எண்ணாகமம் 20:2-12

எண்ணாகமம் 20:2-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இஸ்ரயேல் சமுதாயத்தினருக்கு அங்கே தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே மக்கள் மோசேக்கும், ஆரோனுக்கும் விரோதமாக ஒன்றுகூடினார்கள். அவர்கள் மோசேயுடன் வாக்குவாதம்பண்ணிச் சொன்னதாவது, “எங்கள் சகோதரர்கள் யெகோவா முன்பாக செத்து விழுந்தபோது நாங்களும் செத்திருக்கலாமே! நாங்களும், எங்கள் கால்நடைகளும் சாகும்படியாக நீ ஏன் யெகோவாவின் மக்களை இந்தப் பாலைவனத்திற்குக் கொண்டுவந்தாய்? நீ ஏன் எங்களை எகிப்திலிருந்து வெளியே, இந்த அவலம் நிறைந்த இடத்திற்குக் கொண்டுவந்தாய்? இங்கே தானியமோ, அத்திப்பழங்களோ, திராட்சைக்கொடிகளோ, மாதுளம்பழங்களோ இல்லை. குடிப்பதற்குத் தண்ணீரும் இல்லை” என்றார்கள். அதைக்கேட்ட மோசேயும், ஆரோனும் மக்கள் கூட்டத்தைவிட்டு சபைக் கூடாரவாசலுக்கு வந்து முகங்குப்புற விழுந்தார்கள், அவ்வேளையில் யெகோவாவினுடைய மகிமை அவர்கள்முன் தோன்றியது. யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, “நீ கோலை எடுத்துக்கொள். நீயும், உன் சகோதரன் ஆரோனும் மக்கள் சபையை ஒன்றுகூட்டுங்கள். அவர்கள் கண்களுக்கு முன்பாக நீ அக்கற்பாறையைப் பார்த்து பேசு. அதிலிருந்து அதன் தண்ணீர் பொங்கிவரும். நீ கற்பாறையிலிருந்து இந்த மக்கள் சமுதாயத்திற்குத் தண்ணீரை வரப்பண்ணுவாய். அவர்களும் அவர்களுடைய மிருகங்களும் குடிப்பார்கள்” என்றார். யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே அவர் முன்னிருந்த கோலை எடுத்தான். அவனும், ஆரோனும் கற்பாறைக்கு முன்பாக மக்கள் சபையை ஒன்றுகூட்டினார்கள். மோசே அவர்களிடம், “கலகக்காரரே, கேளுங்கள், இந்தக் கற்பாறையிலிருந்து நாங்கள் உங்களுக்குத் தண்ணீரை வரப்பண்ணவேண்டுமோ?” என்று கேட்டான். பின்பு மோசே தன் கையை உயர்த்தி, தனது கோலினால் கற்பாறையை இரண்டுமுறை அடித்தான். அப்பொழுது தண்ணீர் பீறிட்டுப் பாய்ந்து வந்தது. மக்கள் கூட்டத்தினர் தாங்களும் குடித்து, தங்கள் வளர்ப்பு மிருகங்களுக்கும் குடிக்கக் கொடுத்தார்கள். ஆனால் யெகோவா மோசேயிடமும், ஆரோனிடமும் சொன்னதாவது, “நீங்கள் என்னைக் கனம்பண்ணும் அளவுக்கு என்னில் நம்பிக்கை வைக்கவில்லை. இஸ்ரயேலருக்கு முன்பாக என்னைப் பரிசுத்த இறைவனாகக் கனம்பண்ணவில்லை. எனவே நான் இந்த சமுதாயத்திற்குக் கொடுக்கும் நாட்டிற்கு நீங்கள் அவர்களைக் கொண்டுபோகமாட்டீர்கள்” என்றார்.

எண்ணாகமம் 20:2-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மக்களுக்குத் தண்ணீர் இல்லாமல் இருந்தது; அப்பொழுது அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டம்கூடினார்கள். மக்கள் மோசேயோடு வாக்குவாதம்செய்து: “எங்களுடைய சகோதரர்கள் யெகோவாவுடைய சந்நிதியில் இறந்தபோது நாங்களும் இறந்துபோயிருந்தால் நலமாக இருக்கும். நாங்களும் எங்களுடைய மிருகங்களும் இங்கே இறக்கும்படி, நீங்கள் யெகோவாவின் சபையை இந்த வனாந்திரத்திலே கொண்டு வந்தது என்ன; விதைப்பும், அத்திமரமும், திராட்சைச்செடியும், மாதுளஞ்செடியும், குடிக்கத்தண்ணீரும் இல்லாத இந்தக் கெட்ட இடத்தில் எங்களைக் கொண்டுவரும்படி, நீங்கள் எங்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்தது ஏன்” என்றார்கள். அப்பொழுது மோசேயும் ஆரோனும் சபையாரைவிட்டு, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் போய், முகங்குப்புற விழுந்தார்கள்; யெகோவாவுடைய மகிமை அவர்களுக்குக் காணப்பட்டது. யெகோவா மோசேயை நோக்கி: “நீ கோலை எடுத்துக்கொண்டு, நீயும் உன்னுடைய சகோதரனாகிய ஆரோனும் சபையாரைக் கூடிவரச்செய்து, அவர்கள் கண்களுக்குமுன்னே கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள்; அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும்; இப்படி நீ அவர்களுக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படச்செய்து, சபையாருக்கும் அவர்களுடைய மிருகங்களுக்கும் குடிக்கக் கொடுப்பாய்” என்றார். அப்பொழுது மோசே தனக்குக் யெகோவா கட்டளையிட்டபடியே யெகோவாவுடைய சந்நிதியிலிருந்த கோலை எடுத்தான். மோசேயும் ஆரோனும் சபையாரைக் கன்மலைக்கு முன்பாகக் கூடிவரச்செய்தார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: “கலகக்காரரே, கேளுங்கள், உங்களுக்கு இந்தக் கன்மலையிலிருந்து நாங்கள் தண்ணீர் புறப்படச்செய்வோமோ” என்று சொல்லி, தன்னுடைய கையை ஓங்கி, கன்மலையைத் தன்னுடைய கோலினால் இரண்டுமுறை அடித்தான்; உடனே தண்ணீர் ஏராளமாகப் புறப்பட்டது, சபையார் குடித்தார்கள்; அவர்கள் மிருகங்களும் குடித்தது. பின்பு யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி: “இஸ்ரவேல் மக்கள் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம்செய்யும்படி, நீங்கள் என்னை விசுவாசிக்காமல் போனதால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்திற்குள் நீங்கள் அவர்களைக் கொண்டுபோவதில்லை” என்றார்.

எண்ணாகமம் 20:2-12 பரிசுத்த பைபிள் (TAERV)

அந்த இடத்தில் ஜனங்களுக்குப் போதுமான தண்ணீர் இல்லை. எனவே ஜனங்கள் ஒன்று கூடி வந்து இதைப்பற்றி மோசேயிடமும் ஆரோனிடமும் முறையிட்டனர். அவர்கள், மோசேயிடம் விவாதித்து, “எங்கள் சகோதரர்களைப் போலவே நாங்களும் இந்த இடத்தில் கர்த்தர் முன்னால் மரித்துப்போயிருக்கவேண்டும்? எதற்காக கர்த்தருடைய ஜனங்களை இந்தப் பாலைவனத்துக்கு அழைத்து வந்தீர்கள்? நாங்களும் எங்கள் மிருகங்களும் இங்கேயே மரித்துப் போகவேண்டும் என்று விரும்புகின்றீரா? எங்களை எகிப்திலிருந்து இந்த மோசமான இடத்திற்கு ஏன் அழைத்து வந்தீர்கள்? இங்கே தானியங்கள் இல்லை. அத்திமரமும், திராட்சை செடிகளும், மாதளஞ் செடியும், குடிக்க தண்ணீர் கூட இல்லையே” என்றனர். எனவே, மோசேயும் ஆரோனும் கூட்டத்தை விட்டு விலகி ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலுக்குச் சென்று அங்கே அவர்கள் தரையில் விழுந்து வணங்கினார்கள். கர்த்தருடைய மகிமை அவர்களுக்குக் காணப்பட்டது. கர்த்தர் மோசேயோடு பேசினார். அவர், “சிறப்புக்குரிய உன் கைத் தடியை எடுத்துக்கொள். உனது சகோதரன் ஆரோனையும் ஜனங்கள் கூட்டத்தையும் அழைத்துக்கொண்டு பாறையின்மீது போ. ஜனங்கள் முன்னால் பாறையோடு பேசு. பிறகு பாறையிலிருந்து தண்ணீர் சுரந்து வரும். அந்த தண்ணீரை நீ ஜனங்களுக்கும் மிருகங்களுக்கும் தரலாம்” என்றார். பரிசுத்தக் கூடாரத்திற்குள் கர்த்தர் முன்னிலையில் கைத்தடி இருந்தது. கர்த்தர் சொன்னபடியே மோசே கைத்தடியை எடுத்துக்கொண்டான். மோசேயும், ஆரோனும் ஜனங்களிடம் பாறையின் முன்னால் கூடுமாறு சொன்னார்கள். பிறகு மோசே, “நீங்கள் எப்போதும் முறையிடுகிறீர்கள். இப்போது நான் சொல்வதைக் கவனியுங்கள். நான் இந்த பாறையிலிருந்து தண்ணீர் வரும்படி செய்வேன்” என்றான். மோசே தன் கையை உயர்த்தி பாறையின் மீது தனது கோலால் இருமுறை அடித்தான். தண்ணீர் பாறையிலிருந்து பீறிட்டு வெளியே வந்தது. ஜனங்களும் மிருகங்களும் அந்த தண்ணீரைக் குடித்தனர். ஆனால் கர்த்தர் மோசேயிடமும் ஆரோனிடமும், “அனைத்து இஸ்ரவேல் ஜனங்களும் இங்கே கூடியுள்ளனர். ஆனால் நீங்கள் என்னை கனப்படுத்தவில்லை. தண்ணீரை பெறும் வல்லமை என்னிடமிருந்து வந்ததை நீங்கள் ஜனங்களுக்கு காண்பிக்கவில்லை. நீங்கள் என்னில் நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் என்பதையும் ஜனங்களிடம் காட்டவில்லை. ஆகையால் நான் அவர்களுக்கு கொடுக்கப்போகும் தேசத்திற்குள் நீங்கள் ஜனங்களை அழைத்துக்கொண்டு செல்லமாட்டீர்கள்!” என்றார்.

எண்ணாகமம் 20:2-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஜனங்களுக்குத் தண்ணீர் இல்லாதிருந்தது; அப்பொழுது அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டங்கூடினார்கள். ஜனங்கள் மோசேயோடே வாக்குவாதம்பண்ணி: எங்கள் சகோதரர் கர்த்தருடைய சந்நிதியில் மாண்டபோது நாங்களும் மாண்டுபோயிருந்தால் நலமாயிருக்கும். நாங்களும் எங்கள் மிருகங்களும் இங்கே சாகும்படி, நீங்கள் கர்த்தரின் சபையை இந்த வனாந்தரத்திலே கொண்டு வந்தது என்ன; விதைப்பும், அத்திமரமும், திராட்சச்செடியும், மாதளஞ்செடியும், குடிக்கத்தண்ணீரும் இல்லாத இந்தக் கெட்ட இடத்தில் எங்களைக் கொண்டுவரும்படி, நீங்கள் எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினது என்ன என்றார்கள். அப்பொழுது மோசேயும் ஆரோனும் சபையாரைவிட்டு, ஆசரிப்புக் கூடாரவாசலில் போய், முகங்குப்புற விழுந்தார்கள்; கர்த்தருடைய மகிமை அவர்களுக்குக் காணப்பட்டது. கர்த்தர் மோசேயை நோக்கி: நீ கோலை எடுத்துக்கொண்டு, நீயும் உன் சகோதரனாகிய ஆரோனும் சபையாரைக் கூடிவரச்செய்து, அவர்கள் கண்களுக்குமுன்னே கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள்; அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும்; இப்படி நீ அவர்களுக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி, சபையாருக்கும் அவர்கள் மிருகங்களுக்கும் குடிக்கக் கொடுப்பாய் என்றார். அப்பொழுது மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே கர்த்தருடைய சந்நிதியிலிருந்த கோலை எடுத்தான். மோசேயும் ஆரோனும் சபையாரைக் கன்மலைக்கு முன்பாகக் கூடிவரச்செய்தார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: கலகக்காரரே, கேளுங்கள், உங்களுக்கு இந்தக் கன்மலையிலிருந்து நாங்கள் தண்ணீர் புறப்படப்பண்ணுவோமோ என்று சொல்லி, தன் கையை ஓங்கி, கன்மலையைத் தன் கோலினால் இரண்டுதரம் அடித்தான்; உடனே தண்ணீர் ஏராளமாய்ப் புறப்பட்டது, சபையார் குடித்தார்கள்; அவர்கள் மிருகங்களும் குடித்தது. பின்பு கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம்பண்ணும்படி, நீங்கள் என்னை விசுவாசியாமற்போனபடியினால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்துக்குள் நீங்கள் அவர்களைக் கொண்டுபோவதில்லை என்றார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்