மத்தேயு 9:18-26

மத்தேயு 9:18-26 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு இதைச் சொல்லிக்கொண்டிருக்கையில், ஜெப ஆலயத் தலைவன் ஒருவன் வந்து அவர்முன் முழங்காற்படியிட்டு, அவரிடம், “எனது மகள் இப்பொழுதுதான் மரித்துப்போனாள். ஆனாலும் நீர் வந்து உமது கையை அவள்மேல் வையும். அப்பொழுது அவள் உயிர் பெறுவாள்” என்று சொன்னான். இயேசு எழுந்து ஜெப ஆலயத் தலைவனுடன் சென்றார். இயேசுவின் சீடர்களும் அவருக்குப் பின்சென்றார்கள். அவ்வேளையில், பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினால் வருந்திக்கொண்டிருந்த ஒரு பெண், இயேசுவுக்குப் பின்னால் வந்து, அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டாள். அவள், “நான் அவரது மேலுடையைத் தொட்டால் போதும். குணமடைவேன்” எனத் தனக்குள் சொல்லிக்கொண்டாள். இயேசு அவளை திரும்பிப்பார்த்து, “மகளே, தைரியமாயிரு; உனது விசுவாசம் உன்னை குணப்படுத்தியது” என்றார். அந்தப் பெண் அந்த நேரத்திலேயே குணமானாள். பிறகு இயேசு ஜெப ஆலயத் தலைவனின் வீட்டிற்குள் போனவுடன் குழல் ஊதுவோரையும், கூச்சலிட்டு அழும் மக்கள் கூட்டத்தையும் கண்டார். இயேசு அவர்களிடம், “வெளியே போங்கள். இந்த சிறுமி சாகவில்லை, அவள் தூங்குகிறாள்” என்றார். அவர்களோ அதைக்கேட்டு நகைத்தார்கள். மக்கள் கூட்டத்தை வெளியே அனுப்பியபின், இயேசு உள்ளேப் போய், அந்தச் சிறுமியின் கையைப் பிடித்துத் தூக்கினார், அவள் உடனே எழுந்திருந்தாள். இச்செய்தி, அப்பகுதிகள் எங்கும் பரவியது.

மத்தேயு 9:18-26 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவர் இவைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கும்போது, தலைவன் ஒருவன் வந்து அவரை வணங்கி: என் மகள் இப்பொழுதுதான் இறந்துபோனாள்; ஆனாலும், நீர் வந்து அவள்மேல் உமது கையை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்றான். இயேசு எழுந்து, தம்முடைய சீடர்களோடுகூட அவன் பின்னே போனார். அப்பொழுது, பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினாலே கஷ்டப்படும் ஒரு பெண்: நான் அவருடைய ஆடையையாவது தொட்டால் சுகமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய ஆடையின் ஓரத்தைத் தொட்டாள். இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்தநேரத்திலேயே அந்தப் பெண் சுகமானாள். இயேசுவானவர் அந்தத் தலைவனுடைய வீட்டிற்கு வந்து, சங்கு ஊதுகிறவர்களையும், ஒப்பாரி வைக்கிற மக்களையும் கண்டு: விலகுங்கள், இந்த சிறுபெண் இறக்கவில்லை, தூங்கிக்கொண்டிருக்கிறாள் என்றார். அதற்காக அவரைப் பார்த்து ஏளனம் செய்தார்கள். மக்கள் வெளியே அனுப்பப்பட்டப்பின்பு, அவர் உள்ளே பிரவேசித்து, அந்தச் சிறுபெண்ணின் கையைப் பிடித்தார்; உடனே அவள் எழுந்திருந்தாள். இந்தச் செய்தி அந்த நாடெங்கும் பிரசித்தமானது.

மத்தேயு 9:18-26 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசு இவற்றைக் கூறிக்கொண்டிருந்தபொழுது, யூத ஆலயத் தலைவன் ஒருவன் அவரிடம் வந்தான். அவன் இயேசுவை வணங்கி, “என் குமாரத்தி சற்றுமுன் இறந்துவிட்டாள். ஆனாலும், நீர் வந்து உமது கையால் அவளைத் தொடும். அவள் மீண்டும் உயிர் பிழைப்பாள்” என்றான். உடனே, இயேசு எழுந்து அவனுடன் சென்றார். இயேசுவின் சீஷர்களும் அவரைத் தொடர்ந்தார்கள். அப்பொழுது பன்னிரெண்டு வருடங்களாக இரத்தப்போக்கினால் அவதியுற்றுக்கொண்டிருந்த ஒரு பெண் இயேசுவின் பின் வந்து அவரது மேலங்கியின் நுனியைத் தொட்டாள். அந்தப் பெண், “நான் இந்த மேலங்கியைத் தொட்டால் குணமடைவேன்” என எண்ணிக்கொண்டிருந்தாள். இயேசு திரும்பி அந்தப் பெண்ணைப் பார்த்து அவளிடம், “பெண்ணே, மகிழ்ச்சியாயிரு. நீ சுகமாக்கப்பட்டாய். ஏனென்றால், நீ விசுவாசித்ததினால் குணமாக்கப்பட்டாய்” என்றார். உடனே அந்தப் பெண் குணமாக்கப்பட்டாள். இயேசு அந்தத் தலைவனுடன் தொடர்ந்து சென்று, அவனது வீட்டிற்குள் சென்றார். சரீர அடக்கத்திற்கான இசை இசைப்போரை இயேசு அங்கு கண்டார். அந்தச் சிறுமி இறந்துவிட்டதனால், அழுதுகொண்டிருந்த பலரையும் இயேசு கண்டார். இயேசு, “விலகிச் செல்லுங்கள். இச்சிறுமி இறக்கவில்லை. இவள் தூக்கத்திலிருக்கிறாள்” என்று சொன்னார். அதைக் கேட்ட அங்கிருந்த மக்கள் இயேசுவைப் பார்த்து நகைத்தனர். அவர்கள் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதும், இயேசு சிறுமியின் அறைக்குள் நுழைந்தார். இயேசு சிறுமியின் கரத்தைப் பிடித்தார். சிறுமி எழுந்து நின்றாள். இச்செய்தி அத்தேசம் முழுவதும் பரவியது.

மத்தேயு 9:18-26 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர் இவைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கையில், தலைவன் ஒருவன் வந்து அவரைப் பணிந்து: என் மகள் இப்பொழுதுதான் மரித்துப்போனாள்; ஆகிலும், நீர் வந்து அவள்மேல் உமது கையை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்றான். இயேசு எழுந்து, தம்முடைய சீஷரோடுகூட அவன் பின்னே போனார். அப்பொழுது, பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ: நான் அவருடைய வஸ்திரத்தையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள். இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்நேரம் முதல் அந்த ஸ்திரீ சொஸ்தமானாள். இயேசுவானவர் தலைவனுடைய வீட்டிலே வந்து, தாரை ஊதுகிறவர்களையும், இரைகிற ஜனங்களையும் கண்டு: விலகுங்கள், இந்தச் சிறு பெண் மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார். அதற்காக அவரைப்பார்த்து நகைத்தார்கள். ஜனங்கள் வெளியே துரத்தப்பட்டபின்பு, அவர் உள்ளே பிரவேசித்து, அந்தச் சிறுபெண்ணின் கையைப் பிடித்தார்; உடனே அவள் எழுந்திருந்தாள். இந்தச் சங்கதி அத்தேசமெங்கும் பிரசித்தமாயிற்று.