நெகேமியா 10:28-33
நெகேமியா 10:28-33 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“இவர்களைவிட, ஒப்பந்தத்திற்கு உடன்பட்ட மீதியாயிருந்த மக்கள்: ஆசாரியர், லேவியர், வாசற்காவலர், பாடகர்கள், ஆலய பணியாட்கள், இறைவனுடைய சட்டத்தின்படி மற்றவர்களிடமிருந்து தங்களை வேறுபிரித்துக் கொண்டவர்கள் எல்லோரும், அவர்களுடைய மனைவிகள், விளங்கிக்கொள்ளத்தக்க வயதுடைய அவர்களுடைய எல்லா மகன்கள், மகள்கள் ஆகியோர் ஆவர். இவர்கள் எல்லோரும், தங்களுடைய சகோதரரான உயர்குடி மக்களுடன் சேர்ந்து, இறைவனுடைய அடியவனாகிய மோசே மூலம் கொடுக்கப்பட்ட இறைவனின் சட்டத்தைப் பின்பற்றுவதற்கு தங்களை உடன்படுத்திக்கொள்கிறார்கள். அத்துடன் எங்கள் ஆண்டவராகிய யெகோவாவினுடைய எல்லாக் கட்டளைகளுக்கும், விதிமுறைகளுக்கும், ஒழுங்குவிதிகளுக்கும் கவனமாய்க் கீழ்ப்படிவதற்கு சாபத்தினாலும், ஆணையினாலும் தங்களை உடன்படுத்திக்கொள்கிறார்கள். “நாங்கள் எல்லோரும், எங்களைச் சுற்றியுள்ள மக்கள் கூட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு எங்கள் மகள்களைத் திருமணம் செய்துகொடுக்கவோ, எங்கள் மகன்களுக்கு அவர்கள் மகள்களை எடுக்கவோமாட்டோம் எனவும் வாக்குறுதி செய்கிறோம். “அயலிலுள்ள மக்கள் கூட்டங்கள் ஓய்வுநாளில் தங்கள் வியாபாரப் பொருட்களையோ, அல்லது தங்கள் தானியங்களையோ விற்பதற்காகக் கொண்டுவந்தால், அவர்களிடமிருந்து அதை நாங்கள் ஓய்வுநாளிலோ, எந்த பரிசுத்த நாளிலோ வாங்கமாட்டோம். அதைவிட ஏழு வருடங்களுக்கு ஒருமுறை எங்கள் நிலத்தை பண்படுத்தாமல் விட்டுவிடுவதுடன், கொடுத்த கடன்களையெல்லாம் மன்னித்து விட்டுவிடுவோம் என்று நாங்கள் உறுதி கூறுகிறோம். “அத்துடன் ஒவ்வொரு வருடமும் எங்கள் இறைவனின் ஆலயத்தின் பணிக்கென, மூன்றில் ஒரு சேக்கல் பணத்தைக் கொடுப்பதற்கான கட்டளையை நிறைவேற்றும் பொறுப்பையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அப்பணத்தை இறைசமுகத்தில் வைக்கப்படும் அப்பங்களுக்கும், ஒழுங்கான தானிய காணிக்கைகளுக்கும், தகன காணிக்கைகளுக்கும், ஓய்வுநாளுக்கும், அமாவாசை பண்டிகைகளுக்கும், நியமிக்கப்பட்ட பண்டிகைகளுக்குமான காணிக்கைகளுக்கும், பரிசுத்த காணிக்கைகளுக்கும், இஸ்ரயேலருக்கான பாவநிவாரண காணிக்கைகளுக்கும் இறைவனின் ஆலய எல்லா வேலைகளுக்கும் பயன்படுத்துவதற்குமாகக் கொடுப்போம்.
நெகேமியா 10:28-33 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மக்களில் மற்றவர்களாகிய ஆசாரியர்களும், லேவியர்களும், வாசல் காவலாளர்களும், பாடகர்களும், ஆலய பணியாளர்களும், தேசங்களின் மக்களைவிட்டுப் பிரிந்து தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்குத் திரும்பின அனைவரும், அவர்களுடைய மனைவிகளும், மகன்களும், மகள்களுமாகிய அறிவும் புத்தியும் உள்ளவர்களெல்லோரும், தங்களுக்குப் பெரியவர்களாகிய தங்கள் சகோதரர்களோடு கூடிக்கொண்டு: தேவனுடைய ஊழியனாகிய மோசேயைக்கொண்டு கொடுக்கப்பட்ட தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் முறையில் நடந்துகொள்வோம் என்றும், எங்கள் ஆண்டவராகிய யெகோவாவின் கற்பனைகளையும் சகல நீதிநியாயங்களையும், கட்டளைகளையும் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வோம் என்றும், நாங்கள் எங்களுடைய மகள்களை தேசத்தின் மக்களுக்குக் கொடுக்காமலும், எங்கள் மகன்களுக்கு அவர்களுடைய மகள்களை எடுக்காமலும் இருப்போம் என்றும், தேசத்தின் மக்கள் ஓய்வுநாளிலே சரக்குகளையும், எந்தவிதத் தானியங்களையும் விற்பதற்குக் கொண்டுவந்தால், நாங்கள் அதை ஓய்வுநாளிலும் பரிசுத்தநாளிலும் அவர்கள் கையில் வாங்காதிருப்போம் என்றும், நாங்கள் ஏழாம் வருடத்தை விடுதலை வருடமாக்கி எல்லா கடன்களையும் விட்டுவிடுவோம் என்றும் ஆணையிட்டு ஒப்பந்தம் செய்தார்கள். மேலும்: நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்காக சமுகத்து அப்பங்களுக்கும், நிரந்தர உணவுபலிக்கும், ஓய்வு நாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் செலுத்தும் நிரந்தர சர்வாங்க தகனபலிகளுக்கும், பண்டிகைகளுக்கும், அபிஷேகத்துக்கான பொருள்களுக்கும், இஸ்ரவேலுக்காகப் பாவநிவிர்த்தி உண்டாக்கும் பலிகளுக்கும், எங்கள் தேவனுடைய ஆலயத்தின் எல்லா வேலைக்கும், வருடந்தோறும் நாங்கள் சேக்கலில் மூன்றில் ஒரு பங்கைக் கொடுப்போம் என்கிற பொறுப்பை எங்கள்மேல் ஏற்றுக்கொண்டோம்.
நெகேமியா 10:28-33 பரிசுத்த பைபிள் (TAERV)
எனவே இந்த ஜனங்கள் அனைவரும் தேவனிடம் இந்த விசேஷ வாக்குறுதியை அளித்தனர். அவர்கள் வாக்குறுதியைக் கடைபிடிக்காவிட்டால் தீமைகள் வரட்டும் என்று வேண்டினர். தேவனுடைய சட்டத்தைக் கடைபிடிக்கவேண்டும் என்று ஜனங்கள் அனைவரும் வாக்குறுதிச் செய்தனர். தேவனுடைய சட்டம் அவரது தாசனாகிய மோசேயின் மூலம் எங்களுக்குக் கொடுக்கப்பட்டது. இந்த ஜனங்கள் நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய கற்பனைகளையும், சகல விதிகளையும், போதனைகளையும் கைக்கொள்ளவேண்டும் என்று வாக்குறுதிக் கொடுத்தனர். இப்பொழுது வாக்குறுதிச் செய்துக்கொண்ட ஜனங்கள் இவர்கள்தான்: ஜனங்களில் மற்றவர்களான ஆசாரியரும், லேவியரும், வாசல் காவலாளரும், பாடகரும், ஆலய ஊழியர்களும், தேவனுடைய சட்டத்திற்குக் கீழ்ப்படிவதற்காக மற்ற ஜனங்களிடமிருந்து தங்களை பிரித்துக்கொண்ட இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் இருந்தனர். அவர்கள் மனைவிகளும் அவர்கள் குமாரர்களும் அவர்கள் குமாரத்திகளுமாகிய அனைவரும் கவனித்து புரிந்துகொள்பவர்களாக இருந்தனர். இவர்கள் தங்கள் சகோதரர்கள் மற்றும் முக்கியமானவர்களோடு சேர்ந்துக்கொண்டு தேவனுடைய சட்டத்திற்கு கீழ்ப்படிய ஒப்புக்கொள்ள வைத்தனர். தேவனுடைய சட்டத்திற்கு கீழ்ப்படியாவிட்டால் தமக்குத் தீமைகள் ஏற்படட்டும் என்ற சாபத்தையும் அவர்கள் ஏற்றுக்கொண்டனர். அவர்கள், “எங்களைச் சுற்றியிருக்கும் பிறர் குமாரர்களுக்கு எங்கள் குமாரத்திகளை கொடுக்கமாட்டோம். எங்கள் குமாரர்களுக்கு எங்களைச் சுற்றியிருக்கும் பிறர் குமாரத்திகளைக் கொள்ளமாட்டோம்” என்று வாக்குறுதிச் செய்தனர். “நாங்கள் ஓய்வுநாளில் வேலைச் செய்யமாட்டோம். எங்களைச் சுற்றியிருப்பவர்கள் அந்நாளில் தானியங்களையோ மற்ற பொருட்களையோ கொண்டுவந்து விற்றால் நாங்கள் அவற்றை அச்சிறப்பான நாளிலும் மற்ற ஓய்வுநாட்களிலும் வாங்கமாட்டோம். ஒவ்வொரு ஏழாவது ஆண்டிலும், நாங்கள் எங்கள் பூமியில் நாத்து நடுதல் அல்லது வேறு வேலைகளைச் செய்யமாட்டோம். ஒவ்வொரு ஏழாவது ஆண்டிலும், மற்றவர்கள் எங்களுக்குத் தர வேண்டிய கடன்களைத் தள்ளுபடி செய்வோம். “நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் கட்டளைக்குப் கீழ்ப்படிவோம். எங்கள் தேவனை மகிமைப்படுத்த ஒவ்வொரு ஆண்டும் சேக்கலில் மூன்றில் ஒரு பங்கைக் கொடுத்து ஆலயபணிக்கு உதவுவோம். இப்பணமானது ஆசாரியர்கள் ஆலயத்தில் மேஜையின் மேல் வைக்கும் விசேஷ ரொட்டிக்கும் சமூகத்தப்பங்களுக்கும் கொடுக்கப்படும். இப்பணம் தானியக் காணிக்கைக்கும், தகனப்பலிக்கும் கொடுக்கப்படும். ஓய்வுநாட்களிலும், பிறைச் சந்திர நாட்களிலும் மற்றும் சிறப்புக் கூட்டங்களிலும் செலுத்தும் பலிகளுக்கும் கொடுக்கப்படும். இஸ்ரவேல் ஜனங்களைப் பரிசுத்தப்படுத்தும் பாவப்பரிகாரப் பலிகளுக்கும் கொடுக்கப்படும். இப்பணம் தேவாலயத்திற்குத் தேவைப்படும் எவ்வித வேலைகளுக்கும் கொடுக்கப்படும்.
நெகேமியா 10:28-33 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஜனங்களில் மற்றவர்களாகிய ஆசாரியரும், லேவியரும், வாசல் காவலாளரும், பாடகரும், நிதனீமியரும், தேசங்களின் ஜனங்களைவிட்டுப் பிரிந்து விலகி தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குத் திரும்பின அனைவரும், அவர்கள் மனைவிகளும், அவர்கள் குமாரரும், அவர்கள் குமாரத்திகளுமாகிய அறிவும் புத்தியும் உள்ளவர்களெல்லாரும், தங்களுக்குப் பெரியவர்களாகிய தங்கள் சகோதரரோடே கூடிக்கொண்டு: தேவனுடைய தாசனாகிய மோசேயைக்கொண்டு கொடுக்கப்பட்ட தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படி நடந்துகொள்வோம் என்றும், எங்கள் ஆண்டவராகிய கர்த்தரின் கற்பனைகளையும் சகல நீதிநியாயங்களையும், கட்டளைகளையும் எல்லாம் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வோம் என்றும், நாங்கள் எங்கள் குமாரத்திகளை தேசத்தின் ஜனங்களுக்குக் கொடாமலும், எங்கள் குமாரருக்கு அவர்கள் குமாரத்திகளைக்கொள்ளாமலும் இருப்போம் என்றும், தேசத்தின் ஜனங்கள் ஓய்வுநாளிலே சரக்குகளையும், எந்தவிதத்தானியதவசத்தையும் விற்கிறதற்குக் கொண்டுவந்தால், நாங்கள் அதை ஓய்வுநாளிலும் பரிசுத்தநாளிலும் அவர்கள் கையில் கொள்ளாதிருப்போம் என்றும், நாங்கள் ஏழாம் வருஷத்தை விடுதலை வருஷமாக்கிச் சகல கடன்களையும் விட்டுவிடுவோம் என்றும் ஆணையிட்டுப் பிரமாணம்பண்ணினார்கள். மேலும்: நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்காக சமுகத்தப்பங்களுக்கும், நித்திய போஜனபலிக்கும், ஓய்வு நாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் செலுத்தும் நித்திய சர்வாங்க தகனபலிகளுக்கும், பண்டிகைகளுக்கும், பிரதிஷ்டையான பொருள்களுக்கும், இஸ்ரவேலுக்காகப் பாவநிவிர்த்தி உண்டாக்கும் பலிகளுக்கும், எங்கள் தேவனுடைய ஆலயத்தின் சகல வேலைக்கும், வருஷந்தோறும் நாங்கள் சேக்கலில் மூன்றில் ஒரு பங்கைக் கொடுப்போம் என்கிற கடனை எங்கள்மேல் ஏற்றுக்கொண்டோம்.