மத்தேயு 9:1-8

மத்தேயு 9:1-8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு ஒரு படகில் ஏறி, கடலைக் கடந்து தமது சொந்தப் பட்டணத்திற்கு வந்தார். அங்கே சிலர் முடக்குவாதக்காரன் ஒருவனைப் படுக்கையில் கிடத்தியபடியே, அவரிடம் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டபோது, அந்த முடக்குவாதக்காரனிடம், “மகனே, தைரியமாயிரு; உன்னுடைய பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன” என்றார். இதைக் கேட்ட சில மோசேயின் சட்ட ஆசிரியர்கள், “இவன் இறைவனை நிந்திக்கிறான்!” என்று தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள். அவர்களுடைய சிந்தனைகளை அறிந்த இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் உங்கள் இருதயங்களில் தீயவைகளைச் சிந்திக்கிறீர்கள்? ‘உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று சொல்வதா, அல்லது, ‘எழுந்து நட’ என்று சொல்வதா, எது எளிது? ஆனால் பூமியிலே பாவங்களை மன்னிப்பதற்கு மானிடமகனாகிய எனக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று விரும்புகிறேன்” என்று சொல்லி, பின்பு இயேசு அந்த முடக்குவாதக்காரனிடம், “எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு உன் வீட்டுக்குப்போ” என்றார். உடனே அவன் எழுந்து, தன் வீட்டுக்குப் போனான். மக்கள் கூட்டம் இதைக் கண்டபோது, இப்படிப்பட்ட அதிகாரத்தை மனிதருக்கு அளித்த இறைவனைப் பயபக்தியுடன் துதித்தார்கள்.

மத்தேயு 9:1-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது, அவர் படகில் ஏறி, இக்கரையில் உள்ள தம்முடைய பட்டணத்திற்கு வந்தார். அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு பக்கவாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, பக்கவாதக்காரனைப் பார்த்து: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். அப்பொழுது, வேதபண்டிதர்களில் சிலர்: இவன் தேவனை அவமதித்துப் பேசுகிறான் என்று தங்களுடைய உள்ளத்தில் சொல்லிக்கொண்டார்கள். இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து: நீங்கள் உங்களுடைய இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன? உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நட என்று சொல்வதோ, எது எளிது? பூமியிலே பாவங்களை மன்னிக்க மனிதகுமாரனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, பக்கவாதக்காரனைப் பார்த்து: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டிற்குப் போ என்றார். உடனே அவன் எழுந்து, தன் வீட்டிற்குப்போனான். மக்கள் அதைக் கண்டு ஆச்சரியப்பட்டு, மனிதர்களுக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

மத்தேயு 9:1-8 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசு ஒரு படகில் ஏரியைக் கடந்து மீண்டும் தம் சொந்த நகருக்குத் திரும்பினார். பக்கவாத வியாதியினால் பாதிக்கப்பட்ட ஒருவனைச் சிலர் இயேசுவிடம் அழைத்து வந்தனர். அவன் படுக்கையில் படுத்திருந்தான். அம்மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு வந்திருந்ததை இயேசு கண்டார். எனவே இயேசு அந்த வியாதிக்காரனிடம், “வாலிபனே, மகிழ்ச்சியாயிரு. உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார். இதைக் கேட்ட சில வேதப்போதகர்கள், “இந்த மனிதன் (இயேசு) தேவனைப் போலவே பேசுகிறான். இது தேவனை நிந்திக்கும் செயல்” என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள். அவர்கள் இவ்வாறு எண்ணியதை இயேசு அறிந்தார். எனவே இயேசு, “நீங்கள் ஏன் தீய எண்ணங்களைச் சிந்திக்கின்றீர்கள்? பக்கவாத வியாதிக்காரனிடம் ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’, என்று கூறுவது எளிதா? அல்லது ‘எழுந்து நட’, என்று கூறுவது எளிதா? ஆனால் மனித குமாரனுக்கு பூமியில் பாவங்களை மன்னிக்கும் வல்லமை இருப்பதை நான் உங்களுக்கு நிரூபிப்பேன்” என்று சொன்னார். பிறகு அந்த வியாதிக்காரனிடம் இயேசு, “எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்!” என்று கூறினார். அம்மனிதன் எழுந்து வீட்டுக்குச் சென்றான். இதைக்கண்ட மக்கள் வியப்புற்றனர். இத்தகைய வல்லமையை மனிதனுக்கு அளித்ததற்காக அவர்கள் தேவனைப் புகழ்ந்தார்கள்.

மத்தேயு 9:1-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது, அவர் படவில் ஏறி, இக்கரைப்பட்டுத் தம்முடைய பட்டணத்திற்கு வந்தார். அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். அப்பொழுது, வேதபாரகரில் சிலர்: இவன் தேவதூஷணம் சொல்லுகிறான் என்று தங்கள் உள்ளத்தில் சொல்லிக்கொண்டார்கள். இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து: நீங்கள் உங்கள் இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன? உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நடவென்று சொல்வதோ, எது எளிது? பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார். உடனே அவன் எழுந்து, தன் வீட்டுக்குப் போனான். ஜனங்கள் அதைக்கண்டு ஆச்சரியப்பட்டு, மனுஷருக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள்.