எண்ணாகமம் 1:1-4

எண்ணாகமம் 1:1-4 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வந்த இரண்டாம் வருடம் இரண்டாம் மாதம் முதலாம் நாள், சீனாய் பாலைவனத்தில், சபைக் கூடாரத்தில் யெகோவா மோசேயுடன் பேசினார். அவர் சொன்னதாவது: “நீ இஸ்ரயேலின் முழு சமுதாயத்தையும், வம்சங்களின்படியும், குடும்பங்களின்படியும் கணக்கிடவேண்டும். ஒவ்வொருவரையும் பெயர் பெயராகப் பதிவு செய்யவேண்டும். நீயும், ஆரோனும் படையில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லா இஸ்ரயேல் மனிதர்களையும், அவர்களுடைய பிரிவுகளின்படி கணக்கிடுங்கள். இதற்காக ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும், குடும்பத்தின் தலைவன் உனக்கு உதவிசெய்ய வேண்டும்.

எண்ணாகமம் 1:1-4 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இஸ்ரவேல் மக்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருடம் இரண்டாம் மாதம் முதல் தேதியில், யெகோவா சீனாய் வனாந்திரத்தில் இருக்கிற ஆசரிப்புக் கூடாரத்திலே மோசேயை நோக்கி: “நீங்கள் இஸ்ரவேலர்களின் முழுச்சபையாக இருக்கிற அவர்கள் தகப்பன்மார்களுடைய வீட்டு வம்சங்களிலுள்ள ஆண்களாகிய எல்லா தலைகளையும் ஒவ்வொருவராக எண்ணிக் கணக்கெடுங்கள். இஸ்ரவேலிலே இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடியவர்கள் எல்லோரையும் அவர்களுடைய சேனைகளின்படி நீயும் ஆரோனும் எண்ணிப்பாருங்கள். ஒவ்வொரு வம்சத்திற்கும் ஒவ்வொரு மனிதன் உங்களோடு இருக்கவேண்டும்; அவன் தன்னுடைய பிதாக்களின் வம்சத்திற்குத் தலைவனாக இருக்கவேண்டும்.

எண்ணாகமம் 1:1-4 பரிசுத்த பைபிள் (TAERV)

ஆசரிப்புக் கூடாரத்திலே கர்த்தர் மோசேயிடம் பேசினார். இது சீனாய் பாலைவனத்தில் நடந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தை விட்டுப் புறப்பட்ட இரண்டாவது ஆண்டின் இரண்டாம் மாதத்தின் முதல் நாளில் இது நடந்தது. கர்த்தர் மோசேயிடம், “இஸ்ரவேல் ஜனங்கள் தொகையை கணக்கிடு. ஒவ்வொரு மனிதனையும் அவனது குடும்பத்தோடும் கோத்திரங்களோடும் பட்டியலிடு. இஸ்ரவேல் ஜனங்களில் இருபது வயது அல்லது அதற்கு மேலுள்ள எல்லா ஆண்களையும் நீயும் ஆரோனும் எண்ணிக் கணக்கிடுங்கள். (இந்த ஆண்கள்தான் இஸ்ரவேல் படையில் பணிபுரிய வேண்டும்.) இவர்களை குழுவின்படி கணக்கிடுக. ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒவ்வொரு மனிதன் உங்களுக்கு உதவுவான். அவனே அந்தக் கோத்திரத்துக்குத் தலைவனாக இருப்பான்.

எண்ணாகமம் 1:1-4 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இஸ்ரவேலர் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் முதல் தேதியில், கர்த்தர் சீனாய் வனாந்தரத்திலிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்திலே மோசேயை நோக்கி: நீங்கள் இஸ்ரவேல் புத்திரரின் முழுச்சபையாயிருக்கிற அவர்கள் பிதாக்களுடைய வீட்டு வம்சங்களிலுள்ள புருஷர்களாகிய சகல தலைகளையும் பேர்பேராக எண்ணித் தொகையேற்றுங்கள், இஸ்ரவேலிலே இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்துக்குப் புறப்படத்தக்கவர்கள் எல்லாரையும் அவர்கள் சேனைகளின்படி நீயும் ஆரோனும் எண்ணிப் பார்ப்பீர்களாக. ஒவ்வொரு கோத்திரத்துக்கு ஒவ்வொரு மனிதன் உங்களோடே இருப்பானாக; அவன் தன் பிதாக்களின் வம்சத்துக்குத் தலைவனாயிருக்கவேண்டும்.