மாற்கு 3:13-19

மாற்கு 3:13-19 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பின்பு இயேசு ஒரு மலையின்மேல் ஏறிப்போய், தாம் விரும்பியவர்களை தம்மிடம் வரும்படி அழைத்தார்; அவர்கள் அவரிடத்தில் வந்தார்கள். இயேசு பன்னிரண்டு பேரை நியமித்து, அவர்களை அப்போஸ்தலர் என அழைத்தார்; தம்முடனேகூட இருக்கும்படியாகவும், நற்செய்தியை அறிவிக்கும்படி தாம் அவர்களை அனுப்பும்படியாகவும், பிசாசுகளைத் துரத்தும் அதிகாரம் உடையவர்களாகவும் அவர்களை நியமித்தார். இயேசு நியமித்தப் பன்னிரண்டு பேரும் இவர்களே. அவர் பேதுரு எனப் பெயரிட்ட சீமோன், செபெதேயுவின் மகன் யாக்கோபு, அவனுடைய சகோதரன் யோவான் இவர்கள் இருவருக்கும் பொவனெர்கேஸ் என்று பெயரிட்டார், “இடிமுழக்கத்தின் மகன்கள்” என்பதே அதன் அர்த்தமாகும். அந்திரேயா, பிலிப்பு, பர்தொலொமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, கானானியனாகிய சீமோன், இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்.

மாற்கு 3:13-19 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு அவர் ஒரு மலையின்மேல் ஏறி, தமக்கு விருப்பமானவர்களைத் தம்மிடம் வரவழைத்தார்; அவர்கள் அவரிடம் வந்தார்கள். அப்பொழுது அவர் பன்னிரண்டு நபர்களைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடு இருக்கவும், பிரசங்கம்பண்ணுவதற்காகத் தாம் அவர்களை அனுப்பவும், வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்துவதற்கு அவர்கள் அதிகாரம் உள்ளவர்களாக இருக்கவும், அவர்களை ஏற்படுத்தினார். அவர்கள் யாரென்றால், சீமோன், இவனுக்குப் பேதுரு என்று பெயரிட்டார். செபெதேயுவின் குமாரனாகிய யாக்கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவான், இந்த இவருக்கும் இடிமுழக்க மக்கள் என்று அர்த்தம்கொண்ட பொவனெர்கேஸ் என்கிற பெயரிட்டார், அந்திரேயா, பிலிப்பு, பர்தொலொமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு, கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவர்களே.

மாற்கு 3:13-19 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு, இயேசு குன்றின்மீது ஏறினார். அவர் சிலரை தன்னுடன் வருமாறு சொன்னார். இந்த மனிதரே அவருக்குத் தேவையானவர்களாய் இருந்தனர். அவர்கள் இயேசுவிடம் சென்றனர். அவர்களில் பன்னிரண்டு பேரை இயேசு தேர்ந்தெடுத்துக்கொண்டார். அவர்களை அப்போஸ்தலர் என்று அழைத்தார். அவர்கள் தன்னுடன் இருக்க வேண்டும் என்று இயேசு விரும்பினார். அவர்களைப் பல இடங்களுக்கு அனுப்பி பிரசங்கம் செய்யும்படி விரும்பினார். அத்துடன் பிசாசுகளை விரட்டுவதற்கான அதிகாரத்தை அவர்கள் பெற்றிருக்கவும் இயேசு விரும்பினார். அவர் தேர்ந்தெடுத்த பன்னிரண்டு பேரின் பெயர்களும் பின்வருமாறு: சீமோன், இயேசு இவனுக்கு பேதுரு என்று பெயரிட்டார். யாக்கோபு, யோவான் இவர்கள் செபெதேயுவின் குமாரர்கள். (இயேசு இவர்களுக்கு பொவனெர்கேஸ் என்று பெயர் வைத்தார். இதற்கு “இடி முழக்கத்தின் மக்கள்” என்று பொருள்) அந்திரேயா, பிலிப்பு, பர்த்தலோமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரனான யாக்கோபு, ததேயு, கானானியனான சீமோன், யூதா ஸ்காரியோத். இந்த யூதாஸ்தான் இயேசுவை அவரது பகைவர்களிடம் காட்டிக்கொடுத்தவன்.

மாற்கு 3:13-19 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு அவர் ஒரு மலையின்மேல் ஏறி, தமக்குச் சித்தமானவர்களைத் தம்மிடத்தில் வரவழைத்தார்; அவர்கள் அவரிடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அவர் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடுகூட இருக்கவும், பிரசங்கம்பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும், வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்தும்படி அவர்கள் அதிகாரமுடையவர்களாயிருக்கவும், அவர்களை ஏற்படுத்தினார். அவர்கள் யாரெனில், சீமோன், இவனுக்குப் பேதுரு என்கிற பெயரிட்டார். செபெதேயுவின் குமாரனாகிய யாக்கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவான், இவ்விருவருக்கும் இடிமுழக்கமக்களென்று அர்த்தங்கொள்ளும் பொவனெர்கேஸ் என்கிற பெயரிட்டார். அந்திரேயா, பிலிப்பு, பர்தொலொமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு, கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவர்களே.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்