மீகா 6:1-8

மீகா 6:1-8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவா சொல்கிறதைக் கேளுங்கள்: “எழுந்து, மலைகள் முன் உங்கள் வழக்கை வாதாடுங்கள்; குன்றுகள் எல்லாம் நீங்கள் சொல்லப்போவதைக் கேட்கட்டும். “மலைகளே, யெகோவாவின் குற்றச்சாட்டைக் கேளுங்கள்; பூமியின் நிலையான அஸ்திபாரங்களே, செவிகொடுங்கள். தம் மக்களுக்கெதிரான வழக்கொன்று யெகோவாவுக்கு உண்டு. இஸ்ரயேலுக்கு எதிராக அவர் ஒரு குற்றச்சாட்டைக் கொண்டுவருகிறார். “யெகோவா சொல்கிறதாவது: என் மக்களே, நான் உங்களுக்கு என்ன செய்தேன்? நான் எவ்விதம் உங்கள்மேல் பாரத்தைச் சுமத்தினேன்? எனக்குப் பதில் சொல்லுங்கள். எகிப்திலிருந்து நான் உங்களை வெளியே கொண்டுவந்தேன். அடிமைத்தன நாட்டிலிருந்து மீட்டு வந்தேன். உங்களை வழிநடத்த மோசேயுடன், ஆரோனையும் மிரியாமையும் அனுப்பினேன். என் மக்களே, மோவாபிய அரசன் பாலாக் என்ன ஆலோசனை செய்தான் என்பதையும், பேயோரின் மகன் பிலேயாம் என்ன பதிலைக் கொடுத்தான் என்பதையும் நினைத்துப் பாருங்கள். யெகோவா உங்களுக்குச் செய்த நீதியான செயல்களை நீங்கள் அறிந்துகொள்ளும்படி, சித்தீமிலிருந்து கில்காலுக்குப் போன உங்கள் பயணத்தை நினைத்துப் பாருங்கள்.” இஸ்ரயேல் மக்கள் சொல்கிறதாவது: “யெகோவாவிடம் நாங்கள் எதைக் கொண்டுவருவோம். மேன்மையான இறைவனுக்கு முன்பாக எதனுடன் தலைகுனிந்து வழிபடுவோம்? அவர் முன்பாக ஒரு வயதுக் கன்றுக்குட்டிகளைத் தகன காணிக்கையாகக் கொண்டுவருவோமா? ஆயிரக்கணக்கான செம்மறியாட்டுக் கடாக்களிலும், பதினாயிரக் கணக்கான எண்ணெய் ஆறுகளிலும் யெகோவா விருப்பமாயிருப்பாரோ? என் மீறுதலுக்காக என் முதற்பேறான பிள்ளையைக் காணிக்கையாகச் செலுத்தட்டுமா? என் ஆத்துமாவின் பாவங்களுக்காக என் கர்ப்பக்கனியை நான் கொடுக்கட்டுமா?” மனிதனே, நல்லது என்ன என்பதை அவர் உனக்குக் காட்டியிருக்கிறாரே; யெகோவா உன்னிடம் எதைக் கேட்கிறார்? நீதியாய் நடந்து, இரக்கத்தை நேசித்து, உன் இறைவனுடன் தாழ்மையாய் நடக்கும்படி தானே கேட்கிறார்.

மீகா 6:1-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவா சொல்லுகிறதைக் கேளுங்கள்; நீ எழுந்து, மலைகளுக்குமுன் உன் வழக்கைச் சொல்; மலைகள் உன் சத்தத்தைக் கேட்கட்டும். மலைகளே, பூமியின் உறுதியான அஸ்திபாரங்களே, யெகோவாவுடைய வழக்கைக் கேளுங்கள்; யெகோவாவுக்கு அவருடைய மக்களோடு வழக்கு இருக்கிறது; இஸ்ரவேலர்களோடு அவர் வழக்காடுவார். என் மக்களே, நான் உனக்கு என்ன செய்தேன்? நான் எதினால் உன்னை வருத்தப்படுத்தினேன்? எனக்கு எதிரே பதில் சொல். நான் உன்னை எகிப்துதேசத்திலிருந்து வரவழைத்து, அடிமைத்தன வீட்டிலிருந்த உன்னை மீட்டுக்கொண்டு, மோசே, ஆரோன், மிரியாம் என்பவர்களை உனக்கு முன்பாக அனுப்பினேன். என் மக்களே, மோவாபின் ராஜாவாகிய பாலாக் செய்த யோசனை இன்னதென்றும், பேயோரின் மகனாகிய பிலேயாம் அவனுக்கு மறுமொழியாகச் சொன்னது இன்னதென்றும், சித்தீம் தொடங்கி கில்கால்வரை நடந்தது இன்னதென்றும், நீ யெகோவாவுடைய நீதிகளை அறிந்துகொள்ளும்படி நினைத்துக்கொள். என்னத்தைக்கொண்டு நான் யெகோவாவுடைய சந்நிதியில் வந்து, உன்னதமான தேவனுக்கு முன்பாகப் பணிந்துகொள்வேன்? தகனபலிகளோடும், ஒருவயதுடைய கன்றுக்குட்டிகளோடும் அவருடைய சந்நிதியில் வரவேண்டுமோ? ஆயிரங்களான ஆட்டுக்கடாக்களின்பேரிலும், எண்ணெயாக ஓடுகிற பத்தாயிரங்களான ஆறுகளின்பேரிலும், யெகோவா பிரியமாயிருப்பாரோ? என் அக்கிரமத்தைப் போக்குவதற்காக என் முதற் பிறந்தவனையும், என் ஆத்துமாவின் பாவத்தைப் போக்க என் கர்ப்பக்கனியையும் கொடுக்கவேண்டுமோ? மனிதனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயம்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாக நடப்பதைத் தவிர வேறே எதைக் யெகோவா உன்னிடத்தில் கேட்கிறார்.

மீகா 6:1-8 பரிசுத்த பைபிள் (TAERV)

இப்பொழுது கர்த்தர் என்ன சொல்கிறார் எனக் கேளுங்கள். உனது வழக்கை மலைகளுக்கு முன் சொல். அம்மலைகள் உங்களது வழக்கைக் கேட்க்கட்டும். கர்த்தர் தமது ஜனங்களுக்கு எதிராக முறையிடுகிறார். மலைகளே, கர்த்தருடைய முறையீட்டைக் கேளுங்கள் பூமியின் அஸ்திபாரங்களே, கர்த்தர் சொல்கிறதைக் கேளுங்கள். இஸ்ரவேல் தவறானது என்று அவர் நிரூபிப்பார். கர்த்தர் கூறுகிறார், “என் ஜனங்களே, நான் செய்தவற்றைச் சொல்லுங்கள். நான் உங்களுக்கு எதிராக ஏதாவது செய்தேனா? நான் உங்களது வாழ்வைக் கடினமானதாக்கினேனா? நான் செய்தவற்றை உங்களிடம் சொல்லுவேன். நான் உங்களிடம் மோசே, ஆரோன், மீரியாம் ஆகியோரை அனுப்பினேன். நான் உங்களை எகிப்து தேசத்திலிருந்து கொண்டு வந்தேன், நான் உங்களை அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை செய்தேன். என் ஜனங்களே, மோவாபின் ராஜாவாகிய பாலாக்கினுடைய தீயத் திட்டங்களை நினைத்துப் பாருங்கள். பேயோரின் குமாரனான பிலேயம் பாலாக்கிடம் சொன்னவற்றை நினைத்துப்பாருங்கள். அகாசியாவிலிருந்து கில்கால்வரை நடந்தவற்றை நினைத்துப் பாருங்கள். அவற்றை நினைத்துப் பாருங்கள். கர்த்தர் சரியானவர் என்று அறிவீர்கள்.” நான் கர்த்தரை சந்திக்க வரும்போது என்ன கொண்டு வரவேண்டும். நான் தேவனைப் பணியும்போது என்ன செய்ய வேண்டும். நான் கர்த்தருக்கு, தகன பலியும் ஓராண்டு நிறைந்தக் கன்றுக்குட்டியையும் கொண்டு வரவேண்டுமா? கர்த்தர் 1,000 ஆட்டுக்குட்டிகளாலும் 10,000 ஆறுகளில் ஓடும் எண்ணெயாலும் திருப்தி அடைவாரா? நான் எனது முதல் குழந்தையை என் பாவங்களுக்குப் பரிகாரமாகத் தரட்டுமா? என் சரீரத்திலிருந்து வந்த குழந்தையை நான் பாவத்துக்குப் பரிகாரமாகத் தரட்டுமா? மனிதனே, நன்மை எதுவென்று கர்த்தர் உன்னிடம் சொல்லியிருக்கிறார். கர்த்தர் உன்னிடமிருந்து இதைத்தான் விரும்புகிறார். மற்றவர்களிடம் நியாயமாய் இரு. கருணையோடும் நம்பிக்கையோடும் நேசி. உனது தேவனோடு தாழ்மையாய் இரு. நீ அவரை பொக்கிஷத்தினால் கவர முயலாதே.

மீகா 6:1-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தர் சொல்லுகிறதைச் கேளுங்கள்; நீ எழுந்து, பர்வதங்களுக்குமுன் உன் வழக்கைச் சொல்; மலைகள் உன் சத்தத்தைக் கேட்கக்கடவது. பர்வதங்களே, பூமியின் உறுதியான அஸ்திபாரங்களே, கர்த்தருடைய வழக்கைக் கேளுங்கள்; கர்த்தருக்கு அவர் ஜனத்தோடே வழக்கு இருக்கிறது; இஸ்ரவேலோடே அவர் வழக்காடுவார். என் ஜனமே, நான் உனக்கு என்ன செய்தேன்? நான் எதினால் உன்னை விசனப்படுத்தினேன்? எனக்கு எதிரே உத்தரவு சொல். நான் உன்னை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணி, அடிமைத்தன வீட்டிலிருந்த உன்னை மீட்டுக்கொண்டு, மோசே ஆரோன் மீரியாம் என்பவர்களை உனக்கு முன்பாக அனுப்பினேன். என் ஜனமே, மோவாபின் ராஜாவாகிய பாலாக் பண்ணின யோசனை இன்னதென்றும், பேயோரின் குமாரனாகிய பிலேயாம் அவனுக்குப் பிரதியுத்தரமாகச் சொன்னது இன்னதென்றும், சித்தீம் தொடங்கி கில்கால்மட்டும் நடந்தது இன்னதென்றும், நீ கர்த்தருடைய நீதிகளை அறிந்துகொள்ளும்படி நினைத்துக்கொள். என்னத்தைக்கொண்டு நான் கர்த்தருடைய சந்நிதியில் வந்து, உன்னதமான தேவனுக்கு முன்பாகப் பணிந்துகொள்வேன்? தகனபலிகளைக்கொண்டும், ஒருவயது கன்றுக்குட்டிகளைக்கொண்டும் அவர் சந்நிதியில் வரவேண்டுமோ? ஆயிரங்களான ஆட்டுக்கடாக்களின்பேரிலும், எண்ணெயாய் ஓடுகிற பதினாயிரங்களான ஆறுகளின்பேரிலும், கர்த்தர் பிரியமாயிருப்பாரோ? என் அக்கிரமத்தைப் போக்க என் முதற் பேறானவனையும், என் ஆத்துமாவின் பாவத்தைப் போக்க என் கர்ப்பக்கனியையும் கொடுக்கவேண்டுமோ? மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்