மத்தேயு 7:7-14

மத்தேயு 7:7-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது கதவு உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில், கேட்கிற ஒவ்வொருவரும் பெற்றுக்கொள்கிறார்கள்; தேடுகிறவர்கள் கண்டடைகிறார்கள்; தட்டுகிறவர்களுக்குக் கதவு திறக்கப்படுகிறது. “அப்பத்தைக் கேட்கும் தன் மகனுக்கு, உங்களில் யார் கல்லைக் கொடுப்பான்? அல்லது மீனைக் கேட்கும் மகனுக்கு யார் பாம்பைக் கொடுப்பான்? தீயவர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல அன்பளிப்புகளைக் கொடுக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியிருக்க, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் கேட்பவர்களுக்கு, நல்ல அன்பளிப்புகளைக் கொடுப்பது அதிக நிச்சயம்! ஆகவே, மற்றவர்கள் உங்களுக்கு எவைகளைச் செய்யவேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் மற்றவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே மோசேயின் சட்டமும், இறைவாக்குகளும் ஆகும். “இடுக்கமான வாசல் வழியாக உள்ளே செல்லுங்கள். ஏனெனில் அழிவுக்கு செல்லும் வாசல் அகலமானது, வழியும் விரிவானது. பலர் அதன் வழியாகவே உள்ளே செல்லுகிறார்கள். ஆனால் இடுக்கமான வாசலும், குறுகலான வழியுமே வாழ்வுக்கு வழிநடத்துகின்றன. ஒரு சிலர் மட்டுமே அதைக் கண்டுபிடிக்கிறார்கள்.

மத்தேயு 7:7-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்; ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். உங்களில் எந்த மனிதனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக்கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? ஆகவே, பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல பரிசுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? ஆதலால், மனிதர்கள் உங்களுக்கு எவைகளைச் செய்யவிரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம். குறுகின வாசல்வழியாக உள்ளே பிரவேசியுங்கள்; அழிவிற்குப்போகிற வாசல் அகலமும், வழி விசாலமுமாக இருக்கிறது; அதின்வழியாக பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப்போகிற வாசல் குறுகினதும், வழி நெருக்கமுமாக இருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.

மத்தேயு 7:7-14 பரிசுத்த பைபிள் (TAERV)

“தொடர்ந்து கேளுங்கள், தேவன் கொடுப்பார். தொடர்ந்து தேடுங்கள், கிடைக்கும். தொடர்ந்து தட்டுங்கள், திறக்கப்படும். ஆம், ஒருவன் தொடர்ந்து கேட்டால், அவன் அதைப் பெறுவான். ஒருவன் தொடர்ந்து தேடினால், அவன் கண்டடைவான். ஒருவன் தொடர்ந்து தட்டினால், கதவு அவனுக்காகத் திறக்கப்படும். “உங்களில் யாருக்கேனும் குமாரன் உண்டா? உங்கள் குமாரன் அப்பத்தைக் கேட்டால், அவனுக்குக் கல்லைத் தருவீர்களா? இல்லை. அல்லது, உங்கள் குமாரன் மீனைக் கேட்டால், அவனுக்குப் பாம்பைக் கொடுப்பீர்களா? இல்லை. நீங்கள் தேவனைப்போல அல்லாமல், பொல்லாதவர்களாய் இருக்கும் உங்களுக்கே குழந்தைகளுக்கு நற்பொருட்களைத் தரத்தெரியும்போது, பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவும் தம்மிடம் கேட்கிறவர்களுக்கு நன்மையானவற்றைக் கொடுப்பார் அன்றோ? “மற்றவர்கள் உங்களுக்கு எதைச் செய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதையே மற்றவர்களுக்கு நீங்கள் செய்யுங்கள். இதுவே மோசேயின் கட்டளை மற்றும் தீர்க்கதரிசிகளின் போதனைகளின் பொருளுமாகும். “பரலோகத்திற்குச் செல்லும் குறுகிய வாசலுக்குள் நுழையுங்கள். நரகத்திற்குச் செல்லும் பாதையோ எளிமையானது. ஏனெனில் நரகத்தின் வாசல் அகன்றது. பலர் அதில் நுழைகிறார்கள். ஆனால், மெய்யான வாழ்விற்கான வாசல் மிகவும் குறுகியது. மெய்யான வாழ்விற்குக் கொண்டு செல்லும் பாதையோ கடினமானது. மிகச் சிலரே அப்பாதையைக் கண்டடைகிறார்கள்.

மத்தேயு 7:7-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்; ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிராணமும் தீர்க்கதரிசனங்களுமாம். இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப்போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப்போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.

மத்தேயு 7:7-14

மத்தேயு 7:7-14 TAOVBSIமத்தேயு 7:7-14 TAOVBSIமத்தேயு 7:7-14 TAOVBSIமத்தேயு 7:7-14 TAOVBSIமத்தேயு 7:7-14 TAOVBSIமத்தேயு 7:7-14 TAOVBSI