எண்ணாகமம் 11:24-30
எண்ணாகமம் 11:24-30 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவா சொன்னவற்றையெல்லாம் மோசே வெளியே போய் மக்களுக்குச் சொன்னான். அதன்பின் அவன் அவர்களில் எழுபது சபைத்தலைவர்களை ஒன்றுசேர்த்து சபைக் கூடாரத்தைச் சுற்றி நிறுத்தினான். அப்பொழுது யெகோவா மேகத்தில் இறங்கி, மோசேயுடன் பேசினார். பின் அவனில் இருந்த ஆவியானவரை அந்த சபைத்தலைவர்கள் எழுபதுபேர் மேலும் வைத்தார். ஆவியானவர் அவர்கள்மேல் வந்தவுடன், அவர்கள் இறைவாக்குரைத்தனர். ஆனால் அவர்கள் திரும்ப இறைவாக்கு உரைக்கவில்லை. எல்தாத், மேதாத் என்னும் இரண்டு மனிதர்கள் தங்கள் முகாமிலேயே தங்கி இருந்தார்கள். அவர்களும் அந்தச் சபைத்தலைவர்களுடன் குறிக்கப்பட்டிருந்தார்கள். ஆனாலும் அவர்கள் சபைக் கூடாரத்திற்குப் போகவில்லை. அவர்கள்மேலும் அந்த ஆவியானவர் இறங்கியபோது, அவர்கள் தங்கள் முகாம்களுக்குள்ளே இறைவாக்கு உரைத்தனர். ஒரு வாலிபன் மோசேயிடம் ஓடிப்போய், “எல்தாத்தும், மேதாத்தும் முகாமில் இறைவாக்கு உரைக்கிறார்கள்” என்று சொன்னான். அப்பொழுது நூனின் மகனும் மோசேயின் உதவியாளனுமான யோசுவா என்னும் வாலிபன் மோசேயிடம், “என் ஆண்டவனே அவர்கள் பேசுவதை நிறுத்தும்!” என்றான். ஆனால் மோசேயோ, அவனிடம், “நீ எனக்காகப் பொறாமைகொண்டு இதைச் சொல்கிறாய்? யெகோவாவின் மக்கள் எல்லாம் இறைவாக்குரைப்போராய் இருக்கவேண்டும் என்றும், யெகோவா அவர்கள்மேல் தமது ஆவியானவரை வைக்கவேண்டும் என்றுமே நான் விரும்புகிறேன்!” என்றான். பின்பு மோசேயும் இஸ்ரயேலரின் சபைத்தலைவர்களும் முகாமுக்குத் திரும்பினார்கள்.
எண்ணாகமம் 11:24-30 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்பொழுது மோசே புறப்பட்டு, யெகோவாவுடைய வார்த்தைகளை மக்களுக்குச் சொல்லி, மக்களின் மூப்பர்களில் எழுபதுபேரைக் கூட்டி, கூடாரத்தைச் சுற்றிலும் அவர்களை நிறுத்தினான். யெகோவா மேகத்தில் இறங்கி, அவனோடு பேசி, அவன் மேலிருந்த ஆவியை மூப்பர்களாகிய அந்த எழுபது பேர்மேலும் வைத்தார்; அந்த ஆவி அவர்கள்மேல் வந்து தங்கினவுடன் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்; சொல்லி, பின்பு ஓய்ந்தார்கள். அப்பொழுது இரண்டு பேர் முகாமில் இருந்துவிட்டார்கள்; ஒருவன் பேர் எல்தாத், மற்றவன் பேர் மேதாத்; அவர்களும் பேர்வழியில் எழுதப்பட்டிருந்தும், கூடாரத்திற்குப் போகப் புறப்படாமலிருந்தார்கள்; அவர்கள்மேலும் ஆவி வந்து தங்கினதினால், முகாமில் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். ஒரு பிள்ளை ஓடிவந்து, எல்தாதும், மேதாதும் முகாமில் தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள் என்று மோசேக்கு அறிவித்தான். உடனே மோசேயினிடத்திலுள்ள வாலிபர்களில் ஒருவனும் அவனுடைய ஊழியக்காரனும் நூனின் மகனுமாகிய யோசுவா மறுமொழியாக: “என்னுடைய ஆண்டவனாகிய மோசேயே, அவர்களைத் தடைசெய்யும்” என்றான். அதற்கு மோசே: “நீ எனக்காக வைராக்கியம் காண்பிக்கிறாயோ? யெகோவாவுடைய மக்கள் எல்லோரும் தீர்க்கதரிசனம் சொல்லும்படி, யெகோவா தம்முடைய ஆவியை அவர்கள்மேல் இறங்கச்செய்தால் நலமாக இருக்குமே என்றான். பின்பு, மோசேயும் இஸ்ரவேலின் மூப்பர்களும் முகாமிலே வந்து சேர்ந்தார்கள்.
எண்ணாகமம் 11:24-30 பரிசுத்த பைபிள் (TAERV)
எனவே, ஜனங்களோடு பேச மோசே வெளியே சென்றான். கர்த்தர் சொன்னவற்றையெல்லாம் மோசே ஜனங்களிடம் கூறினான். பின் 70 முதிய இஸ்ரவேல் தலைவர்களைக் கூட்டி அழைத்து வந்தான். ஆசரிப்புக் கூடாரத்தைச் சுற்றி நிற்குமாறு அவர்களிடம் கூறினான். பிறகு கர்த்தர் மேகத்தில் இறங்கி வந்து மோசேயோடு பேசினார். மோசேயின் மேல் ஆவியானவர் இருந்தார். அதே ஆவியை 70 முதிய தலைவர்கள் மேலும் கர்த்தர் வைத்தார். அவர்கள்மேல் ஆவி வந்ததும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். ஆனால் அவர்கள் அந்த நேரத்தில் மட்டுமே அவ்வாறு நடந்துகொண்டனர். அப்போது எல்தாத், மேதாத் எனும் இரு முதிய தலைவர்கள் மட்டும் கூடாரத்திற்கு வெளியே போகவில்லை. அவர்களின் பெயர் முதிய தலைவர்களின் பட்டியலில் இருந்தது. எனினும் அவர்கள் கூடாரத்திற்குள்ளேயே இருந்துவிட்டனர். எனினும் அவர்கள் மீதும் ஆவி வந்தது. அவர்கள் கூடாரத்திற்குள்ளிருந்தே தீர்க்கதரிசனம் சொன்னார்கள். ஒரு இளைஞன் மோசேயிடம் ஓடிப்போய், “எல்தாத்தும், மேதாத்தும் கூடாரத்திற்குள் தீர்க்கதரிசனம் கூறுகிறார்கள்” என்றான். நூனின் குமாரனாகிய யோசுவா மோசேயிடம், “மோசே ஐயா, நீங்கள் அவர்களைத் தடுக்கவேண்டும்” என்றான். (யோசுவா தன் சிறு வயதிலிருந்தே மோசேயிடம் உதவியாளனாக இருந்தான்.) ஆனால் மோசே, “நான் இப்போது தலைவன் இல்லை என்று ஜனங்கள் நினைத்துவிடுவார்கள் என்று அஞ்சுகிறாயா? கர்த்தரின் ஜனங்கள் அனைவரும் தீர்க்கதரிசனம் சொல்லவேண்டும் என்று நான் விரும்புகிறேன்! அவர்கள் அனைவர் மேலும் கர்த்தர் தன் பரிசுத்த ஆவியை வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றான். பிறகு மோசேயும் இஸ்ரவேல் தலைவர்களும் கூடாரத்திற்குள் சென்றனர்.
எண்ணாகமம் 11:24-30 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அப்பொழுது மோசே புறப்பட்டு, கர்த்தருடைய வார்த்தைகளை ஜனங்களுக்குச் சொல்லி, ஜனங்களின் மூப்பரில் எழுபதுபேரைக் கூட்டி, கூடாரத்தைச் சுற்றிலும் அவர்களை நிறுத்தினான். கர்த்தர் மேகத்தில் இறங்கி, அவனோடே பேசி, அவன் மேலிருந்த ஆவியை மூப்பராகிய அந்த எழுபது பேர்மேலும் வைத்தார்; அந்த ஆவி அவர்கள்மேல் வந்து தங்கினமாத்திரத்தில் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்; சொல்லி, பின்பு ஓய்ந்தார்கள். அப்பொழுது இரண்டு பேர் பாளயத்தில் இருந்துவிட்டார்கள்; ஒருவன் பேர் எல்தாத், மற்றவன் பேர் மேதாத்; அவர்களும் பேர்வழியில் எழுதப்பட்டிருந்தும், கூடாரத்துக்குப் போகப் புறப்படாதிருந்தார்கள்; அவர்கள்மேலும் ஆவி வந்து தங்கினதினால், பாளயத்தில் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள். ஒரு பிள்ளையாண்டான் ஓடிவந்து, எல்தாதும், மேதாதும் பாளயத்தில் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறார்கள் என்று மோசேக்கு அறிவித்தான். உடனே மோசேயினிடத்திலுள்ள வாலிபரில் ஒருவனும் அவனுடைய ஊழியக்காரனும் நூனின் குமாரனுமாகிய யோசுவா பிரதியுத்தரமாக: என் ஆண்டவனாகிய மோசேயே, அவர்களைத் தடைபண்ணும் என்றான். அதற்கு மோசே: நீ எனக்காக வைராக்கியம் காண்பிக்கிறாயோ? கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லத்தக்கதாக, கர்த்தர் தம்முடைய ஆவியை அவர்கள்மேல் இறங்கப்பண்ணினால் நலமாயிருக்குமே என்றான். பின்பு, மோசேயும் இஸ்ரவேலின் மூப்பரும் பாளயத்திலே வந்து சேர்ந்தார்கள்.