நாகூம் 3:2-7

நாகூம் 3:2-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

சவுக்கு அடியின் ஒசையும், உருளைகளின் சத்தமும், குதிரைகளின் பாய்ச்சலும், தேர்களின் அதிர்வும் கேட்கிறதே, தாக்குகின்ற குதிரைப்படையின் வாள்களும், மின்னும் ஈட்டிகளும் பளிச்சிடுகின்றன, அநேகர் கொல்லப்பட்டுக் கிடக்கிறார்கள். பிரேதங்கள் குவியலாய் கிடக்கின்றன. இறந்த உடல்களோ எண்ணற்றவை. மக்கள் பிரேதங்கள்மேல் இடறி விழுகிறார்கள். இவையெல்லாம் நினிவேயின் வேசித்தனத்தினாலும், கட்டுக்கடங்காத காமத்தினாலும் உண்டாயிற்று. அவள் வசீகரமுள்ளவளும், மந்திரங்களில் தேர்ச்சி பெற்றவளுமாயிருக்கிறாள். அவள் நாடுகளைத் தன் வேசித்தனத்தினாலும், மக்கள் கூட்டங்களைத் தன் மந்திரங்களினாலும் அடிமைப்படுத்தியிருக்கிறாள். இதோ, சேனைகளின் யெகோவா சொல்கிறார்: “நினிவேயே, நான் உனக்கு விரோதமாய் வந்து, உன் ஆடையை உன் முகத்துக்கு மேலாக தூக்குவேன்; நாடுகளுக்கு உன் நிர்வாணத்தையும், எல்லா அரசுகளுக்கும் உன் வெட்கத்தையும் காட்டுவேன். அசுத்தமானவற்றை உன்மேல் வீசுவேன். உன்னை அவமதிப்பாய் நடத்தி, உன்னை ஒரு இழிவுக் காட்சியாக்குவேன். உன்னைக் காண்கிறவர்கள் எல்லோரும் உன்னைவிட்டு விலகி ஓடி, ‘நினிவே பாழாக்கப்பட்டுப் போனது; அதற்காகப் புலம்புகிறவர்கள் யார்?’ என்று சொல்வார்கள். உன்னை ஆறுதல்படுத்துவதற்கு ஒருவனை நான் எங்கே தேடுவேன்?”

நாகூம் 3:2-7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

சாட்டைகளின் ஓசையும், உருளைகளின் அதிர்ச்சியும், குதிரைகளின் பாய்ச்சலும், இரதங்கள் கடகடவென்று ஓடுகிற சத்தமும், வீரர்கள் குதிரை ஏறுகிறதும், பட்டயங்கள் பிரகாசிக்கிறதும், ஈட்டிகள் மின்னுகிறதும், வெட்டுண்டவர்களின் குவியலும், பிரேதங்களின் மிகுதியும் அங்கே உண்டாயிருக்கும்; பிணங்களுக்கு கணக்கில்லை; அவர்கள் பிணங்களில் தடுக்கிவிழுகிறார்கள். தன் வேசித்தனங்களினால் தேசங்களையும், தன் சூனியங்களினால் மக்களையும் விற்கிற மகா சூனியக்காரியும் ரூபவதியுமாயிருக்கிற வேசியினுடைய மிகுதியான வேசித்தனங்களினிமித்தம், இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து உன் ஆடையின் ஓரங்களை உன் முகம்வரை தூக்கியெடுத்து, தேசங்களுக்கு உன் நிர்வாணத்தையும், இராஜ்யங்களுக்கு உன் மானத்தையும் வெளிப்படுத்தி, உன்மேல் தீட்டானவைகளை எறிந்து, உன்னைக் கனவீனப்படுத்தி, உன்னை வேடிக்கையாக்கிப்போடுவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். அப்பொழுது உன்னைக் காண்கிறவனெல்லாம் நினிவே பாழாய்ப்போயிற்று, அதற்காகப் புலம்புகிறவர்கள் யார்? ஆறுதல் சொல்லுகிறவர்களை உனக்கு எங்கே தேடுவேனென்று சொல்லி, உன்னைவிட்டு ஓடிப் போவான்.

நாகூம் 3:2-7 பரிசுத்த பைபிள் (TAERV)

நீங்கள், சவுக்குகளின் ஓசையையும், சக்கரங்களின் அதிர்ச்சியையும், குதிரைகளின் பாய்ச்சலையும், இரதங்களின் ஓடுகிற சத்தத்தையும் கேட்கமுடியும். குதிரைமேல் வந்த வீரர்கள் தாக்குகின்றனர். அவர்களின் வாள்கள் மின்னுகின்றன. அவர்களின் ஈட்டிகள் மின்னுகின்றன. அங்கே, ஏராளமான மரித்த ஜனங்கள், மரித்த உடல்கள் குவிந்துள்ளன. எண்ணுவதற்கு முடியாத ஏராளமான உடல்கள் உள்ளன. ஜனங்கள் மரித்த உடல்களில் தடுக்கி விழுகின்றனர். இவை அனைத்தும் நினிவேயால் ஏற்பட்டன. நினிவே, ஒரு வேசியைப் போன்றவள். அவளுக்குத் திருப்தி இல்லை. அவள் மேலும், மேலும் விரும்பினாள். அவள் தன்னைத்தானே பல நாடுகளுக்கு விற்றாள். அவள் அவர்களைத் தன் அடிமையாக்க மந்திரத்தைப் பயன்படுத்தினாள். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “நினிவே, நான் உனக்கு எதிராக இருக்கிறேன். நான் உனது ஆடைகளை உன் முகம் மட்டும் தூக்குவேன். நான் உனது நிர்வாண உடலை தேசங்கள் பார்க்கும்படிச் செய்வேன். அந்த இராஜ்யங்கள் உனது அவமானத்தைக் காணும். நான் உன்மேல் அசுத்தமானவற்றை எறிவேன். நான் உன்னை வெறுக்கத்தக்க முறையில் நடத்துவேன். ஜனங்கள் உன்னைப் பார்த்து சிரிப்பார்கள். உன்னைப் பார்க்கிற ஒவ்வொருவரும் அதிர்ச்சி அடைவார்கள். அவர்கள், ‘நினிவே அழிக்கப்படுகிறது. அவளுக்காக யார் அழுவார்கள்?’ என்பார்கள். நினிவே, என்னால் உன்னை ஆறுதல்படுத்தும் எவரையும் கண்டுபிடிக்க முடியாது என்று எனக்குத் தெரியும்.”

நாகூம் 3:2-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

சவுக்குகளின் ஓசையும், உருளைகளின் அதிர்ச்சியும், குதிரைகளின் பாய்ச்சலும், இரதங்கள் கடகடவென்று ஓடுகிற சத்தமும், வீரர் குதிரை ஏறுகிறதும், பட்டயங்கள் துலங்குகிறதும், ஈட்டிகள் மின்னுகிறதும், வெட்டுண்டவர்களின் திரளும், பிரேதங்களின் ஏராளமும் அங்கே உண்டாயிருக்கும்; பிணங்களுக்குத் தொகையில்லை; அவர்கள் பிணங்களில் இடறிவிழுகிறார்கள். தன் வேசித்தனங்களினால் ஜாதிகளையும், தன் சூனியங்களினால் வம்சங்களையும் விற்கிற மகா சூனியக்காரியும் ரூபவதியுமாயிருக்கிற வேசியினுடைய திரளான வேசித்தனங்களினிமித்தம், இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து உன் வஸ்திரத்து ஓரங்களை உன் முகமட்டும் தூக்கியெடுத்து, ஜாதிகளுக்கு உன் நிர்வாணத்தையும், ராஜ்யங்களுக்கு உன் மானத்தையும் தெரியப்பண்ணி, உன்மேல் தீட்டானவைகளை எறிந்து, உன்னைக் கனவீனப்படுத்தி, உன்னை வேடிக்கையாக்கிப்போடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். அப்பொழுது உன்னைக் காண்கிறவனெல்லாம் நினிவே பாழாய்ப்போயிற்று, அதற்காகப் புலம்புகிறவர் யார்? ஆறுதல் சொல்லுகிறவர்களை உனக்கு எங்கே தேடுவேனென்று சொல்லி, உன்னைவிட்டோடிப் போவான்.