மாற்கு 11:12-20

மாற்கு 11:12-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மறுநாளிலே அவர்கள் பெத்தானியாவிலிருந்து புறப்பட்டுவருகையில், அவருக்குப் பசியுண்டாயிற்று. அப்பொழுது இலைகளுள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலே கண்டு, அதில் ஏதாகிலும் அகப்படுமோ என்று பார்க்கவந்தார். அத்திப்பழக் காலமாயிராதபடியால், அவர் அதினிடத்தில் வந்தபோது அதில் இலைகளையல்லாமல் வேறொன்றையும் காணவில்லை. அப்பொழுது இயேசு அதைப்பார்த்து: இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கக்கடவன் என்றார்; அதை அவருடைய சீஷர்கள் கேட்டார்கள். அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்தில் விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் துரத்திவிட்டு, காசுக்காரருடைய பலகைகளையும், புறா விற்கிறவர்களுடைய ஆசனங்களையும் கவிழ்த்து, ஒருவனும் தேவாலயத்தின் வழியாக யாதொரு பண்டத்தையும் கொண்டுபோகவிடாமல்: என்னுடைய வீடு எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்று அவர்களுக்குச் சொல்லி உபதேசித்தார். அதை வேதபாரகரும் பிரதான ஆசாரியரும் கேட்டு, அவரைக் கொலைசெய்ய வகைதேடினார்கள்; ஆகிலும் ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டபடியினாலே அவருக்குப் பயந்திருந்தார்கள். சாயங்காலமானபோது அவர் நகரத்திலிருந்து புறப்பட்டுப்போனார். மறுநாள் காலையிலே அவர்கள் அவ்வழியாய்ப் போகும்போது, அந்த அத்திமரம் வேரோடே பட்டுப்போயிருக்கிறதைக் கண்டார்கள்.

மாற்கு 11:12-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மறுநாள் அவர்கள் பெத்தானியாவை விட்டுப் புறப்படுகையில், இயேசு பசியாயிருந்தார். தூரத்திலே இலைகளுள்ள ஒரு அத்திமரத்தை அவர் கண்டு, அதில் பழங்கள் ஏதும் இருக்கின்றனவா என்று பார்க்கும்படிச் சென்றார். அவர் அதன் அருகே வந்தபோது, அதிலே இலைகளைத் தவிர வேறொன்றும் இல்லாதிருந்தது. ஏனெனில், அது அத்திப்பழக் காலம் அல்ல. அப்பொழுது இயேசு அந்த மரத்தைப்பார்த்து, “இனி ஒருவரும், ஒருபோதும் உன்னிலிருந்து பழம் பறித்துச் சாப்பிடக்கூடாது” என்றார். அவர் அப்படிச் சொன்னதைச் சீடர்கள் கேட்டனர். பிறகு அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு ஆலய முற்றத்திற்குச் சென்று, அங்கே பொருட்கள் விற்பவர்களையும், வாங்குபவர்களையும் வெளியே துரத்தத் தொடங்கினார். காசு மாற்றம் செய்பவர்களின் மேஜைகளையும், புறாக்கள் விற்பவர்களின் இருக்கைகளையும் புரட்டித்தள்ளினார். ஆலய முற்றத்தின் வழியாக வியாபாரப் பொருட்களைக் கொண்டுசெல்வதற்கு அவர் ஒருவரையும் அனுமதிக்கவில்லை. இயேசு அவர்களுக்கு போதித்து, “என்னுடைய வீடு, எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு என்று அழைக்கப்படும் என எழுதப்பட்டிருக்கிறதல்லவா? ஆனால், நீங்களோ அதைக் கள்வர்களின் குகையாக்குகிறீர்களே” என்று சொன்னார். தலைமை ஆசாரியர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும் இதைக் கேட்டபோது, அவரைக் கொல்வதற்கு வழிதேடத் தொடங்கினார்கள். ஆனால் அவர்கள் அவருக்குப் பயந்தார்கள். ஏனெனில் கூடியிருந்த மக்கள் கூட்டம் அவருடைய போதனையை வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தது. மாலை வேளையானபோது, இயேசுவும் சீடர்களும் நகரத்தைவிட்டு வெளியே சென்றார்கள். மறுநாள் காலையில் அவர்கள் திரும்பி வரும்போது, அந்த அத்திமரம் வேரிலிருந்து காய்ந்து இருப்பதைச் சீடர்கள் கண்டார்கள்.

மாற்கு 11:12-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அடுத்தநாளில் அவர்கள் பெத்தானியாவிலிருந்து திரும்பிவரும்போது, அவருக்குப் பசியுண்டானது. அப்பொழுது இலைகள் உள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலேப் பார்த்து, அதில் அத்திப்பழம் கிடைக்குமா? என்று பார்க்க வந்தார். அது அத்திப்பழக் காலமாக இல்லாததினால், அவர் மரத்தின் அருகில் வந்தபோது அதில் இலைகளைத்தவிர வேறொன்றையும் பார்க்கவில்லை. அப்பொழுது இயேசு அதைப் பார்த்து: இனி எப்போதும் ஒருவனும் உன்னிடமிருந்து கனியைப் புசிக்கமாட்டான் என்றார்; அதை அவருடைய சீடர்கள் கேட்டார்கள். அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு தேவாலயத்திற்குச் சென்று, ஆலயத்தில் விற்கிறவர்களையும் வாங்குகிறவர்களையும் துரத்திவிட்டு, காசுக்காரர்களுடைய பலகைகளையும், புறா விற்கிறவர்களுடைய இருக்கைகளையும் கவிழ்த்து, ஒருவனும் தேவாலயத்தின்வழியாக எந்தவொரு பொருளையும் கொண்டுபோகவிடாமல்: என்னுடைய வீடு எல்லா மக்களுக்கும் ஜெபவீடு எனப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர்களின் குகையாக்கினீர்கள் என்று அவர்களுக்குச் சொல்லி உபதேசித்தார். அதை வேதபண்டிதர்களும் பிரதான ஆசாரியர்களும் கேட்டு, அவரைக் கொலைசெய்ய வழிதேடினார்கள்; ஆனாலும் மக்களெல்லோரும் அவருடைய உபதேசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டதினாலே அவருக்கு பயந்திருந்தார்கள். மாலைநேரத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் நகரத்திலிருந்து புறப்பட்டு வெளியே போனார்கள். அடுத்தநாள் காலையிலே அவர்கள் அந்தவழியாக போகும்போது, அந்த அத்திமரம் வேரோடு பட்டுப்போயிருந்ததைப் பார்த்தார்கள்.

மாற்கு 11:12-20 பரிசுத்த பைபிள் (TAERV)

மறுநாள், அவர்கள் பெத்தானியாவை விட்டுப் புறப்பட்டனர். அவருக்குப் பசித்தது. இயேசு இலைகள் நிறைந்த அத்தி மரம் ஒன்றைப் பார்த்தார். அவர் அதனருகில் சென்று ஏதேனும் பழங்கள் உள்ளனவா என்று கவனித்தார். அதில் பழங்கள் ஏதுமில்லை. வெறும் இலைகளே இருந்தன. அது கனி கொடுப்பதற்கு உரிய சரியான காலம் இல்லை. ஆகையால் இயேசு அத்தி மரத்திடம், “இனி மக்கள் யாரும் உன்னிடமிருந்து ஒரு போதும் பழத்தைத் தின்னமாட்டார்கள்” என்றார். இயேசு சொன்னதை சீஷர்களும் கேட்டுக்கொண்டிருந்தனர். அவர்கள் எருசலேமை அடைந்தனர். அவர் தேவாலயத்திற்குள் நுழைந்தார். அங்கே பொருள்களை விற்றுக்கொண்டும், வாங்கிக்கொண்டும் இருந்த மக்களை இயேசு விரட்டினார். பலவித பணங்களை மாற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தவர்களின் பலகைகளைத் தலைகீழாகக் கவிழ்த்துப் போட்டார். புறாக்கள் வைத்திருந்த பலகைகளையும் அப்புறப்படுத்தினார். ஒருவரையும் தேவாலயத்தின் வழியே பொருள்களை எடுத்துச் செல்ல இயேசு அனுமதிக்க மறுத்தார். பிறகு இயேசு மக்களுக்குப் போதனை செய்ய ஆரம்பித்தார். “‘எனது வீடு எல்லா மக்களின் பிரார்த்தனைக்கான வீடு என அழைக்கப்படும்’ என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் நீங்கள் தேவனின் வீட்டைத் ‘திருடர்கள் ஒளியும் இடமாக’ மாற்றுகிறீர்கள்” என்றார். தலைமை ஆசாரியர்களும், வேதபாரகர்களும் இவற்றைக் கேட்டனர். அவர்கள் இயேசுவைக் கொல்வதற்கு வழிதேடினர். மக்கள் அனைவரும் இயேசுவின் போதனைகளைக் கேட்டு வியப்பதை அறிந்து அவர்கள் அச்சப்பட்டனர். அன்று இரவு இயேசுவும், அவரது சீஷர்களும் அந்நகரத்தை விட்டு வெளியேறினர். மறுநாள் காலையில் இயேசு தனது சீஷர்களோடு நடந்துகொண்டிருந்தார். முந்தின நாள் இயேசு சபித்த அத்தி மரத்தை அவர்கள் பார்த்தனர். அம்மரம் செத்து, காய்ந்து, வேரும் உலர்ந்துபோய் இருந்தது.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்