எண்ணாகமம் 11:1-3 - Compare All Versions

எண்ணாகமம் 11:1-3 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

பின்பு, ஜனங்கள் முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அது கர்த்தருடைய செவிகளில் பொல்லாப்பாயிருந்தது; கர்த்தர் அதைக் கேட்டபோது, அவருடைய கோபம் மூண்டது; கர்த்தருடைய அக்கினி அவர்களுக்குள்ளே பற்றியெரிந்து, பாளயத்தின் கடைசியிலிருந்த சிலரைப் பட்சித்தது. அப்பொழுது ஜனங்கள் மோசேயை நோக்கிக் கூப்பிட்டார்கள்; மோசே கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்; உடனே அக்கினி அவிந்துபோயிற்று. கர்த்தருடைய அக்கினி அவர்களுக்குள்ளே பற்றியெரிந்ததினால், அவ்விடத்துக்குத் தபேரா என்று பேரிட்டான்.

எண்ணாகமம் 11:1-3 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

பின்பு, இஸ்ரவேல் மக்கள் முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அது யெகோவாவுடைய செவிகளில் தீமையாக இருந்தது; யெகோவா அதைக் கேட்டபோது, அவருடைய கோபம் மூண்டது; யெகோவாவுடைய அக்கினி அவர்களுக்குள்ளே பற்றியெரிந்து, முகாமின் கடைசியிலிருந்த சிலரை எரித்தது. அப்பொழுது மக்கள் மோசேயை நோக்கிக் கூப்பிட்டார்கள்; மோசே யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்தான்; உடனே அக்கினி அணைந்துபோயிற்று. யெகோவாவுடைய அக்கினி அவர்களுக்குள்ளே பற்றியெரிந்ததால், அந்த இடத்திற்குத் தபேரா என்று பெயரிட்டான்.

எண்ணாகமம் 11:1-3 TAERV (பரிசுத்த பைபிள்)

ஜனங்கள் தங்கள் துன்பங்களைப்பற்றி முறுமுறுக்க ஆரம்பித்தனர். கர்த்தர் அவர்களது முறுமுறுப்புகளைக் கேட்டு அதனால் கோபம் கொண்டார். கர்த்தரிடமிருந்து நெருப்பு தோன்றி, முகாமின் ஓரங்களில் உள்ள சில ஜனங்களை எரித்தது. எனவே ஜனங்கள் மோசேயிடம் தம் மக்களைக் காப்பாற்றுமாறு கதறினார்கள். மோசே கர்த்தரிடம் வேண்டுதல் செய்ததினால் நெருப்பு அணைந்து போயிற்று. எனவே அந்த இடம் தபேரா என்று அழைக்கப்பட்டது. கர்த்தர் நெருப்பின் மூலம் அவர்கள் முகாமை எரித்ததால் இந்தப் பெயர் அந்த இடத்திற்கு ஏற்பட்டது.

எண்ணாகமம் 11:1-3 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

இப்பொழுது மக்கள் தங்கள் கஷ்டங்களை யெகோவா கேட்கும்படி முறையிட்டார்கள். அவர் அதைக் கேட்டபோது, அவருடைய கோபம் மூண்டது. யெகோவாவின் கோபம் அவர்கள் மத்தியில் நெருப்பாய் எரிந்து, முகாமின் சுற்றுப்புறங்களை அழித்தது. அவ்வேளையில் மக்கள் மோசேயை நோக்கிக் கதறினார்கள். மோசே அவர்களுக்காக யெகோவாவிடம் மன்றாடினான். அப்பொழுது நெருப்பு அணைந்தது. அங்கே யெகோவாவின் நெருப்பு அவர்கள் மத்தியில் எரிந்தபடியால், அந்த இடம், தபேரா என அழைக்கப்பட்டது.