கள். மக்கள் தேவனுக்கும் மோசேக்கும் விரோதமாகப் பேசி: “நாங்கள் வனாந்திரத்திலே சாகும்படி நீங்கள் எங்களை எகிப்து தேசத்திலிருந்து வரச்செய்தது ஏன்? இங்கே அப்பமும் இல்லை, தண்ணீரும் இல்லை; இந்த அற்பமான உணவு எங்களுடைய மனதிற்கு வெறுப்பாக இருக்கிறது என்றார்கள். அப்பொழுது யெகோவா விஷமுள்ள பாம்புகளை மக்களுக்குள்ளே அனுப்பினார்; அவைகள் மக்களைக் கடித்ததினால் இஸ்ரவேலர்களுக்குள்ளே அநேக மக்கள் இறந்தார்கள். அதினால் மக்கள் மோசேயினிடத்தில் போய்: “நாங்கள் யெகோவாவுக்கும் உமக்கும் விரோதமாகப் பேசினதினால் பாவம்செய்தோம்; பாம்புகள் எங்களைவிட்டு நீங்கும்படி யெகோவாவை நோக்கி விண்ணப்பம் செய்யவேண்டும்” என்றார்கள்; மோசே மக்களுக்காக விண்ணப்பம்செய்தான். அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ ஒரு விஷமுள்ள பாம்பின் உருவத்தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை; கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப்பார்த்தால் பிழைப்பான் என்றார். அப்படியே மோசே ஒரு வெண்கலப் பாம்பை உண்டாக்கி, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவைத்தான்; பாம்பு ஒருவனைக் கடித்தபோது, அவன் அந்த வெண்கலப் பாம்பை நோக்கிப்பார்த்துப் பிழைப்பான்.

எண்ணாகமம் 21:1-9 பரிசுத்த பைபிள் (TAERV)

கானானிய ஜனங்களுக்கு ஆராத் என்ற ராஜா இருந்தான். அவன் பாலைவனத்தின் தென் பகுதியில் குடி இருந்தான். இஸ்ரவேல் ஜனங்கள் அத்தாரீம் சாலைவழியாக வருகிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டான். உடனே அவன் படைவீரர்களை அனுப்பி இஸ்ரவேல் ஜனங்களைத் தாக்கினான். ஆராத் சிலரைக் கைது செய்து சிறையில் அடைத்தான். பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரிடம் ஒரு விசேஷ வேண்டுதல் செய்தனர். அவர்கள், “கர்த்தாவே! இந்த ஜனங்களை வெல்ல எங்களுக்கு உதவும். நீர் இவ்வாறு செய்தால் அவர்களின் நகரங்களை உமக்கு அர்ப்பணிப்போம். நாங்கள் அவர்களை முழுமையாக அழித்துவிடுவோம்” என்று கூறினார்கள். இஸ்ரவேல் ஜனங்களின் வேண்டுதலை கர்த்தர் கேட்டார். இஸ்ரவேல் ஜனங்கள் கானானியர்களை வெல்வதற்கு கர்த்தர் உதவி செய்தார். இஸ்ரவேல் ஜனங்கள் கானானியர்களை முழுமையாக அழித்தனர். அவர்களின் நகரங்களும் அழிக்கப்பட்டன. எனவே அந்த இடத்திற்கு ஓர்மா என்று பெயரிட்டனர். ஓர் என்ற மலையை விட்டு இஸ்ரவேல் ஜனங்கள் செங்கடலுக்குச் செல்லும் சாலை வழியாகப் பயணம் செய்தனர். ஏதோம் நாட்டைச் சுற்றிக்கொண்டு அவர்கள் சென்றனர். இதனால் ஜனங்கள் பொறுமை இழந்தனர். அவர்கள் தேவனுக்கும் மோசேக்கும் எதிராக முறுமுறுக்கத் துவங்கினார்கள். அவர்கள், “ஏன் எங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தீர்? நாங்கள் இங்கே பாலைவனத்தில் மரித்துக்கொண்டிருக்கிறோம்! உண்ண அப்பம் இல்லை! தண்ணீர் இல்லை! இந்த அற்பமான உணவை நாங்கள் வெறுக்கிறோம்!” என்றனர். எனவே, கர்த்தர் விஷமுள்ள பாம்புகளை அனுப்பினார். அவை அவர்களைக் கடித்தன. அநேக இஸ்ரவேல் ஜனங்கள் மரணமடைந்தனர். ஜனங்கள் மோசேயிடம் வந்து, “நாங்கள் உமக்கும் கர்த்தருக்கும் எதிராகப் பேசும்போதெல்லாம் பாவம் செய்வதாக அறிகிறோம். கர்த்தரிடம் ஜெபம் செய்யும். இப்பாம்புகள் அகலும்படி கர்த்தரிடம் வேண்டுதல் செய்யும்” என்றனர். மோசே ஜனங்களுக்காக வேண்டினான். கர்த்தர் மோசேயிடம், “வெண்கலத்தால் ஒரு பாம்பு செய்து அதனைக் கம்பத்தின் மேல் வை. பாம்பால் கடிக்கப்பட்ட எவனும் கம்பத்தில் உள்ள பாம்பைப் பார்த்தால் மரிக்கமாட்டான்” என்றார். எனவே மோசே கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து ஒரு வெண்கல சர்ப்பத்தை உண்டுபண்ணி அதனைக் கம்பத்தில் வைத்தான். பாம்பால் கடிக்கப்பட்டவர்கள் கம்பத்தில் உள்ள பாம்பைப் பார்த்து உயிர்பிழைத்தனர்.

எண்ணாகமம் 21:1-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

வேவுகாரர் காண்பித்த வழியாக இஸ்ரவேலர் வருகிறார்கள் என்று தெற்கே வாசம்பண்ணுகிற கானானியனாகிய ஆராத் ராஜா கேள்விப்பட்டபோது, அவன் இஸ்ரவேலருக்கு விரோதமாக யுத்தம் பண்ணி, அவர்களில் சிலரைச் சிறைபிடித்துக்கொண்டுபோனான். அப்பொழுது இஸ்ரவேலர் கர்த்தரை நோக்கி: தேவரீர் இந்த ஜனங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுத்தால், அவர்களுடைய பட்டணங்களைச் சங்காரம்பண்ணுவோம் என்று பிரதிக்கினை பண்ணினார்கள். கர்த்தர் இஸ்ரவேலின் சத்தத்துக்குச் செவிகொடுத்து, அவர்களுக்குக் கானானியரை ஒப்புக்கொடுத்தார்; அப்பொழுது அவர்களையும் அவர்கள் பட்டணங்களையும் சங்காரம்பண்ணி, அவ்விடத்திற்கு ஓர்மா என்று பேரிட்டார்கள். அவர்கள் ஏதோம் தேசத்தைச் சுற்றிப்போகும்படிக்கு, ஓர் என்னும் மலையைவிட்டு, சிவந்த சமுத்திரத்தின் வழியாய்ப் பிரயாணம்பண்ணினார்கள்; வழியினிமித்தம் ஜனங்கள் மனமடிவடைந்தார்கள். ஜனங்கள் தேவனுக்கும் மோசேக்கும் விரோதமாகப் பேசி: நாங்கள் வனாந்தரத்திலே சாகும்படி நீங்கள் எங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணினதென்ன? இங்கே அப்பமும் இல்லை, தண்ணீரும் இல்லை; இந்த அற்பமான உணவு எங்கள் மனதுக்கு வெறுப்பாயிருக்கிறது என்றார்கள். அப்பொழுது கர்த்தர் கொள்ளிவாய்ச் சர்ப்பங்களை ஜனங்களுக்குள்ளே அனுப்பினார்; அவைகள் ஜனங்களைக் கடித்ததினால் இஸ்ரவேலருக்குள்ளே அநேக ஜனங்கள் செத்தார்கள். அதினால் ஜனங்கள் மோசேயினிடத்தில் போய்: நாங்கள் கர்த்தருக்கும் உமக்கும் விரோதமாய்ப் பேசினதினால் பாவஞ்செய்தோம்; சர்ப்பங்கள் எங்களைவிட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றார்கள்; மோசே ஜனங்களுக்காக விண்ணப்பம்பண்ணினான். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஒரு கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் உருவத்தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை; கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப்பார்த்தால் பிழைப்பான் என்றார். அப்படியே மோசே ஒரு வெண்கலச்சர்ப்பத்தை உண்டாக்கி, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவைத்தான்; சர்ப்பம் ஒருவனைக் கடித்தபோது, அவன் அந்த வெண்கலச் சர்ப்பத்தை நோக்கிப்பார்த்துப் பிழைப்பான்.