மாற்கு 10:35-45

மாற்கு 10:35-45 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது செபெதேயுவின் மகன்களான யாக்கோபும், யோவானும் இயேசுவினிடம் வந்து, “போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டும் என்று விரும்புகிறோம்” என்றார்கள். அதற்கு இயேசு, “நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும்” என்று கேட்டார். அவர்கள் அதற்குப் பதிலாக, “உமது மகிமையில் எங்களில் ஒருவன் உமது வலதுபக்கத்திலும், மற்றவன் உமது இடது பக்கத்திலும் உட்காரும்படி அனுமதியும். அதையே விரும்புகிறோம்” என்றார்கள். அதற்கு இயேசு, “நீங்கள் கேட்பது என்ன என்று நீங்கள் அறியாதிருக்கிறீர்கள். நான் குடிக்கும் பாத்திரத்திலிருந்து உங்களால் குடிக்க முடியுமா? அல்லது எனக்கிருக்கும் திருமுழுக்கில் உங்களால் பங்குகொள்ள முடியுமா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “எங்களால் முடியும்” என்றார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “உண்மையாய் நான் குடிக்கும் பாத்திரத்திலிருந்து நீங்கள் குடிப்பீர்கள், எனக்கிருக்கும் திருமுழுக்கை நீங்களும் பெறுவீர்கள். ஆனால் எனது வலதுபக்கத்தில் உட்காருவதையோ, இடதுபக்கத்தில் உட்காருவதையோ அனுமதிப்பது எனக்குரியது அல்ல. இந்த இடங்கள் எவர்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறதோ, அவர்களுக்கே உரியவை” என்றார். இதைக் கேட்ட மற்ற பத்துப்பேரும், யாக்கோபின்மேலும் யோவானின்மேலும் கோபமடைந்தார்கள். இயேசு சீடர்களை ஒன்றாய்க் கூப்பிட்டு, “யூதரல்லாதவர்களின் ஆளுநர்களாய் கருதப்படுகிறவர்கள், அவர்களை அடக்கி ஆளுகிறார்கள் என்றும், அவர்களுடைய உயர் அதிகாரிகள் அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். ஆனால் உங்களுக்குள் அப்படியிருக்கக் கூடாது. உங்கள் மத்தியில் பெரியவனாய் இருக்க விரும்புகிறவன் யாரோ, அவன் உங்களுக்குப் பணிவிடை செய்கிறவனாக இருக்கவேண்டும். முதன்மையாயிருக்க விரும்புகிறவன் யாரோ, அவன் எல்லோருக்கும் அடிமையாயிருக்க வேண்டும். மானிடமகனாகிய நானும் பணிவிடையைப் பெற்றுக்கொள்ள அல்ல, பணிவிடை செய்யவே வந்தேன்; அநேகரை மீட்கும்படி என் உயிரைக் கொடுக்கவும் வந்தேன்” என்றார்.

மாற்கு 10:35-45 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது செபெதேயுவின் குமாரர்களாகிய யாக்கோபும் யோவானும் அவரிடம் வந்து: போதகரே, நாங்கள் எதைக்கேட்டாலும் அதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டும் என்று விரும்புகிறோம் என்றார்கள். அவர் அவர்களைப் பார்த்து: நான் உங்களுக்கு என்னசெய்யவேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள்: உமது மகிமையிலே, எங்களில் ஒருவன் உமது வலதுபக்கத்திலும், ஒருவன் உமது இடதுபக்கத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எங்களுக்கு அருள்செய்யவேண்டும் என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் கேட்பது என்ன என்று உங்களுக்கே தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் உங்களால் முடியுமா என்றார். அதற்கு அவர்கள்: முடியும் என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனாலும் என் வலதுபக்கத்திலும் என் இடதுபக்கத்திலும் உட்கார்ந்திருக்கும்படி யாருக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களைத்தவிர, மற்றவர்களுக்கு அதை அருளுவது என் காரியமல்ல என்றார். மற்ற பத்துப்பேரும் அதைக்கேட்டு, யாக்கோபின்மேலும் யோவானின் மேலும் எரிச்சலானார்கள். அப்பொழுது, இயேசு அவர்களை அருகில் வரச்சொல்லி: யூதரல்லாதவர்களுக்கு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்கள் அவர்களை ஆணவத்தோடு ஆளுகிறார்கள் என்றும், அவர்களில் பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாக அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்களுக்குள்ளே அப்படி இருக்கக்கூடாது; உங்களில் யாராவது பெரியவனாக இருக்கவிரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாக இருக்கவேண்டும். உங்களில் யாராவது முதன்மையானவனாக இருக்கவிரும்பினால், அவன் எல்லோருக்கும் ஊழியக்காரனாக இருக்கவேண்டும். அப்படியே, மனிதகுமாரனும் மற்றவர்களிடம் ஊழியம் பெற வராமல், ஊழியம் செய்யவும், அநேகரை மீட்கத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.

மாற்கு 10:35-45 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு செபெதேயுவின் குமாரர்களாகிய யாக்கோபும், யோவானும் இயேசுவிடம் வந்தார்கள். அவர்கள், “போதகரே நீங்கள் எங்களுக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்றனர். அவர்களிடம் இயேசு, “நான் உங்களுக்காக என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?” எனக் கேட்டார். “உங்கள் இராஜ்யத்தில் உங்களுக்கென்று மகிமை உள்ளது. எங்களில் ஒருவர் உங்கள் வலது பக்கத்திலும் இன்னும் ஒருவர் இடது பக்கத்திலும் இருக்க வாய்ப்புத்தர வேண்டும்” என்றனர். அதற்கு இயேசு, “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்பது உங்களுக்குப் புரியவில்லை. நான் ஏற்கப்போகும் பாடுகளை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா? நான் ஞானஸ்நானம் பெறும் விதத்திலேயே நீங்களும் பெற்றுக்கொள்ள முடியுமா?” என்று கேட்டார். அவர்கள், “ஆமாம், எங்களால் முடியும்” என்றனர். இயேசு அவர்களிடம், “நான் படப்போகும் துன்பங்களை எல்லாம் நீங்களும் படவேண்டியதிருக்கும். நான் பெறப்போகும் ஞானஸ்நானத்தை நீங்களும் பெறவேண்டியதிருக்கும். எனக்கு வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் இருக்கப்போகின்றவர்களை என்னால் தீர்மானிக்க முடியாது. அந்த இடத்திற்காகச் சிலர் இருக்கின்றார்கள். அவர்களுக்காகவே அந்த இடங்கள் தயார் செய்யப்பட்டிருக்கின்றன” என்றார். ஏனைய பத்து சீஷர்களும் இயேசு சொல்வதைக் கேட்டனர். அவர்களுக்கு யாக்கோபு மீதும், யோவான் மீதும் கோபம் ஏற்பட்டது. இயேசு தன் சீஷர்களை எல்லாம் தம்மிடம் அழைத்தார். அவர்களிடம், “யூதர் அல்லாத மக்கள் ஆள்வோர்கள் எனக் கருதப்படுகின்றனர். இந்த ஆள்வோர்கள் தம் அதிகாரத்தை மக்கள்மீது செலுத்துவதையே பெரிதும் விரும்புகிறார்கள். அவர்களின் முக்கியத் தலைவர்கள் தம் அதிகாரத்தை மக்கள் மீது செலுத்துவதையே பெரிதும் விரும்புகிறார்கள் என்று நீங்கள் அறிவீர்கள். ஆனால், நீங்கள் மேற்கொள்ளும் வழி இதுவாக இருக்கக் கூடாது. உங்களில் ஒருவன் பெரியவனாக விரும்பினால் அவன் ஒரு வேலைக்காரனைப்போல மற்றவர்களுக்குச் சேவைசெய்ய வேணடும். உங்களில் ஒருவன் மிகவும் முக்கியஸ்தனாக விரும்பினால் அவன் அடிமையைப்போல உங்கள் எல்லாருக்கும் சேவை செய்ய வேண்டும். இது போலவே, மனித குமாரன் பிறருடைய பணிவிடைகளைப் பெறுவதற்காக வரவில்லை. அவர் மற்றவர்களுக்குப் பணிவிடை செய்யவே வந்துள்ளார். அவர் பல மக்களைக் காப்பாற்றுவதற்காகத் தன் உயிரைத் தர வந்துள்ளார்” என்றார்.

மாற்கு 10:35-45 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அவரிடத்தில் வந்து: போதகரே, நாங்கள் கேட்டுக்கொள்ளப்போகிறதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டுமென்று விரும்புகிறோம் என்றார்கள். அவர் அவர்களை நோக்கி: நான் உங்களுக்கு என்னசெய்யவேண்டுமென்று விரும்புகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள்: உமது மகிமையிலே, எங்களில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எங்களுக்கு அருள்செய்யவேண்டும் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்கே தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும், உங்களால் கூடுமா என்றார். அதற்கு அவர்கள்: கூடும் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனாலும் என் வலதுபாரிசத்திலும் என் இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எவர்களுக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார். மற்ற பத்துப்பேரும் அதைக் கேட்டு, யாக்கோபின்மேலும் யோவானின் மேலும் எரிச்சலானார்கள். அப்பொழுது, இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து: புறஜாதியாருக்கு அதிகாரிகளாக எண்ணப்பட்டவர்கள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், அவர்களில் பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் எல்லாருக்கும் ஊழியக்காரனாயிருக்கக்கடவன். அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்