எண்ணாகமம் 14:1-24

எண்ணாகமம் 14:1-24 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அந்தச் சமுதாய மக்கள் அனைவரும் அன்றிரவு சத்தமாய்க் கூக்குரலிட்டு அழுதார்கள். இஸ்ரயேலர் எல்லோருமே மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள். சபையார் அனைவரும் அவர்களிடம், “நாங்கள் எகிப்தில் இறந்திருக்கலாம் அல்லது இந்த பாலைவனத்திலேயே இறந்திருக்கலாமே! வாளுக்கு இரையாகும்படி யெகோவா ஏன் எங்களை இந்த நாட்டிற்குக் கொண்டுவருகிறார்? எங்கள் மனைவிகளும், பிள்ளைகளும் அவர்கள் கையில் பிடிபட்டுக் கைதிகளாகப் போகப்போகிறார்களே! அதைவிட நாங்கள் எகிப்து நாட்டிற்குத் திரும்பிப்போவது நலமாயிருக்காதோ?” என்றார்கள். மேலும், “நாம் நமக்கு ஒரு தலைவனைத் தெரிந்துகொண்டு எகிப்திற்குத் திரும்பிப் போகவேண்டும்” என்றும் அவர்கள் ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். அப்பொழுது மோசேயும், ஆரோனும் அங்கு கூடியிருந்த இஸ்ரயேல் சபைக்கு முன்பாக முகங்குப்புற விழுந்தார்கள். நாட்டை ஆராய்ந்து அறியச்சென்றவர்களில் நூனின் மகன் யோசுவாவும், எப்புன்னேயின் மகன் காலேப்பும் தங்கள் உடைகளைக் கிழித்துக்கொண்டார்கள். அவர்கள் முழு இஸ்ரயேல் சபையையும் பார்த்து, “நாங்கள் கடந்துசென்று ஆராய்ந்து அறிந்த நாடு மிகமிக நல்ல நாடு. யெகோவா எங்களில் பிரியமாயிருந்தால், பாலும் தேனும் வழிந்தோடும் அந்த நாட்டிற்கு எங்களை வழிநடத்தி அதை எங்களுக்குத் தருவார். நீங்கள் யெகோவாவுக்கு விரோதமாக மட்டும் கலகம் செய்யாதீர்கள். அந்நாட்டு மக்களுக்குப் பயப்படவேண்டாம். ஏனெனில், நாங்கள் அவர்களை அழித்துவிடுவோம். அவர்களுடைய பாதுகாப்பு அவர்களைவிட்டுப் போய்விட்டது. யெகோவா எங்களோடிருக்கிறார். நீங்கள் அவர்களுக்குப் பயப்படவேண்டாம்” என்றார்கள். ஆனால் முழுசபையாரும் அவர்களுக்குக் கல்லெறியவேண்டுமென பேசிக்கொண்டார்கள். அவ்வேளையில் யெகோவாவின் மகிமை சபைக் கூடாரத்தில் எல்லா இஸ்ரயேலருக்கும் முன்பாகத் தோன்றியது. அப்பொழுது யெகோவா மோசேயிடம், “இம்மக்கள் எவ்வளவு காலத்திற்கு என்னை அவமதித்து நடப்பார்கள்? நான் இத்தனை அற்புத அடையாளங்கள் அவர்கள் மத்தியில் செய்திருக்கும்போது, எவ்வளவு காலத்திற்கு அவர்கள் என்னை விசுவாசிக்க மறுப்பார்கள்? அவர்களை நான் கொள்ளைநோயினால் வாதித்து அழிப்பேன். உன்னையோ அவர்களைப்பார்க்கிலும் பெரியதும் வல்லமையுள்ளதுமான ஒரு நாடாக்குவேன்” என்றார். அதற்கு மோசே யெகோவாவிடம், “அப்பொழுது எகிப்தியர் இதைக்குறித்து கேள்விப்படுவார்களே! நீர் இந்த மக்களை உம்முடைய வல்லமையினால் எகிப்திலிருந்து இங்கே கொண்டுவந்தீர். எகிப்தியர் நாட்டு மக்களுக்கு அதைப்பற்றிச் சொல்வார்கள். யெகோவாவே, நீர் இந்த மக்கள் மத்தியில் இருக்கிறீர் என்றும், உமது மேகம் அவர்கள்மேல் இருக்கிறதென்றும், அவர்கள் உம்மை நேருக்குநேர் காணும்படி செய்தீர் என்றும், நீரே அவர்களுக்கு முன்பாக பகலில் மேகத்தூணாகவும், இரவில் நெருப்புத்தூணாகவும் போகிறீர் என்றும் அவர்கள் ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கிறார்கள். நீர் இப்பொழுது இம்மக்களை ஒரேயடியாகக் கொன்றுபோடுவீரானால், உம்மைப் பற்றிய விவரத்தைக் கேள்விப்பட்ட பிறநாடுகள், ‘தாம் ஆணையிட்டு வாக்குக்கொடுத்த நாட்டிற்குள் இந்த மக்களைக் கொண்டுவர யெகோவாவினால் முடியவில்லை. அதனால் அவர்களை பாலைவனத்திலேயே கொன்றுபோட்டார்’ என்பார்களே” என்றான். “யெகோவாவே, நீர் அறிவித்திருக்கிற உமது வல்லமையை இப்பொழுதே வெளிப்படுத்திக் காட்டுவீராக: ‘யெகோவா கோபப்படுவதற்குத் தாமதிக்கிறவர், அன்பினால் நிறைந்தவராய் பாவத்தையும் கலகத்தையும் மன்னிக்கிறவர். ஆனாலும், குற்றவாளிகளைத் தண்டனையின்றி தப்பிப்போக விடாதவர். பெற்றோரின் பாவங்களுக்காக மூன்றாம் நான்காம் தலைமுறைவரைக்கும் பிள்ளைகளைத் தண்டிக்கிறவர்’ என்று அறிவித்திருக்கிறீரே. உமது மிகுந்த அன்பின்படியே, எகிப்திலிருந்து வந்தகாலம் தொடங்கி இன்றுவரை அவர்களை மன்னித்ததுபோல், இம்மக்களின் பாவத்தையும் இப்பொழுதும் மன்னியும்” என்று மன்றாடினான். அதற்கு யெகோவா, “நீ கேட்டபடியே நான் அவர்களை மன்னித்துவிட்டேன். ஆனாலும் நான் வாழ்வது நிச்சயம்போலவும், யெகோவாவினுடைய மகிமை பூமியை நிரப்புவது நிச்சயம்போலவும், என் மகிமையையும், எகிப்திலுள்ள பாலைவனத்தில் நான் செய்த அற்புத அடையாளங்களையும் கண்டும், எனக்குக் கீழ்ப்படியாமல் என்னை பத்துமுறை சோதித்த எவனும், அவர்களுடைய முற்பிதாக்களுக்குத் தருவேன் என நான் ஆணையிட்டு வாக்குக்கொடுத்த நாட்டை ஒருபோதும் காணமாட்டான் என்பதும், என்னை அவமதித்து நடந்த எவனும் அதை ஒருபோதும் காணமாட்டான் என்பதும் நிச்சயம். ஆனால், என் பணியாளன் காலேப் ஒரு வித்தியாசமான ஆவி உடையவனாயும், தன் முழு இருதயத்தோடும் என்னைப் பின்பற்றுகிறவனாயும் இருப்பதால், அவன் போய்ப் பார்த்த அந்த நாட்டிற்குள் நான் அவனைக் கொண்டுவருவேன். அவனுடைய சந்ததிகளும் அதை உரிமையாக்கிக்கொள்வார்கள்.

எண்ணாகமம் 14:1-24 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது சபையார் எல்லோரும் கூக்குரலிட்டுப் புலம்பினார்கள்; மக்கள் அன்று இரவுமுழுதும் அழுதுகொண்டிருந்தார்கள். இஸ்ரவேல் மக்கள் எல்லோரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள். சபையார் எல்லோரும் அவர்களை நோக்கி: “எகிப்துதேசத்திலே செத்துப்போனோமானால் நலமாக இருக்கும்; இந்த வனாந்திரத்திலே நாங்கள் செத்தாலும் நலம். நாங்கள் பட்டயத்தால் மடியும்படியும், எங்களுடைய மனைவிகளும் பிள்ளைகளும் கொள்ளையாகும்படியும், யெகோவா எங்களை இந்த தேசத்திற்குக் கொண்டு வந்தது என்ன? எகிப்திற்குத் திரும்பிப் போகிறதே எங்களுக்கு உத்தமம் அல்லவோ” என்றார்கள். பின்பு அவர்கள்: “நாம் ஒரு தலைவனை ஏற்படுத்திக்கொண்டு எகிப்திற்குத் திரும்பிப்போவோம் வாருங்கள்” என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். அப்பொழுது மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் மக்களின் சபையாராகிய எல்லாக் கூட்டத்தாருக்கு முன்பாகவும் முகங்குப்புற விழுந்தார்கள். தேசத்தைச் சுற்றிப்பார்த்தவர்களில் நூனின் மகனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் மகனாகிய காலேபும், தங்களுடைய ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, இஸ்ரவேல் மக்களின் முழு சபையையும் நோக்கி: “நாங்கள் போய்ச் சுற்றிப்பார்த்து சோதித்த தேசம் மகா நல்ல தேசம். யெகோவா நம்மேல் பிரியமாக இருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், நல்ல விளைச்சல் உள்ள செழிப்பான அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார். யெகோவாவுக்கு விரோதமாகமட்டும் கலகம்செய்யாமலிருங்கள்; அந்த தேசத்தின் மக்களுக்கு நீங்கள் பயப்படவேண்டியதில்லை; அவர்கள் நமக்கு இரையாவார்கள்; அவர்களைக் காத்த நிழல் அவர்களை விட்டு விலகிப்போனது; யெகோவா நம்மோடு இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்படவேண்டியதில்லை” என்றார்கள். அப்பொழுது அவர்கள்மேல் கல்லெறியவேண்டும் என்று சபையார் எல்லோரும் சொன்னார்கள்; உடனே யெகோவாவுடைய மகிமை ஆசரிப்புக்கூடாரத்தில் இஸ்ரவேல் மக்கள் எல்லோருக்கும் முன்பாகக் காணப்பட்டது. யெகோவா மோசேயை நோக்கி: “எதுவரைக்கும் இந்த மக்கள் எனக்குக் கோபம் உண்டாக்குவார்கள்? தங்களுக்குள்ளே நான் காட்டின சகல அடையாளங்களையும் அவர்கள் கண்டும், எதுவரைக்கும் என்னை நம்பாமலிருப்பீர்கள்? நான் அவர்களைக் கொள்ளைநோயினால் வாதித்து, கானானில் அவர்களுக்குரியதை வெளியே தள்ளி, அவர்களைவிட உன்னைப் பெரிதும் பலத்ததுமான தேசமாக்குவேன் என்றார். மோசே யெகோவாவை நோக்கி: “எகிப்தியர்கள் இதைக் கேட்பார்கள், அவர்கள் நடுவிலிருந்து உம்முடைய வல்லமையினாலே இந்த மக்களைக் கொண்டுவந்தீரே. யெகோவாவாகிய நீர் இந்த மக்களின் நடுவே இருக்கிறதையும், யெகோவாவாகிய நீர் முகமுகமாகத் தரிசனமாவதையும், உம்முடைய மேகம் இவர்கள்மேல் நிற்பதையும், பகலில் மேகத்தூணிலும், இரவில் அக்கினித்தூணிலும், நீர் இவர்களுக்கு முன்பு செல்லுகிறதையும் கேட்டிருக்கிறார்கள்; இந்த தேசத்தின் குடிகளுக்கும் சொல்லுவார்கள். ஒரே மனிதனைக் கொல்லுகிறது போல இந்த மக்களையெல்லாம் நீர் கொன்று போட்டால், அப்பொழுது உம்முடைய புகழைக் கேட்டிருக்கும் புறஜாதியார்: யெகோவா அந்த மக்களுக்குக் கொடுப்போம் என்று ஆணையிட்டிருந்த தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய்விடமுடியாமல் போனபடியால், அவர்களை வனாந்திரத்திலே கொன்றுபோட்டார் என்பார்களே. ஆகையால் யெகோவா நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவர் என்றும், அக்கிரமத்தையும் மீறுதலையும் மன்னிக்கிறவர் என்றும், குற்றமுள்ளவர்களைக் குற்றமற்றவர்களாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைவரை விசாரிக்கிறவர் என்றும், நீர் சொல்லியிருக்கிறபடியே, என்னுடைய ஆண்டவருடைய வல்லமை பெரிதாக விளங்குவதாக. உமது கிருபையினுடைய மகத்துவத்தின்படியேயும், எகிப்தை விட்டதுமுதல் இந்நாள்வரைக்கும் இந்த மக்களுக்கு மன்னித்து வந்ததின்படியேயும், இந்த மக்களின் அக்கிரமத்தை மன்னித்தருளும் என்றான். அப்பொழுது யெகோவா: “உன்னுடைய வார்த்தையின்படியே மன்னித்தேன். பூமியெல்லாம் யெகோவாவுடைய மகிமையினால் நிறைந்திருக்கும் என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். என்னுடைய மகிமையையும், நான் எகிப்திலும் வனாந்திரத்திலும் செய்த என்னுடைய அடையாளங்களையும் கண்டிருந்தும், என்னுடைய சத்தத்தை கேட்காமல், இதோடு பத்துமுறை என்னைப் பரீட்சைபார்த்த மனிதர்களில் ஒருவரும், அவர்களுடைய பிதாக்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காணமாட்டார்கள்; எனக்குக் கோபம் உண்டாக்கினவர்களில் ஒருவரும் அதைக் காணமாட்டார்கள். என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாக இருக்கிறபடியாலும், உத்தமமாக என்னைப் பின்பற்றி வந்தபடியாலும், அவன் போய் வந்த தேசத்திலே அவனைச் சேரும்படிச்செய்வேன்; அவனுடைய சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.

எண்ணாகமம் 14:1-24 பரிசுத்த பைபிள் (TAERV)

அன்று இரவு, முகாம்களில் உள்ள அனைவரும் கூக்கூரலிட்டுப் புலம்பினார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் மோசேக்கும், ஆரோனுக்கும் எதிராக முறையிட்டனர். அவர்கள் அனைவரும் கூடி மோசேயிடமும், ஆரோனிடமும், “நாம் எகிப்து நாட்டிலோ பலைவனங்களிலோ மரித்துப்போயிருக்கலாம், இவ்வாறு புதிய நாட்டில் கொல்லப்படுவதைவிட அது மேலானது. நாம் இப்புதிய நாட்டில் போரில் கொல்லப்படுவதற்காகத்தான், கர்த்தர் இங்கே அழைத்து வந்தாரா? எதிரிகள் நம்மைக் கொன்றுவிட்டு, நமது மனைவியரையும், பிள்ளைகளையும் அபகரித்துக்கொள்வார்கள். இதைவிட நாம் எகிப்துக்குத் திரும்பிப் போவது நல்லது” என்றனர். பிறகு ஜனங்கள் ஒருவரோடு ஒருவர், “நாம் வேறு தலைவரைத் தேர்ந்தெடுத்து, எகிப்துக்குத் திரும்பிப் போவோம்” எனப் பேசிக்கொண்டனர். அங்கே கூடியிருந்த அனைத்து இஸ்ரவேல் ஜனங்களின் முன்பும், மோசேயும், ஆரோனும் தரையில் பணிந்து வணங்கினார்கள். யோசுவாவும் காலேப்பும் மிகவும் மனமுறிவடைந்தனர். (யோசுவா நூனின் குமாரன். காலேப் எப்புன்னேயின் குமாரன். இருவரும் கானான் நாட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்தவர்கள்.) அங்கே கூடியிருந்த இஸ்ரவேல் ஜனங்களிடம் அந்த இருவரும், “நாங்கள் பார்த்த அந்த நாடு நன்றாக இருக்கிறது. அது நல்ல பொருட்கள் பலவற்றால் நிறைந்த நாடு. கர்த்தர் நம்மீது விருப்பம் உடையவராக இருந்தால், அவர் அந்த நாட்டுக்குள் நம்மை வழி நடத்திச் செல்லுவார். அந்த நாட்டை கர்த்தர் நமக்குத் தருவார். எனவே கர்த்தருக்கு எதிராக திரும்பாதீர்கள். அந்த நாட்டின் ஜனங்களுக்குப் பயப்படாதீர்கள்! நாம் அவர்களைத் தோற்கடிக்க முடியும். அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை, எதுவும் அவர்களைக் காப்பாற்றாது. ஆனால், நம்மோடு கர்த்தர் இருக்கிறார். எனவே, பயப்படவேண்டாம்” என்றனர். அனைத்து ஜனங்களும் யோசுவாவையும் கலேபையும் கல்லெறிந்து கொன்றுவிட வேண்டும் என்று பேச ஆரம்பித்தார்கள். ஆனால் கர்த்தரின் மகிமை, ஆசரிப்புக் கூடாரத்தின் மேலே அவர்கள் அனைவரும் காணும்படி தோன்றியது. கர்த்தர் மோசேயுடன் பேசினார். அவர், “எவ்வளவு காலத்திற்கு இந்த ஜனங்கள் எனக்கெதிராக இருப்பார்கள்? என் மீது நம்பிக்கையில்லை என்பதைக் காட்டுகிறார்கள், என் வல்லமையின் மீது நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறார்கள். நான் எத்தனையோ அடையாளங்களை அவர்களுக்கு காட்டியிருக்கிறேன். எனினும் என்னை அவர்கள் நம்ப மறுக்கிறார்கள். நான் அவர்களுக்கிடையில் பலப் பெருங்காரியங்களைச் செய்திருக்கிறேன். அவர்கள் அனைவரையும் பெருநோயால் கொன்றுவிடுவேன். அவர்களை அழிப்பேன். நான் இவர்களை விட உங்கள் ஜனத்தை பெரியதாகவும் பலமிக்கதாகவும் பண்ணுவேன்” என்றார். பிறகு மோசே கர்த்தரிடம், “நீர் இதனைச் செய்துவிட்டால், எகிப்தியர்கள் இதனைப் பற்றி கேள்விப்படுவார்கள். நீர் உமது வல்லமையைப் பயன்படுத்தி உமது ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே மீட்டுவந்தீர், என்பதை அவர்கள் அறிவார்கள். எகிப்திய ஜனங்கள் கானான் ஜனங்களிடம் இதைப்பற்றி கூறினார்கள். நீரே கர்த்தர் என்பதை ஏற்கெனவே அவர்கள் அறிந்திருக்கின்றனர். நீர் உமது ஜனங்களோடு இருப்பதையும், ஜனங்கள் உம்மைப் பார்த்தனர் என்பதையும் அறிந்திருக்கின்றனர். அவர்களுக்குத் தனிச்சிறப்புடைய மேகத்தைப் பற்றி தெரியும். பகல் பொழுதில் நீர் மேகத்தின் மூலம் வழிநடத்திச் சென்றதையும், இரவில் அம்மேகம் நெருப்பாகி ஜனங்களுக்கு வெளிச்சம் தந்ததையும் அவர்கள் அறிவார்கள். எனவே இப்போது நீர் இந்த ஜனங்களை அழிக்கக்கூடாது. நீர் இவர்களை அழித்தால், உமது வல்லமையைப்பற்றி அறிந்த அனைத்து ஜனங்களும், ‘கர்த்தர் தான் வாக்களித்தபடி தன் ஜனங்களுக்கு நாட்டை அளிக்க முடியவில்லை. எனவே, அவர் அவர்களை பாலைவனத்தில் கொன்றுவிட்டார் என்று பேசுவார்கள்’ “இப்போதும், ஆண்டவரே, உமது பலத்தைக் காட்டும்! உம்மைப்பற்றி நீரே சொல்லியிருக்கிறபடி செய்யும்! ‘நீர் கர்த்தர் கோபப்படுகிறதற்கு தாமதம் பண்ணுகிறார். கர்த்தர் பேரன்பு கொண்டவர். சட்டங்களை மீறி குற்றம் செய்கின்றவர்களை கர்த்தர் மன்னிப்பார். ஆனால் அக்கிரமக்காரர்களையும், அவர்கள் பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும், அவர்களின் பிள்ளைகளையும் தண்டிப்பார்’ என்று உம்மைப்பற்றி சொல்லியிருக்கிறபடியால், இப்போது உமது பேரன்பை இந்த ஜனங்களிடம் காண்பித்து, இவர்களின் பாவத்தை மன்னித்தருளும், எகிப்தை விட்டுப் புறப்பட்ட நாள்முதல் நீர் மன்னித்து வருவது போலவே, இப்போதும் மன்னித்துவிடும்” என்றான். இதற்கு கர்த்தர், “ஆம்! நீ கேட்டுக்கொண்டபடியே இந்த ஜனங்களை மன்னித்துவிடுகிறேன். ஆனால் உனக்கு ஒரு உண்மையைக் கூறுகிறேன். நான் இந்த பூமியில் இருப்பது எவ்வளவு உண்மையோ, அதுபோலவே எனது மகிமையும் பூமியில் நிறைந்திருக்கும் என்பதும் உண்மையாகும். எகிப்திலிருந்து என்னால் அழைத்து வரப்பட்டவர்கள் எவரும் கானான் நாட்டைக் காணமாட்டார்கள். நான் எகிப்தில் செய்த அற்புதங்களையும் நான் பாலைவனத்தில் செய்த பெருஞ்செயல்களையும், அவர்கள் கண்டிருக்கிறார்கள். ஆனாலும், அவர்கள் எனக்குக் கீழ்ப்படியவில்லை. என்னைப் பத்துமுறை சோதித்திருக்கிறார்கள். நான் அவர்களின் முற்பிதாக்களிடம் அவர்களுக்கு ஒரு நாட்டைத் தருவதாக வாக்களித்தேன். ஆனால் எனக்கு எதிராக உள்ள எவரும் அந்த நாட்டிற்குள் நுழைய முடியாது. ஆனால் எனது ஊழியனான காலேப் வேறுபட்டவன். என்னை அவன் முழுமையாகப் பின்பற்றினான். எனவே அவனை ஏற்கெனவே அவன் பார்வையிட்ட நாட்டிற்குள் அழைத்துச் செல்வேன். அவனது ஜனங்கள் அந்நாட்டைப் பெற்றுக்கொள்வார்கள்.

எண்ணாகமம் 14:1-24 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது சபையார் எல்லாரும் கூக்குரலிட்டுப் புலம்பினார்கள்; ஜனங்கள் அன்று இராமுழுதும் அழுதுகொண்டிருந்தார்கள். இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள். சபையார் எல்லாரும் அவர்களை நோக்கி: எகிப்துதேசத்திலே செத்துப்போனோமானால் நலமாயிருக்கும்; இந்த வனாந்தரத்திலே நாங்கள் செத்தாலும் நலம். நாங்கள் பட்டயத்தால் மடியும்படிக்கும், எங்கள் பெண்ஜாதிகளும் பிள்ளைகளும் கொள்ளையாகும்படிக்கும், கர்த்தர் எங்களை இந்த தேசத்துக்குக் கொண்டு வந்தது என்ன? எகிப்துக்குத் திரும்பிப் போகிறதே எங்களுக்கு உத்தமம் அல்லவோ என்றார்கள். பின்பு அவர்கள்: நாம் ஒரு தலைவனை ஏற்படுத்திக்கொண்டு எகிப்துக்குத் திரும்பிப்போவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். அப்பொழுது மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் புத்திரரின் சபையாராகிய எல்லாக் கூட்டத்தாருக்கு முன்பாகவும் முகங்குப்புற விழுந்தார்கள். தேசத்தைச் சுற்றிப்பார்த்தவர்களில் நூனின் குமாரனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும், தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, இஸ்ரவேல் புத்திரரின் சமஸ்த சபையையும் நோக்கி: நாங்கள் போய்ச் சுற்றிப்பார்த்து சோதித்த தேசம் மகா நல்ல தேசம். கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால், அந்த தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்த தேசத்தை நமக்குக் கொடுப்பார். கர்த்தருக்கு விரோதமாகமாத்திரம் கலகம்பண்ணாதிருங்கள்; அந்த தேசத்தின் ஜனங்களுக்கு நீங்கள் பயப்படவேண்டியதில்லை; அவர்கள் நமக்கு இரையாவார்கள்; அவர்களைக் காத்த நிழல் அவர்களை விட்டு விலகிப்போயிற்று; கர்த்தர் நம்மோடே இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்படவேண்டியதில்லை என்றார்கள். அப்பொழுது அவர்கள்மேல் கல்லெறியவேண்டும் என்று சபையார் எல்லாரும் சொன்னார்கள்; உடனே கர்த்தருடைய மகிமை ஆசரிப்புக்கூடாரத்தில் இஸ்ரவேல் புத்திரர் எல்லாருக்கும் முன்பாகக் காணப்பட்டது. கர்த்தர் மோசேயை நோக்கி: எதுவரைக்கும் இந்த ஜனங்கள் எனக்குக் கோபம் உண்டாக்குவார்கள்? தங்களுக்குள்ளே நான் காட்டின சகல அடையாளங்களையும் அவர்கள் கண்டும், எதுவரைக்கும் என்னை விசுவாசியாதிருப்பார்கள்? நான் அவர்களைக் கொள்ளைநோயினால் வாதித்து, சுதந்தரத்துக்குப் புறம்பாக்கிப்போட்டு, அவர்களைப்பார்க்கிலும் உன்னைப் பெரிதும் பலத்ததுமான ஜாதியாக்குவேன் என்றார். மோசே கர்த்தரை நோக்கி: எகிப்தியர் இதைக் கேட்பார்கள், அவர்கள் நடுவிலிருந்து உம்முடைய வல்லமையினாலே இந்த ஜனங்களைக் கொண்டுவந்தீரே. கர்த்தராகிய நீர் இந்த ஜனங்களின் நடுவே இருக்கிறதையும், கர்த்தராகிய நீர் முகமுகமாய்த் தரிசனமாகிறதையும், உம்முடைய மேகம் இவர்கள்மேல் நிற்கிறதையும், பகலில் மேகத்தூணிலும், இரவில் அக்கினித்தூணிலும், நீர் இவர்களுக்கு முன் செல்லுகிறதையும் கேட்டிருக்கிறார்கள்; இந்த தேசத்தின் குடிகளுக்கும் சொல்லுவார்கள். ஒரே மனிதனைக் கொல்லுகிறது போல இந்த ஜனங்களையெல்லாம் நீர் கொல்வீரானால், அப்பொழுது உம்முடைய கீர்த்தியைக் கேட்டிருக்கும் புறஜாதியார்: கர்த்தர் அந்த ஜனங்களுக்குக் கொடுப்போம் என்று ஆணையிட்டிருந்த தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய்விடக்கூடாதே போனபடியினால், அவர்களை வனாந்தரத்திலே கொன்றுபோட்டார் என்பார்களே. ஆகையால் கர்த்தர் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவர் என்றும், அக்கிரமத்தையும் மீறுதலையும் மன்னிக்கிறவர் என்றும், குற்றமுள்ளவர்களைக் குற்றமற்றவர்களாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்றும், நீர் சொல்லியிருக்கிறபடியே, என் ஆண்டவருடைய வல்லமை பெரிதாய் விளங்குவதாக. உமது கிருபையினுடைய மகத்துவத்தின்படியேயும், எகிப்தை விட்டதுமுதல் இந்நாள்வரைக்கும் இந்த ஜனங்களுக்கு மன்னித்து வந்ததின்படியேயும், இந்த ஜனங்களின் அக்கிரமத்தை மன்னித்தருளும் என்றான். அப்பொழுது கர்த்தர்: உன் வார்த்தையின்படியே மன்னித்தேன். பூமியெல்லாம் கர்த்தருடைய மகிமையினால் நிறைந்திருக்கும் என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். என் மகிமையையும், நான் எகிப்திலும் வனாந்தரத்திலும் செய்த என் அடையாளங்களையும் கண்டிருந்தும், என் சத்தத்துக்குச் செவிகொடாமல், இதனோடே பத்துமுறை என்னைப் பரீட்சைபார்த்த மனிதரில் ஒருவரும், அவர்கள் பிதாக்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காணமாட்டார்கள்; எனக்குக் கோபம் உண்டாக்கினவர்களில் ஒருவரும் அதைக் காணமாட்டார்கள். என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாயிருக்கிறபடியினாலும், உத்தமமாய் என்னைப் பின்பற்றி வந்தபடியினாலும், அவன் போய்வந்த தேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன்; அவன் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.