எண்ணாகமம் 19:1-22

எண்ணாகமம் 19:1-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பின்பு யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும் சொன்னதாவது: “யெகோவா கட்டளையிட்டிருக்கிற சட்டத்தின் நியமம் இதுவே: குறைபாடற்றதும், ஊனமற்றதும், ஒருபோதும் நுகம் சுமக்காததுமான சிவப்புநிற கன்னிப்பசுவைக் கொண்டுவரும்படி இஸ்ரயேலரிடம் சொல்லுங்கள். அதை ஆசாரியன் எலெயாசாரிடம் கொடுங்கள். அது முகாமுக்கு வெளியே கொண்டுபோகப்பட்டு, அவன் முன்னிலையில் கொல்லப்படவேண்டும். பின்பு ஆசாரியன் எலெயாசார் அதன் இரத்தத்தைத் தன் விரலினால் தொட்டு, அதை சபைக் கூடாரத்திற்கு முன்பக்கத்தை நோக்கி ஏழுமுறை தெளிக்கவேண்டும். பின்பு, ஆசாரியன் பார்த்துக்கொண்டிருக்கையில் அதன் தோல், இறைச்சி, இரத்தம், குடல் உட்பட அந்தக் கன்னிப்பசு எரிக்கப்படவேண்டும். ஆசாரியன் கேதுருமரக்கட்டை, ஈசோப்புக்குழை, கருஞ்சிவப்புக் கம்பளிநூல் ஆகியவற்றில் கொஞ்சத்தை எடுத்து, எரிந்துகொண்டிருக்கும் கன்னிப்பசுவின்மேல் போடவேண்டும். அதன்பின், ஆசாரியன் தன் உடைகளைக் கழுவி முழுகவேண்டும். பின்பு அவன் முகாமுக்குள் போகலாம். ஆனாலும் அவன் மாலைவரை சம்பிரதாய முறைப்படி அசுத்தமாயிருப்பான். அந்தப் பசுவை எரித்த மனிதனும் தன் உடைகளைக் கழுவி முழுகவேண்டும். அவனும் மாலைவரை அசுத்தமாயிருப்பான். “சுத்தமாயிருக்கும் ஒரு மனிதன் அந்தப் பசுவின் சாம்பலைச் சேர்த்து அள்ளி, முகாமுக்கு வெளியே சம்பிரதாய முறைப்படி சுத்தமான ஒரு இடத்தில் கொட்டவேண்டும். இஸ்ரயேல் சமுதாயத்தினர் சுத்திகரிக்கும் தண்ணீரில் உபயோகிப்பதற்காக அந்தச் சாம்பலை வைத்துக்கொள்ள வேண்டும். பாவத்திலிருந்து சுத்திகரிப்பதற்கு அது பயன்படுத்தப்படும். அந்தப் பசுவின் சாம்பலை அள்ளும் மனிதனும் தன் உடைகளைக் கழுவவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமுள்ளவனாயிருப்பான். இது இஸ்ரயேலருக்கும், அவர்களுடன் வாழும் அந்நியருக்கும் நிரந்தர நியமமாய் இருக்கும். “ஒரு மனிதனின் சடலத்தைத் தொடுகிற எவனும் ஏழுநாட்களுக்கு அசுத்தமுள்ளவனாய் இருப்பான். அம்மனிதன் மூன்றாம் நாளும், ஏழாம் நாளும் அந்த தண்ணீரினால் தன்னைச் சுத்திகரிக்கவேண்டும். அப்பொழுது அவன் சுத்தமாவான். ஆனால் அவன் மூன்றாம் நாளும், ஏழாம் நாளும் தன்னைச் சுத்திகரியாவிட்டால் அவன் சுத்தமாகமாட்டான். ஒரு மனிதனின் சடலத்தைத் தொடுகிற எவனும் தன்னைச் சுத்திகரிக்கத் தவறினால், அவன் யெகோவாவின் இறைசமுகக் கூடாரத்தை அசுத்தப்படுத்துகிறான். அவன் இஸ்ரயேலில் இருந்து அகற்றப்படவேண்டும். அந்தச் சுத்திகரிப்பின் தண்ணீர் அவன்மேல் தெளிக்கப்படாதபடியால், அவன் அசுத்தமாய் இருக்கிறான். அவனுடைய அசுத்தம் அவன் மேலேயே இருக்கிறது. “கூடாரம் ஒன்றில் ஒரு மனிதன் இறந்தால், அதற்குரிய சட்டம் இதுவே: கூடாரத்திற்குள் வரும் எவனும், கூடாரத்திற்குள் இருப்பவன் எவனும் ஏழுநாட்களுக்கு அசுத்தமாயிருப்பான். மூடியினால் பூட்டப்படாமல் திறந்தபடியே இருக்கும் கொள்கலன்கள் யாவும் அசுத்தமாயிருக்கும். “வெளியில் இருப்பவன் யாராவது, வாளினால் வெட்டுண்டு இறந்தவனையோ அல்லது இயற்கையாக இறந்தவனையோ தொட்டாலும் அல்லது மனித எலும்பையோ, கல்லறையையோ தொட்டாலும் அவன் ஏழுநாட்களுக்கு அசுத்தமுள்ளவனாயிருப்பான். “அசுத்தமான மனிதனுக்காக, எரிக்கப்பட்ட சுத்திகரிப்பின் காணிக்கையிலிருந்து கிடைத்த சாம்பலில் கொஞ்சத்தை எடுத்து, ஜாடியில் போட்டு, அதற்குள்ளே சுத்தமான தண்ணீரை ஊற்றவேண்டும். பின்பு சம்பிரதாயப்படி சுத்தமாயிருக்கும் ஒருவன் கொஞ்சம் ஈசோப்புக் குழையை எடுத்து, அந்த தண்ணீரில் தோய்த்து, அதை கூடாரத்திலும், அங்குள்ள பணிப்பொருட்களின்மேலும், அங்குள்ள மக்கள்மேலும் தெளிக்கவேண்டும். அப்படியே மனித எலும்பையோ, கல்லறையையோ, கொல்லப்பட்டவனையோ அல்லது இயற்கையாக இறந்தவனையோ யாராவது தொட்டிருந்தால் அவன் மேலும் அத்தண்ணீரை தெளிக்கவேண்டும். இவ்வாறு சுத்தமாயிருக்கிறவன், சுத்தமில்லாதிருக்கிறவன்மேல் மூன்றாம் நாளும், ஏழாம் நாளும் அந்த தண்ணீரைத் தெளிக்கவேண்டும். ஏழாம்நாளில் அவன் இவனைச் சுத்திகரிக்கவேண்டும். சுத்திகரிக்கப்படுபவன் தன் உடைகளைக் கழுவி தண்ணீரில் முழுகவேண்டும். அன்று மாலை அவன் சுத்தமாவான். ஆனால் அசுத்தமான ஒருவன் தன்னைச் சுத்திகரியாமல்விட்டால், அவன் இஸ்ரயேலர் மத்தியிலிருந்து அகற்றப்படவேண்டும். ஏனெனில் அவன் யெகோவாவின் பரிசுத்த இடத்தை அசுத்தப்படுத்தினான். அந்த சுத்திகரிப்பின் தண்ணீர் அவன்மேல் தெளிக்கப்படாதபடியால், அவன் அசுத்தமுள்ளவனாயிருக்கிறான். இது அவர்களுக்கு ஒரு நித்திய நியமமாயிருக்கிறது. “சுத்திகரிப்புத் தண்ணீரைத் தெளிக்கிற மனிதனும், தன் உடைகளைக் கழுவவேண்டும். அந்த தண்ணீரைத் தொடுகிற எவனும் அன்று மாலைவரை அசுத்தமாயிருப்பான். அசுத்தமுள்ளவன் எவற்றைத் தொடுவானோ அவையும் அசுத்தமாயிருக்கும், அவற்றைத் தொடும் மனிதனும் மாலைவரை அசுத்தமுள்ளவனாய் இருப்பான்” என்றார்.

எண்ணாகமம் 19:1-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி: “யெகோவா கற்பித்த நியமப்பிரமாணமாவது: பழுதற்றதும் ஊனமில்லாததும் நுகத்தடிக்கு பயன்படுத்தாதுமாகிய சிவப்பான ஒரு கிடாரியை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேல் மக்களுக்குச் சொல்லுங்கள். அதை எலெயாசார் என்னும் ஆசாரியனிடத்தில் ஒப்புக்கொடுங்கள்; அவன் அதைப் முகாமிற்கு வெளியே கொண்டுபோகவேண்டும்; அங்கே அது அவனுக்கு முன்பாகக் கொல்லப்படக்கடவது. அப்பொழுது ஆசாரியனாகிய எலெயாசார் தன்னுடைய விரலினால் அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக் கூடாரத்திற்கு எதிராக ஏழுதரம் தெளிக்கவேண்டும். பின்பு கிடாரியை அவன் கண்களுக்கு முன்பாக ஒருவன் சுட்டெரிக்கவேண்டும்; அதின் தோலும் அதின் இறைச்சியும் அதின் இரத்தமும் அதின் சாணியும் சுட்டெரிக்கப்படவேண்டும். அப்பொழுது ஆசாரியன் கேதுருக்கட்டையையும் ஈசோப்பையும் சிவப்பு நூலையும் எடுத்து, கிடாரி எரிக்கப்படுகிற நெருப்பின் நடுவிலே போடவேண்டும். பின்பு ஆசாரியன் தன்னுடைய ஆடைகளைத் தோய்த்து, தண்ணீரிலே குளித்து, அதின்பின்பு முகாமில் நுழையவேண்டும்; ஆசாரியன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான். அதைச் சுட்டெரித்தவனும் தன்னுடைய ஆடைகளை தண்ணீரில் தோய்த்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான். சுத்தமாக இருக்கிற ஒருவன் அந்தக் கிடாரியின் சாம்பலை வாரிக்கொண்டு, முகாமிற்கு வெளியே சுத்தமான ஒரு இடத்திலே கொட்டிவைக்கவேண்டும்; அது இஸ்ரவேல் மக்களின் சபைக்காகத் தீட்டுக்கழிக்கும் தண்ணீருக்கென்று பாதுகாத்து வைக்கப்படவேண்டும்; அது பாவத்தைப் பரிகரிக்கும். கிடாரியின் சாம்பலை வாரினவன் தன்னுடைய ஆடைகளைத் துவைக்கவேண்டும்; அவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்; இது இஸ்ரவேல் மக்களுக்கும் அவர்கள் நடுவிலே தங்குகிற அந்நியனுக்கும் நித்திய கட்டளையாக இருப்பதாக. “இறந்தவனுடைய பிரேதத்தைத் தொட்டவன் ஏழுநாட்கள் தீட்டுப்பட்டிருப்பான். அவன் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தீட்டுக்கழிக்கும் தண்ணீரினால் தன்னைச் சுத்திகரிக்கவேண்டும்; அப்பொழுது சுத்தமாவான்; மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தன்னைச் சுத்திகரிக்காமல் இருந்தால் சுத்தமாகமாட்டான். செத்தவனுடைய பிரேதத்தைத் தொட்டும், தன்னைச் சுத்திகரித்துக்கொள்ளாதவன் யெகோவாவின் வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்துகிறான்; அந்த ஆத்துமா இஸ்ரவேலில் இல்லாமல் அழிந்துபோவான்; தீட்டுக்கழிக்கும் தண்ணீர் அவன்மேல் தெளிக்கப்படாததினால், அவன் தீட்டுப்பட்டிருப்பான்; அவனுடைய தீட்டு இன்னும் அவன்மேல் இருக்கும். “கூடாரத்தில் ஒரு மனிதன் செத்தால், அதைச்சேர்ந்த நியமமாவது: அந்தக் கூடாரத்தில் நுழைகிற யாவரும் கூடாரத்தில் இருக்கிற யாவரும் ஏழுநாட்கள் தீட்டுப்பட்டிருப்பார்கள். மூடிக் கட்டப்படாமல் திறந்திருக்கும் பாத்திரங்கள் எல்லாம் தீட்டுப்பட்டிருக்கும். வெளியிலே பட்டயத்தால் வெட்டப்பட்டவனையோ, செத்தவனையோ, மனித எலும்பையோ, பிரேதக்குழியையோ, தொட்டவன் எவனும் ஏழுநாட்கள் தீட்டுப்பட்டிருப்பான். ஆகையால் தீட்டுப்பட்டவனுக்காக, பாவத்தைப் பரிகரிக்கும் கிடாரியின் சாம்பலிலே கொஞ்சம் எடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதின்மேல் ஊற்று தண்ணீர் ஊற்றவேண்டும். சுத்தமான ஒருவன் ஈசோப்பை எடுத்து, அந்த தண்ணீரிலே நனைத்து, கூடாரத்தின்மேலும் அதிலுள்ள எல்லா பணிப்பொருட்களின்மேலும் அங்கேயிருக்கிற மக்களின்மேலும் தெளிக்கிறதும் இல்லாமல், எலும்பையோ வெட்டப்பட்டவனையோ செத்தவனையோ பிரேதக்குழியையோ தொட்டவன்மேலும் தெளிக்கவேண்டும். சுத்தமாக இருக்கிறவன் தீட்டுப்பட்டவன்மேல் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தெளிக்கவேண்டும்; ஏழாம் நாளில் இவன் தன்னைச் சுத்திகரித்து, தன்னுடைய ஆடைகளைத் தோய்த்து, தண்ணீரில் குளித்து, மாலையிலே சுத்தமாக இருப்பான். “தீட்டுப்பட்டிருக்கிறவன் தன்னைச் சுத்திகரித்துக்கொள்ளாமல் இருந்தால், அவன் சபையில் இல்லாதபடி அழிந்துபோவான்; அவன் யெகோவாவின் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினான்; தீட்டுக்கழிக்கும் தண்ணீர் அவன்மேல் தெளிக்கப்படாததினால் அவன் தீட்டுப்பட்டிருக்கிறான். தீட்டுக்கழிக்கும் தண்ணீரைத் தெளிக்கிறவனும் தன்னுடைய ஆடைகளைத் துவைக்கவேண்டும்; தீட்டுக்கழிக்கும் தண்ணீரைத் தொட்டவனும் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான். தீட்டுப்பட்டிருக்கிறவன் தொடுகிறவைகளெல்லாம் தீட்டுப்படும், அவைகளைத் தொடுகிறவனும் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்; இது உங்களுக்கு நிரந்தர கட்டளையாக இருக்கும்” என்றார்.

எண்ணாகமம் 19:1-22 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தர் மோசேயிடமும், ஆரோனிடமும் பேசினார். அவர், “இந்த சட்டங்களெல்லாம் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களுக்குத் தந்த போதனைகளாகும். பழுதற்ற ஒரு சிவப்புப் பசுவைக் கொண்டு வாருங்கள். அப்பசு நுகத்தடியில் பூட்டப்படாததாகவும் ஊனமில்லாததாகவும் இருக்க வேண்டும். கன்று போடாத இளம் பசுவை ஆசாரியனாகிய எலெயாசாரிடம் கொடுங்கள். அவன் அதை வெளியே கொண்டுப்போய் கொல்லவேண்டும். பிறகு எலெயாசார் அதன் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரல்களால் தொட்டு பரிசுத்த கூடாரத்திற்குள் தெளிக்கவேண்டும். இவ்வாறு அவன் ஏழு முறை செய்யவேண்டும். பின்பு அவன் கண்களுக்கு முன்னால் அந்தப் பசுவின் தோல், சதை, இரத்தம், குடல் அனைத்தும் எரிக்கப்பட வேண்டும். பிறகு, ஆசாரியர் கேதுருக் கட்டையையும், ஈசோப்பையும், சிவப்பு நூலையும் எடுத்து காளை எரிக்கப்படும் இடத்தில் போடவேண்டும். பின்னர் ஆசாரியன் தன்னையும், தனது உடைகளையும் தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். அதற்குப்பின் அவன் கூடாரத்திற்குள் வரவேண்டும். அவன் மாலைவரை தீட்டாக இருப்பான். காளையை எரித்தவனும் தன்னைக் கழுவி உடலைச் சுத்தமாக்க வேண்டும். மேலும் தனது ஆடையையும் தண்ணீரால் கழுவ வேண்டும். அவனும் அன்று மாலைவரை தீட்டாக இருப்பான். “பிறகு தீட்டு இல்லாத ஒருவன் எரிந்துபோன காளையின் சாம்பலைச் சேகரித்து அவற்றைக் கூடாரத்திற்கு வெளியே சுத்தமான இடத்தில் கொட்ட வேண்டும். ஜனங்கள் இதனை தம்மை சுத்தப்படுத்திக்கொள்ளும் சடங்குகளில் பயன்படுத்திக்கொள்ளலாம். இச்சாம்பல் ஒருவனின் பாவத்தைப் போக்கவும் பயன்படும். “காளையின் சாம்பலைச் சேகரித்தவன் தனது ஆடைகளைத் துவைக்கவேண்டும். அவன் அன்று மாலைவரை தீட்டாக இருப்பான். “இந்த விதிகள் எல்லாக் காலத்துக்கும் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவருக்கும் உரியதாகும். இந்த விதி உங்களோடு வாழ்கிற அயல் நாட்டவருக்கும் உரியதாகும். எவனாவது, மரித்துப்போனவனின் சரீரத்தை தொட்டால், அவன் ஏழு நாட்களுக்குத் தீட்டுள்ளவனாக இருப்பான். அவன் தன்னைத் தீட்டுக்கழிக்கும் தண்ணீரால் மூன்றாவது நாளும், ஏழாவது நாளும் கழுவவேண்டும். அவ்வாறு அவன் செய்யாவிட்டால் தொடர்ந்து அவன் தீட்டுள்ளவனாக இருப்பான். ஒருவன் ஒரு மரித்த சரீரத்தைத் தொட்டால், அவன் தீட்டுள்ளவன் ஆகிறான். அவன் தீட்டுள்ளவனாக பரிசுத்த கூடாரத்திற்குள் சென்றால், அதுவும் தீட்டாகிவிடும். எனவே அவன் இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து தனியே பிரித்து வைக்கப்படுவான். தீட்டுள்ளவன் மேல் தீட்டுக்கழிக்கும் தண்ணீர் தெளிக்கப்படாவிட்டால், அவன் தொடர்ந்து தீட்டுள்ளவனாக இருப்பான். “இவை அனைத்தும் தங்கள் கூடாரத்திற்குள் மரித்துப் போகிறவர்களைப் பற்றிய விதிகளாகும். ஒருவன் தனது கூடாரத்தில் மரித்தால், அக்கூடாரத்திலுள்ள அனைத்துப் பொருட்களும் தீட்டாகும். அவை ஏழு நாட்களுக்குத் தீட்டுள்ளவையாக இருக்கும். ஒவ்வொரு ஜாடியும், பாத்திரமும் மூடப்படாமல் இருந்தால் தீட்டாகும். வெளியிலே எவனாவது பிணத்தைத் தொட்டால், ஏழு நாட்களுக்குத் தீட்டுள்ளவனாக இருப்பான். போரில் கொல்லப்பட்டவனையோ, மரித்தவனின் எலும்பையோ தொட்டாலும் அவன் தீட்டுள்ளவன் ஆவான். “எனவே அவனை மீண்டும் சுத்தப்படுத்த எரித்த காளையின் சம்பலை நீங்கள் பயன்படுத்தவேண்டும். ஒரு ஜாடிக்குள் சாம்பலைப்போட்டு தண்ணீரை அதில் விடவேண்டும். தீட்டில்லாத ஒருவன் ஈசோப்புக் கிளையை எடுத்து அதை தண்ணீரில் நனைக்கவேண்டும். பிறகு அதனைக் கூடாரம், சகல பொருட்கள், ஜனங்கள் ஆகியவற்றின் மீது தெளிக்கவேண்டும். மரித்த மனிதனின் சரீரத்தைத் தொட்டவன் மீதும் இவ்வாறு தெளிக்க வேண்டும். போரில் கொல்லப்பட்ட ஒருவனைத் தொட்டவன் மீதும், மரித்துப் போனவனின் எலும்புகளைத் தொட்டவன் மீதும் இவ்வாறு தெளிக்கவேண்டும். “தீட்டு இல்லாத ஒருவன், இத்தண்ணீரை தீட்டுள்ளவன் மீது மூன்றாவது நாளும், ஏழாவது நாளும் தெளிக்கவேண்டும். ஏழாவது நாள் தீட்டுள்ளவன் சுத்தமாவான். அவன் தனது ஆடையை தண்ணீரில் துவைக்கவேண்டும். மாலையில அவன் சுத்தமாகிவிடுவான். “ஒருவன் தீட்டுள்ளவனாகி அதிலிருந்து சுத்தமாகாமல் இருந்தால் அவனை இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து ஒதுக்கி வைக்கவேண்டும். அவன் மீது தீட்டுக்கழிக்கும் தண்ணீர் தெளிக்கப்படாததால் அவன் சுத்தமாகவில்லை: ஆகையால், அவன் பரிசுத்தக் கூடாரத்தையும் தீட்டாக்கிவிடுவான். இந்த விதி எல்லாக் காலத்திற்கும் உரியது, ஒருவன் தீட்டுக்கழிக்கும் தண்ணீரால் தெளிக்கப்பட்டாலும் அவன் தன் ஆடைகளை தண்ணீரில் துவைக்க வேண்டும். தீட்டுக்கழிக்கும் தண்ணீரைத் தொடுகிற எவனும் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான். தீட்டுள்ள ஒருவன் யாரையாவது தொட்டால் அவனும் தீட்டுள்ளவனாவான். அவன் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான்” என்று கூறினார்.

எண்ணாகமம் 19:1-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: கர்த்தர் கற்பித்த நியமப்பிரமாணமாவது: பழுதற்றதும் ஊனமில்லாததும் நுகத்தடிக்கு உட்படாததுமாகிய சிவப்பான ஒரு கிடாரியை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லுங்கள். அதை எலெயாசார் என்னும் ஆசாரியனிடத்தில் ஒப்புக்கொடுங்கள்; அவன் அதைப் பாளயத்துக்கு வெளியே கொண்டுபோகக்கடவன்; அங்கே அது அவனுக்கு முன்பாகக் கொல்லப்படக்கடவது. அப்பொழுது ஆசாரியனாகிய எலெயாசார் தன் விரலினால் அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக் கூடாரத்துக்கு எதிராக ஏழுதரம் தெளிக்கக்கடவன். பின்பு கிடாரியை அவன் கண்களுக்கு முன்பாக ஒருவன் சுட்டெரிக்கவேண்டும்; அதின் தோலும் அதின் மாம்சமும் அதின் இரத்தமும் அதின் சாணியும் சுட்டெரிக்கப்படவேண்டும். அப்பொழுது ஆசாரியன் கேதுருக்கட்டையையும் ஈசோப்பையும் சிவப்பு நூலையும் எடுத்து, கிடாரி எரிக்கப்படுகிற நெருப்பின் நடுவிலே போடக்கடவன். பின்பு ஆசாரியன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, அதின்பின்பு பாளயத்தில் பிரவேசிக்கக்கடவன்; ஆசாரியன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான். அதைச் சுட்டெரித்தவனும் தன் வஸ்திரங்களை ஜலத்தில் தோய்த்து, ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான். சுத்தமாயிருக்கிற ஒருவன் அந்தக்கிடாரியின் சாம்பலை வாரிக்கொண்டு, பாளயத்திற்குப் புறம்பே சுத்தமான ஒரு இடத்திலே கொட்டிவைக்கக்கடவன்; அது இஸ்ரவேல் புத்திரரின் சபைக்காகத் தீட்டுக்கழிக்கும் ஜலத்துக்கென்று காத்து வைக்கப்படவேண்டும்; அது பாவத்தைப் பரிகரிக்கும். கிடாரியின் சாம்பலை வாரினவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இது இஸ்ரவேல் புத்திரருக்கும் அவர்கள் நடுவிலே தங்குகிற அந்நியனுக்கும் நித்திய கட்டளையாயிருப்பதாக. செத்துப்போனவனுடைய பிரேதத்தைத் தொட்டவன் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பான். அவன் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தீட்டுக்கழிக்கும் ஜலத்தினால் தன்னைச் சுத்திகரிக்கக்கடவன்; அப்பொழுது சுத்தமாவான்; மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தன்னைச் சுத்திகரிக்காமலிருப்பானாகில் சுத்தமாகான். செத்தவனுடைய பிரேதத்தைத் தொட்டும், தன்னைச் சுத்திகரித்துக்கொள்ளாதவன் கர்த்தரின் வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்துகிறான்; அந்த ஆத்துமா இஸ்ரவேலில் இராமல் அறுப்புண்டுபோவான்; தீட்டுக்கழிக்கும் ஜலம் அவன்மேல் தெளிக்கப்படாததினால், அவன் தீட்டுப்பட்டிருப்பான்; அவன் தீட்டு இன்னும் அவன்மேல் இருக்கும். கூடாரத்தில் ஒரு மனிதன் செத்தால், அதற்கடுத்த நியமமாவது: அந்தக் கூடாரத்தில் பிரவேசிக்கிற யாவரும் கூடாரத்தில் இருக்கிற யாவரும் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பார்கள். மூடிக் கட்டப்படாமல் திறந்திருக்கும் பாத்திரங்கள் எல்லாம் தீட்டுப்பட்டிருக்கும். வெளியிலே பட்டயத்தால் வெட்டுண்டவனையாவது, செத்தவனையாவது, மனித எலும்பையாவது, பிரேதக்குழியையாவது, தொட்டவன் எவனும் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பான். ஆகையால் தீட்டுப்பட்டவனுக்காக, பாவத்தைப் பரிகரிக்கும் கிடாரியின் சாம்பலிலே கொஞ்சம் எடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதின்மேல் ஊற்று ஜலம் வார்க்கவேண்டும். சுத்தமான ஒருவன் ஈசோப்பை எடுத்து, அந்த ஜலத்திலே தோய்த்து, கூடாரத்தின்மேலும் அதிலுள்ள சகல பணிமுட்டுகளின்மேலும் அங்கேயிருக்கிற ஜனங்களின்மேலும் தெளிக்கிறதுமல்லாமல், எலும்பையாகிலும் வெட்டுண்டவனையாகிலும் செத்தவனையாகிலும் பிரேதக்குழியையாகிலும் தொட்டவன்மேலும் தெளிக்கக்கடவன். சுத்தமாயிருக்கிறவன் தீட்டுப்பட்டவன்மேல் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தெளிக்கவேண்டும்; ஏழாம் நாளில் இவன் தன்னைச் சுத்திகரித்து, தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, சாயங்காலத்திலே சுத்தமாயிருப்பான். தீட்டுப்பட்டிருக்கிறவன் தன்னைச் சுத்திகரித்துக்கொள்ளாதிருந்தால், அவன் சபையில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்; அவன் கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினான்; தீட்டுக்கழிக்கும் ஜலம் அவன்மேல் தெளிக்கப்படாததினால் அவன் தீட்டுப்பட்டிருக்கிறான். தீட்டுக்கழிக்கும் ஜலத்தைத் தெளிக்கிறவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; தீட்டுக்கழிக்கும் ஜலத்தைத் தொட்டவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான். தீட்டுப்பட்டிருக்கிறவன் தொடுகிறவைகளெல்லாம் தீட்டுப்படும், அவைகளைத் தொடுகிறவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இது உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கும் என்றார்.