மாற்கு 9:1-13
மாற்கு 9:1-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பின்பு இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இங்கே நிற்கிறவர்களில் சிலர், இறைவனுடைய அரசு வல்லமையுடன் வருவதைக் காணுமுன், மரணமடைய மாட்டார்கள்” என்றார். ஆறு நாட்களுக்குபின் இயேசு தம்முடன் பேதுருவையும், யோவானையும், யாக்கோபையும் கூட்டிக்கொண்டு, உயரமான மலைக்கு ஏறிப்போனார். அங்கே அவர்கள் தனிமையாய் இருக்கையில், அவர்களுக்கு முன்பாக இயேசு மறுரூபமடைந்தார். அவருடைய உடைகள் மிகவும் பிரகாசமான வெண்மையாயிருந்தன. அவை இந்தப் பூமியிலுள்ள எவராலும், வெளுக்க முடியாத அளவுக்கு வெண்மையாயிருந்தன. அத்துடன் எலியாவும் மோசேயும் அவர்களுக்குமுன் தோன்றி, இயேசுவுடன் பேசிக்கொண்டிருந்தார்கள். உடனே பேதுரு இயேசுவிடம், “போதகரே, நாம் இங்கே இருப்பது நல்லது. ஒன்று உமக்கும், ஒன்று மோசேக்கும், ஒன்று எலியாவுக்குமாக, நாம் மூன்று கூடாரங்களை அமைப்போம்” என்றான். அவர்கள் மிகவும் பயமடைந்திருந்தபடியால், என்ன சொல்வதென்றே அவனுக்குத் தெரியவில்லை. அப்பொழுது ஒரு மேகம் தோன்றி, அவர்களை மூடிக்கொண்டது. அந்த மேகத்திலிருந்து ஒரு குரல் கேட்டது: “இவர் என் மகன், நான் இவரில் அன்பாயிருக்கிறேன். இவர் கூறுவதைக் கேளுங்கள்.” திடீரென அவர்கள் சுற்றிப் பார்த்தபோது, இயேசுவைத் தவிர தங்களோடு வேறு எவரையும் அவர்கள் காணவில்லை. அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, மானிடமகனாகிய தான் மரித்தோரிலிருந்து உயிருடன் எழுந்திருக்கும் வரைக்கும், அவர்கள் பார்த்ததை வேறு ஒருவருக்கும் சொல்லக்கூடாது, என்று இயேசு அவர்களுக்கு உத்தரவிட்டார். அவர்கள் இந்தக் காரியத்தைத் தங்களுக்குள்ளேயே வைத்து, “இறந்தோரில் இருந்து உயிர்த்தெழுவது என்றால் என்ன?” என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். அவர்கள் இயேசுவிடம், “முதலாவது எலியா வரவேண்டும் என்று மோசேயின் சட்ட ஆசிரியர்கள் சொல்கிறார்களே; அது ஏன்?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, “உண்மையாக எலியாவே முதலாவதாய் வந்து, எல்லா காரியங்களையும், முந்தைய நிலைக்குக் கொண்டுவருவான். அப்படியானால் மானிடமகனாகிய நான் அதிகமாகத் துன்பப்பட்டு, புறக்கணிக்கப்படவேண்டும் என்று எழுதியிருக்கிறதே அது ஏன்? நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், எலியா வந்துவிட்டான். அவனைக்குறித்து எழுதியிருக்கிறபடியே, மக்கள் தாங்கள் விரும்பியபடியெல்லாம் அவனுக்குச் செய்தார்கள்” என்றார்.
மாற்கு 9:1-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இயேசு அவர்களைப் பார்த்து: இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யம் பலத்தோடு வருவதைப் பார்ப்பதற்குமுன்பு, மரிப்பதில்லை என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். ஆறு நாட்களுக்குப்பின்பு, இயேசு பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் அழைத்து, உயர்ந்த மலையின்மேல் அவர்களைத் தனியே கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமடைந்தார். அவருடைய உடை உறைந்த மழையைப்போல பூமியிலே எந்தவொரு நபராலும் வெளுக்கக்கூடாத வெண்மையாகப் பிரகாசித்தது. அப்பொழுது மோசேயும் எலியாவும் இயேசுவோடு பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள். அப்பொழுது பேதுரு இயேசுவைப் பார்த்து: ரபீ, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவிற்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான். அவர்கள் மிகவும் பயந்திருந்தபடியால், தான் பேசுகிறது என்ன என்று தெரியாமல் இப்படிச் சொன்னான். அப்பொழுது, ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவர் சொல்வதைக் கேளுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது. உடனே அவர்கள் சுற்றிலும் பார்த்தபோது, இயேசுவைத்தவிர வேறுயாரையும் பார்க்கவில்லை. அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களைப் பார்த்து: மனிதகுமாரன் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்கும்வரைக்கும், நீங்கள் பார்த்தவைகளை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார். மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருப்பது என்னவென்று அவர்கள் ஒருவரோடொருவர் விசாரித்து, அந்த வார்த்தையைத் தங்களுக்குள்ளே அடக்கிக்கொண்டு: எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்களே, அது எப்படி என்று அவரிடம் கேட்டார்கள். அவர் மறுமொழியாக: எலியா முதலில் வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது உண்மைதான்; அல்லாமலும், மனிதகுமாரன் பல பாடுகள்பட்டு, அவமதிக்கப்படுவார் என்று, அவரைக்குறித்து எழுதியிருக்கிறதே அது எப்படி என்றார். ஆனாலும் எலியா வந்துவிட்டான், அவனைக்குறித்து எழுதியிருக்கிறபடி தங்களுக்கு விருப்பமானபடி அவனுக்குச் செய்தார்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
மாற்கு 9:1-13 பரிசுத்த பைபிள் (TAERV)
பிறகு இயேசு “நான் உங்களுக்கு ஒரு உண்மையைச் சொல்கிறேன். இங்கே நிற்கின்ற மக்களில் சிலர், அவர்கள் மரணத்துக்கு முன் தேவனுடைய இராஜ்யம் வருவதைப் பார்ப்பார்கள். தேவனுடைய இராஜ்யம் வல்லமையோடு வரும்” என்றார். ஆறு நாட்களுக்குப் பின், பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரை இயேசு அழைத்துக்கொண்டு உயரமான மலை உச்சிக்குச் சென்றார். அவர்கள் அங்கே தனியே இருந்தனர். சீஷர்கள் இயேசுவைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவர் புதிய ரூபம் அடைந்தார். இயேசுவின் ஆடைகள் வெண்ணிறமாய் மின்னியது. அவை எவராலும் சுத்தம் செய்ய முடியாத அளவுக்கு வெண்மையாய் இருந்தது. அப்போது இரண்டு மனிதர்கள் அங்கே தோன்றி இயேசுவோடு பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் மோசே, எலியா என்னும் இருவரே. பேதுரு இயேசுவிடம், “போதகரே நாம் இங்கே இருப்பது நல்லதாயிற்று. நாங்கள் கூடாரங்கள் அமைக்கப் போகிறோம். ஒன்று உமக்கு, மற்றொன்று மோசேக்கு, இன்னொன்று எலியாவுக்கு” என்றான். பேதுருவுக்குத் தான் என்ன சொல்கிறோம் என்றே புரியாமல் சொன்னான். ஏனென்றால் அவனும் மற்ற இரு சீஷர்களும் மிகவும் பயந்திருந்தனர். பிறகு ஒரு மேகம் வந்து அவர்களை மறைத்தது. அந்த மேகத்திலிருந்து ஓர் ஒலி வந்தது. அது, “இவர் என் குமாரன். நான் இவரிடம் அன்பாய் இருக்கிறேன். இவருக்குக் கீழ்ப்டியுங்கள்” என்று சொன்னது. பிறகு பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோர் சுற்றிலும் பார்த்தனர். ஆனால் இயேசுவைத் தவிர வேறு ஒருவரையும் காணவில்லை. இயேசுவும், அவரது சீஷர்களும் மலையிலிருந்து இறங்கி வந்தனர். இயேசு தன் சீஷர்களிடம், “மலை மேலே பார்த்ததை நீங்கள் யாரிடமும் சொல்லாதீர்கள். மனித குமாரன் மரணத்திலிருந்து உயிர்த்தெழும்வரை காத்திருங்கள். பிறகு நீங்கள் பார்த்ததை மக்களுக்குச் சொல்லலாம்” என்று கட்டளையிட்டார். ஆகையால் சீஷர்களும் இயேசுவுக்குக் கீழ்ப்படிந்து தாங்கள் பார்த்ததைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. ஆனால் மரணத்திலிருந்து எழுவதன் பொருளைப்பற்றித் தமக்குள் விவாதித்துக் கொண்டனர். சீஷர்கள் இயேசுவிடம், “எலியா முதலில் வர வேண்டும் என்று வேதபாரகர் ஏன் கூறுகின்றனர்?” என்று கேட்டனர். “எலியாதான் முதலில் வர வேண்டும் என்று வேதபாரகர்கள் கூறுவது சரிதான். அவன் எல்லாவற்றையும் இருக்க வேண்டிய முறைப்படி சீர்ப்படுத்துவான். மனித குமாரன் மிகவும் கஷ்டப்படுவார் என்றும், உபயோகமற்றவர் என மக்களால் எண்ணப்படுவார் என்றும் வேதவாக்கியங்களில் எழுதி இருப்பது எதற்காக? எலியா ஏற்கெனவே வந்துவிட்டான் என நான் சொல்கிறேன். அவனைப்பற்றி எழுதி இருக்கிறபடி, மக்கள் தங்களுக்கு விருப்பமானபடி அவனுக்குத் தீமை செய்தனர்” என்றார்.
மாற்கு 9:1-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அன்றியும், அவர் அவர்களை நோக்கி: இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யம் பலத்தோடே வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். ஆறுநாளைக்குப்பின்பு, இயேசு பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் அழைத்து, உயர்ந்த மலையின்மேல் அவர்களைத் தனியே கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார். அவருடைய வஸ்திரம் உறைந்தமழையைப்போல் பூமியிலே எந்த வண்ணானும் வெளுக்கக்கூடாத வெண்மையாய்ப் பிரகாசித்தது. அப்பொழுது மோசேயும் எலியாவும் இயேசுவுடனே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள். அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி: ரபீ, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான். அவர்கள் மிகவும் பயந்திருந்தபடியால், தான் பேசுகிறது இன்னதென்று அறியாமல் இப்படிச் சொன்னான். அப்பொழுது, ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. உடனே அவர்கள் சுற்றிலும் பார்த்தபோது, இயேசு ஒருவரைத்தவிர வேறொருவரையும் காணவில்லை. அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, அவர் அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும்வரைக்கும், நீங்கள் கண்டவைகளை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார். மரித்தோரிலிருந்து எழுந்திருப்பது என்னவென்று அவர்கள் ஒருவரிடத்தில் ஒருவர் விசாரித்து, அந்த வார்த்தையைத் தங்களுக்குள்ளே அடக்கிக்கொண்டு: எலியா முந்தி வரவேண்டுமென்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படியென்று அவரிடத்தில் கேட்டார்கள். அவர் பிரதியுத்தரமாக: எலியா முந்திவந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான்; அல்லாமலும், மனுஷகுமாரன் பல பாடுகள்பட்டு, அவமதிக்கப்படுவாரென்று, அவரைக்குறித்து எழுதியிருக்கிறதே அது எப்படி என்றார். ஆனாலும் எலியா வந்தாயிற்று, அவனைக்குறித்து எழுதியிருக்கிற பிரகாரம் தங்களுக்கு இஷ்டமானபடி அவனுக்குச் செய்தார்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.