மாற்கு 7:14-37

மாற்கு 7:14-37 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மேலும், இயேசு மக்கள் கூட்டத்தைத் தன்னிடம் அழைத்துச் சொன்னதாவது: “நீங்கள் ஒவ்வொருவரும் எனக்குச் செவிகொடுத்து, இதை விளங்கிக்கொள்ளுங்கள். மனிதனுக்கு வெளியே இருப்பது எதுவும், அவனுக்குள்ளே போவதினால் அவன் அசுத்தமாவதில்லை. ஆனால், மனிதனுக்குள்ளேயிருந்து வெளியே வருகிறவைகளே, அவனை அசுத்தப்படுத்துகின்றன. கேட்கிறதற்குக் காதுகளுள்ளவன் கேட்கட்டும்” என்று கூறினார். பின் மக்கள் கூட்டத்தைவிட்டு, அவர் புறப்பட்டு வீட்டிற்குள் சென்றார். அப்பொழுது அவருடைய சீடர்கள் அவரிடத்தில், அவர் சொன்ன இந்த உவமையின் கருத்து என்ன? என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், “நீங்கள் புரிந்துகொள்ளாமல் இருக்கிறீர்களோ? ஒரு மனிதனுக்கு வெளியே இருந்து அவனுக்கு உள்ளே போகிறவை, அவனை அசுத்தப்படுத்துவதில்லை என்று உங்களுக்குத் தெரியாதா? ஏனெனில், அது அவனுடைய இருதயத்திற்குள் போகாமல், அவனுடைய வயிற்றுக்குள் போய், அவனது உடலைவிட்டு வெளியேறுகிறது” என்றார். இப்படிச் சொல்லி, இயேசு எல்லா உணவுப் பொருட்களும் சுத்தமானது என்று அறிவித்தார். இயேசு தொடர்ந்து: “ஒரு மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருகிறவைகள் அவரை ‘அசுத்தப்படுத்தும்.’ ஏனெனில், மனிதருடைய இருதயங்களிலிருந்தே முறைகேடான பாலுறவு, களவு, கொலை, விபசாரம், பேராசை, அநியாயம், வஞ்சகம், காமவெறி, பொறாமை, அவதூறு, கர்வம், மதிகேடு போன்ற தீய சிந்தனைகள் வருகின்றன; தீமையான இவை யாவும் உள்ளத்திலிருந்து வருகின்றன. இவையே, மனிதரை அசுத்தப்படுத்துகின்றன” என்றார். இயேசு அவ்விடம்விட்டுப் புறப்பட்டு, தீரு பட்டணத்தின் சுற்றுப் புறத்திற்குச் சென்றார். அவர் ஒரு வீட்டிற்குள் போய், தான் அங்கு இருப்பதை ஒருவரும் அறியாதிருக்க வேண்டும் என்று விரும்பினார்; ஆனால், அவர் அங்கிருப்பதை மறைக்க முடியவில்லை. ஒரு பெண் இயேசுவைக்குறித்து கேள்விப்பட்ட உடனே, அவரிடத்தில் வந்து அவருடைய பாதத்தில் விழுந்தாள். அவளது மகளை ஒரு அசுத்த ஆவி பிடித்திருந்தது. அவள் சீரோபேனிக்கியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட, ஒரு கிரேக்கப் பெண். தனது மகளிடத்திலிருக்கும் அந்தப் பிசாசைத் துரத்திவிடும்படி, அவள் இயேசுவைக் கெஞ்சிக் கேட்டாள். இயேசு அவளிடம், “முதலில் பிள்ளைகள், அவர்களுக்கு வேண்டியதைச் சாப்பிடட்டும். ஏனெனில் பிள்ளைகளின் உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது சரியல்ல” என்றார். அதற்கு அவள், “ஆம், ஆண்டவரே, ஆனால் மேஜையின்கீழ் இருக்கும் நாய்க்குட்டிகள், பிள்ளைகள் சிந்தும் அப்பத்துண்டுகளைத் தின்னுமே” என்று பதிலளித்தாள். அப்பொழுது இயேசு அவளிடம், “உனது இந்தப் பதிலே போதும், நீ போகலாம்; அந்தப் பிசாசு உன் மகளை விட்டுப் போய்விட்டது” என்றார். அப்படியே அவள் வீட்டிற்குப்போய், தனது மகள் படுக்கையில் படுத்திருப்பதைக் கண்டாள். பிசாசு அவளைவிட்டுப் போயிருந்தது. அதற்குப் பின்பு இயேசு, தீருவின் சுற்றுப் புறத்தை விட்டுப் புறப்பட்டு, சீதோன் வழியாகப்போய், தெக்கப்போலி பகுதியிலுள்ள கலிலேயாக் கடல் பகுதியை அடைந்தார். அங்கே சிலர் அவரிடத்தில் செவிடனும், ஊமையுமாயிருந்த ஒருவனைக் கூட்டிக்கொண்டு வந்தார்கள். அவன்மேல் இயேசு தமது கைகளை வைக்க வேண்டுமென்று அவர்கள் அவரைக் கெஞ்சிக் கேட்டார்கள். இயேசு மக்கள் கூட்டத்திலிருந்து அவனைத் தனிமையான ஒரு இடத்திற்கு கூட்டிக்கொண்டுபோய், அவனுடைய காதுகளுக்குள் தமது விரல்களை வைத்தார். அதற்குப் பின்பு அவர் உமிழ்ந்து, அவனது நாவைத் தொட்டார். அவர் ஆழ்ந்த பெருமூச்சுடன் வானத்தை நோக்கிப்பார்த்து, “எப்பத்தா!” என்றார். “திறக்கப்படுவாயாக” என்பதே அதன் அர்த்தமாகும். உடனே, அவனுடைய காதுகள் திறவுண்டன. அவனுடைய நாவு கட்டவிழ்ந்தது. அவன் தெளிவாய் பேசத் தொடங்கினான். இதை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று, இயேசு அவர்களுக்குக் கட்டளையிட்டார். ஆனால் அவர் சொல்லவேண்டாம் என்று எவ்வளவு அதிகமாய்ச் சொன்னாரோ, அவ்வளவு அதிகமாய் அந்தச் செய்தியை அவர்கள் பரப்பினார்கள். மக்களோ வியப்படைந்து மலைத்துப்போனார்கள். அவர்கள், “இயேசு எல்லாவற்றையும் நன்றாகச் செய்தார்; அவர் செவிடர்களைக் கேட்கவும், ஊமையர்களைப் பேசவும் செய்கிறாரே” என்றார்கள்.

மாற்கு 7:14-37 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு அவர் மக்கள் எல்லோரையும் வரவழைத்து அவர்களைப் பார்த்து: நீங்கள் எல்லோரும் நான் சொல்வதைக்கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். மனிதனுக்கு வெளியிலிருந்து அவனுக்குள்ளே போகிறது அவனைத் தீட்டுப்படுத்தாது; அவன் மனதிலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும். கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாக இருந்தால் அவன் கேட்கட்டும் என்றார். அவர் மக்களைவிட்டு வீட்டிற்குள் சென்றபோது, அவருடைய சீடர்கள் அவர் சொன்ன உவமையைக்குறித்து அவரிடத்தில் விசாரித்தார்கள். அதற்கு அவர்: நீங்களும் இவ்வளவு புரிந்துகொள்ளாதவர்களா? வெளியிலிருந்து மனிதனுக்குள்ளே போகிற எதுவும் அவனைத் தீட்டுப்படுத்தாது என்று நீங்கள் அறிந்துகொள்ளவில்லையா? அது அவன் இருதயத்திற்குள் போகாமல் வயிற்றுக்குள்ளே போகிறது; அதிலிருந்து எல்லா அசுத்தங்களும் ஆசனவழியாக வெளியேபோகும். மனிதனுக்குள்ளேயிருந்து புறப்படுகிறதே மனிதனைத் தீட்டுப்படுத்தும். எப்படியென்றால், மனிதனுடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், திருட்டும், பொருளாசைகளும், துஷ்டகுணங்களும், கபடும், காமமும், வன்கண்ணும், அவதூறும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். பொல்லாதவைகளாகிய இவைகள் எல்லாம் மனதிலிருந்து புறப்பட்டு மனிதனைத் தீட்டுப்படுத்தும் என்றார். பின்பு, அவர் எழுந்து அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளில்போய், ஒரு வீட்டிற்குள் சென்று, அவர் அங்கே இருப்பது ஒருவருக்கும் தெரியக்கூடாது என்று விரும்பியும், அவர் மறைவாக இருக்கமுடியாமல்போனது. அசுத்தஆவி பிடித்திருந்த ஒரு சிறுபெண்ணின் தாய், இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு, வந்து அவர் பாதத்தில் விழுந்தாள். அந்தப் பெண் சீரோபேனிக்கியா தேசத்தைச் சேர்ந்த கிரேக்கப் பெண்ணாக இருந்தாள்; அவள் தன் மகளைப் பிடித்திருந்த பிசாசைத் துரத்திவிடவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டாள். இயேசு அவளைப் பார்த்து: முதலில் பிள்ளைகள் திருப்தியாகட்டும்; பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லது இல்லை என்றார். அதற்கு அவள்: உண்மைதான் ஆண்டவரே, ஆனாலும், மேஜையின்கீழே இருக்கும் நாய்க்குட்டிகள் பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளைத் தின்னுமே என்றாள். அப்பொழுது, அவர்: நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம் போகலாம், பிசாசு உன் மகளைவிட்டுப் போனது என்றார். அவள் தன் வீட்டிற்கு வந்தபொழுது, பிசாசு போய்விட்டதையும், தன் மகள் கட்டிலில் படுத்திருக்கிறதையும் கண்டாள். மறுபடியும், அவர் தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளைவிட்டுப் புறப்பட்டு, தெக்கப்போலியின் எல்லைகளின்வழியாகக் கலிலேயாக்கடலின் அருகே வந்தார். அங்கே திக்குவாயுடைய ஒரு காதுகேளாதவனை அவரிடம் கொண்டுவந்து, அவர் தமது கையை அவன்மேல் வைக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள். அப்பொழுது, அவர் அவனை மக்கள் கூட்டத்தைவிட்டுத் தனியே அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய விரல்களை அவன் காதுகளில் வைத்து, உமிழ்ந்து, அவனுடைய நாக்கைத் தொட்டு; வானத்தை அண்ணாந்துபார்த்து, பெருமூச்சுவிட்டு: எப்பத்தா என்றார்; அதற்குத் திறக்கப்படுவாயாக என்று அர்த்தம். உடனே அவனுடைய காதுகள் திறக்கப்பட்டு, அவனுடைய நாக்கின் கட்டும் அவிழ்ந்து, அவன் தெளிவாகப் பேசினான். அதை யாருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்; ஆனாலும் எவ்வளவு அதிகமாக அவர்களுக்குக் கட்டளையிட்டாரோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் அதைப் பிரசித்தப்படுத்தி, எல்லாவற்றையும் நன்றாகச் செய்தார்; காதுகேட்காதவர்களைக் கேட்கவும், ஊமையர்களைப் பேசவும்பண்ணுகிறார் என்று சொல்லி, மேலும் ஆச்சரியப்பட்டார்கள்.

மாற்கு 7:14-37 பரிசுத்த பைபிள் (TAERV)

மக்களை மீண்டும் இயேசு தன்னிடம் அழைத்தார். அவர் “ஒவ்வொரு மனிதனும் எனக்குச் செவிகொடுக்க வேண்டும். நான் சொல்பவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும். வெளியே இருந்து மனிதனுக்குள்ளே போகும் எதுவும் அவனைத் தீட்டுப்படுத்தாது. அவனது உள்ளத்தில் இருந்து வெளியே வருவதுதான் அவனைத் தீட்டுப்படுத்தும். நான் சொல்வதைக் கேட்பவர்களே, கவனியுங்கள்” என்றார். பின்னர் இயேசு அந்த மக்களிடமிருந்து விலகி வீட்டிற்குள் சென்றார். இந்த உவமையைப்பற்றி அவரது சீஷர்கள் இயேசுவிடம் கேட்டனர். “உங்களுக்கு புரிந்துகொள்வதில் இன்னும் சிரமங்கள் உள்ளனவா? வெளியே இருந்து மனிதனுக்குள் செல்லும் எதுவும் அவனைத் தீட்டுப்படுத்தாது என்பது புரியவில்லையா? உணவானது மனிதனின் மூளைக்குள் செல்வதில்லை. உணவு வயிற்றுக்குள் தான் செல்லும். பிறகு அந்த உணவு உடம்பைவிட்டு வெளியேறிவிடும்” என்றார் இயேசு. (இயேசு இதனைக் கூறும்போது, அவர் மக்கள் உண்ணும் எந்த உணவும் அவர்களைத் தீட்டுப்படுத்தாது என்று உணர்த்தினார்.) மேலும் இயேசு, “மனிதனுக்குள்ளே இருந்து வெளிவரும் எதுவும் அவனைத் தீட்டுப்படுத்திவிடுகிறது. கெட்டவை எல்லாம் மனிதனுக்குள்ளே இருந்துதான் பிறக்கின்றன. அவன் மனத்தில் கெட்ட எண்ணங்கள், பாலியல் குற்றங்கள், களவு, கொலை விபசாரம், சுயநலம், தீயசெயல்கள், பொய், பொறாமை, புறங்கூறுதல், பெருமை பேசுதல், மூடவாழ்க்கை போன்றவை தோன்றும். இத்தகைய கெட்டவை எல்லாம் மனிதனுக்குள்ளே இருந்துதான் வருகின்றன. இத்தீயவையே மனிதனை மாசுபடுத்துபவை” என்றார். இயேசு அந்த இடத்தைவிட்டு தீரு பகுதிக்குச் சென்றார். அங்கிருந்த ஒரு வீட்டுக்குச் சென்றார். அங்குதான் அவர் இருக்கிறார் என்பதை அங்குள்ள மக்கள் அறிந்துகொள்ளக்கூடாது என்று இயேசு விரும்பினார். ஆனால் அவர் மக்களின் கவனத்திலிருந்து தப்பிக்க முடியவில்லை. அவர் அங்கு இருப்பதை ஒரு பெண் கேள்வியுற்றாள். அவளது சிறு குமாரத்தி, அசுத்த ஆவியை உடையவள். எனவே, அவள் இயேசுவிடம் வந்து அவரது பாதத்தில் விழுந்து வணங்கினாள். அவள் யூதர்குலத்துப் பெண் அல்ல. அவள் கிரேக்கப் பெண். சீரோபேனிக்கேயாவில் பிறந்தவள். அவள் தன் மகளைப் பிடித்த பிசாசை விரட்டுமாறு கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள். அந்தப் பெண்ணிடம் இயேசு, “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்களிடம் கொடுப்பது சரியன்று. முதலில் பிள்ளைகள் தேவையான அளவு உண்ணட்டும்” என்றார். “அது உண்மை தான் ஆண்டவரே. பிள்ளைகள் உண்ணாத உணவுத் துணுக்குகளை மேசைக்கடியில் உள்ள நாய்கள் உண்ணலாமே” என்று அவள் பதில் சொன்னாள். பிறகு அந்தப் பெண்ணிடம் இயேசு, “இது நல்ல பதில். நீ போகலாம். பிசாசு உன் மகளை விட்டுப் போய்விட்டது” என்றார். அந்தப் பெண் வீட்டுக்குப் போனாள். தன் குழந்தை படுக்கையில் படுத்திருப்பதைக் கண்டாள். பிசாசு அவளை விட்டு நீங்கி இருந்தது. பிறகு இயேசு தீரு பகுதியை விட்டு விலகி சீதோன் பகுதிக்குச் சென்றார். அங்கிருந்து அவர் கலிலேயா கடற்கரைக்குச் சென்றார். அங்கு இயேசு தெக்கப்போலி வழியாக வந்தார். அங்கே அவர் இருக்கும்போது மக்கள் ஒரு மனிதனை அவரிடம் அழைத்து வந்தனர். அவன் ஒரு செவிடன். அவனால் பேசவும் முடியாது. அவனைக் குணப்படுத்தும் பொருட்டு அவன்மீது இயேசு தன் கையை வைக்குமாறு அவரிடம் அவர்கள் கெஞ்சிக் கேட்டனர். இயேசு அவனை அந்த மக்களிடமிருந்து விலக்கி தனியாய் அழைத்துச் சென்றார். அவர் தனது விரல்களை அவன் காது மீது வைத்தார். பிறகு இயேசு உமிழ்ந்து அவனது நாவையும் தொட்டார். இயேசு ஆகாயத்தைப் பார்த்து பெருமூச்சுவிட்டார். பிறகு அந்த மனிதனிடம் இயேசு, “ எப்பத்தா ” என்றார். (அதற்குத் “திறக்கப்படுவாயாக” என்று பொருள்) இயேசு இதனைச் செய்ததும் அந்த மனிதனால் கேட்க முடிந்து. பிறகு அவனால் நாவைப் பயன்படுத்தித் தெளிவாகப் பேசவும் முடிந்தது. நடந்ததைப்பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று இயேசு மக்களைக் கேட்டுக்கொண்டார். இயேசு எப்போதும் தன்னைப்பற்றி எவரிடமும் கூறவேண்டாம் என்றே கட்டளையிடுவார். ஆனால் இது மக்களை இயேசுவைப்பற்றி மற்றவர்களிடம் மேலும், மேலும் சொல்ல வைத்தது. மக்கள் அவரைப்பற்றி மிகவும் பிரமித்துப் போனார்கள். அவர்கள், “இயேசு எல்லாவற்றையும் நல்ல முறையில் செய்கிறார். அவர் செவிடர்களைக் கேட்க வைக்கிறார். ஊமைகளைப் பேச வைக்கிறார்” என்று பேசிக்கொண்டனர்.

மாற்கு 7:14-37 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு அவர் ஜனங்களெல்லாரையும் வரவழைத்து அவர்களை நோக்கி: நீங்கள் எல்லாரும் எனக்குச் செவிகொடுத்து உணருங்கள். மனுஷனுக்குப் புறம்பே இருந்து அவனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாது; அவன் உள்ளத்திலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும், கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாயிருந்தால் கேட்கக்கடவன் என்றார். அவர் ஜனங்களைவிட்டு வீட்டுக்குள் பிரவேசித்தபோது, அவருடைய சீஷர்கள் அவர் சொன்ன உவமையைக்குறித்து அவரிடத்தில் விசாரித்தார்கள். அதற்கு அவர்: நீங்களும் இவ்வளவு உணர்வில்லாதவர்களா? புறம்பேயிருந்து மனுஷனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டதென்று நீங்கள் அறிந்துகொள்ளவில்லையா? அது அவன் இருதயத்தில் போகாமல் வயிற்றிலே போகிறது; அதிலிருந்து எல்லாப் போஜனங்களின் அசுத்தங்களையும் கழிக்கிற ஆசனவழியாய் நீங்கிப்போகும். மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார். பின்பு, அவர் எழுந்து அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளில் போய், ஒரு வீட்டுக்குள் பிரவேசித்து, ஒருவரும் அதை அறியாதிருக்க விரும்பியும், அவர் மறைவாயிருக்கக் கூடாமற்போயிற்று. அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு சிறு பெண்ணின் தாயாகிய ஒரு ஸ்திரீ அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு, வந்து அவர் பாதத்தில் விழுந்தாள். அந்த ஸ்திரீ சீரோபேனிக்கியா தேசத்தாளாகிய கிரேக்க ஸ்திரீயாயிருந்தாள்; அவள் தன் மகளைப் பிடித்திருந்த பிசாசைத் துரத்திவிடவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டாள். இயேசு அவளை நோக்கி: முந்திப்பிள்ளைகள் திருப்தியடையட்டும்; பிள்ளகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார். அதற்கு அவள்: மெய்தான், ஆண்டவரே, ஆகிலும், மேஜையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளைத் தின்னுமே என்றாள். அப்பொழுது, அவர்: நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம் போகலாம், பிசாசு உன் மகளை விட்டு நீங்கிப்போயிற்று என்றார். அவள் தன் வீட்டுக்கு வந்தபொழுது, பிசாசு போய்விட்டதையும், தன் மகள் கட்டிலில் படுத்திருக்கிறதையும் கண்டாள். மறுபடியும், அவர் தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளை விட்டுப் புறப்பட்டு, தெக்கப்போலியின் எல்லைகளின் வழியாய்க் கலிலேயாக் கடலருகே வந்தார். அங்கே கொன்னைவாயுடைய ஒரு செவிடனை அவரிடத்தில் கொண்டுவந்து, அவர் தமது கையை அவன்மேல் வைக்கும்படி வேண்டிக்கொண்டார்கள். அப்பொழுது, அவர் அவனை ஜனக்கூட்டத்தை விட்டுத் தனியே அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய விரல்களை அவன் காதுகளில் வைத்து, உமிழ்ந்து, அவனுடைய நாவைத் தொட்டு; வானத்தை அண்ணாந்துபார்த்து, பெருமூச்சுவிட்டு: எப்பத்தா என்றார்; அதற்குத் திறக்கப்படுவாயாக என்று அர்த்தமாம். உடனே அவனுடைய செவிகள் திறக்கப்பட்டு, அவனுடைய நாவின் கட்டும் அவிழ்ந்து, அவன் செவ்வையாய்ப் பேசினான். அதை ஒருவருக்கும் சொல்லவேண்டாமென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்; ஆகிலும் எவ்வளவு அதிகமாய் அவர்களுக்குக் கட்டளையிட்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்கள் அதைப் பிரசித்தம்பண்ணி, எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்; செவிடர் கேட்கவும், ஊமையர் பேசவும்பண்ணுகிறார் என்று சொல்லி, மேன்மேலும் ஆச்சரியப்பட்டார்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்