மாற்கு 10:42-45 - Compare All Versions
மாற்கு 10:42-45 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அப்பொழுது, இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து: புறஜாதியாருக்கு அதிகாரிகளாக எண்ணப்பட்டவர்கள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், அவர்களில் பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் எல்லாருக்கும் ஊழியக்காரனாயிருக்கக்கடவன். அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.
மாற்கு 10:42-45 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்பொழுது, இயேசு அவர்களை அருகில் வரச்சொல்லி: யூதரல்லாதவர்களுக்கு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்கள் அவர்களை ஆணவத்தோடு ஆளுகிறார்கள் என்றும், அவர்களில் பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாக அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்களுக்குள்ளே அப்படி இருக்கக்கூடாது; உங்களில் யாராவது பெரியவனாக இருக்கவிரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாக இருக்கவேண்டும். உங்களில் யாராவது முதன்மையானவனாக இருக்கவிரும்பினால், அவன் எல்லோருக்கும் ஊழியக்காரனாக இருக்கவேண்டும். அப்படியே, மனிதகுமாரனும் மற்றவர்களிடம் ஊழியம் பெற வராமல், ஊழியம் செய்யவும், அநேகரை மீட்கத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.
மாற்கு 10:42-45 TAERV (பரிசுத்த பைபிள்)
இயேசு தன் சீஷர்களை எல்லாம் தம்மிடம் அழைத்தார். அவர்களிடம், “யூதர் அல்லாத மக்கள் ஆள்வோர்கள் எனக் கருதப்படுகின்றனர். இந்த ஆள்வோர்கள் தம் அதிகாரத்தை மக்கள்மீது செலுத்துவதையே பெரிதும் விரும்புகிறார்கள். அவர்களின் முக்கியத் தலைவர்கள் தம் அதிகாரத்தை மக்கள் மீது செலுத்துவதையே பெரிதும் விரும்புகிறார்கள் என்று நீங்கள் அறிவீர்கள். ஆனால், நீங்கள் மேற்கொள்ளும் வழி இதுவாக இருக்கக் கூடாது. உங்களில் ஒருவன் பெரியவனாக விரும்பினால் அவன் ஒரு வேலைக்காரனைப்போல மற்றவர்களுக்குச் சேவைசெய்ய வேணடும். உங்களில் ஒருவன் மிகவும் முக்கியஸ்தனாக விரும்பினால் அவன் அடிமையைப்போல உங்கள் எல்லாருக்கும் சேவை செய்ய வேண்டும். இது போலவே, மனித குமாரன் பிறருடைய பணிவிடைகளைப் பெறுவதற்காக வரவில்லை. அவர் மற்றவர்களுக்குப் பணிவிடை செய்யவே வந்துள்ளார். அவர் பல மக்களைக் காப்பாற்றுவதற்காகத் தன் உயிரைத் தர வந்துள்ளார்” என்றார்.
மாற்கு 10:42-45 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இயேசு சீடர்களை ஒன்றாய்க் கூப்பிட்டு, “யூதரல்லாதவர்களின் ஆளுநர்களாய் கருதப்படுகிறவர்கள், அவர்களை அடக்கி ஆளுகிறார்கள் என்றும், அவர்களுடைய உயர் அதிகாரிகள் அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். ஆனால் உங்களுக்குள் அப்படியிருக்கக் கூடாது. உங்கள் மத்தியில் பெரியவனாய் இருக்க விரும்புகிறவன் யாரோ, அவன் உங்களுக்குப் பணிவிடை செய்கிறவனாக இருக்கவேண்டும். முதன்மையாயிருக்க விரும்புகிறவன் யாரோ, அவன் எல்லோருக்கும் அடிமையாயிருக்க வேண்டும். மானிடமகனாகிய நானும் பணிவிடையைப் பெற்றுக்கொள்ள அல்ல, பணிவிடை செய்யவே வந்தேன்; அநேகரை மீட்கும்படி என் உயிரைக் கொடுக்கவும் வந்தேன்” என்றார்.